- ஹான் காங் உடன் ஒரு நேர்காணல்
- தமிழில்: க. ரகுநாதன்
நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?
எழுதுவது என்பது எனக்கு ஆன்ம விசாரணை போன்றது. நான் விடையைக் காண முயற்சிப்பதில்லை, ஆனால் விசாரிப்பை முழுமையாக்க அல்லது என்னால் முடிந்த அளவிற்கு அந்த விசாரணைக்குள்ளேயே நீடித்திருக்க எழுதுகிறேன். ஒரு வகையில், புனைவு எழுதுதலை முன்னும் பின்னும் இசைந்தாடுதலுடன் ஒப்பிட முடியும். நீங்கள் முன் சென்று மீண்டும் பின் வந்து உங்கள் உள்ளத்தில் கொந்தளிப்பையும் அமைதியையும் உண்டாக்கும் கேள்விகளை தீர எண்ணிப் பார்ப்பீர்கள்.
உங்களது The Vegetarian மற்றும் Human Acts ஆகிய நாவல்களில் பலவந்தமான ஆனால் அமைதியைக் குலைக்கும் வன்முறை மற்றும் கோரமான காட்சிகள் வருகின்றன. இந்தக் காட்சிகளை எழுதும் போது உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது?
எளிமையாகக் கூற வேண்டுமென்றால், The Vegetarian மற்றும் Human Acts இரண்டும் மனித வன்முறையையும் மேன்மைக்கான சாத்தியங்களையும் வலியோடு அணுகுகிறது.
எவ்விதமான வன்முறைக்கும் நான் உணர்ச்சிவயப்படுபவள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நான் சிறுமியாக இருந்த போது ஆஷ்விட்ச் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும் போது கைக்கு அகப்பட்டதை எல்லாம் தூக்கி எறிந்திருக்கிறேன்.
வன்முறைக் காட்சிகளை இரு நூல்களிலும் விவரிப்பது எனக்கு மிகக் கடினமாக இருந்தது. ஆனாலும் அதன் வழியே ஊடுருவித்தான் மனிதனாய் இருப்பது குறித்தான என் கேள்விகளை அலசி ஆராய வேண்டியிருந்தது.
“மனிதர்கள் அச்சமூட்டுபவர்கள், அவர்களில் நானும் ஒருத்தி” என்று நீங்கள் கூறியதாக மேற்கோள் காட்டப்படுகிறது. அதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?
ஜனவரி 1980 இல் எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது நாங்கள் குடும்பத்துடன் குவாங்ஜு நகரிலிருந்து சியோலுக்கு இடம் பெயர்ந்தோம். வாங்சு கிளர்ச்சி/படுகொலைகள் நிகழ்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு தான். சில ஆண்டுகள் கழித்து, அதன் சாட்சியங்களை ஏற்படுத்தும் விதமாக புகைப்பட புத்தகங்கள் ரகசியமாக அச்சிடப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டன. என்னுடைய தந்தையின் நூலடுக்கில் அது போன்ற ஒரு புகைப்படப் புத்தகத்தை நான் கண்டேன். அது ஒரு வகையில் என் வாழ்வைத் தீர்மானித்த அனுபவமாக மாறியது. அவ்வளவு சிறுமியாக நான் இல்லாமல் இருந்திருந்தால் அதன் அரசியல் தன்மையைப் பற்றி அதிகமாக அறிந்திருப்பேன். ஆனால் எனக்கு 12 வயதுதான். அந்த புகைப்படப் புத்தகம் ஏராளமான இறந்தவர்களின் முகங்களையும் அதில் ஆழமான காயங்களையும் கொண்டிருந்தது. புகைப்படப் புத்தகத்தின் இறுதியை அடைந்தபோது “மனிதர்கள் அச்சமூட்டுபவர்கள்” என்று நான் நினைத்துக் கொண்டேன். அந்த “மனிதர்களில்” நானும் ஒருத்தி என்பதை ஏற்றுக் கொள்வதற்கான வழி தெரியவில்லை.
இருந்தபோதும், அந்தப் புகைப்படப் புத்தகத்தில் மனிதனின் மேன்மை மற்றும் விவரிக்க முடியாத வலிமைக்கு உதாரணங்கள் இருந்தன. ராணுவ ஆட்சிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு இரத்த தானமளிக்க விரும்பிய பொதுமக்கள் முடிவில்லாத நீண்ட வரிசைகளில் நிற்பதைக் கண்டேன். அது என் மனதில் தீர்க்கவியலா இரண்டு கேள்விகளை ஆழப் பதித்தது போலிருந்தது.
- மனிதர்கள் எவ்வாறு வன்முறையாளர்களாக இருக்க முடியும்?
- அந்த உச்சபட்ச வன்முறைக்கு எதிராகப் போராட மனிதர்களால் என்ன செய்ய முடியும்?
Human Acts நாவலில் தென் கொரியாவின் குவாங்ஜுவில் 1980ல் நிகழ்ந்த எழுச்சியையும் அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட கோரப் படுகொலையைப் பற்றியும் பேசுகிறீர்கள். இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் இந்தக் கொடூரங்களைப் பற்றி எழுத எது உங்களைத் தூண்டியது?
உண்மையில் எவ்வித உள்நோக்கமுமின்றி எங்கள் குடும்பம் சியோல் நகருக்கு இடம் பெயர்ந்தது. அந்தச் சிறிய தற்செயல் முடிவிற்காக நாங்கள் வருந்தவில்லை எனினும் தப்பிப் பிழைத்தோருக்கான குற்றவுணர்விலேயே எங்கள் குடும்பத்தினர் நீண்ட நாள் உழன்றனர்.
