• ஆண்ட்ரூஸ் நியூமன்
  • ஆங்கிலத்தில்: ஜார்ஜ் ஹென்ஸன்
  • தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

 

என் தந்தை மருத்துவமனையில் இருந்த பொழுது, மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் என் காரை நிறுத்துவது உசிதமாகப் பட்டது. நுழைவாயிலின் சிறிய பள்ளத்தின் மேற்புறத்திலிருந்து, என் வெண்மைநிற ஓப்பல் காரைச் சரிவுப் பாதையில் இறக்கினேன். முடுக்கத்தை மெதுவாகக் குறைத்து, உணவகத்தின் கீழ், நிறுத்துவதற்குச் சரியான இடத்தைத் தேடினேன். எனக்கு எப்பொழுதும் ஒரு இடம் கிடைத்து விடுகிறது.

ஐந்தாவது மாடியை அடையும் வரை, இதுவரை நான் உணர்ந்திராத மயான அமைதியில் மயங்கியபடி, பூதாகரமான உயரத்தூக்கிகளில் பிதுங்கியபடி, மிகவும் சுத்தமான காற்றை – திண்மையான பிசின் வாசனை கொண்ட, மாய உலகம் போன்ற, கிருமிநாசினியான – காற்றைச் சுவாசித்தபடி மருத்துவமனைக்குச் செல்வதை நான் வெறுத்தேன். நோயாளிகளின் படுக்கைகளுக்கு மத்தியில், சுரங்க வயல்களுக்கு மத்தியில் போல நடக்கும் பொழுது – என்னைத் தொட்டு விடாதே, மரணம் என்னைத் தொட்டுவிடச் செய்து விடாதே – பிறகு, ஹலோ டாட், எப்படி இருக்கிறீர்கள், எல்லாம் சரிதானே? என்பதில் சற்று ஆசுவாசம் கொள்ளலாம். மருத்துவமனைக்குச் செல்வதை நான் வெறுக்கிறேன். ஆனால் வாகன நிறுத்துமிடத்தில் சரிவாக இறங்குவதையும், என் வெண்மைநிற ஓப்பலை மெதுவாக ஓட்டுவதையும் நான் விரும்பினேன். கருங்காரைத் தரையில் நீந்துவது ஒரு புதுமையான அமைதி உணர்வைத் தருகிறது. காரின் முகப்பு விளக்குகளை ஒளிர விடும் பொழுது, சாம்பல் நிற, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற உட்சுவர்களின், தூண்களின் சமச்சீர்மை அனைத்துப் பாதுகாப்பு விதிகளுடனும், கனவுலக அமைதியுடனும் (சப்தங்களைக் கனவு காண முடியுமா?) ஒரு நம்பகமான உலகமாக மாறுகிறது.

அதிர்ஷ்டவசமாக, சில வாரங்களுக்குப் பிறகு என் தந்தையின் உடல்நிலை சற்று தேறியது. எனவே நானும் என் குடும்பத்தாரும் ஒவ்வொருவராக அவரைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டோம். அதனால் அனைவருக்கும் சற்று ஓய்வு கிடைத்தது. நாங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தோம் என்பதையும், நேரம் மிக விரைவாகச் சென்றதையும் நான் கவனித்தேன். எனினும், மருத்துவமனையின் கீழ்த்தள வாகன நிறுத்துமிடத்தின் மீது எனக்கிருந்த ஒரு குறிப்பிட்ட ஏக்கத்தையும் உணர்ந்தேன். இந்த உணர்வின் பேசப்படாத தன்மை என் வழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்வதிலிருந்து என்னைத் தடுத்தது. ஆனால் அந்தத் தருணமும் வந்தது. நான் அங்கு செல்லாத நாட்களில், எதிர்கொள்ளச் சாத்தியமற்ற ஒரு புதிய வருத்தத்தை உணரத் தொடங்கினேன்: அபத்தமான வருத்தம், அபத்தம் நிஜமானது என்று உணரும் பொழுது. மேலும் அடிக்கடி, என் விடுமுறை நாட்களில் அந்த மருத்துவமனைக்குச் செல்கிறேன். என் தியாக உணர்வை என் குடும்பத்தினர் முடிவின்றி மெச்சித் தீர்த்தார்கள். என் தந்தைக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் பொந்தில் அகப்பட்ட விலங்கு போல் உணர்ந்தேன்.

