- சேக்கிழார் கார்மேகம்
அதிகாலை சரியாக ஐந்து முப்பது மணிக்கு கிளம்பி திருச்சி ரோடு வழியாக, விடியக் கருக்களில் ஆர்.எஸ்.மங்கலம் ஐயங்கார் பேக்கரி முன்பாக கார் நின்றது, ஐயா, கிளம்புவோமா? என்று குரல் கொடுத்தபடி காரின் பின் இருக்கையில் ஏறிக் கொண்டார் மீரான்பாய், மூன்று மாதத்திற்கு முன்பாக திட்டமிட்ட பயணம் நாலஞ்சு முறை திட்டமிட்டுக் கடைசியில் போக முடியாமல் நின்றிருக்கு, காரியத்தடை தொடர்ந்த நாட்கள், இப்பொழுது அப்படி ஏதாவது நடந்து விடுமோ? என்கிற பதட்டத்தில்தான், இருவரும் காரை எங்கும் நிறுத்தாமல் கல்லல் நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
சூரியன் பழுத்து வெயில் தலை காட்ட ஆரம்பித்த பொழுது கல்லல் தெப்பக்குளம் வளைவு வந்துவிட்டது. இன்னும் இரண்டு கிலோமீட்டர் தான் பாத பூசாரி மெய்கண்டர் வீடு வந்து விடும், ஐயா, கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க.. எனக்குப் பாதை குழப்பமாக இருக்கிறது, கேட்டு விட்டு பிறகு செல்வோம் என்று ஆளரவமற்ற தெப்பக்குள சாலை வளைவில் காரை நிறுத்தியபடி வழி கேட்க ஆள் தேடிக் கொண்டிருந்தார் மீரான்பாய்.
நேராகப் போய் முதல் வளைவில் இடது பக்கமாக திரும்புங்கள், பிறகு நான்கைந்து கடை தள்ளி மீண்டும் இடது பக்கமாகச் செல்லுங்கள். அங்கு ஒரு ரைஸ்மில் இருக்கும், அதன் பக்கத்தில் மண் சாலை ஒன்று செல்லும். அந்தச் சாலையில் எங்கும் திரும்பாமல் நேராகப் போனால் வலதுபக்கம் ஒரு பாதை இருக்கும், வலது பக்கம் போகக்கூடாது, இடது பக்கம் மட்டுமே செல்ல வேண்டும், என்று கூறிவிட்டு இடப் பக்கம் செல்லும் பாதை நேர் பாதை என்றும், வலது பக்கம் சுத்திச் சுத்தி போகும் பாதை, நன்றாக இருக்காது சொல்லிவிட்டு டிவிஎஸ் எக்ஸெல் பைக்கைத் திருகி வேகமாகச் சென்றார்.
சொன்னபடி மண் சாலையில் கார் இறங்கியது, நாம் வேகமாக வந்து விட்டோம், அனேகமாக முதல் ஆள் நாமளாத்தான் இருப்போம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பாதையில் தடம் புதியதாக இல்லை, என்று பேசிக்கொண்டே வந்தார் மீரான் பாய், கார் வளைவில் திரும்பியதும் இரண்டு பாதை பிரிந்தது குழப்பம் அடையாமல் இடது பக்கம் காரை செலுத்தி மீண்டும் வேகம் எடுத்தால், அகண்ட கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில், வாகனங்கள், பைக்குகள், சைக்கிள், ஆட்டோ, டிராக்டர், குட்டியானை, ஸ்கூட்டி, மினி பஸ், ஷேர் ஆட்டோ எல்லாம் எக்கச்சக்கமாக நின்று கொண்டிருந்தன..
