நேற்று தமிழி இதழில் வெளிவந்த ஜப்பானிய செவ்வியல் படைப்பாளியான கெஞ்சி மியாசாவா வின் புகழ்பெற்ற ” நமிடோகோவின் கரடிகள்” என்னும் சிறுகதையை ரீமிக்ஸ் செய்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார் தற்கால ஜப்பானிய நவீன எழுத்தாளர் ஹிடியோ ஃபுருகாவா.
வாசகர்கள் முதலில் ” நமிடோகோவின் கரடிகள்” கதையைப் படித்துவிட்டு இந்தக் கதையைப் படியுங்கள். இந்த எழுத்தாளர் ஹிடியோ ஃபுருகாவா, ரீமிக்ஸ் என்னும் எழுத்து பாணியை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இவரது ரீமிக்ஸ் பாணியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நாவல் Slow Boat . இந்த நாவல் ஹாருகி முரகாமியின் ‘ “A Slow Boat to China” சிறுகதையின் ரீமிக்ஸ் என்று ஆசிரியர் இதை விவரிக்கிறார்.
இந்த ரீமிக்ஸ் பாணி அதன் கதை சொல்லல் உத்தி குறித்து நாளை வெளிவரும் என் ஆய்வுக் கட்டுரையில் இவை குறித்தெல்லாம் விரிவாக எழுதியுள்ளேன்.
– ஆசிரியர், தமிழி.
- ஹிடியோ ஃபுருகாவா
-
ஆங்கிலத்தில் : மைக்கேல் எம்மெரிச்
-
தமிழில் : நன்மாறன் திருநாவுக்கரசு
அவருக்குக் கரடிகளின் மொழி புரிய ஆரம்பித்தது.
ஒரு தாய்க் கரடி குட்டியுடன் பேசும் உரையாடல்கள். அந்தக் குட்டி பிறந்தநாளைப் பார்த்திருக்கலாம், பார்க்காமலும் இருக்கலாம்.
தாயும் குட்டியும் மங்கிய ஜூன் மாத நிலவொளியில் நனைந்தபடி, தொலைவிலுள்ள பள்ளதாக்கின் சரிவை நோக்கிக்கொண்டிருந்தன.
‘அது பனியாகத்தான் இருக்க வேண்டும்’ குட்டிக் கரடி மதிமயக்கும் குரலில் சொன்னது.
‘அப்படியா நினைக்கிறாய்?’
‘நிச்சயமாக’ குட்டி தொடர்ந்தது. ‘ஒரு பக்கம் மட்டும் வெண்மையாய் இருக்கிறது. அது பனியாகத்தான் இருக்க வேண்டும் அம்மா.’
‘ஒருபக்கம் மட்டும் ’ பனி விழும் என நினைக்கிறாயா?’
‘இல்லை. ஆனால்…’
‘ஆனால் என்ன?’
‘அது இன்னும் உருகவில்லை என நினைக்கிறேன்’
‘நீ சொல்வது தவறு’
‘ஏன்?’
‘நான் நேற்றுதான் நெருஞ்சி மொட்டுகளைத் தேடி அங்கு சென்றேன்’
தாய்க் கரடியின் பதிலைக் கேட்டு கோஜுரோ தீர்க்கமாக அதே திசையை நோக்கினார். நிலவின் ஒளி மலைசரிவில் வழுக்கியிறங்கி வெள்ளிக் கவசம் போல் மின்னியது.
சிறிது நேரம் கழித்து குட்டி மீண்டும் பேசியது. ’பனி இல்லை என்றால் உறைபனியாக இருக்க வேண்டும். நான் உறுதியாகச் சொல்வேன்’
இருவரின் உரையாடலையும் கேட்டு கோஜுரோவின் இதயம் நிரம்பியது. அவரால் இனியும் கரடிகளை வேட்டையாட முடியாது. இப்போதைய உணர்வு நிலையில்.
