- கௌதம சித்தார்த்தன்
உன்னதம் ஜூன் 2018 இதழ் “தற்கால சர்வதேசக் கதையாடல்களின் போக்கு” என்ற தலைப்பில் சிறப்பிதழாகக் கொண்டு வரப்பட்டது. அந்த இதழுக்கு எழுதிய முன்னுரை.
***
தற்கால சர்வதேசக் கதைகள் குறித்த ஒரு விரிவான பார்வையுடன் இந்த சிறப்பிதழ் கொண்டுவருவது எல்லையற்ற விகாசத்தைத் தருகிறது. இதழில் வெளிவரும் அனைத்து எழுத்தாளர்களும் தமிழுக்கு முதன்முறையாக அறிமுகமாகின்றனர், ஜே.எம்.கூட்ஸி தவிர்த்து. கூட்ஸி ஏற்கனவே சிற்றிதழ் தளங்களில் அறிமுகமாகியிருப்பினும், இந்தக்கதை அவ்வளவு நுட்பமான யதார்த்தவியல் புனைவு. பின்நவீன இலக்கியத் தளத்தில் clicheவாகிப் போன யதார்த்தவகை எழுத்தை, தனது எழுத்தாற்றல் மூலம் மிக அற்புதமாக மறுமலர்ச்சி கொள்ள வைக்கிறார்.
முதலில் இந்த சிறப்பிதழ் கொண்டு வந்ததற்கு காரணமே நியூயார்க்கர் இதழில் வெளிவந்த அமெரிக்க எழுத்தாளரான கிறிஸ்டன் ருபேனியன் எழுதிய cat person என்னும் கதைதான். ஒரு உலகப் புகழ்பெற்ற பத்திரிகை.. அந்த பத்திரிகையில் படைப்பு வெளிவருவதே வாழ்வின் லட்சியமாக ஏங்கிக் கொண்டிருக்கும் உலக இளம் எழுத்தாளர்களின் தீராக் கனவு.. சர்வதேச இலக்கியப் போக்கையே தீர்மானிக்கின்ற இலக்கிய அதிகார மையம் இன்னபிற.. இன்னபிற.. வல்லமைகள் கொண்ட ஒரு இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்திருந்தது அக்கதை. கதை வெளிவந்த காலகட்டத்தில் மில்லியன் பில்லியன் மக்கள் படித்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். paper magazine – ல் வெளிவந்த கிம் கர்டேஸியன் நிர்வாணப் படங்களுக்காக இணைய போக்குவரத்து ஸ்தம்பித்த சூழலைப் போலக் காணப்பட்டது என்று ஒரு விமர்சகர் எழுதுகிறார்.
அந்தக்கதை, ஒரு மசாலா பத்திரிகையில் வந்திருக்க வேண்டிய மிக மிக மேலோட்டமான கதை. எந்த விதமான இலக்கியத் தன்மையுமின்றி, கலை நுட்பங்களுமின்றி open narrative பாணியில் அமைந்திருந்த மிகச் சாதாரணமான கதை.
ஒரு ஆணும் பெண்ணும் டேட்டிங் செய்வது பற்றியதுதான் கதை. அதன் களத்தை நவீனப்படுத்த, செல்பேசியில் Text செய்வது பற்றிய போக்கில் கதையை வெகுஜன சுவாரஸ்யத்துடன் நகர்த்துகிறார். பாலியல் சம்பாஷணைகள் கொண்ட Texting அது. அந்த Texting -ல் எந்த விதமான புதுமையோ, பாலியல் அரசியல் நுட்பங்களோ, நவீனத் தன்மைகளோ இல்லை. இந்த வகை Texting என்பதை Sexting என்று அழைக்கிறார்கள். இந்த Sexting பற்றி ஒரு கல்விப்பாடம் போல கற்றுக் கொள்வதற்கு இணையத்தில் ஏராளமான கோர்ஸ்கள் உண்டு.
