- கவமுரா ஜென்கியுடன் ஒரு நேர்காணல்
- நேர்காணல் கண்டவர் : மோர்கன் சைனல்-டார்ஜென்ட்
- தமிழாக்கம் : கௌதம சித்தார்த்தன்
தற்கால ஜப்பானிய எழுத்தாளரான கவமுரா ஜென்கி (Kawamura Genki) ஒரு புத்தம் புதிய கலை ஆளுமை கொண்ட மனிதர். தனது 39 வயதில், கவமுரா ஏற்கனவே பல புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களான ஹோசோடா மாமோரு (The Boy and the Beast, 2016) ஷிங்காய் மாகோடோ (Your Name, 2016 ) ஆகியோரிடம் பணியாற்றினார் மற்றும் If Cats Disappeared From The World உட்பட சில நாவல்களை எழுதியவர். இந்த நாவல் ஜப்பானில் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் உலகின் முதன்மையான பல மொழிகளிலும் மொழியாக்கம் பெற்றது. போட்டோ ஷூட்கள், நேர்காணல்கள், புத்தகத் திருவிழாக்கள் மற்றும் இயக்குனர் ஜே.ஜே. அப்ராம்ஸுடனான சந்திப்பு போன்ற பரபரப்புகளுக்கு இடையே, தனது தங்கும் விடுதியில், என்னை ஒரு இயல்பான தன்மையுடன் நேர்காணலுக்கு வரவேற்றார். அந்தச் செய்கை உடனடியாக என்னை நெகிழ்வாக்கியது. என் முன் அமர்ந்திருந்த மனிதனை நான் கவனமாகப் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது, எனது லேசான கிளர்ச்சியுடன், கவமுராவை நீங்கள் சுயாதீன சினிமாவில் சந்திக்கும் அல்லது ஹிப்ஸ்டர் காபி கடையில் ஒரு தடிமனான புத்தகத்தில் தொலைந்து போகும் வழக்கமான திரைப்பட மேதாவிகளிடமிருந்து விலகிய வித்தியாசத்தை நான் உணர்ந்தேன். மத்திய லண்டனில் உள்ள ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் நாங்கள் சந்தித்தோம், திகைப்பூட்டும் உணர்திறன் மற்றும் சிறந்த ஞானத்துடன் கவாமுரா கட்டமைத்த வசீகரமான அவரது வாழ்க்கையைப் பற்றி விவாதித்தோம்.
கவமுரா, “உலகிலிருந்து பூனைகள் மறைந்து போனால்” என்ற இந்த முதல் நாவலில், தனது முப்பதுகளில் இருக்கும் ஒரு இளம் தபால்காரரின் கதையை விவரிக்கிறார், அவர் தனது உடனடி மரணத்தை ஏற்படுத்தும் மூளைக் கட்டியின் காரணமாக தனது நாட்கள் எண்ணப்படுவதைக் கண்டுபிடிக்கிறார். கதை சொல்லியான அவர் தனது மருத்துவரின் சந்திப்பிலிருந்து திரும்பி வரும்போது, தனது படுக்கையில் ஒரு விசித்திரமான பிசாசைக் காண்கிறார்: ஹவாய் சட்டை (கடற்கரை (அல்லது விடுமுறை நாட்களில்) உலாவலின்போது அணியும் Printed Shirt) அணிந்த அவரது இரட்டை (doppelgänger) ஒரு எளிய வர்த்தகத்தை முன்மொழிகிறார்: அதாவது, அந்த இளம் தபால்காரர் உலகிலிருந்து மறைந்து போகத் தயாராக இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும், அவர் ஒரு கூடுதல் நாளின் வாழ்வைப் பெறுவார். இப்படியாக, அவரது தொலைபேசி, திரைப்படங்கள் மற்றும் பிற அற்பமான பொருட்களைக் கைவிட்ட பிறகு, பூனைகளின் இருப்புக்கு எதிராக, பிசாசு அவரது வாழ்க்கையை வியாபாரம் செய்ய முடிவு செய்கிறது. அத்தருணத்தில், நம் கதைசொல்லி அதனுடன் முரண்படுகிறார்.
