- ஷோலெ வோல்ப் உடன் ஒரு நேர்காணல்
-
நேர்காணல் கண்டவர் : தியோடர் மெக்கோம்ப்ஸ்
-
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
‘மொழிபெயர்ப்பு என்பது அறுவைசிகிச்சைக்கான கத்தி’ என எழுதுகிறார் ஷோலெ வால்ப். கலாச்சார பிரிவுகளுக்கான ஒரு ஆறுதலே மொழிபெயர்ப்பு என்கிறார் இந்த ஈரானிய – அமெரிக்கக் கவிஞர். இவர் மொழிபெயர்க்கும் ஈரானிய எழுத்தாளர்களின் வழியாகவும், இவருடைய நான்கு கவிதைத் தொகுப்புகள் வழியாகவும் வோல்ப் அவருடைய சொந்த நாடான ஈரானுக்கும், அவரை ஏற்றுக் கொண்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே இருக்கும் கடுமையான அரசியல் பிளவை அவர்களுடைய பரஸ்பர அறியாமையைத் துளைத்து ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்வதின் மூலம் இணைக்க முற்படுகிறார். 2007ஆம் ஆண்டு, இருபதாம் நூற்றாண்டு ஈரானிய கவிஞரும், பெண்ணியவாதியுமான ஃபரூக் ஃபரூக்ஸாட் படைப்புகளை ‘Sin’ என்கிற தொகுதிக்காக மொழிபெயர்த்தார். 2013, 2014 ஆம் ஆண்டுகளில் இவரும் மோஸன் எமாடியும் சேர்ந்து வால்ட் விட்மனுடைய ‘Song of Myself’ நூலை முதன் முதலில் முழுமையாக பெர்ஷிய மொழியில் மொழிபெயர்த்தார்கள். அது இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகவிருக்கிறது. டெஹ்ரான், ட்ரினிடாட், லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பயணித்த பல நாடுகளில் இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் அழகு, இடப்பெயர்வு, நம்பிக்கை, போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வோல்ப்பின் புதிய மொழிபெயர்ப்பான ‘The Conference of the Birds’ வெளிவந்தது. இதற்காக அவர் PEN/Heim நல்கை பெற்றார். இதை எழுதியவர் பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த் சூஃபி கவிஞரும், மறைஞானியுமான ஃபரித் உத்-தின் அத்தர் ஆவார். The Conference of the Birds – ல் உலகத்தில் உள்ள பறவைகள் எல்லாம் தங்களுடைய அரசனான புராணம் சார்ந்த பெர்ஷியப் பறவை ‘ஸிமோர்க்’ ஐ தேடும் வேட்கையை காலக்கிரமமாகப் பதிவு செய்திருந்தது. இந்தக் கதை ஆன்மாவினுடைய தெய்வீகப்பயணத்தின் உருவகமாக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்தப் பயணத்தினுடைய பிரதானமான தடை ‘ஈகோ’ ஆகும். இது நம்மை பொறியில் மாட்டவைக்கும் லௌகீக சுயநலம் எனும் சிறுமைத்தனமாகும். மத்தியகால பெர்ஷியாவில் இருந்ததைப் போலவே அவர் தன்முனைப்பு வாதத்தை (ஈகோ) இன்றைக்குக் குற்றஞ்சாட்டுகிறார்.
உன்னுள் இருப்பது பேராசையிலிருந்து எழும்புகிறது;
அது கோபத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்து வருகிறது.
மற்றவர்கள் பார்க்கும் அதை உன்னால் பார்க்க முடியாது.
உனக்குள்ளே முழுவதும் டிராகன்கள் நிரம்பிய சாம்பல் குழி இருக்கிறது
நீ அதை அக்கறையில்லாமல் அவிழ்த்துவிட்டு விட்டாய்.
நீ அதை பகலும் இரவும் பராமரி
அவை மகிழ்ச்சியாக சாப்பிடவும் தூங்கவும் செய்யட்டும்.
