- பிரியங்கன் பாக்கியரெத்தினம்
ஒரு நாடு என்பது ஆளப்படுவர்களாலும் கொள்கை வகுப்பாளர்களாலுமே தனக்கான விம்பத்தை வெளிப்படுத்திக்கொள்கிறது. அப்படி வெளிப்படுத்தப்படுகின்ற விம்பம் சமூகநீதியை பிரதிபலிக்ககூடியதாக இருக்கவேண்டுமே ஒழிய அதுபிற்போக்கான சமூக நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது
இலங்கை என்ற நாடு கடந்த 22 ம் திகதி முதல் புதிய யுகமொன்றிற்குள் காலடி எடுத்து வைத்திருப்பதாக பரவலாக பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இலங்கையின் கடந்த காலம் என்பது அண்மைய ஆண்டுகளில் மிக மோசமான கொள்கை வகுப்பாளர்களாலும் ஆட்சியாளர்களாலும் சகலவழிகளிலும் அதலபாதாளத்துள் தள்ளப்பட்டு வெறுமனே இனவாதத்தை மாத்திரமே பெறுபேறாக பெற்றுக்கொண்டிருந்தது என்ற அதிருப்தி சர்வதேச மட்டத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் யாருமே எதிர்பாராத, அதேநேரம் இப்படி ஒரு மாற்றம் நிகழாது என்று அவதானிகளால் கூறப்பட்ட ஒரு விடயம் நிகழ்ந்து முடிந்திருக்கிறது அல்லது அந்த நாட்டு மக்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று சொல்லுவதே சாலப்பொருத்தமான ஒரு விடயமாக இருக்கும்.
இலங்கையின் 76 வருட சுதந்திர வரலாற்றில் அந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த சிங்களக் கடும்போக்காளர்களிடமிருந்து மாறுபட்ட ஒரு கொள்கையுடைய இடதுசாரித் தலைமை ஒன்றிற்கு நாட்டை ஆளுவதற்கான சந்தர்ப்பத்தை சுமார் 56 இலட்சத்து 34 ஆயிரத்து 915 பேர் வழங்கியிருக்கிறார்கள் .
ஒரு தேசமாக இலங்கையைப் பொறுத்தவரை எப்போதோ வளர்ச்சியடைந்து இருக்கவேண்டிய ஒரு நாடு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னமே கிழக்கின் தானியக்களஞ்சியம் எனப்புகழப்பட்ட ஒரு நாடு, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் ஒற்றைப்புள்ளியில் குவிந்திருக்கின்ற ஒரு நாடு. இலங்கையையும் அதன் ஆட்சியாளர்களையும் தமக்கு ஆதரவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் உலக வல்லரசுகள் இன்றுவரை போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு நாடு ஆனால் வெறும் இனவாதத்தையும் மதமாதவாதத்தையும் மாத்திரம் முன்னிறுத்தி சொந்த நாட்டின் உரிமைகளையே பறித்து அவர்களை அகதிகளாக சொந்த நாட்டுக்குள்ளையே ஆடுமாடுகளைப்போலவே அலைய விட்டு அதில் திருப்தி கொண்ட ஆட்சியாளர்களாலும் தமது 21 தலைமுறைக்கும் சேர்த்து சொத்துச்சேர்த்தவர்களாலும் சின்னாபின்னமாகி பங்களாதேசத்திடமே கடன் வாங்கிய முதல் நாடு என்ற வரலாற்று வினோதத்தை அணிந்து கொண்டிருக்கிறது
முப்பது ஆண்டுகளும் அதிகமாக உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் அதனால் ஏற்பட்ட இழப்புகள் என இலங்கையை ஒரு வளர்ச்சியடையாத வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மக்கள் வாழும் நாடாகவே மாற்றியிருந்தார்கள் அதன் முன்னைய ஆட்சியாளர்கள் . இலங்கையில் இருந்து அபகரித்துச்சென்ற செல்வத்தை வைத்தே இன்றுவரை உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளாக தம்மை சில நாடுகள் வெளிப்படுத்துக்கொண்டிருக்க இலங்கையோ முன்னர் சொன்னது போல அந்த நாட்டின் இன்னுமொரு தேசிய இனமான ஈழத்தமிழர்களை அழித்தொழிப்பதிலும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் உரிமைகளைப் பறித்து நினைவேந்தல்களைக்கூட நிகழ்த்த முடியாத ஒரு நிலைப்பாட்டைக் கைக்கொண்டு வந்திருந்தது.