எங்களுக்குப் பதிலாக வேறு யாரோ கொல்லப்பட்டனர் என்ற உணர்விலேயே நான் வளர்ந்தேன்.
சில நாடுகளின் பள்ளி வரலாற்றுப் பாடங்களில் உண்மையில் நிகழ்ந்தவற்றுக்கு மாறான விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. அரசுகள் அழிக்க முயற்சித்த உண்மை நிகழ்வுகள் மீது வரலாற்றாசிரியர்கள் ஒளியைப் பாய்ச்ச முடியும். எனினும், கடந்த கால உண்மைக் கதைகளை ஒளிர்வூட்ட உதவுவது புனைவு எழுத்தாளர்களின் பொறுப்பும் கூட என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
என்னளவில், Human Acts எழுதுவதற்கான வலிமையான உந்துதல் என் உள்ளத்தில் இருந்தே வந்தது. நான் ஏன் மனித அனுபவத்தை ஆரத்தழுவ நாட்டம் கொண்டிருந்தேன் என்ற காரணத்தைக் கிரகித்துக் கொள்ள என் உள்ளத்தை ஆராய வேண்டியிருந்தது. பின்னர் என் வாழ்வில் முக்கியமானதும் வலி மிகுந்ததுமான புதிர்களை பொதிந்து வைத்திருந்த குவாங்ஜுவை எதிர்கொண்டேன். மனிதனின் காட்டுமிராண்டித் தனத்தையும் மேன்மையையும் பற்றி நான் அறிந்து கொண்டேன்.
இருந்தபோதிலும், மற்றொரு ஊக்கம் எனக்கு இருந்தது என்பதைக் கூற வேண்டும். 2009ல் சியோலின் யாங்சன் மாவட்டத்தில் ஒரு கட்டிடத்தின் குடியிருப்புவாசிகளுக்கு போதிய இழப்பீடு அளிக்காமல் அதனை இடிக்கத் திட்டமிடப்பட்டதை எதிர்த்து சிலர் கூரையில் அமர்ந்து போராடினர். அரசாங்கம் அதிகபட்ச படை வலிமையைக் கொண்டு அந்தப் போராட்டத்தை முறியடிக்க முயற்சித்தது. அப்போது ஏற்பட்ட தீயில் ஐந்து ஆர்ப்பாட்டக்காரர்களும் ஒரு காவல் அதிகாரியும் இறந்தனர். பற்றி எரியும் அந்தக் கட்டிடத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது குவாங்ஜுவை நினைத்துக் கொண்டேன். குவாங்ஜு வேறு முகமூடி அணிந்து எங்களிடம் திரும்ப வந்துவிட்டதாகவே நான் உணர்ந்தேன்; அது இடுகுறிப் பெயரல்ல, காரணப் பெயர். எங்களை அறியாமலேயே நாங்கள் எந்நேரமும் குவாங்ஜுவிற்கு உள்ளேயே வாழ்ந்து வருவதாக உணர்ந்தோம்.
The Vegetarian நாவல் முதலில் மூன்று குறுநாவல்களாக எழுதப்பட்டு பின்பு ஒரே நாவலாக மாற்றப்பட்டது. இந்த ஆக்கத்தைக் குறித்து உங்களால் பகிர்ந்து கொள்ள முடிந்தால் சிறப்பாக இருக்கும்.
நல்லது. 1997ல் நான் The Fruit of My Woman என்ற சிறுகதையை எழுதினேன். அது, ஒரு பெண், தாவரமாக மாறுவதைப் பற்றிய கதை. அவளுடன் வாழ்ந்து வரும் மனிதன் அவளை அவர்களின் குடியிருப்பின் பலகணியில் உள்ள தொட்டியில் வைப்பான். அவளுடன் சேர்ந்து வாழ்ந்த காலகட்டத்தில் அவளைப் புரிந்துகொள்வதில் சிரமம் அடைவான். ஆனால் இலையுதிர் காலத்தின் முடிவில் அவள் சில உறுதியான கனிகளை விளைவித்தாள். ஜன்னல் சட்டகத்தில் சாய்ந்தவாறு அவன் கைகளில் ஏந்திய அக் கனிகளைப் பார்த்தபடி, அவள் அடுத்து வரும் வசந்தகாலத்தில் மீண்டும் மலர்வாளா என்று வியப்படைவான்.
இந்தக் கதை வெளியானவுடன், இது இத்துடன் முடிவடையவில்லை என்ற உணர்வு ஏற்பட்டது. அதை மீண்டும் மாற்றி எழுத வேண்டும் என விரும்பினேன். பின்னர் The Vegetarian நாவலை எழுதும் போது அது தீவிரம் மிக்கதாகவும் வேதனை மிகுந்ததாகவும் மாறியிருப்பதை உணர்ந்தேன்.
இதை நான் 2003ல் எழுதத் தொடங்கி மூன்று பாகங்களாக மூன்று வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியிட்டேன். மூன்றாவது பாகத்தை 2005 இலையுதிர் காலத்தில் வெளியிட்டேன் என்ற நினைவிருக்கிறது.
***
நன்றி : 2024 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் உடன் Banana Writers இதழ் 2016ல் நடத்திய நேர்காணல். The Vegetarian நாவலுக்காக 2016ல் சர்வதேச மேன் புக்கர் பரிசு பெற்ற போது வெளியானது.
