- ரிம்ஸான் அமானுல்லாஹ்
அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றியைப் பெற்றது. இது பாரம்பரிய மேட்டிமைவாத அரசியல்வாதியரின் மேலாதிக்கத்திலிருந்து இலங்கை சமூகம் மீண்டு வருகிறது என்பதைக் குறிக்கிறது. தேசிய மக்கள் சக்தி கைக்கொண்டிருந்த மாற்றம் தொடர்பான அணுகுமுறையே இலங்கையின் மொத்த வாக்காளர்களில் 43% ஆன மக்கட்தொகுதியினரை பிரக்ஞைபூர்வமாக மாற்றத்துக்காக வாக்களிக்கத் தூண்டியது.
நாம் இதனை John Kotter-இன் 8-படிமுறை மாற்ற மாதிரி (8-Step Change Model) ஊடாக விளக்கலாம். இந்த மாதிரியானது வெற்றிகரமான மாற்றத்துக்கான ஒரு கட்டமைக்கப்பட்ட செயன்முறையை விவரிக்கிறது.
1. அவசர உணர்வைத் தோற்றுவித்தல் (Create a sense of urgency)
இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியையும் அதற்கான காரணங்களையும் எடுத்துக்காட்டுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அவசர உணர்வை திறம்பட உருவாக்கியது. பணவீக்கம், நிதிபற்றாக்குறை மற்றும் வெளிநாட்டுப் படுகடன் முதலியவை பேசுபொருள் ஆகியிருந்த ஒரு சூழ்நிலையில், தேசிய மக்கள் சக்தி தனது பரப்புரையை இலங்கை மக்களின் இருத்தலியல் நெருக்கடிக்கான விடையிறுப்பாக வடிவமைத்தது. கோத்தாபய ராஜபக்சவை வெளியேற்றுவதற்கு வழிவகுத்த ‘அரகலய’ மக்கள் புரட்சியைத் தொடர்ந்து, பாரம்பரியக் கட்சிகள் தமது நம்பகத்தன்மையை வெகுவாக இழந்திருந்த ஒரு சூழ்நிலையில், நாடு சந்தித்த நெருக்கடியில் பெருமளவு தாக்கம் விளைவித்த ஊழல் மோசடிகள், குடும்ப அரசியல், வள விரயம், திட்டமிடல் குறைபாடுகள் போன்ற எதிர்மறைக் காரணிகளை முன்னிறுத்தி, அவற்றைக் களைய வேண்டியதன் அவசியப்பாடு மக்களுக்கு உணர்த்தப்பட்டது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி மாற்று அரசியலே என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது.
2. மாற்றத்துக்கான அணியைக் கட்டியெழுப்புதல் (Build the change team)
தேசிய மக்கள் சக்தி சீர்திருத்தவாதிகள், இளம் செயற்பாட்டாளர்கள், மற்றும் மரபார்ந்த அரசியல் முகாம்களைச் சாராத பிரமுகர்களைக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட ஒரு கூட்டணியை ஒன்றிணைத்தது. இந்த அணி சீர்திருத்தம், வெளிப்படைத்தன்மை மற்றும் நிலவும் அரசியல் சூழ்நிலையை மாற்றியமைத்தல் போன்ற பகிரப்பட்ட குறிக்கோள்களின் கீழ் ஒன்றுபட்டது. 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலின்போது வெறும் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு விளிம்புநிலை இயக்கமாக கருதப்பட்ட தேசிய மக்கள் சக்தி ஒரு நேர்ப்பாங்கான அரசியல் கலாசாரத்தைக் கனவுகண்ட பல்வேறு குழுக்களை தன்னுடன் இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு பாரிய அரசியல் அமைப்பாக எழுச்சி பெற்றது. அதனுள் அடிமட்டத்தொண்டர்கள், அமைப்பாளர்கள், தன்னார்வலர்கள், செயற்பாட்டாளர்கள், இலட்சியவாதிகள், புத்திஜீவிகள் என அனைத்து தரப்பினரும் உள்ளீர்க்கப்பட்டனர். System Change என்ற முறைமை மாற்றத்துக்கான வேட்கையே இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த பொதுப்புள்ளியாக இருந்தது.
3. ஒரு மூலோபாய தூரநோக்கை உருவாக்குதல் (Form a strategic vision)
தேசிய மக்கள் சக்தியின் மூலோபாய தூரநோக்கு (strategic vision) இலங்கை எதிர்நோக்கி வந்த பாரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுத்திட்டங்களை மையப்படுத்தியதாக இருந்தது. அதற்கமைவாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனம் நல்லாட்சியை நிறுவுதல், ஊழலை இல்லாதொழித்தல், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுதல் ஆகிய பிரதான நோக்கங்களுடன் அரசுப்பொறிமுறையை மறுசீரமைத்தல், வரிவிதிப்பு சீர்திருத்தங்கள், உணவு மற்றும் உற்பத்தித் துறைகளை மேம்படுத்துதல், உள்ளூர் கைத்தொழில்களை ஊக்குவித்தல் போன்ற பல நம்பிக்கையளிக்கக்கூடிய தீர்வுகளையும் பரிந்துரைத்திருந்தது.