மிகவும் திறமை மிக்க மொழியாளுமை கொண்ட ஜப்பானிய மொழிபெயர்ப்பாளரான கோஸு எட்சுஜென் (Kozue Etsuzen) உதவியுடன், “உலகிலிருந்து பூனைகள் மறைந்து போனால்”, பொருள் சார்ந்த பொருட்களுக்கான நமது தொடர்பை கேள்விக்குள்ளாக்குவது மற்றும் வாழ்க்கையின் உண்மையான மதிப்பை உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் புரிந்து கொள்ள உதவுவது எப்படி என்பதை நாங்கள் விவாதித்தோம்.
***
மோர்கன் : “உலகிலிருந்து பூனைகள் மறைந்து போனால்” உங்கள் முதல் நாவல். எப்படி எழுத வந்தீர்கள்?
கவாமுரா : நான் முதன்மையாக ஒரு திரைப்படத் தயாரிப்பாளன், எனவே இதற்கு முன் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. இருந்த போதிலும், இந்தக் கதை ஒரு திரைப்படத்தை விட ஒரு புத்தகத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்ததாக உணர்கிறேன். பூனைகள் இல்லாத உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது மிகவும் சவாலானது, அந்த சவாலுக்குப் பதிலாக நான் எழுத ஆரம்பித்தேன். படத்தில் காட்ட முடியாத விஷயத்தை எழுத வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆயினும்கூட, இந்தப் புத்தகம் சில அம்சங்களில் மிகவும் காட்சிபூர்வமாக இருப்பதாக நான் உணர்கிறேன். ஒரு திரைப்படத்தை விட வித்தியாசமான முறையில் வாசிப்பு, உங்கள் கற்பனையைத் தூண்டுகிறது என்ற எண்ணம் எனக்குப் பிடித்திருந்தது. மேலும், இது எனது பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு புதிய வழியாகும்.
மோர்கன் : ஜப்பானிலும் சர்வதேச அளவிலும் இத்தகைய நேர்மறையான பதிலுக்கு நீங்கள் தயாரா? உங்களைப் பொறுத்தவரை உங்கள் புத்தகத்தின் வெற்றியை எந்த அம்சம் விளக்குகிறது?
கவாமுரா : நான் அதற்கு முழுவதுமாக தயாராகி விட்டேனா என்று தெரியவில்லை. நான் உண்மையில் எனது வேலையில் மார்க்கெட்டிங் அல்லது விளம்பரம் செய்வதில் நேரத்தை முதலீடு செய்வதில்லை, அதனால்தான் எனது வாசகர்களிடமிருந்து இவ்வளவு பெரிய ஈடுபாட்டை நான் முழுமையாக எதிர்பார்க்கவில்லை. ஆயினும்கூட, நான் மிகவும் மதிக்கப் படுகிறேன் என்பது எனது வேலையை தொடர்புடையதாக மாற்றுவதும், எனது புத்தகத்தைப் படிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான சமயங்களில் உணர்கிறேன். நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்: நீங்கள் ஒரு நாள் வீட்டிற்கு செல்லும் வழியில் சுரங்கப்பாதை நிலையத்திற்கு வெளியே ஒரு கரடி பொம்மையை மறந்து விட்டுச் சென்று விட்டதாக கற்பனை செய்து பாருங்கள். இந்த கரடி அங்கு இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஒவ்வொரு நாளும் 10,000 பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்தி கரடியைக் கவனிக்கிறார்கள். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் அதை ஒரு போதும் கேள்வி கேட்க மாட்டார்கள், அதைப் பற்றிச் சிந்திக்காமல் தங்கள் நாளைக் கழிப்பார்கள். ஒரு எழுத்தாளனாக கரடியைத் தூக்கி, யார் அதை உணர்ந்தார்கள் என்று கேட்பது போன்றது. “உலகிலிருந்து பூனைகள் மறைந்து போனால்” நாவலில், நான் இதேபோன்ற ஒன்றைச் செய்தேன், நான் இது தொடர்புடைய உணர்வுகளில் கவனம் செலுத்தினேன், மேலும் அவற்றை நிறுத்தவும் கவனிக்கவும் என் வாசகர்களைக் கேட்டுக் கொண்டேன். நாம் அனைவரும் இதுபோன்ற விழிப்புணர்வுக்காகவும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வேண்டியதன் அவசியத்திற்காகவும் ஏங்குவதால், மக்கள் ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்புகிறார்கள் என்பதை இது ஓரளவு விளக்குகிறது என்று நினைக்கிறேன்.