இப்படியிருக்க கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் என்பது முற்றிலும் மாறுபட்ட தளத்திற்கு இலங்கையை அழைத்துச் செல்லப்போகிறது என்ற நம்பிக்கையை இப்போது வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
JVP என அறியப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி என்ற அரசியல் அமைப்பாக மாறி படிமுறை வளர்ச்சியின் பிரதிபலனாக ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கிறது. ஆரம்ப காலங்களில் ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பாக இருந்து, நாட்டில் கிளர்ச்சியொன்றை மேற்கொண்டு அந்த கிளர்ச்சியின் காரணமாக அந்த அமைப்பின் தலைவர் ரோகண விஜய வீர ஶ்ரீலங்காவின் அரசப் பாதுகாப்பு இயந்திரத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு, தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு இப்போது ஶ்ரீலங்காவின் அதிஉயர் அதிகாரமுடைய 9 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கிறார் அந்த அமைப்பின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க.
இனப்பிரச்சினை இழையோடிப்போயிருக்கின்ற பொருளாதார ரீதியாக மிகமோசமான நிலைமையை அடைந்திருக்கின்ற நாட்டை மீட்டு சரியாக வழிநடத்திச்செல்லகூடிய தகுதியுடையவர் இவர்தான் என அளிக்கப்பட்ட 75 % மான வாக்காளர்களில் அதிகமானவர்களின் தேர்வாகியிருக்கிறார்.
யார் இந்த அனுரகுமார திசாநாயக்க?
இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக கடந்த 2014 முதலும் தேசிய மக்கள் சக்தி என்ற அரசியல் கூட்டின் தலைவராக கடந்த 2019 முதலும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம் பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக முதல் முதலாக நாடாளுமன்றம் நுழைந்த இவர் 2004 முதல் 2005 வரையான காலப்பகுதியில் விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும், கடந்த 2015 முதல் 2018 வரை எதிர்க்கட்சியின் தலைமை செங்கோலாசானாகவும் பணியாற்றினார்.
02.02. 2014 அன்று நடைபெற்ற ஜே.வி.பி.யின் 17வது தேசிய மாநாட்டில் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
குறிப்பாக முதியன்சேலாகே அனுர குமார திசாநாயக்க என்ற இயற்பெயரை உடைய இவர், கடந்த 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம என்ற கிராமத்தில் கூலித்தொழிலாளியான தந்தைக்கு மகனாக மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.
பின்னர் தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியையும் மற தம்புத்தேகம மத்திய கல்லூரியில் தனது உயர்தர கல்வியைப் பெற்று உயர்கல்விக்காக களனிப் பல்கலைகழகத்திற்கு தேர்வானார்.
1987ல் ஜே.வி.பி.யில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, 1987-1989 காலகட்டங்களின் ஜே.வி.பி யின் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
1987 முதல் முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் பிரவேசித்து 1995 இல், சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும் ஜேவிபியின் மத்திய செயற்குழுவில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஜேவிபியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முதன் முதலில் நாடாளுமன்றம் நுழைந்த இவர் 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார் . 2004 ஆண்டு அப்போதைய அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் 2004 முதல் 2005 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றினார் . அதன் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த இவர் 2024 ம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான மக்கள் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஶ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
ஏலவே சொன்னதுபோல, மிகவும் இக்கட்டான சூழலில் ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கும் இவர் மீது மக்கள் தன் மீது கொண்ட நம்பிக்கைக்கு பாத்திரமானவனாயிருப்பேன் என்ற பாணியில் தனது கன்னியுரையினை நாட்டு மக்களுக்கு ஆற்றியிருந்தார் அந்த உரை பின் வருமாறு இருந்தது.
“எமது நாட்டின் சனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு மக்களால் தம்மை ஆள்வதற்கான ஆட்சியாளரைத் தெரிவு செய்து கொள்வதே என்பது எங்களுக்குத் தெரியும்.
எனினும் தோ்தலின்போது வாக்குகளை அளித்தல் மற்றும் ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதால் மாத்திரம் சனநாயகம் முற்றுப்பெற மாட்டாது.
அது சனநாயகத்தின் ஓர் அடிப்படை அம்சமாக அமைந்த போதிலும் எமது நாட்டில் சனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கட்டமைப்புக்களின் பலம் பொருந்திய தன்மை, அதைப் போலவே சட்டங்களின் பலம் வாய்ந்த தன்மை அவசியமென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
எனவே நான் முதலில் எமது நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்நாட்டின் சனநாயகத்திற்காக எனது உச்சளவிலான அர்ப்பணிப்பினை எனது பதவிக்காலத்தில் வெளிக்காட்டுவேன்.
அதைப்போலவே எமது நாட்டில் தோ்தலொன்றின்போது, அதிகாரப் பரிமாற்றத்தின்போது அது சனநாயக ரீதியாக இடம் பெற்ற வரலாறு நிலவுகிறது.
ஒருபோதுமே தோ்தலொன்றின்போது இடம்பெறுகின்ற அதிகார பரிமாற்றத்தை எந்தவொரு தலைவரும் நிராகரித்ததில்லை.