4. தூரநோக்கின் செய்தியைக் கொண்டுசேர்த்தல் (Communicate the vision)
தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு தெளிவான மற்றும் தொடர்ச்சியான தொடர்பாடல் முக்கிய பங்காற்றியது. நாடு முழுவதும் மரபார்ந்த தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் அதே வேளையில், இளம் வாக்காளர்களை சென்றடைய சமூக ஊடகங்கள் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்தியது. மாற்று அரசியல், பொருளாதாரத் தீர்வுகள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற விடயப்பரப்புகளில் தனது திட்டங்களை தெளிவாக முன்மொழிந்ததன் மூலம் இலங்கையின் அரசியல் நிலைமையை மாற்றவல்ல ஒரேயொரு மாற்றத்தின் சக்தியாக NPP தன்னை முன்னிலைப்படுத்தியது.. ஆட்சியாளர்கள் மீதான மக்களின் பரவலான அதிருப்தியை தேர்தல் வெற்றியாக மாற்றுவதற்கு இந்தத் தகவல் தொடர்பு உத்தி பெரிதும் உதவியது.
5. மாற்றத்துக்கு எதிரான தடங்கல்களை அகற்றுதல் (Remove barriers to change)
இலங்கையைப் பொறுத்தவரையில் மாற்றத்துக்கு எதிரான மிகப் பிரதானமான தடங்கல்களில் ஒன்று வேரூன்றிய அரசியல் மேட்டிமைத்தனம் ஆகும். மூன்று முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் வாரிசுகளான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச ஆகியோர் தேர்தல் களத்தில் குதித்திருந்தனர். மற்றுமொரு வலிமையான தடையாக பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் அவநம்பிக்கை காணப்பட்டது. இதற்குக் காரணம் அடுத்தடுத்த அரசாங்கங்கள் பொருளாதார சீர்திருத்தங்களை வாக்குறுதியளித்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தத் தவறியமை ஆகும்.
இந்த தடங்கல்களை நிவர்த்தி செய்வதற்காக தேசிய மக்கள் சக்தி சில முன்னெடுப்புகளை மேற்கொண்டது. மரபார்ந்த பிரச்சாரக் கூட்டங்கள் முதல் பெரு வணிகர்களுடனான விசேட கலந்துரையாடல் அமர்வுகள் வரை வாக்காளர்களுடன் நேரடி உரையாடலில் ஈடுபட்டதன் மூலம், வாக்காளர்கள் மத்தியில் அனுர குமாரவைப் பற்றிய நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும், உண்மையான மாற்றம் சாத்தியம் என்பதை உறுதிப்படுத்துவதிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது.
6. குறுங்கால வெற்றிகளில் கவனம் செலுத்துதல் (Focus on short-term wins)
தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரை, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகப் பெற்றுக்கொண்ட சில வெற்றிகள் நிஜமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான இயலுமையை நிரூபிப்பதில் முக்கிய பங்கு வகித்தன.
அவற்றுள் உள்ளூர் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் இந்த சங்கங்கள் சமூக மட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் நேரடியாக ஈடுபட்டுள்ள அடிமட்ட நிறுவனங்களாகும். இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம், தேசிய மக்கள் சக்தி தனக்கு பொதுமக்களின் நம்பிக்கையும் ஆதரவும் இருப்பதை நிரூபித்தது.
அது மட்டுமல்லாது, தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலம் பெற்றுக்கொண்ட வெற்றிகளும் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கைப் பறைசாற்றியது. பல தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதன் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு முக்கிய தொகுதியினரான தொழிலாள வர்க்கத்தின் குரலாக தேசிய மக்கள் சக்தி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
7. உத்வேகத்தை முன்கொண்டு செல்லல் (Maintain momentum)
உள்ளூர் சமூகங்களை பாதிக்கக்கூடிய அன்றாடப் பிரச்சினைகளில் தன்னை தீவிரமாக ஈடுபட்டதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அதன் ஒவ்வொரு வெற்றியையும் நன்கு பயன்படுத்திக் கொண்டது. பேரணிகள், போராட்டங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் வாக்காளர்களுடன் இடையறாது தொடர்புகொண்டு மாற்றத்துக்கான அவசியப்பாடு குறித்த உரையாடலை உயிர்ப்புடன் வைத்திருந்ததன் மூலம் கட்சியின் நீண்டகால இலக்குகளும் பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமாயின.
மக்கள் உரிமைகளை வென்றெடுப்பதில் தலைமைத்துவத்தை வழங்கியமை, பாதிக்கப்பட்டவர்களால் எளிதில் அணுகக்கூடியவர்களாக இருந்தமை போன்ற காரணிகள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அல்லாத பொதுமக்களது ஆதரவை ஜனாதிபதி தேர்தலின்போது ஒருங்கிணைப்பதற்கு பெரிதும் உதவின.
8. மாற்றத்தை நிறுவுதல் (Institute change)
ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேர்தல் வெற்றி மட்டுமே போதுமானதல்ல. மாறாக, சமூகத்தின் கட்டமைப்புகள், செயன்முறைகள், கலாசாரம் ஆகியவற்றில் உட்பொதிந்து விடும் மாற்றமே நீடித்து நிலைத்திருக்கக் கூடியது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி எவ்வாறானதாக இருக்கும் என்பதை 100% எதிர்வுகூறல் செய்து அருள்வாக்கு தரும் அளவுக்கு நம்மில் எவரும் தீர்க்கதரிசிகளோ, முக்காலமும் உணர்ந்தவர்களோ அல்ல.
ஆனால், இந்த ஆட்சி மாற்றம் மூலமாக ஒரு மாற்றம் கிட்டுமோ, இல்லையோ மாற்றத்துக்கான வெளி கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பே அனுர குமார திசாநாயக்க இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு முழுமுதற் காரணம்.
அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று ஒரு வார காலத்துக்குள் சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதும் அதில் அடக்கம்.
தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து எதிர்பார்த்த மாற்றத்தை நிறுவுவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்றத்தில் அவர்கள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற வேண்டும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
***