The Conference of the Birds நூல், எழுத்தாளர்களான ரூமியிலிருந்து போர்ஹேஸ் வரை அனைவரையும் பரவசப்படுத்தியிருப்பதோடு வோல்ப்பின் மொழிபெயர்ப்பு அத்தரின் மரபு வழியற்றதையும், மாயப் பார்வையையும் தற்கால மேற்கத்திய வாசகர்களும் அணுகக்கூடியதாக ஆக்கியிருக்கிறது. அவருடைய லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில், அவருடைய அறைக்கு நிழல் கவிழ்ந்திருந்த முற்றம் வழியாக அழைத்துச் சென்றார். அங்கே அத்தரின் ஞானத்தைப் பறைசாட்டும் புத்தகங்கள் அவருடைய மேசையின் மேல் குவிந்து கிடந்தன. அதில் நேர்த்தியாக பெர்ஷியனில் எழுதப்பட்டிருந்த மூலமுதலான கவிதையொன்றை காண்பித்தார். ‘இது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் இதை இப்படியே யாரும் படிக்க முடியாது’ என்றார் வோல்ப். மிகவும் அடர்த்தியான கேக் மற்றும் சமோவாரில் தயாரிக்கப்பட்ட கடுந் தேநீருக்கு நடுவில் அத்தரின் தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் மறுஉருவாக்கம் செய்வதற்கான அவசியம், அதிலிருக்கும் சிரமங்கள், அதனுடைய அடிப்படைவாதம், தீவிரவாதம் பற்றிய காலமற்ற விமர்சனம், தத்துவார்த்தத்தை எதிர்ப்பதில் மொழிபெயர்ப்பாளருக்கு உள்ள பங்கு ஆகியவை குறித்து உரையாடினார்.
சர்வதேச இலக்கிய இதழான குவெர்னிகா இதழுக்காக நேர்காணல் கண்டவர் : தியோடர் மெக்கோம்ப்ஸ்.
***
The Conference of the Birds – ஐ மொழிபெயர்க்கும் இந்தத் திட்டம் எப்படி ஏற்பட்டது?
இதுதான் என்னுடைய அடுத்த மொழிபெயர்ப்பு திட்டமாக இருக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஃபரித் உத்-தின் அத்தர் பற்றிய ஒரு சொற்பொழிவுக்காக என்னை சான் ஜோஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் அழைத்தார்கள். நான் அதற்கு ஒத்துக் கொண்டதோடு அற்புதமான வாய்ப்பு என நினைத்துக் கொண்டேன். ஏனெனில், இவர் நான் நேசிக்கும் கவிஞர், அவர் குறித்து பேசவிருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்தது. நான் Conference -லிருந்து சில கவிதைகளைத் தேடினேன். முதன் முதலாக, பாலியல் ரீதியிலான பிரதி பெயர்கள், ‘அவன்(he)’ அல்லது ‘அவள்(she)’ இல்லாத மொழியைக் கவனிக்க நேர்ந்தது, நான் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்புக் கவிதையில் இந்த பாலியல் ரீதியான பெயர்கள் இருந்தன. அனைத்துப் பறவைகளும் ‘அவன் (he)’. கடவுளும் ‘அவன்/ர் (He)’. அனைவரும் ஆண்கள் தான் என மொழிபெயர்ப்பாளர் ஏற்கனவே தீர்மானித்திருந்தார். அது எனக்குச் சரியாகப்படவில்லை. கவிதைகள் பெர்ஷியனில் பேசியது போல மொழிபெயர்ப்பில் பேசுகிறது என்பதை என்னால் உணர முடியவில்லை.