அதற்கிணங்க செயலாற்றி முன்னாள் சனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மக்களின் மக்கள் ஆணையை சுமுகமாக ஏற்றுக்கொண்டு இந்த சனநாயக ரீதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கான அவருடைய அர்ப்பணிப்பையும் முன்மாதிரியான தன்மையையும் வெளிக்காட்டியமைக்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அதைப்போலவே எங்களுக்கு கிடைப்பது சவால்கள் நிறைந்த ஒரு நாடே என்பதை நாங்கள் மிகவும் ஆழமாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். எமது அரசியலில் இதைவிட பரிசுத்தமாக்கப்படவேண்டிய, மக்கள் பாரியளவில் எதிர்பார்க்கின்ற சாதகமான அரசியல் கலாச்சாரமொன்றின் தேவை நிலவுகிறது.
நாங்கள் அதற்காக அர்ப்பணிப்பு செய்யத்தயார். எமது நாட்டின் அரசியல்வாதி மற்றும் அரசியல் பற்றி பிரஜைகள் மத்தியில் பாதகமான ஓர் அபிப்பிராயமே நிலவுகிறது. அது பொருத்தமற்ற ஒரு இடமென்ற கருத்தே நிலவுகிறது.
எனவே நாங்கள் எமது பக்கத்தில் உச்சளவில் மீண்டும் அரசியல் பற்றியும் அரசியல்வாதி பற்றியும் மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக எமது தரப்பில் ஆற்றக்கூடிய பணிகளை ஆற்றத்தயார்.
அத்துடன் எங்களுக்கு கிடைக்கின்ற இந்த ஆழமான நெருக்கடியானது வெறுமனே ஓர் அரசாங்கம் அல்லது அரசியல் கட்சி அல்லது ஒரு தனிநபரால் மாத்திரம் கடந்து செல்லக்கூடிய நிலையில் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை.
ஏனென்றால் இதற்கு முன்னரும் நான் ஒரு மாயாஜால வித்தைக்காரன் அல்லவெனக் கூறியிருக்கிறேன்.
நான் ஒரு மெஜிக்காரனல்ல. நான் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண பிரஜை. ஆற்றல்கள் இருக்கின்றன. ஆற்றாமைகளும் இருக்கின்றன. நாம் அறிந்த விடயங்களும் இருக்கின்றன.
அறியாத விடயங்களும் இருக்கின்றன. ஆனால் என்னுடைய முதன்மைப்பணி ஆற்றல்களை உறிஞ்சி எடுத்து அறிந்தவற்றை ஒன்று திரட்டி மிகச் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும்.
அதனால் அந்த கூட்டான இடையீட்டின் பங்காளியாவதே என்னுடைய பொறுப்பாகும். அதுபோலவே இந்த நெருக்கடியை நிறைவு செய்யும் போது அனைத்துத் துறைகளையும் சோ்ந்த பொதுப்பிரஜைகளுக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது.
அந்தப் பொறுப்பினை ஈடேற்றுவதற்காக நான் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கிறேன்.
ஆனால் நாட்டின் சனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புவதோடு இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன் என்பதை இந்த சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவேன்.
அதைப்போலவே குறிப்பாக எங்களுக்கு தெரியும் எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும். உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப்பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமந்துவிட முடியாது.
உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.
அதைப்போலவே எமது நாட்டைக் கட்டியெழுப்புகையில் கைத்தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள்.
எனவே அவர்களை பலம்பொருந்தியவர்களாக கட்டியெழுப்ப அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவார்களென நாங்கள் நம்புகிறோம்.
இறுதியாக நான் கூறிவைக்க விரும்புவது எமது நாட்டின் சனநாயகத்தினால் நான் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன்.
அவ்வாறு தெரிவு செய்துகொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன.
எனவே எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது. எனவே எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக்காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது.
அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எதிர்காலத்தில் இவையனைத்துமே நடைமுறையில் சாத்தியமானதாக அமைகின்ற அனுபவத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக உங்களுடைய ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் நல்லாசியையும் கடவுளின் துணையையும் வேண்டிக்கொள்கிறேன் “ என நிறைவுற்றது.
மிகப்பெரும் எதிர்பார்ப்புகளோடு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி முன்னர் இருந்த கொள்கைவகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் நிறைவேற்றாத இழைத்த தவறுகளை தொடர்ந்து இழைக்காமல் சமூகநீதி நிறைவேற்றப்படுகின்ற முன்னேற்றகரமான காலமொன்றிற்கு வழிகாட்டவேண்டும் என்பதே எல்லோரது அவாவாகும் ஆனால் எல்லாவற்றிற்கும் காலமே பதில் சொல்லியாகவேண்டும்.
***
பிரியங்கன் பாக்கியரெத்தினம்: கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் IBC தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார். சிறுவயது முதலே, கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, பட்டிமன்ற பேச்சாளர் என தன்னை ஈடுத்திப்படுக் கொண்ட இவர், இலங்கையின் உள்ளூர் பத்திரிகைகளிலும் பத்தி எழுத்துகளை வழங்கியுள்ளார்.