மோர்கன் : ஒரு எழுத்தாளராக உங்கள் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த உங்கள் நாவலின் வெற்றி உங்களை பாதிக்கிறதா?
கவாமுரா : நான் இன்னும் படங்களின் ஸ்கிரிப்ட் மற்றும் புத்தகங்களை எழுதத் திட்டமிட்டுள்ளேன். நான் முக்கியமாக என்னை ஒரு கதைசொல்லியாக அடையாளப்படுத்திக் கொள்கிறேன், எனவே மற்றவர்களுடன் கதைகளைப் பகிர்வதே எனக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். திரைப்படங்களும் புத்தகங்களும் இந்தக் கதைகளைச் சொல்வதற்கான வழிமுறைகள் மற்றும் அவை இரண்டும் மிகவும் தனித்துவமான பார்வையை வழங்குகின்றன. இருப்பினும், ஒரு புத்தகத்தை ஒரு திரைப்படத்தைப் போல காட்சிப்படுத்த முடியும் என்று நான் நினைக்கும் போது, ஒரு படத்தின் இசைத்தன்மையை புத்தகமாக மாற்றுவது கடினம். நான் நினைக்கும் ஒரே வரம்புகளில் இதுவும் ஒன்று. மேலும் நான் திரைப்படம் எடுப்பதை நிறுத்தாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனது பணியில் நான் இசையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இது *Simon & Garfunkel -ன் ‘April Come She Will’ பாடலுடன் நடந்தது. உறவின் முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு வரும், ‘**ஹனிமூன் பீரியட்’ என்று நீங்கள் அழைப்பதை மையமாக வைத்து ஒரு காதல் கதையை எழுத இது என்னைத் தூண்டியது. எனது மூன்றாவது புத்தகம், இன்று நாம் வாழும் அன்பற்ற தன்மையை நிவர்த்தி செய்யும் பெயரிடப்பட்ட தலைப்புடன் இதுவே இருந்தது.
மொத்தத்தில், ஒரு கதையை என்னால் முடிந்தவரை சிறப்பாகச் சொல்ல முடியும் என்பது எனக்கு மிக முக்கியமான அம்சம் என்று நான் நினைக்கிறேன், அதன் பிறகு நான் ஊடகத்தை மாற்றியமைக்கிறேன்.
மோர்கன் : உங்கள் கதைக்குத் திரும்புவோம்: நாங்கள் முன்பு குறிப்பிட்டது போல,”உலகிலிருந்து பூனைகள் மறைந்து போனால்” நாவலில், கதாபாத்திரங்களும் கதையும் மிகவும் தொடர்பு படுத்தக்கூடியவையாகவும் நம்பகத்தன்மையின் ஆழமான உணர்வை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன. இந்தக் கதையை எழுத நீங்கள் எவ்வாறு தூண்டப்பட்டீர்கள்?
கவாமுரா : இந்தப் புத்தகத்தை எழுத என்னைத் தூண்டியதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலாவது, 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது தொலைபேசியை இழந்தேன். கவனமின்மையின் ஒரு நிமிடத்தில், நான் 10 வருட மதிப்புள்ள தரவுகள், படங்கள் மற்றும் இறுதியில் நினைவுகளை இழந்தேன். நான் நெருங்கிய நபர்களின் தொலைபேசி எண் கூட நினைவில் இல்லை என்பதை உணர்ந்தேன். அன்று ரயிலில் அமர்ந்து ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தது எனக்கும் நினைவிருக்கிறது. அப்படிச் செல்லும் போது தூரத்தில் அழகான வானவில் ஒன்று தெரிந்தது. என்னைச் சுற்றியிருந்த யாரும் பார்க்கவில்லை, ஏனென்றால் அவர்கள் அனைவரும் தங்கள் தொலைபேசிகளில் ஆக்கிரமிக்கப்பட்டனர். உள்ளுணர்வாக, எதையாவது பெறுவதற்கு எதையாவது இழக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். நான் விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தேன், மொபைல் போன்களின் தோற்றத்துடன் மிகக் குறுகிய காலத்தில் எங்கள் வாழ்க்கை எவ்வாறு மாறிவிட்டது என்பதை உணர்ந்தேன். இது என்னை சிறிது நேரம் பின்வாங்கச் செய்தது, அந்த அனுபவத்தை எப்படியாவது பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