எனவே, அந்தக் குறிப்பிட்ட சொற்பொழிவுக்காக நான் சில கவிதைகளை மொழி பெயர்த்தேன். நான் அதை அங்கே மையமாக வைத்து உரை நிகழ்த்தினேன், அது பற்றிப் பேசினேன். அங்கிருந்தவர்கள் எல்லோரும் பரவசமடைந்து அந்தக் கவிதைகளின் பிரதியைக் கொடுக்குமாறு கேட்டார்கள். அதற்கு நான், ‘அது இப்போது கிடைக்காது. நான் இப்போதுதான் அதைச் செய்தேன்’ என்று கூறினேன். நான் அந்த மொழிபெயர்ப்பை PEN -க்கு அனுப்பினேன், அது மொழிபெயர்ப்பிற்கான அதிகமான நல்கையைப் பெற்றது. நீதிபதிகள் எல்லோரும் ஒருமனதாக இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக அவர்கள் கூறினார்கள்.
அத்தருக்கான எதிர்வினை வழக்கமான ஒன்றுதான் – மக்கள் அவரைப் போற்றியது மட்டுமல்லாமல், அவருடைய கவிதைக்கு மிகவும் வலுவாக எதிர்வினையாற்றி இருக்கிறார்கள். அது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஏனென்றால் இது அத்தர் மட்டுமல்ல. அவரால் பெர்ஷியாவிலும், சூஃபி இஸ்லாத்திலும் பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்த மத சம்பந்தமான, மத சம்பந்தமற்ற, ஆன்மீகம் சம்பந்தமான, ஆன்மீகம் சம்பந்தமில்லாத என எல்லா தத்துவங்களையும் ஒத்திசைவாக அவரால் கொண்டு வர முடிந்திருக்கிறது. அது அழகாக மட்டுமல்லாமல், ரசிப்புத் தன்மையையும் கொண்டிருந்தது. அவருக்கு முன்பு, அனைத்து கவிதைப் புத்தகங்கள் அல்லது தத்துவத்தின் ஆய்வுகள் எல்லாம் ‘இதைக் கற்றுக் கொள், இதை ஏற்றுக் கொள்’ என்று போதிப்பதாகவே இருந்தன. அத்தர் சொல்கிறார்: ‘நான் இது குறித்து ஒரு கதை சொல்கிறேன். கழுதை அபானவாயு விட்டால் எப்படியிருக்கும்?
Conference ஏற்கனவே ஆங்கிலத்தில் பல முறை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; 1984ஆம் ஆண்டு Dick Davis மற்றும் Afkham Darbandi இணைந்து செய்த மொழிபெயர்ப்பாகும். ஆனால் Conference – ஐ தனியாக மொழிபெயர்த்திருக்கும் நீங்கள் முதல் ஈரானிய கவிஞரும், பெண்ணும் ஆகும். உங்களுடைய கண்ணோட்டம் எப்படி உங்கள் மொழிபெயர்ப்பு விருப்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என நினைக்கிறீர்கள்? உதாரணமாக, பெர்ஷியனில் பாலியல் ரீதியிலான பிரதிப் பெயர்கள் குறைவு எனக் கூறினீர்கள். இதற்கு முன்னால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பிலிருந்து வித்தியாசமாக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?
ஏனென்றால் ‘அல்லாஹ்’ என்கிற சொல் கிடையாது. நான் ‘God’ என்கிற சொல்லையும் பயன்படுத்தவில்லை. நான் வித்தியாசமாக ‘‘the Almighty,’ ‘the Great’ ’ போன்ற சொற்களை உபயோகித்திருக்கிறேன். நான் வித்தியாசமாக தெரிவு செய்த இன்னொரு சொல் ‘Ego’. அத்தர் taab, kheesh, khod, nafs போன்ற சொற்களை உபயோகித்திருக்கிறார். அவை வெவ்வேறு சொல்லாக இருந்தாலும் அதன் அர்த்தம் ‘சுய சாராம்சம்’ தான். பெர்ஷியன் வாசகர்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் ஆங்கில வாசகருக்கு அது குழப்பதை ஏற்படுத்தும். எனவே, நான் தெரிவு செய்ய வேண்டியதாக இருந்தது. ego என்பது சரியான சொல் என்று எனக்குத் தெரியும், ஆனால் அது ஃப்ராய்ட் சம்பந்தப்பட்டதால் நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தேன். ஆனால் லத்தீன் மொழியில் ego என்றால் ‘நான்’ என்கிற அர்த்தம் இருப்பதைக் கண்டறிந்தேன். கடவுளே, இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில், ego என்கிற சொல்லுக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.
