- மிலோரட் பாவிக்
- தமிழில்: ராஜேஷ் சுப்ரமணியன்
போர்ஹேஸ் தனது முதல் நூறு வாசகர்களின் முகங்களைக் காண ஆர்வம் கொண்டிருந்தார். என்னுடைய ஆர்வம் வேறு விதமானது. கடைசி நூறு வாசகர்களின் முகங்களை தேடி சந்திக்க வேண்டிய ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோமா? அல்லது, சற்றே பரிதாபம் குறைந்த நிலையில், நாவல் வாசிக்கும் கடைசி நூறு பேரின் முகங்களைக் காண வேண்டிய சவாலை எதிர்கொண்டிருக்கிறோமா? என்று கூற வேண்டியிருக்கிறது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு கேள்வியை முன்வைப்போம். ஒரு பிரதியை வாசிக்கும்போது, எங்கு, எப்போது, பிரதியின் எந்த பகுதியில் நாவலின் வாசிப்பு துவங்குகிறது? எப்போது அது நிறைவடைகிறது? ஒரு நாவலின் துவக்கமும் முடிவும், வாசிப்பின் துவக்கமும் முடிவும், Jasmina Mihajlovic சொல்வதுபோல் பல்லாண்டுகளாக இப்படித்தான் இருக்கவேண்டுமென மனதளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நாவலுக்கு ஒரு முடிவு அவசியமா? ஒரு நாவலின், இலக்கிய பிரதியின் முடிவு என்பதுதான் என்ன? தவிர்க்கமுடியாத வகையில் ஒரே ஒரு முடிவுதான் சாத்தியமா? ஒரு நாவலோ, மேடை நாடகமோ எத்தனை முடிவுகளைக் கொண்டிருக்க முடியும்?
அத்தகைய கேள்விகளுக்கு, எனது புத்தகங்களை எழுதும் பொழுது சில விடைகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். நீண்ட காலம் முன்னரே நான் ஒன்றை உணர்ந்தேன்: கலைப்படைப்புகளை “மீள்தன்மை /சுருங்கி மீளும் தன்மை ” (reversible) கொண்ட வகை என்றும், “மீளாத் தன்மை ” (irreversible ) என்றும் இருவகைகளாகப் பாகுபடுத்தலாம். சில கலைப்படைப்புகள், தம்மை பல்வேறு திசைகளிலிருந்து அணுகும் வசதியை பார்வையாளனுக்கு அளிக்கின்றன. அக்கலைப்படைப்பை ஒரு ரசிகன் தனக்கு வசதியான திசையிலிருந்தோ, கோணத்திலிருந்தோ, இடத்திலிருந்தோ (அருகே /தொலைவில் ) விரும்பியதுபோல் அணுகி நுகரலாம் (ஒரு வகையான “பன்முகத்தன்மை”). சிற்பக்கலை, ஓவியங்கள் போன்றவை அத்தகைய “மீள்தன்மை” கொண்டவை. இசை, இலக்கியம் போன்ற “மீளாத் தன்மை ” வகையைச் சார்ந்த கலைப் படைப்புகளோ ஒருவழிப் பாதை போன்று தோற்றமளிக்கின்றன. அத்தகைய படைப்புகள் எல்லாமே, தொடக்கத்திலிருந்து முடிவை நோக்கி, பிறப்பிலிருந்து இறப்பை நோக்கிப் பயணிக்கின்றன. “மீளாத் தன்மை ” கொண்டதாக, ஒருவழிப் பாதையில் கட்டமைக்கப்படக்கூடியதாகக் கருதப்படும் “இலக்கியத்தை” (நாவலை) நான் “மீள் தன்மை” கொண்ட வடிவம் உடையதாக ஆக்க எண்ணினேன். ஆகவேதான் எனது நாவல்களில் , பொதுவாக புரிந்து கொள்ளப்படும் பொருளிலான தொடக்கமும் முடிவும் இல்லை.