இரண்டாவதாக, என் மாமா தவறு செய்தார் என்பதை அறியாமலே நிரூபிக்க இந்த புத்தகத்தை எழுதினேன். என் மாமாவுக்கு 42 வயதில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம், அது என்னை மிகவும் பாதித்தது. இறப்பதற்கு முன் அவர் என்னிடம், ,வருத்தப்பட வேண்டாம், ஏனென்றால் தான் மறைந்தால் உலகம் மாறாது.’ என்றார். அப்போது என்னால் அவரை மறுக்கவோ, வேறுவிதமாக வாதிடவோ முடியவில்லை. இருப்பினும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, எனது நாவல் இப்போது உலகம் முழுவதும் வெளியிடப்பட்டதன் மூலம், நான் உணர்ந்தது சரி என்று எனக்குத் தெரியும். என் மாமாவின் இருப்பு உலகத்தை மாற்றியது. ஒரு நபர் இருந்த மற்றும் இனி இல்லாத உலகம். ஒரு வித்தியாசத்தின் சிறிய பகுதியாக அவை இருந்தன என்பதற்கு போதுமான சான்றாகும். எனது முக்கிய கதாபாத்திரம் இறுதியில் அதே முடிவுக்கு வருகிறது என்று நினைக்கிறேன். எனது மாமாவின் மரணத்தைப் பற்றி எழுதுவது இறுதியில் உலகை வேறுபடுத்தியதால், சில மூடுதலைக் கண்டறியவும் இது எனக்கு உதவியது.
கடைசியாக, அமெரிக்காவில் 9/11 அல்லது ஜப்பானில் புகுஷிமா பேரழிவு மற்றும் உலகில் நடக்கும் பல போர்கள் போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்வது, என்னை எழுதத் தூண்டியது. இது இறப்பு பற்றிய விழிப்புணர்வை எனக்கு ஏற்படுத்தியது. மேலும் இது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஒரு தொடர்புடைய தலைப்பு. அதனால்தான் மரணம் மற்றும் நாம் அனைவரும் முக்கிய கதாபாத்திரமாக எப்படி உணர முடியும் என்பதைப் பற்றி ஒரு நூலை எழுத விரும்பினேன்.
மோர்கன் : ஒரு எழுத்தாளராக நீங்கள் எங்கிருந்து உத்வேகத்தைக் கண்டீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். உலகிலிருந்து பூனைகள் மறைந்து போனது போல், உங்களுக்கு மிகவும் தனிப்பட்ட எழுத்து நடை உள்ளது. நீங்கள் ஒரு சோகமான கதையைச் சொல்லலாம் மற்றும் அதில் நகைச்சுவையை அறிமுகப்படுத்துவதற்கான வழியைக் காணலாம், அது எங்கிருந்து வருகிறது?
கவாமுரா : எனது கதைசொல்லல் ***Rakugo -வுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது, இது வாய்மொழி வழக்கின் ஒரு பாரம்பரிய வடிவமாகும், இது கதையின் உள்ளடக்கத்தை மூன்று வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாத கூறுகளாகப் பின்னுகிறது. உதாரணமாக, “உலகிலிருந்து பூனைகள் மறைந்து போனால்”, எனது சொந்த அனுபவத்துடன் எனது தொலைபேசியை இழந்தது மற்றும் என் மாமாவின் மரணம் ஆகியவற்றுடன் உள்ளடங்கிய ‘மரணம்’ என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்தேன். இந்த நிகழ்வுகள் என் வாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தவை மற்றும் தொடர்பில்லாதவை, ஆனால் அவை ஒரே விஷயத்தில் வெவ்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை உணர்ந்தேன், இதிலிருந்து ஒரு கதையை எழுத முடிவு செய்தேன். கூடுதலாக, கதைக்குப் பொருந்தக்கூடிய பாடல்கள் மற்றும் எனது நாவலில் இதை எவ்வாறு இணைப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்க முயற்சிக்கிறேன். இப்படித்தான் என்னுடைய எழுத்து நடையை தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறேன்.
மோர்கன் : உங்கள் நாவலின் முக்கிய கதாபாத்திரத்தை நீங்கள் அடையாளம் காண்கிறீர்களா? அப்படியானால், எந்தெந்த வழிகளில்?