ஒரு பெண் மொழிபெயர்ப்பது வித்தியாசத்தை உண்டாக்கும் என நான் நினைக்கிறேன். அதோடு நான் எந்தவொரு மதத்தையும் சேர்ந்தவள் என்கிற உணர்வும் எனக்கில்லை. தீவிரவாதம் மிகவும் அபாயகரமானது என நான் நினைக்கிறேன், இந்தப் புத்தகத்தில் உள்ள செய்தி என்னுள் எதிரொலித்தது. எனவே, பிரதியில் என்னுடைய உணர்திறனையும் உணர்ச்சியையும் இதில் அதிகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நான் சொன்னது போல மொழிபெயர்ப்பு என்பது மறுபடைப்பாகும். நான் மொழிபெயர்க்கும் கவிஞர் என்னுடைய கவிதைக் குரலை கடன் வாங்கிக் கொள்கிறார். நான் மோஸன் எமாடியுடன் சேர்ந்து விட்மனை பெர்ஷியனில் மொழிபெயர்க்கும் போது, அது எங்களுடைய கவிதைக் குரல்களாக இருந்தன; ஆங்கிலத்தில் அத்தரின் குரல் என்னுடைய கவிதைக் குரலாகும். நான் உள்ளடக்கத்தை எடுத்துக் கொண்டேன், கவிதையுடன் எனக்குண்டான தொடர்பை எடுத்துக் கொண்டேன், கவிதையின் உணர்ச்சிக்கு உண்மையாக நான் இருந்தேன் – அத்தருக்கு வந்த உணர்ச்சி, ஆனால், என் மூலமாக வடிகட்டப்பட்டது.
Conference of the Birds – ஐ நீங்கள் பனிரெண்டாம் நூற்றாண்டு ஈரானிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு அமெரிக்கச் சூழலுக்கு, ஆங்கிலம் பேசுவது மட்டுமல்லாமல் மிகவும் மதச்சார்பின்மை இல்லாமால், அத்தர் சம்பந்தப்பட்ட எந்தவொரு அரசியல், ஆன்மீக கட்டமைப்பும் இல்லாமல் கொண்டு வருகிறீர்கள். அதோடு, கவிதை அனுபவத்தை மறுபடைப்பாக்கம் செய்கிறீர்கள், இது மாதிரியான கலாச்சார மொழிபெயர்ப்பை எப்படிச் செய்கிறீர்கள்?
ஆங்கிலம் தெரிந்த மக்கள் இதைப் படிக்க வேண்டுமென நான் விரும்புவது எனக்குத் தெரியும். இது அறிஞர்களுக்கானது இல்லை. அறிஞர்கள் படிக்கலாம், அப்படியென்றால் மிகவும் சிறப்பு. ஆனால், பதினைந்து வயது நிரம்பிய ஒருவர் இதை எடுத்து, விரும்பிப் படித்து அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன்பு ஃபரூக் ஃபரூக்ஸாட் எழுதிய கவிதைகள் மீது வேலை செய்திருக்கிறேன். எவ்வளவு சிரமம் என்று நான் அறிந்திருப்பதோடு எவ்வளவு வெகுமதியளிக்கக்கூடியது என்பதும் தெரியும். ஏனெனில் திடீரென்று மிகவும் முக்கியமான ஈரானிய பெண் கவிஞர் ஆங்கிலம் பேசும் உலகிற்கு வருகிறார், அவர்கள் இன்று வரை அவரை நேசிக்கிறார்கள். என்னுடைய மொழிபெயர்ப்பை வெளியிட்ட பதிப்பாளர், பத்துவருடங்களுக்குப் பிறகும் இது அவர்களுடைய பெஸ்ட் செல்லிங் புத்தகங்களில் ஒன்று எனக் கூறினார். அவரைக் கண்டறியும் ஆங்கிலம் பேசும் வாசகர்கள் ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் அவரோடு தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
எனவே, The Conference of the Birds -க்கு ஒரு வடிவம் கொடுத்து அறிஞர்கள் பல்கலைக்கழகங்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் படிக்கக்கூடிய மாதிரியான ஆங்கிலத்தில் வழங்க வேண்டும். இதனுடைய ஒரிஜினல் வடிவம் அசரடிக்கக்கூடியதாகும். யாரும் அந்தமாதிரி படிக்க முடியாது: இது எல்லாம் கவிதை, வரிக்கு வரி வரிக்கு வரி, தலைப்பெதுவுமில்லை, பிரிவு எதுவுமில்லை. நான் கதைகளைத் தனியாகப் பிரித்து, தலைப்புக் கொடுத்து அதை உரைநடையாக மாற்றியிருக்கிறேஎன். இது என்னுடைய மறுபடைப்பாக்கம் ஆகும்.
