- ஹான் காங் உடன் ஒரு நேர்காணல்
- நேர்காணல் கண்டவர்: ஹானா பெக்கர்மேன்
- தமிழாக்கம் : நன்மாறன் திருநாவுக்கரசு
தென்கொரிய நாவலாசிரியர் ஹான் காங், தனது சகோதரியின் மரணம், எழுத்தின் உருமாற்றும் சக்தி, ஒற்றைத் தலைவலிகள் எவ்வாறு உதவின என்பவைகளை பற்றியெல்லாம் இந்த நேர்காணலில் பகிர்கிறார்.இவர் Human Acts, The Vegetarian உள்ளிட்ட சில நாவல்களை எழுதியவர். The Vegetarian நாவலுக்காக 2016ஆம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசை வென்றவர். இப்போது, இந்த வருடத்திற்கான (2024)நோபல் பரிசை வென்றிருக்கிறார். அவரது The White Book, இழப்பு, துக்கம் ஆகியவற்றின் மீதான சுயசரிதை தியானமாக நம்மை நகர்த்துகிறது.
***
உங்கள் புதிய நூல், பிறந்து இரண்டே மணி நேரத்தில் இறந்த உங்கள் சகோதரியின் கதையைச் சொல்கிறது. அதை எழுதும் விருப்பம் அல்லது எழுத முடிவதற்கான உணர்வு எங்கிருந்து வந்தது?
நான் என் சகோதரியைப் பற்றி எழுதுவதற்குத் திட்டமிடவில்லை. அவளை மறக்க இயலாத நிலையில் வாழ்ந்த என் பெற்றோர்களால்தான் நான் வளர்க்கப்பட்டேன். நான் Human Acts நூலை எழுதிய போது, ‘இறந்துவிடாதே. தயவு செய்து இறந்துவிடாதே’ என்கிற வசனம் இடம்பெறும். அந்த வரி விநோதமான பரிட்சயத்துடன் இருந்தது. என்னுள் சுற்றித்திரிந்தது. அது எனது தாயின் நினைவலைகள் என்பதை திடீரென்று கண்டறிந்தேன். நான் பிறப்பதற்கு முன்பே இறந்த என் சகோதரியிடம் அந்த வார்த்தைகளை அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததாகக் கூறியிருக்கிறார்.
இறப்பின் இடத்தில் நீங்கள் பிறந்து வளர்ந்ததாக எழுதியிருக்கிறீர்கள். அது உங்களை எவ்வாறு பாதித்தது?
அது வெறும் இழப்பைப் பற்றியது மட்டுமல்ல. நாம் எத்தகைய மதிப்பு மிக்கவர்கள் என்பதை பற்றியதும்தான். என் பெற்றோர் என்னிடமும், என் சகோதரனிடமும் சொல்வார்கள், ‘நீங்கள் எங்களுக்கு மதிப்புமிக்க வகையில் பிறந்துள்ளீர்கள். நாங்கள் உங்களுக்காக நீண்ட காலம் காத்திருந்தோம்’என்று. ஆனால் வருத்தமும் இருந்தது. துக்கமும்,விலைமதிப்பற்ற வாழ்வின் உணர்வும் கலந்தது அது.
உங்கள் தாயின் முதல் இரண்டு குழந்தைகள் இறக்காமல் இருந்திருந்தால் நீங்களும் உங்கள் சகோதரனும் கருத்தரித்திருக்க மாட்டீர்கள் என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதை எப்படி உணர்க்கிறீர்கள்?
என் தாய் என்னைக் கருத்தரித்தபோது நோய்வாய்ப்பட்டிருந்தார். அதனால் நிறைய மருந்துகளை உட்கொண்டு வந்தார். அவர் மிகவும் பலவீனமாக இருந்ததால் கருக் கலைப்பு பற்றியும் சிந்தித்துள்ளார். ஆனால் அவருக்குள் நான் அசைவதை உணர்ந்து, என்னைப் பெற்றெடுக்க முடிவு செய்தார். இந்த உலகம் கண நேர மாறுதலுக்கு உட்பட்டது என நினைக்கிறேன். நான் அதிர்ஷ்டத்தால் இந்த உலகிற்கு அழைத்து வரப்பட்டேன்.
தொடக்கப் பக்கங்களில், இந்தப் புத்தகத்தை எழுதும் செயலாக்கம் மாற்றத்தைக் கோருவதாக இருக்க வேண்டும் என விரும்பியதாகச் சொல்லியிருக்கிறீர்கள்: அவ்வாறு இருந்ததா?