பாதபூசாரி மெய்கண்டர் வீடு தென்னை மர உயரத்தில் எழும்பி நின்றது, வீட்டின் கேட் திறக்கப்படாமல் இருந்தது, கேட்டைத் திறந்தால் எல்லோரும் வீட்டிற்குள் விழுவதைத் தவிர வேறு வழி இல்லை. நின்றவர்கள் நெருக்கி தள்ளி கொண்டு கதவு திறப்பதற்கான தருணங்களை நோக்கிக் கொண்டிருந்தனர், உள்ளே போனதும் அவராக அழைக்க போகிறார் ஏன்? இப்படி நிற்கிறீர்கள்? என்று ஒரு பெண்மணி எல்லோரிடமும் சலிப்புடன் சொல்லிக் கொண்டே இருந்தாள், அவள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல விரும்பாதவளாக இருப்பது மீரான்பாய் எனக்கும் ஆறுதலாக இருந்தது,
ஊதுபத்தி வெற்றிலை வாங்கிக் கொள்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம் “கடை திறந்து விட்டது” என்று ஒரு குரல் கேட்டது திரும்பிப் பார்த்தால், ஒரு நடுத்தரப் பெண் மரடேபிள் ஒன்றைப் போட்டு ஓலைப் பெட்டியில் வெற்றிலைகளைக் காகிதத்தில் சுருட்டி வைத்திருந்தாள். அதற்குள் இரண்டு ஊதுபத்தி சொருகப்பட்டு இருந்தது, ஒருபை இருபது ரூபாய், பக்கத்தில் சாப்பாட்டுக்கடை இன்னொரு டேபிளில் தொடங்கப்பட்டது, ”சாமி எப்போது வேண்டும் என்றாலும் அழைக்கலாம்” அதனால் சாப்பிடுகிறவர்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், வெளியில் போய்ச் சாப்பிட்டால் சாமி கூப்பிடுகிற பொழுது நீங்கள் வரமுடியாது,அவருக்குக் கோபம் வரும், அடுத்து உங்களை எப்போதுமே கூப்பிட மாட்டார் என்று மிரட்டலான தொனியில் அப்பெண் கூறியதும் எல்லோரும் இட்லி கடை பக்கம் திரும்பினார்கள், அத்தனை பேரும் நான்கு இட்லி, ஒரு வடை என்கிற கணக்கில் அதையும் பார்சலாக வாங்கிக் கொண்டார்கள்.
எதிர் புறமாக கண்மாயின் கரை அதன் வரிசையாகப் புளிய மரங்கள் நின்றிருந்தது கரைமுழுதும், நிறைய புளியம்பூக்கள் உதிர்ந்து மஞ்சள் நிறத்தில் கரம்பை மண்ணில் புதிய வண்ணங்களைப் பரப்பியபடி இருந்தது, கைக்குழந்தையை மடியில் போட்டு காலை அகட்டியபடி தொட்டிலாகப் பயன்படுத்தி காலை மட்டும் ஆட்டியபடி குழந்தையை உறங்க வைத்துக் கொண்டு இருந்தாள்.அவள் கணவர் அவளுக்கு நாலு இட்லி, ஒரு வடை. தட்டில் வாங்கிக் கொண்டு போனார். அந்தப் பெண் இதோடு “மூன்றுமுறை“ வருவதாகவும், சாமி இதுவரை, அப்பெண்னின் பெயர் எழுதவில்லை என்றும், வந்து வந்து திரும்புகிறார்கள் என்றும் வெள்ளை வேட்டி கட்டிய நெடுநெடுவன வளர்ந்த மனிதர் மிரட்சியோடு கூறினார்.
அவள் அப்படி கூறியதும் “எங்களைச் சாமி கூப்பிடுவார்’, என்கிற நம்பிக்கை போய்விட்டது, இட்லி வடை சாப்பிட்டு விட்டாச்சு, ஊதுபத்தி வெற்றிலை வாங்கியாச்சு கதவு திறக்கப்பட்டதும் பூசாரியைப் பார்க்க வேண்டும் இதுதான் எங்கள் இலக்கு,
இட்லி விக்கிற பெண்ணிடம் கேட்டோம், கதவு எப்ப திறக்கும்? இப்ப திறந்து விடுவார்கள்? என்றாள். கதவு திறந்ததும் ஒரு கூரை கொட்டம் இருக்கு, எல்லோரும் அங்கு உட்கார்ந்து விட வேண்டும், சாமி வந்து பெயர் கேட்டு எழுதுவார், எல்லாருடைய பெயரையும் எழுதி விட்டு இன்றைக்கு யார்?யாரை பார்க்கப் போகிறாரோ! அவர்களின் பெயர்களை மட்டும் வாசித்து விட்டு மற்ற எல்லோரையும் போகச் சொல்லி விடுவார், ஆனால், நேரம் இருந்தால் வாசிக்காதவர்கள் பெயர்களுக்கும் சில நேரங்களில் அருள் வாக்குச் சொல்லுவார், அதனால், உங்கள் பெயர் வராவிட்டாலும் இருந்து பார்ப்பது உத்தமம் என்கிற வகையில் பேசினாள்.