மொழி, முக்கியமாக கவிதைகள், நமது தலையில் காட்சிகளாக மாறிவிடும். எனவே நாம் இலக்கியப் படைப்பை மொழி பெயர்க்கும் போது அல்லது மறுபடைப்பாகம் செய்யும் போது அதை மதிக்க வேண்டியிருக்கிறது. கவிதையின் கடைசியில் ஒரு வரி அதை நான், ‘உண்மையான சூரியன் முடிவற்றுப் பிரகாசிக்கும்போது, / இங்கே அணுவாக இருப்பது / அல்லது இங்கே அதனுடைய நிழலாக இருப்பது முக்கியமா? இங்கு அத்தர் zarreh என்கிற சொல்லை உபயோகிக்கிறார். எதுவாக இருந்தாலும் அதில் மிகவும் சிறிய துண்டாக இருப்பது Zarreh ஆகும். இதற்கு பல, பல அர்த்தங்கள் இருக்கின்றன. நான் உங்களிடம், ‘நீங்கள் ஒரு துண்டு கேக்கை விரும்புகிறீர்களா?’ அதற்கு நீங்கள், ‘ஓ, நான் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்’ என சொல்லும் போது zarreh உபயோகிக்க வேண்டும். ‘எனக்கு, ஒரு சிறிய துண்டு (zarreh)கொடு’. ஆனால் zarreh என்பது எவ்வளவுக்கு சாத்தியமோ அவ்வளவுக்கு சிறிய பொருளையும் குறிக்கும். எனவே அது குறித்து நான் சிந்தித்தேன், வாசகர்களுக்கு சிறிய, எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கு சிறியது எதுவாக இருக்க முடியும்? நீங்கள் அது குறித்து சிந்திக்க விரும்பினால், அது ஒரு ‘அணு’வாகத்தான் இருக்கும்.
நீங்கள் இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு ஆங்கிலத்தை உபயோகிக்க விரும்பினால் அது அத்தரினுடைய கருத்துக்கான துல்லியமான மறுபடைப்பாக்கமாக இருக்காது.
இருக்காது. அது உங்களுடைய தலைக்குள் இருக்கும் அதே பிம்பம், அதே விஷயத்தின் மறுபடைப்பாக்கமாக இருக்கும். எனவே, அதைத்தான் நான் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் கவிதையை இன்னொரு மொழியில் மறுபடைப்பாக்கம் செய்யும் போது அது புதிதாக இருக்கவேண்டும் என விரும்புகிறீர்கள், சரியா? பெர்ஷியன் மிகவும் கவர்ச்சிகரமானது. கவர்ச்சிகரமான மொழியைப் பின்பற்றும் அதே நேரத்தில் ஆங்கிலத்துக்கும் உண்மையாக இருக்க வேண்டுமெனில், ஆங்கிலத்தில் அழகான இலக்கியம் இருக்காது. பெர்ஷிய மொழியில், சில நேரங்களில் ஒரே சொல்லை நீங்கள் மீண்டும், மீண்டும் உபயோகிக்க வேண்டும், அது மிகவும் அழகானது. ஆனால் ஆங்கிலத்தில் அது அழகாக இருக்காது.
