கேரி ஃபுகுனகா உடன் ஒரு நேர்காணல்
– தமிழாக்கம் : நடராஜன் ஜெகநாதன்
Sin Nombre என்ற படத்தின் மூலம் உலகளவில் மாற்று சமூக அரசியல் நுண்பார்வை கொண்ட இயக்குனர்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் ஃபுகுனகா திரைக்கதையாளரும், ஒளிப்பதிவாளரும் ஆவார். பல்வேறு குறும்படங்களும் விவரணப்படங்களும் எடுத்துள்ள இவர், பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது Victoria Para Chino (2004) படம் தொடர்ந்து இரண்டு டஜன் உலகப்படவிழாக்களில் கலந்து தொடர்ந்து விருதுகளைக் குவித்தது.
உங்களை ஒரு திரைப்படக் கலைஞனாக்கிய சூழல் எது?
ஆதி புராதனக் கதைகள் பற்றிய ஆர்வமுள்ளவனாக சிறுவயதில் இருந்தேன். ஆனால் எனது பனிரெண்டாவது வயதில் எனது பெற்றோர்களின் வீடியோ கேமராவில் என் நண்பர்களை கொண்டு நிஜக் கதைகளை எடுக்க முயன்று, நிறைவேறாத குமுறலுடன் இருந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் உள்ளுக்குள் எனது ஆர்வம் நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்தது. உள்நாட்டு யுத்தகாலங்களில் நாடகங்களில் பங்கேற்க தேசம் முழுவதும் சுற்றித் திரிந்தேன். தேச வரலாறு பற்றிய பிரமாண்ட நாடகங்களில் பங்கேற்ற போது எனக்கு வயது 15. அந்த அனுபவங்களிலிருந்து என் முதற் திரைக்கதையை எழுத ஆரம்பித்தேன். அது ஒரு உணர்வுக் குமுறல் கதை. ஐரிஷ் ராணுவத்தைச் சேர்ந்த இரு சதோதரர்கள் ராணுவ முகாமில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் போது தங்களைக் கவனித்துக் கொண்ட நர்ஸ் காதலிப்பதால் ஒருவரை ஒருவர் வெறுக்கும் கதை அது. ஆறு மாதகாலம் இக்கதையில் ஆழ்ந்து எழுத முயன்றேன். அந்த முயற்சியில் நான் தெளிவாகக் கற்றுக் கொண்டது சிறப்பாக தட்டச்சு செய்வதற்கு மட்டும்தான்.
எனது டீன் ஏஜ் பருவத்தின் முடிவில் நான் மாறுபட்ட ஒருசூழலில் இருந்தேன். எனது 20 வயதில் ஆல்ப்ஸ் பனிப் பிரதேசத்தில் பொலிடிக்கல் சயின்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு நாள் சிறு விபத்தில் என் கால் உடைந்தது. விளையாட்டிற்கும் எனக்கும் உள்ள நெருக்கம் மிகக் குறைந்த நாட்களே இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது. விளையாட்டு அல்லாத வேறு வழிகளில் என் மனம் அலைய ஆரம்பித்தது. மீண்டும் எழுத்து, புகைப்படம் எடுப்பது என்று நான் மாறியபோது திரைப்படமும் என்னோடு சேர்ந்து கொண்டது.
திரைப்படத்தை உருவாக்கும் உத்தியை எப்படிக் கற்றீர்கள்?
பல்கலைகழகத்தில் வரலாறு, மற்றும் புவி அரசியல் பற்றிய படிப்பு முடிகிற தருணத்தில் நேர்மையான அதே சமயத்தில் புத்திசாலித்தனமான அணுகுமுறைகளோடு கூடிய இத்திறனாய்வுகளை பல்கலைக்கழக வானொலி நிலையத்திற்காகச் செய்தேன். என்னைப் பொறுத்த வரையில் நம்மைப் பற்றிய நமக்குத் தெரியாத கதைகளை நாம் கண்டுபிடித்தாக வேண்டும். படிப்பு முடிந்த பிறகு விளம்பரப் படங்களுக்கும் சிறுபடங்களுக்கும் ஒளிப்பதிவு உதவியாளனாக உலகெங்கும் சுற்றினேன். மிகப் பெரிய பொருளாதாரம் இந்த நிழல் பொம்மை வியாபாரத்தில் எப்படியெல்லாம் செலவழிக்கப் படுகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினேன். என்னால் இந்த வழியாய் ஒரு இயக்குனாராக முடியாது என்று புரிந்து கொண்டேன். என்னோடு பணியாற்றிய சக ஒளிப்பதிவு உதவியாளர் சொல்வார், “நீ விமானப் பயணிகள் பணியாளனாக 20 வருடங்கள் பணியாற்றினால் உன்னால் எப்படி விமான ஓட்டியாக முடியும்” நான் நியூயார்க் திரைப்படப் பள்ளிக்கு விண்ணப்பித்தேன். அங்கு பயின்ற போது ஒரு மாணவனாகவும், எனது திரைப்படத்திற்கு பணம் திரட்ட வேண்டியவனாகவும் இருந்தேன். சிறந்த படங்களைத் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்பது என் குறிக்கோளாக இருந்தது.