இந்தப் பின்னணியில் இக்கதையைப் படித்து ஏமாந்துபோனேன். புனைவு இலக்கியம் பெருமளவில் textuality மற்றும் innertextuality என்றெல்லாம் புதிர்த் தன்மையுடன் சுழன்றாடிக்கொண்டிருக்கும் தற்கால சர்வதேச புனைவுச் சூழலில் இப்படி ஒரு தட்டையான கதைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது எதற்காக? முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் வளர்ச்சியில் நியூயார்க்கரும் வெகுஜனமயமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது, அக்கதையின் வருகை. கதையை எழுதிய பெண்மணிக்கு இதுதான் முதல் பிரசுரம்! மிகுந்த ஆவேசத்துடன் அக்கதை சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தொகுக்க ஆரம்பித்தேன்.
புகழ்பெற்ற நவீன இலக்கியப் பத்திரிகையான கிரெண்டா, 1993 ஆம் ஆண்டு தனது 43 வது இதழை Best of Young British Novelists Fiction என்னும் தலைப்பில் சிறப்பிதழாக வெளியிட்டது. அதில் ஜீனட் விண்டர்ஸன் கதையான ‘The Poetics of Sex’ கதையை 1999 ஆம் ஆண்டு உன்னதம் இதழில் வெளியிட்டது. அவ்வளவு அற்புதமான கதைப்பிரதி அது. கதை, கதை வரிகளுக்குள் சுழன்றிருக்கும் கவித்துவம், கதைப் பிரதிக்குள் மறைந்திருக்கும் பாலியலின் அரசியல், postmodern narration என்று விவரிக்க முடியாத அபாரமான கதைப்பிரதி அது. (முக்கியத்துவம் கருதி இந்த இதழில் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது)
எனில், சர்வதேச ரீதியில் வந்து கொண்டிருக்கும் கதைகளின் போக்கு என்ன, எனத் தேடல் விரிந்தது. கிரண்டா இதழில் தற்பொழுது வெளிவந்து சர்வதேச கவனத்தைக் கவர்ந்திருக்கும் பாலியல் தன்மையைக் கொண்ட ஒரு கதை, லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான கார்மன் மரியா மச்சாடோ எழுதிய The Husband Stitch. கதை அபாரமான இலக்கியத்தன்மை கொண்டதாக இருந்தது என்னை பரவசப்படுத்தியது.
இக்கதையின் தலைப்பான Husband’s Stitch என்பது குழந்தைப் பேற்றுக்குப் பிறகு உடலுறவுக்கு இணக்கமாக இருக்கவேண்டுமென்பதற்காகப் பெண்ணுறுப்பைத் தைக்கும் கணவனின் குரூரம். ஆனால், இதுகுறித்து கதையின் எந்த இடத்திலும் ஒரு வார்த்தையும் இல்லை. மாறாக, அவளது கணவனின் போக்கும் தன்மையும் அதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற பார்வை பிரதியில் Inner Text ஆக பதுங்கி இருக்கிறது. கதையின் வார்த்தைகள், உடலின் மூலமாக, இயற்கையாகவும், இயற்கைக்கு அப்பாற்பட்டும், ஆழமாக வெளிப்படுகிறது. இது உடலின் கதை. பெண் உடலை மீட்டெடுக்கும் பண்பாட்டுக்காக, பண்பாட்டில் எழுதப்பட்ட உடலின் கதை. இன்றைய பெண்ணியத்தின் வழியாக, பெண்கள் வெளிப்படையாக இக்கணத்தில் உடல் அனுபவத்தை மதிக்கும் பரந்த பண்பாட்டு மாற்றத்தின் வழியாக வெளிப்படுத்தும் புதிய கதை. இந்நாள் இலக்கியத்தில் ஏற்படும் மாற்றம் இந்த எழுத்தில் வெளிப்படுகிறது. உடலை – சதையை – பெண்ணியப் பார்வையில் மீட்டெடுக்கும் எழுத்து இயக்கம் இது. பெண்ணுடலை மீட்டெடுப்பது அதற்கு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிற பாதகத்தை மறப்பதாலோ ஒதுக்கிவிடுவதாலோ வருவதல்ல. இக்கதை, பெண்ணுடலை ஆண் தன் இன்பத்திற்காகச் சிதைக்கும் வாதையை அசலாக முன்வைக்கிறது.