அதே நேரத்தில், இலக்கியத்தில் ஒரு படைப்பை மொழி பெயர்ப்பு அல்லது மறுபடைப்பாகம் செய்யும் போது அது இலக்கு மொழியை செறிவுள்ளதாக ஆக்கும் என நான் நம்புகிறேன். எனவே, நான் ஒரிஜினல் படைப்பை முழுவதும் ஆங்கிலமாகவோ, அமெரிக்கமயமாகவோ மாற்றப் போவதில்லை, அப்படிச் செய்தால் நான் ஒரிஜினல் படைப்பைக் கேவலப்படுத்துவது போல ஆகும். ஃபரூக் ஃபரூக்ஸாட் ஒரு வரியில், ‘தலையிலிருந்து கால்வரை நீ பச்சைநிறமாக இருக்கலாம்’ என்கிறார். அவர் பெர்ஷியனில் ஒரு சொற்றொடரைக் கண்டுபிடித்திருக்கிறார். இப்போது, ஆங்கிலத்தில், ‘நீ வளமையாக ஆகவேண்டும்’ என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அதுதான் அர்த்தமாக இருந்தாலும் ஏன் அந்த மாதிரி மொழி பெயர்க்க வேண்டும்? ஏன் ஆங்கிலம் படித்தவர்கள் ‘தலையிலிருந்து கால்வரை நீ பச்சைநிறமாக இருக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டு உபயோகப்படுத்தக் கூடாது?
உலகெங்கிலும் இந்த வகையான இணைப்புகளை உருவாக்கும் இலக்கிய மொழிபெயர்ப்பாளரின் பங்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பல்வேறு தத்துவார்த்தச் சிந்தனைகளால் நமது உலகம் சின்னாபின்னமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு வித்தியாசமானவர்கள் என்பது குறித்துக் கேட்கிறோம். என்னைப் பொறுத்தவரைக்கும், மக்களை ஒருங்கிணைப்பது கலை மட்டும் தான். நான் அந்தச் செயல் முறையின் ஒரு பகுதியாக இருக்கவே விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு பக்கம் விரக்தியடைந்து எழுத்தாளராகிய நான் என்னுடைய கவிதைகள் அல்லது நாடகங்களை மட்டும் தான் எழுத வேண்டும் என நீங்கள் சொல்வீர்கள். ஆனால், நான் இரு கலாச்சார, இரு மொழி கொண்டவள். அதோடு கவிஞரும் எழுத்தாளரும், நான் மொழிபெயர்க்கவில்லையென்றால் அது ஒரு பாவம். மொழிபெயர்ப்பு மற்றும் மறு படைப்பாக்கம் வாயிலாக, நான் வெவ்வேறு கலாச்சாரத்தை ஒருங்கே கொண்டுவருகிறேன். நான் ஈரானை – எதிரியாக, தீவிரவாதிகளின் ‘போக்கிரி நாடாக’ பார்க்கப்படக்கூடிய – ஆங்கிலம் பேசும் பொதுமக்களுக்காகக் கொண்டுவந்து, இதோ பாருங்கள், இதுதான் உண்மையான ஈரான் எனக் காட்டுவதோடு அதனுடைய மக்களும் இப்படித்தான் எனச் சொல்கிறேன். அவர்கள் இதைப் படிப்பார்கள், விரும்புவார்கள், இதுதான் நம்முடைய கலாச்சாரம். நீங்கள் பார்ப்பது தற்காலிகமான ஒன்று. அது துல்லியமற்றது, ஏனென்றால் இந்தப் பிரிவினையால் ஏதாவது ஆதாயம் அடைய வேண்டும் என நினைப்பவர்களால் அது உருவாக்கப்பட்டது. நான் அதற்கு எதிராக மொழிபெயர்ப்பின் மூலமாக சண்டை போட விரும்புகிறேன்.