கவாமுரா : மரணம் என்பது நான் எப்பொழுதும் சிந்தித்துப் பார்க்க அதிக நேரம் செலவழித்த ஒரு விஷயமாகவே என் கதாபாத்திரத்தை நான் அடையாளம் காண்கிறேன். உதாரணமாக, சிறு வயதிலிருந்தே, எனது சொந்த இறுதிச் சடங்கைப் பற்றியும், யார் கலந்துகொள்வார்கள், எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தேன். எனது சொந்த இறப்பைப் பிரதிபலிப்பதன் மூலம், அவர்களது செயல்பாடுகள் குறித்து நான் உணர்ந்தேன். அதனால்தான் இந்த பாத்திரம் வெளிப்படையாக எனது சொந்த பிரதிபலிப்பிலிருந்து பிறந்தது, ஆனால் நான் முன்பு விளக்கியது போல், மிக முக்கியமான விஷயம் ஒரு தொடர்புடைய கதையை எழுதுவதாகும். அதனால் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கவில்லை. ஏனென்றால் இது அவருடைய கதையோ, என்னுடையதோ மட்டுமல்ல, எல்லோருக்கும் தொடர்பு படுத்தக் கூடிய புத்தகம். இந்த நம்பிக்கையின் செய்தியையும், நம்மிடம் இருப்பதை நாம் எப்படி மதிக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்க விரும்பினேன்.
மோர்கன் : குடும்பப் பிரச்சனைகள், துரதிர்ஷ்டவசமான காதல் கதைகள் மற்றும் மிகவும் சுவாரஸ்யமாக, தொழில்நுட்பம் மற்றும் குறிப்பாக நமது அலைபேசிகளைச் சார்ந்திருப்பது போன்ற பல நவீன பிரச்சனைகளை உங்கள் நாவல் அதன் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் எப்படி எதிர்கொள்கிறது என்பது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உங்கள் புத்தகத்தில் “மனிதர்கள் மொபைல் ஃபோனைக் கண்டுபிடித்தபோது, அது பதட்டமும் அமைதியின்மையையும் உருவாக்கவல்லது என்ற விஷயத்தையும் கண்டுபிடித்தனர்.” என்று நீங்கள் சொல்லும் இந்த மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் ஏற்கனவே அதைப் பற்றி கொஞ்சம் தொட்டுள்ளோம், ஆனால் உங்கள் புத்தகத்தில் அந்த செய்தியை தெரிவிப்பது ஏன் முக்கியம் என்று நீங்கள் உணர்ந்தீர்கள்?
கவாமுரா : நான் எழுதத் தொடங்கியபோது, நான் என் நினைவுகளைப் பற்றி எழுதுவதை உணர்ந்தேன். நான் காணாமல் போகும் பொருட்களைப் பற்றி அதிகம் இல்லை, மாறாக இந்த விஷயங்கள் தொடர்புடைய நபர்களைப் பற்றி. உண்மையான மனிதத் தொடர்பைத் தேடுவதை விட, நமது சமூகத்தில் எவ்வாறு பொருட்களை அடிப்படையாகக் கொண்டோம் என்பதை இது எனக்கு உணர்த்தியது. நான் முன்பே குறிப்பிட்டது போல, எனது புத்தகத்தில் இறப்பு பற்றிய மையக் கருப்பொருள், வாழ்வின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத் தூண்டுவதாகும். விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்வது மனித இயல்பு. ஜப்பானில் உள்ள எனது வாசகர்களின் பொதுவான ஒருமித்த கருத்து என்னவென்றால், தங்களிடம் உள்ளவற்றின் முக்கியத்துவத்தைப் பார்க்க புத்தகம் அவர்களுக்கு உதவியது. புத்தகத்தின் பலம் என்னவென்றால், அது இறுதியில் முடிவடையாது, இது வாசகருக்கு ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டின் தொடக்கமாகும்.
மோர்கன் : உங்கள் நாவலின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், பிசாசை சித்தரிக்க நீங்கள் கற்பனை செய்த பாத்திரம். நாவலில் நீங்கள் கூறியது போல், பிசாசு பொதுவாக கொம்புகள் கொண்ட சிவப்பு பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. ஹவாய் சட்டைகளை அணிந்திருக்கும் இந்த ஆடம்பரமான கதாபாத்திரமாக உங்கள் பிசாசைக் கற்பனை செய்ய உங்களுக்கு எங்கிருந்து உத்வேகம் கிடைத்தது?
