• சமந்தா ஹார்வே
  • தமிழில்: க. ரகுநாதன்

 

(2024 ஆம் ஆண்டின் புக்கர் விருது பெற்ற சமந்தா ஹார்வே எழுதிய Orbital நாவலின் முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

பூமியைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தங்களது விண்கலத்தினுள் மிக நெருங்கியும், மிகத் தனித்தும் இருந்த அவர்களது எண்ணங்களும் சில நேரங்களில் மனத்தினுள் தேங்கியிருக்கும் பழைய தொன்மக் கதைகளும் கூட ஒன்று கூடுகின்றன. விதவித வடிவங்களை, நீலக் கோளங்களை, இருளில் அமிழ்ந்திருக்கும் பரிட்சயமான  முகங்களை,  சட்டென புலன்களை அடைக்கும் விண்வெளியின் பொலிவான ஆற்றல் மிகு கருமையை… என அவர்கள்  அதே கனவுகளைக் கனவு காண்கிறார்கள். வெட்டவெளி என்பது ஒரு கைவிடப்பட்ட புராதன சிறுத்தை; அது தங்களது உறைவிடத்தில் பதுங்கி இருப்பதைப் போலக் கனவு கண்டனர்.

தங்களது துயில் பைகளில் அவர்கள் மிதந்து கொண்டிருந்தனர். கை நீட்டும் தூரத்தில் மெல்லிய உலோகத் தகட்டிற்கு அப்பால் முடிவின்மையில் விரிகிறது இப் பிரபஞ்சம். அவர்களது உறக்கம் விழிக்கத் தொடங்குகையில், தொலைதூர பூகோளத்தின் வைகறைகளும் அவர்களது மடிக் கணினிகளும் ஒரு புதிய நாளின் முதல் செய்தியை மௌனமாக மினுக்குகின்றன. எப்போதும் விழித்திருக்கும் விண்வெளி நிலையமோ விசிறிகள் மற்றும் வடிப்பிகளால் அதிர்கிறது. விண்கல உணவுக் கூடத்தில் முன் இரவு உணவின் எச்சங்களான, கழுவாத முள்கரண்டிகள் மேசையின் காந்தப் பிடியில் பாதுகாப்பாக ஒட்டியிருக்க, உண்குச்சிகள் சுவரின் சிறு பையில் செருகப்பட்டிருந்தன. சுழலும் காற்றில் நான்கு நீல பலூன்கள் மிதக்க, சில உலோகத்தாள் தோரணங்கள் ‘ஹேப்பி பர்த்டே’ எனச் சொன்னாலும் அன்று யாருடைய பிறந்த நாளும் இல்லை, ஏனெனில் அது மட்டுமே அங்கு அவர்களுக்குக் கொண்டாட்டம். அங்கிருந்த ஒரு கத்தரிக்கோலில் ஒட்டியிருந்த சாக்லேட் பிசுக்கு, மடக்கு மேசையின்  கைப்பிடிகளில் தொங்கும் ஒரு சரத்தில், சின்னஞ்சிறு நிலவுத் துண்டும் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தது.  
 
புவியின் விளிம்பில்லா விளிம்பு நோக்கி அவர்கள் உழன்று முன்னேறுகையில் வெளியே பொலியும் நிலவொளியில் பூமி பின்னோக்கிச் செல்கிறது; பசிபிக்கின் குறுக்கே படரும் மேகக் கொத்துகள், இரவுக்காலப் பெருங்கடலை கருநீலமாய் பிரகாசமாக்குகிறது. இப்பொழுது அங்கே, பற்றியெரியும் பொன்னாக தகதகக்கும் மேகமூட்டத்தின் கீழ் தென் அமெரிக்காவின் சாண்டியாகோ கடற்கரை நெருங்குகிறது. மேற்கு பசிபிக்கின் குறுக்கே வெம்மையான கடலின் மேல் வீசும் அயனக்காற்று வெப்ப இயந்திரம் போல ஒரு புயலை உருவாக்கி இருப்பது மூடிய கதவுகளினூடே கண்ணுக்குப் புலப்படவில்லை.  பெருங்கடலில் இருந்து வெம்மையைக் கடத்தும் காற்று, மேகங்களாக உருண்டு திரண்டு உயரமான கூண்டு போலாகி, செங்குத்தாகச் சுழன்று சூறாவளியாக மாறுகிறது. இந்தச் சூறாவளி தெற்கு ஆசியாவை நோக்கி மேற்காக நகரும் போது, கீழ் கிழக்கின் தொடுவானில் தொலைதூர துருவ ஒளி குவிமாடம் போல மூடியிருக்கும் படகோனியாவை நோக்கி அவர்களின் விண்கலம் விரைந்தோடுகிறது. பட்டு வானில் துப்பாக்கியால் சுட்டது போலப் புகைந்திடும் நீள்வழி இப் பால்வெளி.