வார்த்தைகள் வெளிவந்தன கரடியிடம் இருந்தும் – அதேபோல ரத்தமும் வெளிவரும்.
உணர்வுகள் ததும்பின. இருப்பினும் அவற்றை வேறு சமயத்திற்கு வைத்துக் கொள்கிறேன். மற்றொரு வார்த்தை முதலில் வந்தது. வார்த்தையல்ல, அதைப் பயன்படுத்தியவர் வந்தார். எதற்காக கோஜுரோ கரடிகளை வேட்டையாடினார்? ஃபுச்சிசாவா கோஜுரோ கரடிகளைக் கொல்வதில் நிபுணர். எல்லோருக்கும் இது தெரியும்.
ஆனால் எதற்காக அவர் வேட்டையனாக வாழ வேண்டும் – கரடி வேட்டையனாக? ஏனென்றால் அவருக்கு பணம் தேவை. கிடைக்கும் சொற்பப் பணம்தான் அவர் சாப்பிடும் உணவைப் பெற்றுத் தருகிறது.
அவரது நாற்பதாவது வயதில் கோடை காலம் ஒன்றில் தனது மகனையும் மருமகளையும் வயிற்றுப் போக்கால் இழந்தார். தொண்ணூறு வயதை நெருங்கும் அவரது தாயையும், ஐந்து பேரக் குழந்தைகளையும், நாயையும் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. மஞ்சள்நிற வேட்டைநாய்தான் அவரது வேட்டைக் கூட்டாளி. அதனால்தான் அவர் கரடிகளை வேட்டையாடுகிறார்.
அவர் நமிடோகோ சிகரத்தின் கரடிகளை வேட்டையாடினார்.
கோஜுரோ மலைகளில் இருந்து கஷ்கொட்டைகளைச் சேகரித்தார். நிலத்தில் இருந்து வரகு அறுவடை செய்தார். ஆனால் அவை மட்டுமே. அங்கே அரிசி வளராது. துளியும் வளராது. சோயாபீன் பசையும் அவர்களிடம் இல்லை. அதனால்தான் அவருக்கு பணம் தேவையாக இருக்கிறது. அரசி, சோயாபீன் பசை, வேறு அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சிறிது தொகை. அதனால்தான் நமிடோகோ கரடிகள் வேட்டையாடப்படுகின்றன. ஃபுச்சிசாவா கோஜுரோதான் அவற்றை வேட்டையாடுகிறார்.
கோஜுரோ நாயுடன் மலைகள் ஏறிச் செல்வார். வேட்டைக் கத்தியை எடுத்துச் செல்வார். போர்த்துக்களில் இருந்து வாங்கிய துப்பாக்கியையும் கொண்டு வருவார். கோஜுரோவுக்கு வாய் இருந்தது. கரடிகளுக்கும்தான். வாய்தான் பிரச்னை. வார்த்தைகள் வாயின் வழியாகவே வருகின்றன. வாய் வழியாகவே உணவு செல்கிறது. அவைதான் பிரச்னை. கோஜுரோவும் அவரது குடும்பமும் வாயால்தான் வாடுகிறார்கள். கரடிகள் கோஜுரோ குறித்த அன்பை வெளிப்படுத்தவும் வாய்கள்தான் உதவுகின்றன. வார்த்தையால் வாழும், வார்த்தையால் மட்டும் வாழும் மக்களின் ஊர்கள் வாயால்தான் நிரம்பி இருக்கின்றன.
நான் கோஜுரோ கிடையாது. நான் கெஞ்ஜி. ஆனால் நான் கோஜுரோ பற்றி எழுதுகிறேன். புகழ்பெற்ற கரடி வேட்டையனின் கதையை விவரிக்க நான் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டும் பாருங்கள். ஆனால், எனக்குத் தேவையான அதே வார்த்தைகள் கோஜுரோவைக் காயப்படுத்துகின்றன. எனக்கு வேறு வழியில்லை: ஊரின் நடுவில் உள்ள இரும்புக் கடை முதலாளியிடம் அவர் மேற்கொள்ளும் உரையாடல்களை நான் எழுதித்தான் ஆக வேண்டும். (சொல்லப்போனால், நான்தான் அந்த முதலாளியின் மகன்). அவர்களுக்கு இடையேயான சம்பாஷனையை நான் பிரதியெடுக்கவில்லை என்றால் நான் ஒரு கோழை.