இதன் தொடர்ச்சியாக மேலும் சில கதைகளை அவதானித்தேன்.
ஜெனிஃபர் ஈகன் எழுதிய Black Box கதை, முற்றிலும் வேறுபட்ட பார்வையிலான விஞ்ஞானப் புனைவு. எதிர்காலப் பெண்ணியத்தில் பாலியலின் நிலை என்பதை மசாலா எழுத்தாளர்கள் எழுதுவதுபோல அல்லாமல், முற்றிலும் நவீன இலக்கியத் தன்மையுடன் முன்வைக்கிறார். மச்சாடோவின் கதையில் பெண்பாத்திரம் கழுத்தில் சுற்றியிருக்கும் (பெண்ணியத் தன்மைக்கான அடையாளமாய்) ‘பச்சை ரிப்பன்’, இக்கதையில் ‘சிவப்பு ரிப்பன்’ என்கிற சட்டென வந்து மறையும் பிரயோகம், ஒரு குறியீட்டுத் தன்மையுடன் விரிகிறது.
இக் கதையின் பிரசுர உருவாக்கம் புதுமையானது.
உலகம் முழுக்க தற்போது ‘ட்விட்டர் கதை’ என்னும் ஒரு வகை பரபரப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது. 140 (ஆங்கில) எழுத்துக்களில் ஒரு கதையை ட்விட்டரில் வெளியிட்டு ‘ட்விட்டர் எழுத்தாளர்கள்’ என்று ஒரு வகையினர் பெருமளவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘140 எழுத்துக்களில் ஒரு ட்விட்டர் கதை சொல்வது எப்படி?’ என்கிற இணைய வகுப்புகள் பெருமளவில் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இந்த மலினமான வெகுஜனப் போக்கை நவீன எழுத்தாளர்கள் நிராகரித்தார்கள். இருந்தபோதிலும், தங்கள் கதைகளை தொடர் டிவீட்களாக வெளியிட ஆரம்பித்தார்கள். இந்தத் தொடர் டிவீட்கள் ஒருங்கிணைந்து கதையாக உருமாறுகிறபோது ஒரு விரிவான வாசகர் கூட்டமும், எழுத்து உத்வேகமும் இந்த வகையில் ஈடுபாடு கொள்ள வைத்தது. அதே சமயத்தில் நியூயார்க்கர் (மற்றும் சில பத்திரிகைகள்) தனது ட்விட்டர் கணக்கைத் துவக்கி ட்விட்டர் கதைகளை (தொடர் டிவீட்களாக) எழுத உற்சாகப்படுத்தியது. டேவிட் லாட்ஜ், ஜெப்ஃரி ஆர்ச்சர், ஹரி குன்ஸ்ரு உள்ளிட்ட புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர்கள் 21 பேரிடம் ட்விட்டர் கதைகளைக் கேட்டு வெளியிட்டது கார்டியன் பத்திரிகை. நியூயார்க்கில் வருடாவருடம் ட்விட்டர் கதைகளின் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் அலட்சியம் காட்டினாலும், தற்பொழுது, பெரும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தப் பின்னணியில், நியூயார்க்கரின் புனைவுகளுக்கான ட்விட்டர் பக்கத்தில் 47 ட்வீட்கள் ஆக எழுதிய கதைதான் Black Box.
நவீன இலக்கியம் மீதான தீவிர பிரக்ஞையுடனும், தீராத வேட்கையுடனும் பசித்திருக்கும் வாசகனுக்கு இச்சிறப்பிதழ் பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும்.
***
உன்னதம் ஜூன் 2018