உதாரணமாக, “கஸார்களின் அகராதி” என்ற எனது நாவல், “100,000 வார்த்தைகளில் அமைந்த அகராதி நாவல்” என்பதுடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களுக்கேற்ப, அந்த நாவல் பல்வேறு முடிவுகளைக் கொள்ளும். “கஸார்களின் அகராதி” செர்பிய /ஸ்லாவிய மொழி எழுதப்படும் சிரிலிக் எழுத்துருவில் (cyrillic alphabet ), மூலப் பிரதியில் , “sed venit ut illa impleam et confirmem, Mattheus” என்னும் லத்தீன் மேற்கோளுடன் முடியும். என்னுடைய அதே நாவல், கிரேக்க மொழிபெயர்ப்பில் ” நான் உடனே கவனித்தேன், என்னுள் மூன்று பயங்கள் இருக்கின்றன, ஒன்று அல்ல” ( “I have immediately noticed that there are three fears in me, and not one”) எனும் வாக்கியத்துடன் முடிகின்றது. ஆங்கில, ஹீப்ரு, ஸ்பானிய, டேனிஷ் மொழிகளில் எனது “கஸார்களின் அகராதி” நாவல், இவ்வாறு முடிகிறது: “பின், வாசகன் திரும்பி வரும்போது, மொத்த செய்முறையும் தலைகீழாக மாறும்; டிப்பான் , தனது வாசிப்பு பயணத்தின் அடிப்படையில் மொத்த மொழி பெயர்ப்பையும் மாற்றி அமைப்பார் ” (“Then, when the reader returned, the entire process would be reversed, and Tibbon would correct the translation on the basis of the impressions he had derived from this reading walk”). லத்தின் எழுத்துருவில் அமைந்த செர்பிய நாவல் வடிவம் , Nordsteds பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஸ்வீடிஷ் மொழி பெயர்ப்பு, நெதர்லாந்து நாடு மொழியில் அமைந்த வடிவம், செக் (Czech ) மற்றும் ஜெர்மன் மொழியில் அமைந்த எனது நாவல் வடிவம், “That look wrote Koen’s name in the air, lighted the wick, and lit up her way to the house” எனும் வாக்கியத்துடன் முடிகிறது. ஹங்கேரிய மொழி பெயர்ப்பு, “He simply wanted to draw your attention to what your nature is like” என்கிற வாக்கியத்துடன் முடிகிறது.ஜப்பானிய மொழியில் அமைந்த வடிவமோ, “The girl had given birth to a fast quick daughter – her death; in that death her beauty had been divided on whey and curdled milk, and at the bottom a mouth was seen keeping the root of reeds” எனும் வாக்கியத்துடன் முடிகிறது.
என்னுடைய இரண்டாம் நாவல்,” தேநீரால் தீட்டப்பட்ட இயற்கைக் காட்சி ” (Landscape painted with Tea ), ஒரு குறுக்கெழுத்துப் புதிர் (crossword puzzle வடிவத்தில் அமைந்தது. அந்த நாவலை, மேலிருந்துக் கீழாக வாசிக்கும்போது, நாவலின் கதாபாத்திரங்களின் வர்ணனை சித்திரங்களாக உருவம் கொள்ளும். அதே பிரதியை, வழக்கமான பாணியில், இட வலமாகப் படிக்கும்போது, நாவலின் மையக்கருவையும்,அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையும் கொண்டதாக அமையும்.