கதவு திறக்கப்பட்டது! இடது பக்கம் எலுமிச்சை மரமும், முருங்கை மரமும் நின்றிருந்தது. ஒவ்வொரு கிளை இடுக்குகளிலும் கொத்துக்கொத்தாகக் காய்த்துச் கொண்டிருந்தது, கூரைக் கொட்டத்தில் போய் உட்கார்ந்தோம், நல்ல உயரம், வெள்ளை வேஷ்டி, கண்ணில் பேரொளி, குரலில் அனாசிய சத்தம், சிறுமல், அத்தனை பேரையும் அரட்டும் உரிமை! இவை அத்தனையும் இருந்தது, கடுமையாகப் பார்த்தபடி ஒரு பெண்ணைப் பேசினார், “ச்சீ மூதேவி சும்மா இரு“.. பிறகு அப்பெண்ணை உற்றுப் பார்த்தார் அவள் கண்கள் குளமாக அவரையே திரும்பப் பார்த்தாள், பூசாரி பார்வையை இன்னும் அவளிடம் இருந்து எடுக்கவில்லை, அழாதே!… எதுக்கு வந்திருக்க? மூதேவி அழுதால் கிடைச்சிருமா? மூதேவி! பொருளைப் பத்திரமா பார்க்க துப்பில்லை! வந்துட்டா” என்றார், அப்பெண் தலை கவிழ்ந்தபடி சுருண்டாள். ”பொறு பாக்குறேன்” என்றார், வந்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் ஆச்சரியம், அப்பெண் கண்ணீர் தாரைதாரையாக ஊற்றியது.
வேகமாக வந்த பையன் ஒருவன் பாறைக்கயிறு குவியலை தோளில் போட்டபடி வந்து நின்றான், துப்புக் கெட்டவனே! இங்கே எதுக்குடா வந்த? என்று அவனைப் பார்த்துக் கேட்டார்,எல்லோரும் அவன் பக்கம் திரும்பினார்கள், அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு, ராத்திரி முழுவதும் தேடியாயிற்று, வீட்டில் எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள்,’ தாங்கமுடியவில்லை‘ என்றான். பனிரெண்டு வருடம் கூட இருந்தது, ஜெயிக்காம வந்தது கிடையாது, நீங்க தேடுனா கிடைச்சிருமா? என்று ஏகத்தாளமாகக் கேட்டார், அதுதான் சாமி உங்களிடம் வந்திருக்கிறோம் என்று பாதி வார்த்தைகளை முழுங்கி பயத்தோடு சொன்னான், கயிறு எதுக்குடா? என்று கேட்டார், ராத்திரி பூரா இதோடதான் திரியுறேன் சாமி! என்றான் அதுதான் எதுக்குடா கயிறு ? என்று கேட்டார் பிடிக்கத்தான் என்று சொன்னான், நீ பிடிக்க முடியாது. அது உன் கட்டுப்பாட்டிலேயும் இல்ல என் கட்டுப்பாட்டிலேயும் இல்லை ஆத்தா கட்டுப்பாட்டில் இருக்கு. யாரு கண்ணுக்குத் தெரியாது, உன் பக்கத்துல வந்து நின்னாக்கூட உன் கண்ணுக்குத் தெரியாது, பிறகு எதுக்கு? “கயித்தோட அலையிற” துப்புக் கெட்டவனே என்று ஆங்காரமாக ஒரு சிறுமலையும் போட்டுக் காட்டினார், பத்தி “வெத்தலை வாங்காதவர்கள் வாங்கிக் கொள்ளவும் இட்லி சாப்பிடாதவர்கள் சாப்பிட்டுக்கொள்ளவும்“ என்ற குரல் வெளியில் இருந்து கேட்டது, அந்தக் குரலில் லயித்தபடி பூசாரி கண்ணை மூடிவிட்டு சிரித்தார்.