இக்கதையைத் தேர்வு செய்யவும் இதனை உருவாக்கவும் தூண்டியது எது?
Victoria Para Chino என்ற எனது நியூயார்க் பல்கலைக் கழகத்தின் இரண்டாவது படம். எனது முதல் வருட இளவேனிற் காலத்தில் எனது இரண்டாவது படத்திற்கான கதை எதுவாக இருக்கலாம் என்று திட்டமிட ஆரம்பித்தேன். என் காலத்து நிகழ்வின் கூர்மையான கவனிப்பாக அது இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நியூயார்க் டைம்ஸ் – ன் முதல் பக்கத்தில் வெளிவந்த ஒரு செய்தியைப் படிக்கும்வரை என் கதையை நான் முடிவு செய்யாமலிருந்தேன். மெக்ஸிகோவிலிருந்து பெரிய லாரிகளில் குளிர்பதனப் பெட்டிகளுக்குள் ஏற்றி வரப்படும் – 90 மெக்கானிக்களும் ஒரு மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவரும் சட்ட விரோதமாக அமெரிக்கா வரும்போது பிடிக்கப்பட்டார்கள். அதீத உஷ்ணத்தாலும், குளிர்பதனப் பெட்டிகளிலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்களாலும் 19 பேர் இறந்தார்கள். ஒரு அப்பா தன் ஐந்து வயது மகனோடு இறந்தார் என்ற செய்தியே அது.
அக்காட்சியை உருவகப்படுத்த முயன்ற போது என் ஈரக்குலையே நடுங்கியது. அதைப் படித்திருக்காவிட்டால் அது பற்றி யோசித்திருக்கவே மாட்டேன். சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் பற்றித் தெரிந்து கொள்வதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். முக்கியமாக மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வருபவர்கள் பற்றி கவனம் செலுத்தினேன். நான் கலிபோர்னியாவைச் சேர்ந்தவனாக இருந்தாலும், என் அம்மாவின் இரண்டாவது கணவர் மெக்ஸிக, அமெரிக்க பெற்றோர்களுக்குப் பிறந்தவர். (நான் தவறு செய்தால் என்னை பீச் மர வளர்ப்புத் தோட்டத்திற்கு வேலைக்கு அனுப்பி விடுவேன் என்று அவர் மிரட்டிக் கொண்டேயிருப்பார்.) சட்டவிரோதக் குடியேறிகள் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். எனக்கு அது பற்றி எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் இக்கதை… என்னால் ஏனென்று சொல்ல இயலவில்லை. என்னை இக்கதை அனுமானிக்க முடியாத ஆழத்திற்கு இழுத்துச் சென்று விட்டது. அதன் தாக்கம் என் வாழ்வு முழுவதும் இருந்து கொண்டேயிருக்கும்.
என் இரண்டாவது ஆண்டின் குளிர்காலத்தில் அந்தக் குறும்படத்தை எடுத்தேன். அது என் முதல் வர்ணப்படம். வசனம், இசை மற்றும் எல்லாம் அதில் இருந்தது. (நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அதற்கு முன் இத்தகைய படத்தயாரிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது) ஒரு வருடம் கழித்து அதன் படத்தொகுப்பு வேலைகளையெல்லாம் முடித்து திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்காக அனுப்பி வைத்தேன். முதல் திரையிடலின் போதே எதிர்பாராத அளவிற்கு சிறப்பான வரவேற்பை அது பெற்றது. நான் அந்த நியுயார்க் டைம் செய்திகளில் வாசித்ததை படம் பார்ப்பவர்கள் பார்த்து உணர வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். ஆனால் என்படம் விருதுகளை வென்றது. மூன்று திரைப்பட விழாக்களில் தொடர்ந்து சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. ஸன்டான்ஸ் திரைப்பட விழாவின் ஜுரி விருதுவும் அதற்குக் கிடைத்தது. மொத்தமாக 24 விருதுகளை அது பெற்றது. திரைப்பட விநியோகஸ்தர்கள், விநியோக நிறுவனங்களிலிருந்து எனக்குத் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இக் குறும்படக் கதையைப் பெரிய அளவில் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா அல்லது வேறு கதைகள் தயாராக இருக்கிறதா என்ற கேள்விகள் தொடர்ந்து வந்தன. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனெனில் நான் அடுத்த கதைக்குத் தயாராகவேயில்லை. அது குறித்த திட்டங்களும் என்னிடம் இல்லை.