இந்த நாவலை உதாரணமாக வைத்தும், நாவல் என்பதின் தொடக்கம் என்பதையும், முடிவு என்பதைப் பற்றியும் விவாதிப்போம்.முதலாவதாக, ஒரு ஆண் வாசகர் படித்தால் ஒரு விதமாகவும், ஒரு பெண் வாசகி படித்தால் வேறு விதமாக முடியும்படியும் அமைந்திருக்கிறது. அதேபோல், இந்நாவலை மேலிருந்து கீழாகப் படிக்கிறோமா அல்லது இடவலமாகப் படிக்கிறோமா என்பதைப் பொறுத்தும் நாவலின் தொடக்கமும், முடிவும் வெவ்வேறு வகைகளில் அமைகிறது.” தேநீரால் தீட்டப்பட்ட இயற்கைக் காட்சி ” நாவல் இடவலமாகப் படித்தால், ” No undelivered slap should ever be taken to the grave” என்னும் வாக்கியத்தில் தொடங்கி, ” The reader will not be so stupid not to remember what happened to Atanasije Svilar, who name, for some time, used to be Razin” என்கிற வாக்கியத்துடன் முடியும். அதேபோல், இந்த நாவலை மேல்கீழாகப் படித்தால், ” In preparing this Testimonial to our friend, schoolmate and benefactor Atanas Fyodorovich Razin, alias Atanas Svilar, who once inscribed his name with his tongue on the backs of the most beautiful women of our generation ” எனும் வாக்கியத்தில் தொடங்கி, ” I ran into the church” எனும் வாக்கியத்துடன் முடிகிறது.
“அகராதி நாவல்” மற்றும் “குறுக்கெழுத்துப் புதிர்” ஆகிய மீள்தன்மை (reversible) கொண்ட வடிவங்களை பரிசோதித்த பின், வேறொரு புதிய வடிவத்திலும் நான் நாவலைப் புகுத்தப் பார்த்தேன். ” காற்றின் உள் பக்கம் ” (“Inside of the wind”) என்கிற நாவல், Klepsydra ( மணற் கடிகாரம் போன்ற, மேலும் கீழும் விரிந்து, இடையில் சுருங்கிய வடிவம் ) வடிவத்தில் அமைந்த புதிய வடிவ உத்தியைக் கையாண்டேன். இந்த நாவலில், இரண்டு முதல் பக்கங்கள் உண்டு. புகழ் பெற்ற தொல்லியலாளர் Dragoslav Srejovic ஒரு முறை சொன்னதுபோல், இந்த நாவலை “ஒன்றரை முறை ” படிப்பது மிகப் பொருத்தமானது. “காற்றின் உள் பக்கம் ” நாவலின் முடிவு அதன் நடுவில் உள்ளது – நாவலின் தொன்மக் கதையின் காதலர்களான ஹீரோவும் , லியாண்டரும் சந்திக்கும் இடத்தில். லிண்டாரின் பகுதியிலிருந்து நீங்கள் படிப்பீர்களாயின், நாவலின் தொடக்கமாக “All futures have one great virtue; they never look the way you imagine them..” என்கிற வரி இருக்கும். நாவலின் அப்பகுதி , ” It was five minutes past twelve when the towers in a horrible explosion fled into the air taking with them the flames in which Leander’s body had perished” என்னும் வரியுடன் முடியும். அதே நாவலை, மற்றொரு கதா பாத்திரமான ஹீரோவின் பகுதியிலிருந்து படிக்கும்போது, ” In the first part of the life, a woman gives birth and in the second, she kills and buries either herself, or those around her” எனும் வரியில் தொடங்கி, ” According to the bewildered lieutenant it was not till the third day in the evening that Hero’s head yelled in a terrible and deep voice as if it were a man’s” எனும் வரியுடன் முடியும்.