‘அன்றைக்கு உதவியதற்கு நன்றி ஐயா’ உள்ளே நுழைந்தபடியே கோஜுரோ சொன்னார்.
‘மகிழ்ச்சி’ கடைக்காரர் பதிலளித்தார். அதாவது என் தந்தை. ‘இன்றைக்கு என்ன வேண்டும்?’
‘சில கரடித் தோல்களைக் கொண்டு வந்துள்ளேன்’
‘கரடித் தோல்களா?’
‘உங்களுக்கு வாங்க விருப்பம்தானே?’
‘இல்லை, என்னால் முடியாது’
‘நான் மலிவாக நீங்கள் வாங்கும் விலைக்குத் தருகிறேன்’
‘அப்போதும்கூட’ என் தந்தை அமைதியாக புகைக்குழாயை பாதத்தில் தட்டினார். அவர் அமர்ந்திருக்கும் கனல் அடுப்பின் அருகில் இருந்து எழக் கூட முயற்சிக்கவில்லை. ‘கோஜுரோ, நான் கடைசி முறை வாங்கியதே இன்னும் மிச்சம் இருக்கிறது’
‘உங்களால் என்ன முடியுதோ கொடுங்கள். உண்மையாக, எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரி’
என் தந்தை அநியாய விலை ஒன்றை தோல்களுக்காக வழங்கினார். அது எந்த அளவுக்கு அபத்தமோ அந்த அளவு கோஜுரோ உற்சாகத்தில் திளைத்தார். நான்கு பெரிய வெள்ளிக்காசுகள் அவரை மகிழ்ச்சி கொள்ள வைத்தன. கோஜுரோவின் உற்சாகத்தைப் பார்த்து என் தந்தையும் உற்சாகம் கொண்டார். ஒரு குடுவை சாகேவை கோஜுரோவுக்காக எடுத்து வந்தார்.
அத்துடன் உப்பிட்ட சாலமன் துண்டுகளையும், ஊறவைத்த கணவாயையும் கொடுத்தார். கோஜுரோ மேலும் மேலும் மகிழ்ச்சியுற்றார்.
நான் என்ன செய்திருக்க வேண்டும்?
எதுவும் பண்ணியிருக்க முடியாது என்பதைத் தான் என்னால் சொல்ல முடியும். காரணம், கோஜுரோவுக்கு வாய் இருந்தது. அதற்குப் பசித்தது.
உண்மையில் கோஜுரோ மகிழவில்லை. குறிப்பாக மலைகளில்.
ரத்தத்தைக் கொப்பளிக்கும் வாய் குறித்தும் எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த வாய் கரடிக்குச் சொந்தமானது. நிச்சயமாக கரடியின் வாய், ரத்தத்தை மட்டும் வெளியேற்றாது. வார்த்தைகளையும் வெளியேற்றும். ஒரு கோடைக்காலத்தில் கோஜுரோ கரடி ஒன்று மரம் ஏறுவதைப் பார்த்தார். உடனடியாக கோஜுரோவின் துப்பாக்கி முனைக்கு ஆளானது கரடி. நாய் அந்த மரத்தை சுற்றியபடியே பாய்ந்தது. அதனால் கரடி தரையில் குதித்தது. பாதங்களை மேலே உயர்த்தி கோஜுரோவை நோக்கிக் கத்தியது.
‘எதற்காக என்னைக் கொல்ல விரும்புகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?’
‘உனது தோலும், ஈரலும் மட்டும்தான். வேறு எதுவும் வேண்டாம்.’