கவாமுரா : இக்கதையானது தோற்றத்தின் தலைகீழ் பதிப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகத்தை உருவாக்க 6 நாட்கள் எடுத்தாலும், என் கதையில் உலகம் 6 நாட்களில் ஒவ்வொரு நாளும் எதையாவது இழக்கிறது. ஆதியை மனதில் கொண்டு, அதனால்தான் பிசாசு அதன் தோற்றத்தை உருவாக்குகிறது. நான் வேண்டுமென்றே பிசாசை எங்கள் கதாநாயகன் போல் தோற்றமளித்தேன். அவர் வெளிப்புறத்தில் ஒரே மாதிரியாக இருக்கிறார், ஆனால் உள்ளே முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறார். பிசாசு இருந்திருக்கக்கூடிய வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நிகழ்காலத்திற்கு வழிவகுக்கும் நனவான தேர்வுகளின் காரணமாக வெளிப்படையாக அத்தகைய வாழ்க்கை செயல்படவில்லை.
மோர்கன் : பிசாசு உங்கள் முன் தோன்றி, நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக வருவதற்கு உலகத்திலிருந்து பூனைகளைக் காணாமல் போகச் செய்யுங்கள் என்று கேட்டால், நீங்கள் பூனைகளைக் காப்பாற்ற விரும்புவீர்களா?
கவாமுரா : என்னால் எதையும் விட்டுவிட முடியாது, இதைத்தான் இந்த புத்தகம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. ஒவ்வொரு முறை புத்தகம் எழுதும்போதும் என்னைப் பற்றி ஏதாவது கற்றுக்கொள்கிறேன். நான் யார் என்று எனக்குத் தெரியாததால் நான் எழுதுவதற்கு இதுவே காரணம். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, எல்லா படைப்பாளிகளும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நம்புகிறேன்; உருவாக்க வேண்டும் என்ற நமது விருப்பம், நம்மை நாமே தேட வேண்டும் என்பதற்காகத் தூண்டப்படுகிறது.
மோர்கன் : உங்கள் நாவலைப் பற்றி நான் உங்களிடம் கேட்க விரும்பிய அனைத்தையும் கேட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி. இப்போது உங்கள் சினிமா தயாரிப்பாளர் வாழ்க்கை பற்றிய சில விவரங்களைக் கேட்க விரும்புகிறேன். தயாரிப்பாளராக உங்கள் பங்கை எப்படிக் கருதுகிறீர்கள்?
கவாமுரா : தயாரிப்பாளருக்கு நிறைய வேடங்கள் உள்ளன, ஆனால் கதை சொல்லும் முறையை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாக நான் முக்கியமாகக் கருதுகிறேன். நான் மிகவும் கறாரான தயாரிப்பாளர்; படத்தின் அனைத்து அம்சங்களிலும் ஈடுபட விரும்புகிறேன். நான் படப்பிடிப்பு தளத்தில்கூட, படத் தயாரிப்பாளருடன் காட்சியைப் பற்றி விவாதிப்பேன், நாங்கள் ஒன்றாக ஸ்கிரிப்டைப் பார்ப்போம்.
மோர்கன் : அப்படியென்றால் உங்களுக்கான அடுத்த கட்டம் உங்கள் சொந்தப் படம் தயாரிப்பதுதானே?
கவாமுரா : நான் உண்மையில் கேன்ஸ் போட்டியில் பங்கு பெற்ற Duality என்ற குறும்படத்தை இயக்கினேன். இப்போது ஒரு திரைப்படத்தை இயக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். குறிப்பாக தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் என் மனதில் பதிந்திருக்கிறது. இது என் பாட்டியால் சொல்லப்பட்ட கதை. டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட ஒற்றைத் தாயின் கதையாக இது இருக்கும், அவர் தனது மகனை மறந்துவிடுகிறார். நாவல் பரிதாபமாகவோ அல்லது பலவீனமாகவோ இருப்பதை நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, நான் எப்படி எனது கடந்த காலத்தைப் பற்றி மறந்து விடுகிறேன், உண்மையில் இல்லாத விஷயங்களைக் கற்பனை செய்வதன் மூலம் எனது சொந்தக் கதையை எப்படி மாற்றிக் கொள்கிறேன் என்பதைப் பிரதிபலிக்க இது ஒரு வழியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தக் கதை ஒரு திரைப்படமாக, ஒரு திரைப்படத்தில் நான் சொல்லும் கதைகளில் ஒன்றாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
மோர்கன் : ஒரு புத்தகம் எழுதும் அனுபவத்துடன் ஒப்பிடும்போது ஒரு திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? உதாரணமாக, “உலகிலிருந்து பூனைகள் மறைந்து போனால்” திரைப்படத் தழுவலை நீங்கள் தயாரித்துள்ளீர்கள், நீங்கள் உருவாக்கும் செயல்முறையை பல நபர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அது இன்னும் உங்கள் கதையாக இருப்பதை நீங்கள் எப்படி உணர முடியும்?