விண்கலத்தின் உள்ளே, இன்று அக்டோபர் மாதத் தொடக்கத்தின் செவ்வாய்க்கிழமை காலை,  மணி நான்கு பதினைந்து. வெளியே, இதோ அர்ஜென்டினா, இதோ தென் அட்லாண்டிக், இதோ கேப்டவுன், இதோ ஜிம்பாப்வே. தன் வலது முகட்டின் மேலே உருகிய மெல்லொளிக் கீறலால் வைகறையைக் கிசுகிசுக்கிறது பூமி. அவர்களோ நேர மண்டலங்களின் வழியே மௌனமாய் நழுவிச் செல்கிறார்கள். அவர்கள் ஒரு வெடிப்பின் மூலம் வானில் ஏவப்பட்டு, எரியும் பொதியுறையின் இருபுறமும் சம எடை கொண்ட கறுப்பு தாங்குகலன்களைச் சுமந்தபடி வளிமண்டலத்தில் பறந்தனர்.  தாங்குகலன்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பின்னோக்கிப் பிரிந்து சென்று வானம் விண்வெளியாக மாறி,  ஈர்ப்புவிசை குறைந்து, தலைமுடி செங்குத்தாக நிற்பதை உணரும் வரை அவர்கள் தங்கள் விலா எலும்புக் கூடுகளை விசைக்கு எதிராக எஃகு போல இறுக்கமாக்கிக் கொண்டனர்.
 
பூமிக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய ஹெச் வடிவ (H) உலோகத்தில் அவர்கள் ஆறு பேர் இருந்தனர். தலைகீழாகத் திரும்பிய அந்த விண்வெளி வீரர்களில் நால்வர்  அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டிஷ், இத்தாலியையும் இருவர் ரஷ்யாவையும் சேர்ந்தவர்கள். இரு பெண்கள், நான்கு ஆண்கள், பதினேழாயிரம் இணைப்புத் தொகுதிகளால் ஆன ஒரு விண்வெளி நிலையம், மணிக்கு பதினேழாயிரத்து ஐநூறு மைல்கள் வேகம். பூமியின் கொல்லைப்புறத்தில் வழக்கமாகப் பயணிக்கும் ஏராளமான விண்வெளி வீரர்களில் அவர்கள் புதிதாக வந்த அறுவர் என்பதைத் தவிர தனிச்சிறப்பு  எதுவுமில்லை. பூமியின் அதிசயமிக்க அற்புதமான கொல்லைப்புறம். சடசடவென்ற ஒலியுடன் மெதுவாகச் சறுக்கி தலைகீழாகத் திரும்பி, வளைந்து, சுருண்டு என நாள் முழுவதும் வளைந்து திரும்புகின்றனர். நாட்கள் விரைந்து ஓடுகின்றன.

அவர்கள் ஒவ்வொருவரும் இங்கே ஒன்பது மாதங்களுக்கு மேல் இருப்பார்கள். இந்த எடையற்ற சறுக்கலின் ஒன்பது மாதங்கள், புடைத்த மண்டையின் ஒன்பது மாதங்கள், விலைமிக்க வாழ்வின் ஒன்பது மாதங்கள், பூமியை நோக்கிய இடைவெளியின் ஒன்பது மாதங்களுக்குப்  பிறகு கீழிருக்கும் தங்களது கிரகத்திற்குத் திரும்புவார்கள்.

அவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஏன் எங்கும் செல்லாமல் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்? என்று சில வேற்று கிரகவாசிகள் பார்த்தால் கேட்கக் கூடும். ஒவ்வொரு கேள்விக்கும் பூமி ஒன்றே பதில். பூமி ஒரு களிப்பு மிக்க காதலனின் முகம் போன்றது; அது துயில்வதையும் விழிப்பதையும் பார்த்து அதன் முடிவிலியற்ற இயக்கத்தில் தங்களை இழப்பார்கள். தன் குழந்தைகள் வீடு திரும்புவதற்காக ஏராளமான கதைகளோடும் குதூகலத்தோடும் ஏக்கத்தோடும் காத்திருக்கும் தாய் தான் பூமி. அவர்களது எலும்புகள் கொஞ்சம் அடர்த்தி குறைவாகவும் கைகால்கள் கொஞ்சம் மெலிதாகவும் இருக்கும். சொல்லக் கடினமான காட்சிகள் அவர்களின் கண்களில் நிறைந்திருக்கும்.

***