அது ஒரு மகிழ்வின் உச்ச கட்ட தருணம். திரைப்படக் கலையைப் பாடமாகப் பயின்ற ஒரு மாணவனுக்குக் கிடைத்த பேரதிர்ஷ்டம். பணம் குவிக்க அற்புத வாய்ப்பு என்ற போதிலும் எனக்கு அதில் ஆர்வமில்லை. அதனால் எல்லாரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். இது நான் சொல்ல வேண்டிய கதை என்று நான் நினைக்கவில்லை. இதுபற்றி எனக்கு இன்றும் பல கதைகள் தெரிந்திருந்தாலும் நான் அதற்கான ஆளில்லை என்று தோன்றியது. என் குறும்படத்திற்காக நான் தேடலில் இறங்கிய போது, மத்திய அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேற வருபவர்கள் மேற்கொள்ளும் படுபயங்கரப் பயணம் பற்றி அறிந்தேன். அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக மரணபயம் நிறைந்த மெக்ஸிகோ நிலப்பரப்பில் சரக்கு ரயில்களில் உயிரைப் பணயம் வைத்து வருபவர்கள் உலகம் என் உலகமல்ல. நான் அதை வைத்து ஒரு குறும்படம் இயக்கினேன். அது ஒரு சம்பவம். சிறு அனுபவம். அதை என்னால் முழுநீளத் திரைப்படமாக எடுக்கவியலாது. அப்படி எடுக்க வாழ்பனுபவமோ, கலானுபவமோ வேண்டும். அப்போதுதான் சரியாகச் சொல்ல முடியும்.
அந்த அனுபவத்திற்காக என் படத்தில் சம்பந்தப்பட்ட சில நண்பர்களோடு சியாபாஸிற்கு பயணப்பட்டேன். சட்டவிரோதக் குடியேறிகள் பற்றி நானே நேரடியாக புலனாய்வு செய்ய விரும்பினேன். இரண்டு மாதங்களுக்கு மேலான அந்தப் பயணத்தில் சிறைச்சாலைகளில் இருந்த புகைவண்டி வழித்தட ஊழியர்களை சந்தித்தேன். அவர்கள் தான் இந்த சாகஸப்பயணத்தைத் திட்டமிடுகிறார்கள். பயணப் படும் சட்ட விரோதக் குடியேறிகள் தங்கியிருக்கும் இடங்களையும் பார்வையிட்டேன். பலர் பலமுறை பயணத்தில் காயம் பட்டும் திரும்ப வந்திருந்தார்கள். புலம் பெயர்ந்தவர்களையும் சந்தித்தேன். நூற்றுக்கு மேற்பட்ட குடியேறிகளை ரயில் வண்டி வழித் தடங்களில் சந்தித்தேன். அவர்கள் பலதரப்பட்ட பயண அனுபவத்தோடு இருந்தார்கள்.
உயிரைப் பணயம் வைத்துச் சட்டவிரோதமாக அமெரிக்கா வரும் ரத்தமும் சதையுமான மனிதர்களின் கதையை வைத்துச் சம்பாதிப்பது எனக்கு உடன்பாடற்ற விஷயமாகத் தோன்றியது. மற்றவர் அனுபவத்தைப் படமாக்குகிறேன் என்ற போர்வையில் சில இயக்குனர்கள் எடுக்கும் சமூக – அரசியல் படங்களைப் பார்க்கும் போது எனக்கு விரக்தியே மிஞ்சுகிறது. புதுவிதமாகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலானதுமான கதைகள் வரவேற்பு மற்றும் விருதுகளைப் பெறலாம். ஆனால் அதை உருவாக்கும் கலைஞன் சிறிதளவாவது அதற்காக மெனக்கெட வேண்டும். கேள்விப்பட்ட கதையின் ஏதாவது ஒரு பகுதி பற்றிய நேரனுபவம் அவனுக்கு வேண்டும். என்கதையில் மனிதர்கள் மேற்கொள்ளும் பயணம் பற்றி விவரிக்க நான் அதைப் பார்த்தாக வேண்டாமா..? என் நண்பர்களின் எதிர்ப்பையும் மீறி ரயில்வண்டியில் பயணம் செய்ய நான் முடிவு செய்தேன். என்னோடு அவர்கள் வரவில்லை. அவர்கள் உயிரைப் பணயம் வைத்து என்னோடு வரும்படி நானும் வற்புறுத்தவில்லை. 700 மத்திய அமெரிக்கக் குடியேறிகளுடன் என் ரயில்வண்டிப் பயணம் துவங்கியது. கொள்ளையர்களும் அடிதடிக் கூட்டத்தினரும் அதிலிருந்தார்கள். போலீஸ்காரர்கள் அவர்களிடம் பணம் பெற்றிருந்தார்கள். இயற்கையின் கருணை அந்தக் கோடைகாலம் இரண்டு ரயில்வண்டிகள் கிளம்ப ஏதுவாக இருந்தது.