ஆம், எழுத்துச் செயல்பாடு எனக்கு உண்மையில் உதவியது. அது ஒவ்வொரு நாளும் சிறிய சடங்கைப் போல இருந்தது: ஒரு பிரார்த்தனையை போல். நான் எழுதும்போது, நாளுக்கு நாள், நமக்குள் அழிக்க முடியாத, சேதப்படுத்த முடியாத ஒரு குறிப்பிட்ட பகுதியிடம் நெருங்கிச் செல்வது போல உணர்ந்தேன்.
நீங்கள் இளம் வயதிலிருந்தே தளர்வூட்டும் ஒற்றைத் தலைவலியால்பீடிக்கப்பட்டிருந்தீர்கள். அது உங்களை எவ்வாறு பாதித்தது?
எனது ஒற்றைத் தலைவலிகள் நான் மனுஷிதான் என்பதை எப்போதும் நினைவூட்டின. காரணம், எனக்கு ஒற்றைத் தலைவலி வரும்போதெல்லாம் நான் என் வேலையை, என் வாசிப்பை, என் அன்றாடத்தை நிறுத்த வேண்டியது வரும். அது என்னை எப்போதும் பணிவாக்கியது. நான் காயப்படக்கூடியவள், மரணத்திற்குரியவள் என்பதை உணர உதவியது. ஒருவேளை நான் நூறு சதவிகிதம் ஆரோக்கியமானவளாக, ஆற்றல் மிக்கவளாக இருந்திருந்தால் என்னால் எழுத்தாளராகி இருக்கமுடியாது.
14 வயதிலேயே நீங்கள் எழுத்தாளராக விரும்பியதாக சொல்லியிருக்கிறீர்கள். அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?
நான் சில அடிப்படை கேள்விகளுக்கான பதில்களைத் தேடினேன். ஒவ்வொரு எழுத்தாளரும் பதில்களைத் தேடுகிறார்கள், ஆனால் அவர்களால் முடிவை நெருங்க முடிவதில்லை என ஒரு வாசகியாக உணர்ந்தேன். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள். நானும் அதை ஏன் செய்யக் கூடாது எனக் கருதினேன்.
உங்கள் தந்தையும் ஒரு நாவலாசிரியர். எந்த வகையில் உங்களிடம் தாக்கத்தை உருவாக்கினார்?
நான் வளர்ந்த நாட்களில் வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. அதுதான் மிக முக்கியமான விஷயம் என நினைக்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த சில சிறார் நூல்கள் எவை?
எனக்கு நிறைய கொரிய எழுத்தாளர்களைப் பிடிக்கும். ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரன் எழுதிய The Brothers Lion heart போன்ற மொழிபெயர்ப்புநூல்களையும்விரும்பினேன்.
உங்கள் எழுத்தில் அதிகம் தாக்கம் செலுத்திய எழுத்தாளர்கள் யார்?
கொரிய எழுத்தாளர்களில் லிம் சுல்-வூ(Lim Chul-Woo) -வின் சிறுகதைகள் எனக்குப் பிடிக்கும். அயல்நாட்டு எழுத்தாளர்களில் தஸ்தாயெவ்ஸ்கி என் விருப்பத்துக்குரியவர்.
நீங்கள் சந்திக்க விரும்பும் இலக்கியவாதிகள் யார்?உயிருடன் இருந்தாலும் சரி, இறந்தவராக இருந்தாலும் சரி.
நான் எழுத்தாளர்களைச் சந்திக்க விரும்புவதில்லை. நான் ஏற்கெனவே அவர்களை அவர்களது புத்தகங்களின் மூலமாக சந்தித்து விட்டேன். நான் அவர்களுடைய நூலை வாசித்த பின், ஏதாவது உணர்ந்தால் அதுதான் மதிப்புமிக்க விஷயம். எழுத்தாளர்கள் தங்கள் சிறந்தவற்றை புத்தகங்களில் கொட்டி விடுவார்கள். அவற்றை வாசிப்பதே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.
உங்களுடைய The Vegetarian நாவல் சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளது. உங்கள் எழுத்து வாழ்வில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
நான் நிறைய வாசகர்களையும், பரந்துபட்ட மக்களையும் சந்தித்தேன். ஆனால் சில மாதங்களிலேயே எனது தனிப்பட்ட வாழ்க்கையை மீட்டெடுக்க விரும்பினேன். காரணம், அதிகப்படியான கவனம் எழுத்தாளருக்கு எப்போதும் நல்லதல்ல. கவன ஈர்ப்பை விரும்பியபடியே எழுதுவது சாத்தியமல்ல.
***
நன்றி : தி கார்டியன்