ஏப்ரலில் ஒரு நாள் காலையில் என் தந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டில் அவருடைய தேறிய உடல்நிலை அவருக்கு நிம்மதி அளித்தது, மற்றவர்களை அதிகமாகச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஒரு நல்ல மனநிலையில், மகிழ்ச்சியாக அவர் எங்களைச் சுற்றி வந்ததைக் கண்டு நான் மிகவும் உற்சாகமடைந்தேன். அதே சமயத்தில், எனக்குள் ஏதோ ஒரு இன்மை உணர்வு இருப்பதாக உணர்ந்தேன். பயனற்ற மனப்போராட்டங்களுக்குப் பிறகு, அந்த வாகன நிறுத்துமிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தேன். முதலில் நான் அதை நகரின் மையப்பகுதியில் உள்ள சில வாகன நிறுத்துமிடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் இது அவ்வாறானதல்ல என்பதை உடனடியாகப் புரிந்து கொண்டேன்: வளைவுகள், சுழல் பாதைகள், படிக்கட்டுகள் அனைத்தும் முற்றிலும் எனக்கு வித்தியாசமாகத் தோன்றின. மருத்துவமனையின் சாம்பல் நிற, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப் பாதைவழிகளுக்காக நான் ஏங்கினேன். அங்கு நான் பாதுகாப்பாக இருப்பதாகவும், நான் அவற்றின் கட்டிட நிபுணர் போல இருப்பதாகவும் உணர்வதை அறிந்தேன்.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என் காரை அங்கு நிறுத்தினேன். காரை விட்டு இறங்கியவுடன், நுழைவாயில் நோக்கி நடந்து, வெளிப்பகுதியில் தோன்றுமாறு ஒரு உண்மையான பிரயத்தனத்தை உருவாக்குவதற்கான ஒரு கிளர்ச்சிமிக்க உறைநிலை என்னைத் தூண்டும். அது பெரும்பாலும் கோடைகாலமாக இருந்தது. உடனே நான் அந்த மருத்துவமனையின் கீழ்த்தள வாகன நிறுத்துமிடத்தில், என் ஓப்பல் இருக்கையில் சாய்ந்தபடி, வானொலி கேட்டுக் கொண்டு அந்தப் பொழுதுகளைச் சிறப்பானவையாகக் கழிக்கத் தொடங்கினேன். அங்கு கொஞ்சம் கதகதப்பாக இருந்தது. நோயாளிகளின் அருகில் இருப்பது நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதை நினைவூட்ட உதவியது, மேலும் நான் அங்கிருந்து விரும்பும் பொழுது வெளியில் செல்ல முடியும்.

என்னால் நீண்ட காலம் என் மாய வசிப்பிடத்தை அனுபவிக்க முடியவில்லை. ஜுன் 22-ல் எனக்கு நினைவு தப்பி சரிந்து விழுந்தேன். அன்றிலிருந்து நான் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தேன். மற்ற நிகழ்வுகளுக்கு இடையில் அச்சம் பிற தொடர் விளைவுகளை அறிந்திருக்கவில்லை. ஏனெனில் நான் தரையில் சரிந்து விழுந்ததை ஒரு நல்ல மனிதர் கண்ணுற்ற பொழுது, ஆம்புலன்ஸ் மட்டும் அந்தச் சரிவுப் பாதையில் வந்து, என்னைச் சுமந்து கொண்டு திரும்பவும் அந்தச் சரிவுப் பாதையில் சென்று என்னை மருத்துவமனையில் சேர்த்தது நினைவில் இருக்கிறது. இங்கு இருப்பதில் மிக மோசமானது என்னவென்றால், வெப்பமும் அசெளகரியமான படுக்கைகளும். நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள். ஒரு நர்ஸ் அங்கு இருந்தார், அவர் பெயர் ரோஸா என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவளுக்கு ஒரு ஆண் நண்பன் இருந்தான். எப்பொழுதும் மருத்துவமனைத் தெருவோரக் கம்பிகளில் அவளுக்காகக் காத்திருப்பான்.

இன்று எப்பொழுதும் விட வெப்பம் அதிகமாக இருக்கிறது. என் படுக்கை விரிப்புகள் நனைந்து விட்டன. இன்று அல்லது நாளை நான் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் உறுதியளித்துச் சென்றார்கள். என் தந்தை மற்றவர்களைவிட அதிக முறை என்ன வந்து சந்தித்துச் செல்கிறார், என்மீது அதிக பாசத்துடன் இருக்கிறார். காலை உணவு நேரத்தில் வந்து, மதிய உணவுக்குப் பிறகு சென்று விடுகிறார். சில சமயங்களில் இரவு உணவுக்குப் பிறகு செல்கிறார். இன்றிரவு அவர் வருவதாக உறுதியளித்திருக்கிறார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். விடைபெறுவதற்கு முன் அவர் கூறினார்: இரவு எட்டு மணிக்கு வருவேன் என நினைக்கிறேன். அதனால் ஒன்றும் வருத்தமில்லை, மகனே, கவலைப்படாதே. காரில் வருவதற்கு அவ்வளவு நேரம் பிடிக்காது. மேலும், மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்துவதற்கு எப்பொழுதும் ஒரு இடம் கிடைத்து விடுகிறது. இங்கு காரை நிறுத்துவது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதை நீ கவனித்தாயா?

***

ஆன்ரூஸ் நியூமன் (1977, ப்யூனஸ் அயர்ஸ்) நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர் மற்றும் கோட்பாட்டாளர். அவருடைய Microrréplicas வலைப்பூவில் எழுதி வருகிறார். El Cultural சர்வேபடி, இந்த வலைப்பூ ஸ்பானிய சிறந்த இலக்கிய வலைப்பூக்களில் ஒன்று. அவருடைய நான்காவது நாவல் El viajero del siglo 2009 Alfaguara விருதையும் ஸ்பானிய இலக்கிய விமர்சகர் அமைப்பால் வழங்கப்படும் தேசிய விமர்சகர் விருதையும் வென்றுள்ளது. El País மற்றும் El Mundo விமர்சகர்கள் அந்த நாவலை ஸ்பானிய மொழியின் ஐந்து சிறந்த நாவல்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டின் பயணியாக அது ஆங்கிலத்தில் கிடைக்கிறது.