‘உனக்கு அத்தனை தேவையாக இருக்கிறதா?’
‘உண்மையில் எனக்குத் தேவையில்லை’
‘நீ சொல்வது புரியவில்லை’
’நான் கரடிகளின் தோல்களையும் ஈரலையும் எடுத்துச் சென்று மருத்தாக விற்கிறேன். கொஞ்சம் சில்லறை ஈட்டுகிறேன். அதிலும் நான் விரும்பும் தொகைகிடைப்பதில்லை. உண்மையில் உனக்காக வருந்துகிறேன். ஒவ்வொரு கணமும் கொடூரமாக உணர்கிறேன். நான் உன்னை விட்டுவிடலாம். கஷ்கொட்டைகளையும் விதைகளையும் நான் சாப்பிடலாம். அப்படி செய்தால் நான் இறந்துவிடுவேன். ஆனாலும் பரவாயில்லை’
‘இரண்டு வருடங்கள் காத்திரு’
‘இரண்டு வருடங்களா?’
‘எனக்கு முடிக்கவேண்டிய ஒரு வேலை இருக்கிறது. எனக்கு ஓர் உதவி செய். இரண்டு ஆண்டுகள் காத்திரு, அதை மட்டும்தான் நான் வேண்டுகிறேன். இன்றைக்கு இருந்து இரண்டு வருடங்கள், நான் உன் வீட்டு வெளியில் இறந்து கிடப்பேன். நீ என் தோலையும், உள்ளுறுப்புகளையும் எடுத்துக் கொள்ளலாம். எதையும் எடுத்துக்கொள்ளலாம்’
இந்த வார்த்தைகள்தான் கரடியின் வாயில் இருந்து வந்தது.
கோஜுரோ அங்கேயே சிந்தனையில் ஆழ்ந்தார். குழம்பினார்.
கரடி பின்வாங்கியது.
பின்னால் நடந்து சென்றது. திரும்பிக்கூட பார்க்கவில்லை. உறுதியாக இருந்தது. கோஜுரோ சுடவில்லை. அவரது நாய் குலைக்கவில்லை.
ஆம், நாய்கூட அமைதியாக இருந்தது.
இரண்டு ஆண்டுகள் கழித்து கரடி கோஜுரோவின் வீட்டிற்கு வந்தது எனச் சொல்லத் தேவையில்லை. அதிகாலையில் அது இறந்து கிடந்ததைக் கண்டனர். தரையில் விழுந்து வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. கோஜுரோ கரடிக்காகப் பிரார்த்தித்தார். பெளத்த தெய்வத்திடம், ஷிண்டோ கடவுளிடம் பிரார்த்திப்பதுபோல வேண்டினார்.
இருந்தும் அவர் குறுகிய கத்தியை எடுத்து கரடியின் இறந்த சடலத்தில் இருந்து தோலை உரித்தார். தாடையில் இருந்து நெஞ்சுக்குச் சென்று, அங்கிருந்து வயிறு வரை நீக்கினார். ஈரலை வெட்டியெடுத்தார். கழுவினார். உலர வைத்தார். மற்றவற்றைத் தூக்கி எறிந்தார்.
இதுபோன்ற விஷயங்களை எழுதுவது எனக்குப் பிடிக்காது.
மீண்டும் அந்தக் கடைக்காரர் தோலை வாங்கிக்கொண்டார் – இந்த சிறப்பு வாய்ந்த தோலையும் அற்பச் சில்லறைக்கு.
இதையும் எழுதுவதற்கு வலிக்கிறது.
அதனால் நான் கோஜுரோவுக்கு இறுதியாக என்ன நடந்தது என்பதை எழுதுகிறேன். இறுதி நிமிடம் வரை எழுதுகிறேன்.