பயணம் துவங்கிய முதல் இரவின் மூன்றாவது மணி நேரத்தில் நாங்கள் தாக்குதலுக்கு ஆளானோம். ரயில்வண்டி அடிக்கடி நின்று நின்று பயணப்பட்டது. சியாபாஸின் கிராமங்களின் கரிய இருளில் சென்றபோது எங்களுக்கு அடுத்த கோச்சில் துப்பாக்கி வெடிக்கும் சப்தத்தை நான் கேட்டேன். சினிமாக்களில் நாம் கேட்கும் சப்தத்தைவிட தோட்டாக்களின் சப்தம் அதிகமாக இருந்தது. குடியேறிகள் சிதறினார்கள். கொள்ளைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று பதறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நாங்கள் இருக்குமிடம் நோக்கி ஓடி வருவதை என்னால் உணர முடிந்தது. ஓடி ஒளிய வேறு இடமில்லாததால் நான் அமைதியாக, அவர்கள் என்னை நோக்கி வரும் வேளைக்காகக் காத்திருந்தேன். பதட்டமான சில நிமிடங்களுக்குப் பிறகு ரயில்வண்டி வடக்கு நோக்கிப் பயணப்பட்டது.
வண்டியிலிருந்து ஓடியவர்கள் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டார்கள். அன்று இரவு வேறு தகாத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் எல்லோருக்குமே ஒருவிதப் பதைப்பு இருந்தது. அடுத்த நாள் தாக்குதலுக்கு நெருக்கமாக இருந்த இருவரிடம் பேசினேன். குவாதமாலாவிலிருந்து வந்த இரு குடியேறிகள் தங்கள் பணத்தைத் தர மறுத்ததால் கொள்ளையர்கள் அவர்களைக் கொன்று, உடல்களை வெளியில் தூக்கிப் போட்டதாகச் சொன்னார்கள். கொள்ளையர்கள் வண்டியிலேயே இருப்பதை அறியாமல் அடுத்த நாள் இரவும் நான் பயணப்பட்டு ஆக்ஸகன் எல்லைப் பகுதியில் இறங்கினேன். இரண்டு நாள் கழித்து நான் ஏற்கனவே கிளம்பிய ஊருக்கு வந்தேன். குவாதமாலா குடியேறிகளின் துப்பாக்கி வெடிக்கும் சப்தத்தை எந்த இடத்தில் கேட்டேனோ அந்த இடத்திலிருந்து தான் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
அது என் முதல் பயணம் – அத்தோடு முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. குடியேறிகள் பற்றிய மலைப்பே எனக்குள் இருந்தது. அதன்பின் மூன்று முறைகளுக்கும் மேல் விதவிதமான கூட்டத்தினரோடு நான் பயணப்பட்டேன். இறுதியாக ஒரிஸாபா என்ற இடத்தில் புபேலா என்னும் இடத்திற்கும் மெக்ஸிகோ நகரத்திற்குமிடையே உள்ள மலைப்பகுதியில் என் குடியேறிகளைப் பற்றிய ஆய்வை முடித்துக் கொண்டேன். முதலில் இந்தப் பயணத்தில் அருவருப்பான மனநிலையில் தான் இருந்தேன். குடியேறிகள் என்னை ஒரு நாகரிகக் கோமாளியாகத்தான் பார்த்தார்கள். பிறகு என் இருப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். தாங்க முடியாத உஷ்ணத்தில் வியர்த்து வழிந்தபடி சிரித்தும், கதைகள் பேசியும், நகர்ந்தோம். திடீர் மழையிலும், குடியேறிகளைக் குறி வைக்கும் போலீஸ் சோதனையிலும் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்டோம்.
