– இளவாலை விஜயேந்திரன்
அநுர குமார திஸாநாயக்க இலங்கை அதிபராகத் தேர்தலில் வெற்றி பெற்றது (ஏனைய இருவரைவிடச் சிறந்தவராக இருக்க வாய்ப்புள்ளவர் என்ற ரீதியில்) மகிழ்வு தந்தது. அவரது கட்சி/ அமைப்பு தமிழர்களுக்குச் செய்தவற்றை யாரும் மறக்கமுடியாது என்பது மனதின் ஒரு மூலையில் இருந்தது. அவரது தற்காலிக (காபந்து) அரசு பற்றி மோசமாய்ச் சொல்லவும் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் ஒருவிடயம் மனதை மிகக் கவர்ந்தது. அது – வடமாகாண ஆளுநர் தெரிவு. எந்த அரசியற் பின்புலமும் இல்லாத நியாயமான அத்தெரிவினைப் பாராட்டாதவர்கள் இல்லை.
நாகலிங்கம் வேதநாயகன் யாழ் அரச அதிபராக இருந்து, அரசியல்வாதிகளின் தலையீட்டைத் தவிர்க்கத் தனது பதவியைத் துறந்தவர். அரசியல்வாதிகளுக்குத் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் காலில் வைத்து, அதற்கேற்பத் தமது நலன்களைப் பெருக்கும் பல அரசு நிர்வாக ஊழியர்கள் மத்தியில் வேதநாயகன் தனித்துவமானவர். பொதுமக்கள் இலகுவிற் தொடர்பு கொள்ள வசதியாக யார் கேட்டாலும் தனது தொலைபேசி இலக்கத்தைக் கொடுப்பவர். `இது தேவையில்லாத ஆக்கினையாக இருக்காதா?` எனறு கேட்டபோது `அவையளுக்காகத்தானே நாங்கள் இருக்கிறம்` என்றார். எத்தனை அரச ஊழியர்களிடம் இப்படியொரு பதிலை எதிர்பார்க்கலாம்?
நேர்மையாக வாழ்வதற்காகத் தண்டிக்கப்படுபவர்களின் பட்டியலில் அவரது பெயரும் இருந்தது. ஆயினும் மக்கள் மனதில் அவரது பெயர் நீங்காத இடத்தைப் பிடித்தது. ஒரு (பொது) வேலைக்காக அவரைத் தொடர்பு கொண்டு சில விடயங்களைச் செய்ய விரும்பியபோது அவர் பதவியில் இல்லை. தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் என்பது உண்மைதான். தர்மம் மறுபடியும் வெல்லுமா என்றால், இம்முறை வென்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். நிர்வாக ரீதியிற் தமிழர்கள் அடையக்கூடிய மிக உயர் பதவிகளில் ஒன்றை அவரது நேர்மை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதன்மூலம் புதிய ஜனாதிபதியின் மீதான வடபகுதி மக்களின் மதிப்பும் உயர்ந்திருக்கிறது எனலாம்.
பள்ளிக்காலத்தின் பாதியையும் நாம் இருவரும் ஒன்றாய் அருகருகே இருந்து கதைத்தவர்கள். அவரது உயர்வு மற்றோரைவிட எனக்கு அதிக மகிழ்வு தர நியாயமான காரணங்கள் உள. நேர்மையும், நிர்வாகத் திறனும் சாதாரண மக்களுக்கு அரச திட்டங்கள் சரியாய்ப் போய்ச் சேரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட வேதநாயகன் தனது பணிகளில் இம்முறை தடங்கலின்றிச் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
மகாஜனக் கல்லூரி தந்த சாதனையாளர்களில் அவருக்குத் தனியிடம் கிடைக்கும் என நம்பலாம். அளவெட்டி மண்ணுக்கும் அவராற் பெருமை சேரும்!!
நிறை வாழ்த்து!!
***