கவாமுரா : என்னைப் பொறுத்தவரை படம் எடுப்பது என்பது வைரத்தை மெருகூட்டுவது போன்றது. இது நான் கற்பனை செய்த கதையை அழகுபடுத்துகிறது, ஏனெனில் இது எனது யோசனையைப் பற்றிய அவர்களின் சொந்த உணர்வை உருவாக்க எனக்கு உதவ மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இது திட்டத்திற்கு கூடுதல் பரிமாணத்தை கொடுப்பதாக உணர்கிறேன். இது மிகவும் வித்தியாசமான படைப்பு செயல்முறையாகும். ஒரு புத்தகத்தை உருவாக்குவது ஒரு சவாலான மற்றும் தனிமையான செயல்: நீங்கள் எழுதத் தகுந்த ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை உங்களை நீங்களே தோண்டி எடுக்கிறீர்கள். அந்த நேரத்தில் மிகவும் வேதனையாக இருக்கும். ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு உணர்ச்சிமிக்க குழுவுடன் சேர்ந்து மலை ஏறுவது, புதிய உயரங்களை அடைவது போன்றது.
மோர்கன் : இந்த நேர்காணலின் இறுதியாக, உங்களின் எதிர்கால திட்டங்கள் சிலவற்றை எங்களுடன் தெரிவிக்க முடியுமா?
கவாமுரா : இந்த வருடத்திற்கான பல்வேறு திட்டங்கள் என்னிடம் உள்ளன, ஆனால் மிக முக்கியமான ஒன்று எனது ‘மில்லியன் டாலர் ஆண்கள்’ நாவலைத் திரைப்படமாக மாற்றுவது. நான் 100 க்கும் மேற்பட்ட செல்வந்தர்களை சந்தித்து அவர்களுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பவை பற்றிப் பேச ஆரம்பித்தேன். இது ஒரு சுவாரசியமான செயல் மற்றும் இந்த நாவலைத் தழுவி எடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். பிறகு ஜப்பானில் என் பாட்டியைப் பற்றிய புத்தகத்தை வெளியிடுவேன் என்று நம்புகிறேன்.
வரவிருக்கும் ஆண்டிற்கான எனது முக்கிய தனிப்பட்ட திட்டங்கள் இவை ஆனால் மற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் நிச்சயமாக அதிக ஒத்துழைப்பு இருக்கும்.
***
தற்கால ஜப்பானிய எழுத்தாளரான கவமுரா ஜென்கியின் படைப்புகள் ஜப்பானிய சமூகத்தின் அகச் சிக்கல்களையும் அதன்மூலமாக கட்டமையும் புறச் சிக்கல்களையும் அசலாக வெளிப்படுத்துகின்றன. உலகிலிருந்து பூனைகள் மறைந்து விட்டால் என்பதைப் படித்த பிறகு, கவாமுரா ஜென்கியின் கடந்த கால மற்றும் எதிர்காலத் திட்டங்களை எதிர்பார்ப்புடன் பரிந்துரைக்கிறோம்.
மேலும், திரு. கவாமுரா மற்றும் அவரது மொழிபெயர்ப்பாளர் தங்களது நேரத்தை ஒதுக்கி, இந்த நேர்காணல் தந்ததற்கு எங்களின் இதழ் சார்பாக அன்பான நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
***
மொ.பெ. குறிப்புகள்:
*Simon & Garfunkel : அமெரிக்க நாட்டுப்புற ராக் இசை இரட்டையர்கள். இவர்களது Sounds of Silence ஆல்பத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் ‘April Come She Will’ . இந்தப் பாடலின் வரிகள், பருவங்களின் மாறும் தன்மையை ஒரு பெண்ணின் மாறும் மனநிலைக்கு, ஒரு உருவகமாக பயன்படுத்துகின்றன.