இந்தப் பயணங்களில் சேகரித்த அனுபவங்கள் இதை ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று உந்தித் தள்ளியது. இது பொதுச்சேவை அல்ல. இக்கதையை நான் எழுத நேர்ந்ததே ஒரு தற்செயல் நிகழ்வுதான் என்றாலும், நான் எழுதத் துவங்கியபோது, அது நான் எழுதிய கதையாகவே இருந்தது. நான் அதுபற்றி அவர்களிடம் சொன்னேன். இது குடியேறிகள் பற்றிய கவரேஜ் அல்ல என்று. அவர்களுக்கு அது சந்தோஷமாக இருந்தது. நான் ஏதோ சாக்கு போக்கிற்காக படமெடுக்கப் போவதாகச் சொல்வதாகவே இருந்தாலும் தங்களுக்குக் கவலையில்லை என்றார்கள். எப்படித் தங்களது கதைகளைச் சொன்னோமோ அப்படியே அது இருக்க வேண்டும் என்பதே அவர்களின் வலியுறுத்தலாக இருந்தது. ஒருவர் மட்டும், ‘என் கதைக்கு டி காப்ரியோவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ய முடியுமா?’ என்று கேட்டார்.
இப்படம் புகழ்பெறக் காரணமான கதைக்காரணி எது?
படத்தில் சில இடங்களில் வன்முறையின் தாக்கம் இருந்தது. சில காட்சிகளில் கொடூரம் எத்தனித்தது. ஆனால் கதையின் பிரதான நோக்கம். குடும்பம் என்ற அமைப்பைச் சார்ந்ததுதான். இந்த இடத்தில் தான் கதையில் என் அனுபவத்தைப் புகுத்தினேன். குடும்பம் என்ற அமைப்பை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் ஆழ்ந்த குடும்பங்களையும் நான் அறிவேன். சுருக்கமாகச் சொன்னால் குலைந்து போன, திரும்பவும் உருவாக்கப்படும் குடும்பங்கள் பற்றிய படிமமே இப்படம். எனது தயாரிப்பாளர் ஆமி காஃப்மேனுக்கு இக்கதை ஒரு மேற்கத்திய திரைப்படமாக அல்லது கிரேக்க துன்பியல் கதையாக எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்ற குழப்பம் இருந்தது. நான் மேற்கத்திய படமாக இதை நினைத்தேன். அவரோ கிரேக்கப் படமாக நம்பினார். எப்படி இருந்தாலும் இது விவரணையாக அடுக்க வைக்கப்பட்ட சம்பிரதாயமான கதைதான்.
எதற்காக உங்கள் படம் விரும்பிப் பார்க்கப்பட்டது என்று யோசித்ததுண்டா…?
இக்கதை பலருக்குத் தெரிந்த சிலர் பார்த்த கதை என்பதுதான் முக்கிய காரணம். புலம் பெயர்பவர்கள் அல்லது குடியேறிகள் பற்றிய கதைகள் எல்லைப் புறங்களில் தான் நிகழ்கிறது. அல்லது நெடுந்தூர நாடுகளுக்குச் செல்வதற்காக எப்போதாவதாய் நிகழ்கிறது. மைக்கேல் விண்டர் பாட்டமின் In This World மட்டும் அதற்கு விதி விலக்கு. இக்கதை கதைக்குள் பயணம் செய்வதாகவே இருந்தது. ஆர்வத்தைத் தூண்டும் பயணமாக இருந்தது. குடியேறியவர்களைப் பற்றிய கதையாக மட்டும் இல்லாமல் ஒரு உப கலாச்சார நிகழ்வாக அது இருந்தது. மத்திய அமெரிக்கர்களுக்கு மெல்ல ஆரம்பித்து ஊடுருவும் வன்முறைச் சம்பவமும், ஹோண்டுராஸின், தெகுசிகல்பா நகரத் தெருக்களில் கிடைத்த நடிகர்களிடமிருந்து சிறப்பான நடிப்பும், நிஜக் கதை நிகழ்ந்த இடங்களில் படமாக்கியதும் இப்படத்திற்கு ஒரு நம்பகத் தன்மையைக் கொடுத்தது. குடியேறிகள் பற்றிய படம் சிறப்பாக அமைய இவையெல்லாம் தான் காரணம்.
இண்டி வயர் (மார்ச் 2009) இதழுக்காக இந்த நேர்காணல் எடுக்கப்பட்டது.