என்னுடைய மிக சமீபத்திய நாவலான ” Last love in Constantinople”, டேரட் அட்டைகளின் (tarot cards ) வடிவத்தை, நாவலின் அத்தியாயங்களை வடிவமைப்பதற்கான உத்தியாகக் கொண்டு அமைந்தது. டேரட் அட்டைக் கட்டில் , Major Arcana என்று வகைப்படுத்தப்பட்ட 22 அட்டைகள் உண்டு; அதேபோல், இந்த நாவலிலும் 22 அத்தியாயங்கள் உண்டு.எப்படி டேரட் அட்டைகளைக் கொண்டு, எதிர்கால அதிர்ஷ்டப் பலன்கள் சொல்லப்படுமோ, அதேபோல், இந்த நாவலின் அத்தியாயங்களும் அதிர்ஷ்டப் பலன்கள் சொல்வதற்கான வழிகாட்டி போல் அமைந்திருக்கிறது. என்ன ஒரு விஷயம் என்றால் , நாவலின் கதாபாத்திரங்களுக்கு அதிர்ஷ்டப் பலன்கள் சொல்வதற்கல்லாமல் , படிக்கும் வாசகர்களுக்கு பலன்கள் சொல்வதற்கேற்ற வகையில் நாவலின் உத்தி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. Major Arcana டேரட் அட்டைகளில் காணப்படும் படங்களும், குறியீடுகளும் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் காணப்படும். நாவலே, டேரட் அட்டைகளின் வழிகாட்டி போல்! அட்டைகள் இல்லாமலும் நாவலைப் பயன்படுத்தமுடியும். டேரட் அட்டைகள் பயன்படுத்த கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி , எல்லா டேரட் அட்டைகளையும் கலைத்துப் போட்டு, அவை முடிவாகத் தோற்றமளிக்கும் வரிசையிலும் இந்த நாவலின் அத்தியாயங்களைப் படிக்க முடியும் !
மேற்சொன்னவற்றிலிருந்து நாம் ஒன்றை இறுதிப்படுத்திக் கொள்ளலாம் – அதாவது, நாவலிலிருந்து வெளியேற, அதாவது அதன் முடிவை அடைய, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உண்டு. ஒவ்வொன்றும் வெவ்வேறானவை, முடிவுகள் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் வித்தியாசமுமானவை.
ஒரு வீட்டின் அமைப்பிற்கும் ஒரு புத்தகத்தின் அமைப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் மறைந்து வருகின்றன என்பதே இக்கட்டுரையில் நான் குறிப்பிட விரும்பும் முக்கிய விஷயமாகப் படுகிறது. இருப்பினும், தற்காலச் சூழலில் எழுப்பப்படும் வேறொரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்வோம். “நாவல் ” என்பது தனது அந்திமக் காலத்தில் தற்போது இருக்கிறதா? “நாவல் ” தனது முடிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறதா? நாவலின் முடிவு நம் முன்னர் இருக்கிறதா? அல்லது, ஏற்கனவே “நாவலின் முடிவு” நம்மைப் பின் கடந்து சென்றுவிட்டதா? என்பதே பின்-வரலாற்றின் (post -history ) காலத்தில் நாம் வாழ்கிறோம் என நம்புபவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே முடிந்து விட்ட ஒரு பந்தயத்தில் வெற்றிக்கோட்டை / போட்டிக் களத்தில் இருந்த “முடிவுக்கோட்டை” தாண்டி விட்டோம் என்பதை உணராமலேயே மேலும் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோமா ? அவ்வாறு நாம் சொல்லமுடியாது என்றே நம்புகிறேன்- அணு ஆயுதப் பேராபத்து ஒன்று நம்மைத் தாக்கி அழிக்காத வரையில். ஒரு குறிப்பிட்ட வகையில் தான் நாம் ஒரு படைப்பை /பிரதியை வாசிக்க வேண்டும் என்கிற கருத்தோட்டத்தின் முடிவையே நாம் தற்போது எதிர் கொள்ள வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாவலை நாம் வாசிக்கும் முறைக்கு ஏற்பட்ட ஆபத்தே தவிர , நாவலுக்கே ஏற்பட்ட ஆபத்து அல்ல. நேர்வழிக்கோட்டில் பயணிக்கும் நாவலுக்கே இப்போது ஆபத்து. வேறொன்றும் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. “நாவல்” என்பதின் வடிவத் தோற்றத்திற்கு, அதாவது “புத்தகம்” என்ற வடிவத்தின் கருத்தாக்கத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தே இது. கதை சொல்லலின் புதிய அவதாரம் (hyperfiction – “மிகைக்கதை “) நமக்கு சொல்லித் தருவது என்னவென்றால் – நம் மனம் பயணிக்கும் திசைகளில் எல்லாம் நாவல் பயணிக்க இயலும்; கூடவே, வாசகனோடு தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டும் நாவலால் இயங்க முடியும்.