Conference, ஈரான் குறித்த வேறான கண்ணோட்டத்தை மேற்கத்திய நாடுகளுக்கு வழங்குவதோடு நாம் இன்றைக்குப் பெரும்பாலும் பார்க்காத இஸ்லாத்தைப் பற்றியும் சொல்கிறது. மிகவும் வேறுபாடாக இருக்கிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
Conference – வறட்டுக் கோட்பாட்டுக்கும், ISISக்கும், எந்தவொரு தீவிரவாதத்துக்கும் எதிரானது. ஏனென்றால், இங்கே அத்தர், ‘ஆமாம் நாங்கள் இஸ்லாத்தின் மரபிலிருந்து வருகிறோம், ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், நீங்கள் ஒரு வழியில் நடக்க வேண்டும். ஒவ்வொருவரும், ஒவ்வொருவரும் இந்த அழகான உருவகமான பெரிய கடலில் வந்து சேருகிறோம்’ என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். ஒரு சிலருடைய பயணம் மற்றவர்களின் பயணத்தை விட அதிகமாக இருக்கும் என்பதைத் தவிர இது யாரையும் திரும்ப அனுப்பாது. அது தான் வித்தியாசம். நீங்கள் உங்களுடைய ஈகோவை விடவில்லையெனில் பயணம் நீளமாக இருக்கும். அத்தர் சொர்க்கம், நரகம் என்கிற கருத்திலிருந்து விலகியிருக்கிறார். எங்கேயும், எந்தவொரு மதக் கோட்பாடும் – இதனை அடிப்படையாகக் கொண்டு, இதை நீ செய்தால் சொர்க்கத்துக்குச் செல்வாய், இதைச் செய்தால் நரகத்துக்கு போவாய் என்று சொல்கிறது. அவர் இதிலிருந்து விலகியிருக்கிறார். Conference இஸ்லாம் மரபிலிருந்து வந்தாலும் இது ஒரு சூஃபி மறைஞானம் ஆகும்.
இந்தத் தருணத்தில், உதாரணமாக, ஈரானில் இருக்கும் முல்லாக்கள் சூஃபி மரபைச் சேர்ந்த அத்தர் அல்லது ரூமியை எப்படிப் பார்க்கிறார்கள்?
அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இது நம்முடைய பாரம்பரியத்தின் ஒரு பகுதி, யாரும் ஹஃபீஸை அல்லது ரூமியை அல்லது ஸாடியைத் தாக்கவில்லை. நம்முடைய புராதனக் கவிஞர்கள் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் யாரும், அரசியல் பேச்சைப் பொறுத்தளவில், அவர்களைப் பற்றிக் கலந்துரையாடுவதில்லை. அவர்கள் செய்ய வேண்டும், ஆனால் செய்வதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அது பயனளிக்காது. பயனளிக்கும் பட்சத்தில் அவர்கள் பேசக்கூடும்.
ஈரானியர்கள் கவிதைகளை அதிகமாகப் படிப்பவர்கள் என்றாலும் கூட பெரும்பாலானவர்கள் The Conference of Birds – ஐ அட்டையிலிருந்து அட்டை வரை ஒருபோதும் படித்திருக்கமாட்டார்கள். இந்த நாட்டில் எத்தனை பேர் உட்கார்ந்து ஷேக்ஸ்பியர் எழுதிய அனைத்தையும் படித்திருக்கிறார்கள்?
ஷேக்ஸ்பியரை இங்கே குறிப்பிடுவது சுவராசியமாக இருக்கிறது. சமீபத்தில் நியூயார்க்கில் ஜுலியஸ் சீசர் நாடகம் நடந்த போது, எலிஸபத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் அரசியல் படுகொலை பற்றிய சிந்தனையைப் பற்றி பேசுவது கூட முறிவு விளைவைக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். அத்தரோடு நீங்களும் அதைத்தான் செய்ய வேண்டுமென நம்புகிறீர்களா – கலந்துரையாடலில் அவரை வைத்திருப்பதால் அவர் ஒரு சீர்குலைக்கும் இருப்பைக் கொண்டிருப்பாரா?