ஒருநாள் காலை. கோஜுரோ ஷிரசாவா கரையின் மேல் ஏறினார். ஐந்து நதிக் கிளைகளைக் கடந்தார். ஒரு நீர்வீழ்ச்சியை அடைந்து அங்கிருந்து நகனே நோக்கி முன்னேறினார். நதிக்கரைகளைத் தாவிக் குதித்தபடி நாயும் அவருடன் வந்தது. பிரகாசிக்கும் பனி சூழ்ந்த மலையின் உச்சியை அடைந்தவுடன் நாய் திடீரெனக் குரைக்க ஆரம்பித்தது. நெருப்பு பற்றியதுபோலக் குரைத்தது. ஒரு மாபெரும் கரடி அதன் எஜமானைத் தாக்கியது. கோஜுரோவின் முகம் வெளிறியது. அவர் துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதில் உறுதியாக இருந்தார். ஆனால் கரடி அசையாமல் நின்றது.
கரடி, கோஜுரோவின் தலையைச் சுழற்ற அவர் கீழே விழுந்தார்.
கரடி சொன்னது: ‘ஓ கோஜுரோ, நான் உன்னைக் கொல்லத் திட்டமிட்டு வரவில்லை’
இந்த வார்த்தைகள்தான் கரடியின் வாயில் இருந்து வந்தன.
கோஜுரோவால் பதிலளிக்கமுடியவில்லை.
கோஜுரோ குருதியைத் துப்பினார். அவரது வாயில் குருதி நிரம்பியது.
கோஜுரோ கடைசி முறையாக தான் உணவருந்திவிட்டதாக நினைத்து
ஒருவகை சங்கிலி நொறுங்கியது. கோஜுரோ, கரடிகள், ஊர் மக்களைப் பிணைத்துள்ள ஏதோ ஒன்று உடைந்தது. நியாயமாக முடிவுறக்கூடாத ஒன்று முடிவுற்றது. இறுதியாக கோஜுரோ உணர்ந்து கொண்டார். உண்மை என்னவென்றால் நமிடோகோ சிகரத்தில் இருந்த கரடிகள் தன்னை எப்போதும் விரும்பியுள்ளன.
இந்தத் தெளிவு வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார்.
ஆனால் அது உண்மையான முடிவல்ல. மூன்றுநாள் கழித்து ஒரு மாலையில் பனிப் பந்தைப்போல நிலவு வானில் தொங்கியது. பனி வெண்நீல நிறத்தில் ஜொலித்தது. மலையின் உச்சியில் சரிவுகள் இல்லாத வெளியில் எண்ணிடலங்கா பெரும் கறுப்பு உருவங்கள் கூடின. நிறையவே இருந்தன. நிறைய. அவை வளையமாக உருமாறின. கோஜுரோவின் உடலைச் சுற்றி வட்டமிட்டன.
அந்தக் பெரும் கருப்பு உருவங்கள் பனியில் வணங்கி நின்றன. கொஞ்சம்கூட அசையாமல்.
மைக்கேல் எம்மெரிச் (Michael Emmerich) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். டோக்கியோவில் உள்ள ரிட்சுமெய்கன் பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய இலக்கியப் படிப்பில் ஆராய்ச்சியை முடித்த பிறகு, அவர் முனைவர் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய இலக்கியத்தில் படைப்புக் கல்வி பயின்றவர். அவர் 2013 இல் UCLA இல் சேருவதற்கு முன்பு UC சான்டா பார்பராவில் கிழக்கு ஆசிய மொழிகள் மற்றும் கலாச்சார ஆய்வுகள் பிரிவில் உறுப்பினராக இருந்தார். ஆரம்பகால நவீன மற்றும் சமகால ஜப்பானிய இலக்கியம் பற்றிய ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் அவரது பல படைப்புகள் வெளிவந்துள்ளன. யசுனாரி கவாபட்டா, பனானா யோஷிமோட்டோ, தகாஹாஷி போன்ற பல ஜப்பானிய செவ்வியல் இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளை மொழியாக்கம் செய்துள்ளார்.
தற்போது, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் கலாச்சாரத் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார்.