வாசிக்கும் முறையை மாற்றியமைக்க நான் முயற்சித்து வந்திருக்கிறேன் – ஒரு நாவலை உருவாக்குவதில் வாசகனுக்குரிய பங்கையும், பொறுப்பையும் அதிகப்படுத்துவதின் மூலம் ( ஒன்றை நாம் மறந்து விட வேண்டாம் – இவ்வுலகில், திறமையான எழுத்தாளர்களை விட, மிகத் திறமையான வாசகர்களும், விமர்சகர்களும் இருக்கிறார்கள்). ஆகவே, நான் வாசகர்களிடம் விட்டுவிட்டேன் – கதைகளின், நாவல்களின் மையக் கருத்துக்கள்/கதையமைப்பு (plot ), கதையின் வளர்ச்சி போன்றவற்றை எல்லாம் அவர்களே அவர்களுக்குப் பிடித்த வகையில் வடிவமைத்துக்கொள்ளட்டுமென – கதை எங்கு தொடங்க வேண்டும், எங்கு முடிய வேண்டும், கதையின் முக்கியப் பாத்திரங்களின் விதி எப்படி அமைய வேண்டும் என்பது போன்றவற்றையும். வாசிப்பமைப்பில் ஏற்படுத்தவேண்டிய இந்த மாற்றங்களுக்காக, கதைசொல்லும் அமைப்பிலும் நான் பல மாற்றங்களைச் செய்துள்ளேன். ஆகவே, இந்தக் கட்டுரையில் நான் கூறியது எல்லாம் நாவலின் வடிவம் பற்றி மட்டும் அல்ல, உள்ளடக்கம் பற்றியதுமானதாகும். கிரேக்க புராணக் கதையில், ப்ரோகிருஸ்ட் (Procrust ) என்கிற இரும்புக்கொல்லன் தான் செய்த கட்டில்களை வாங்க வந்தோரின் கால்களை/உடலை வெட்டியும் ஒட்டியும் தனது கட்டிலின் அளவுக்கேற்ற மாதிரி சரிசெய்து வருவான். அதுபோல் தான் இதுவரை “நாவலையும்” செய்து வந்தனர் – ஒரு குறிப்பிட்ட வடிவத்திலேயே அது இருக்க வேண்டும் என்று. அதற்கு ஒரு முடிவு வந்து விட்டதென்றே கருதுகிறேன். ஒவ்வொரு நாவலும், தனக்கேற்ற வடிவத்தைத் தேர்வு செய்துக் கொள்ள இயலும்; ஒவ்வொரு கதையும் தனக்கேற்ற உடலைக் கட்டமைத்துக் கொள்ள இயலும். அது சாத்தியமென கணினிகள் நமக்குப் பயிற்றுவிக்கின்றன .உங்களுக்குக் கணினிகள் பிடிக்காதெனில் , கட்டிடக்கலை நமக்கு என்ன கற்றுத் தருகிறதெனப் பாருங்கள்.
கட்டிடக்கலை நமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைக்கிறது. ஒரு இலக்கியப் படைப்பு, அதை ஒரு வீடு எனக் கொள்வோமெனில் , நமது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது. ஒரு நாவல் ஒரு வீடாக நமக்கு அமைய இயலும். ஒரு சிறிய காலத்திற்கேனும்.
****
இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை ஜூலை 2017 உன்னதம் இதழில் வெளிவந்திருக்கிறது.