ஆமாம், ஆமாம், ஆனால் – அத்தரே ஒரு தீர்க்கதரிசி. அவர், ‘நான் விதையைத் தூவுகிறேன், எதிர்காலத்தில் ஒரு நாள், மக்கள் என்னைப் படிப்பார்கள்’ என்கிறார். முடிவுரையில்: ‘நான் இங்கு எப்போதும் இருக்கப் போவதில்லை, இருந்தாலும், நான் விதைத்தது இந்த உலகத்தில் காலவரையறையில்லாமல் தொடர்ந்து இருக்கும். காலம் முடியும் வரை நான் மக்களின் நாக்குகளில் இருப்பேன். என்னைப் பொருத்தவரையில், இந்த நினைவு போதுமானது. ஒன்பது கோளங்கள் வீழ்ச்சியடைந்தாலும் இந்த புத்தகத்திலிருந்து ஒரு புள்ளி கூட இழக்காது. சிறந்த தோட்டத்திலிருந்து ரோஜாக்களை உங்களுக்கு பரிசளித்திருக்கிறேன்.’
இந்தப் படைப்பு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான மக்களுக்கு மட்டுமல்ல என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அவருக்கு அது தெரியும். இது பனிரெண்டாம் நூற்றாண்டு ஈரானாக இருந்தாலும் கூட இன்றைக்கும் பொருத்தமானது. ஏனென்றால், இதைப் படிக்கும் போது இதற்கு முன்பாக நமக்கு இந்த மாதிரி ஒரு புத்தகம் எப்போதும் தேவைப்பட்டதாக உணர்ந்ததில்லை. ஈகோ அதிகமாகிக் கொண்டுவரும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஜனாதிபதியைப் பாருங்கள். சரிதானே? ஈகோ என்கிற அபாயம் பற்றிப் பேசுவதற்கு, அது எதைப் பிரநிதித்துவப்படுத்துகிறது, நம்மை அது என்ன செய்யும், அது நமக்கு கொண்டுவரக்கூடிய அபாயங்கள், அதை எப்படி விரட்டுகிறது. எப்படி அதைப் போகவிடுகிறது ஆகியவற்றிற்கு இந்த மாதிரியான ஒரு புத்தகம் தேவைப்படுகிறது.
நான் மூன்று ஆண்டுகள் இதை மொழிபெயர்க்க செலவிட்டாலும் கூட, எனக்கு அது குறித்த நினைவுகள் எதுவுமில்லை. நேர்மையாகத்தான் சொல்கிறேன். திரும்பவும் நான் செய்ய வேண்டுமென்றால், என்னால் அதைச் செய்ய முடியாது. அத்தருக்கு வந்த அதே உணர்ச்சி எனக்கும் சூழ்ந்த கணங்களில் இந்த நூல் வடிவம் பெற்றிருக்கிறது. அது என்னைச் சேர்ந்தது இல்லை. இந்தப் புத்தகம் அதுவாகவே தான் இருக்கிறது. எனவே, நான் இப்போது இதைப் படிக்கும் போது, அதற்காகவேதான் படிக்கிறேனே தவிர நான் செய்ததற்காக இல்லை. என்னைப் பொருத்தவரையில் இது புத்தம்புதியது.
***
தியோடர் மெக்கோம்ப்ஸ் எழுத்தாளர் மட்டுமல்லாது, டென்வரில் வழக்கறிஞராகவும் பணிபுரிகிறார். இவருடைய கதைகள், கட்டுரைகள், சட்டம் சம்பந்தப்பட்ட படைப்புகள் பல்வேறு பத்திரிகைகளில் இடம் பெற்றிருக்கின்றன.

மொழிபெயர்ப்பாளர் என்பவர் இரு கலாச்சாரங்களுக்கு இடையேயான பாலம் போன்றவர். சிறப்பு.