மீரான் பாய் பூசாரியைப் பார்த்து சிரித்தார், எல்லோரும் பூசாரி தன்னை பார்க்க மாட்டாரா? என்கிற துணியில் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள், அவர் யாரையாவது பார்த்தால் எல்லோரும் அந்தப் பக்கம் பார்வையை செலுத்தினார்கள், இது அரைமணி நேரமாக ஓடியது,
உன் பேரு என்ன? என்று கண்ணீரோடு இருந்த பெண்ணை பார்த்துக் கேட்டார், மங்களேஸ்வரி என்று அப்பெண் சொன்னாள், ஊரு? சருகனி என்றாள், அடுத்தடுத்து வரிசையாகப் பெயர்களை எழுதிக் கொண்டிருந்தார், பெயர்கள் கேட்டு எழுத எழுத பெயருக்குரியவர்கள் முன்புறமாக நகர்ந்தார்கள், பெயர் எழுதாதவர்கள் அவர்களுக்கு வழிவிட்டு அவர்களை முன் நோக்கி செல்ல அனுமதித்தார்கள், ஏனென்றால் இன்றைய தலையெழுத்து அவர்களுக்குரியது என்பது ஒரு கணக்கு, வரிசை மிகச் சரியாக யாரும் சொல்லாமலே ஒழுங்கு படுத்தப்பட்டு அங்கு ஒரு சிஸ்டம் தானாக உருவாகிக் கொண்டிருந்தது.
மீரான்பாய் பெயர் எனக்கு முன்பாக கேட்கப்பட்டது. எல்லாருடைய பெயரும் எழுதிவிட்டு என் பெயர் கூப்பிடவில்லை, மீரான் பாய் நீண்ட தூரத்திலிருந்து வந்திருப்பதாகவும் எனது பெயரை எழுதச் சொல்லி சிபாரிசு செய்தார்,
இன்றைக்கு அருள் அவ்வளவுதான்! உத்தரவுக்கு மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது வேண்டுமென்றால் காத்திருக்கச் சொல், அருள் கொடுக்க உத்தரவிட்டால் பெயரை ஏட்டில் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு, மீரான் பாயைப் பார்த்து, கண்களை விரித்தது,தோலை உரித்து விடுவேன் என்று திட்டினார்,
பெயர்கள் எழுதப்படாத அத்தனை பேரும் வெளியேறினோம், கைக்குழந்தைக்காரியின் பெயர் எழுதப்பட்டு விட்டது.அவள் சந்தோஷத்துடன் கொட்டத்தில் அமர்ந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள், டேபிளில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போயிருந்தது..
மதியம் சாப்பாடு இருக்குமா? என்று கேட்டேன். மதியம் சாப்பாடுல்லாம் இல்லை, மூணு மணி போல வடையும் சமோசாவும் போடுவோம் டீ எப்போதும் இருக்கும் என்றார்கள், இன்றைக்கு எழுதப்பட்ட உணவு இதுதான். பக்கத்தில் தான் கல்லல், போய் வரலாம் என்றால் எப்போது வேண்டுமானாலும் பூசாரி நம்மைக் கூப்பிடலாம் என்கிற உள்ளுணர்வில் கிளம்ப மனம் வரவில்லை புளிய மரத்தடியில் போய் உட்கார்ந்தாலும் திரும்பவும் கூரைக் கொட்டத்திற்குள் போய் என்ன நடக்குது? என்பதை பார்க்கும் ஆவல் கூடிக் கொண்டே செல்கிறது.
சிகரட்டைப் பற்ற வைத்து புகையை உள்ளித்து விட்ட பிறகு, உள்ளே நுழைந்தேன், மங்களேஸ்வரி அழுது கத்திக் கொண்டிருந்தாள் ஒண்ணும் வழி இல்லையா? சாமி என்று ஆங்காரமாகக் கத்தினாள், உதட்டை பிதுக்கி வழி எங்கும் கிடையாது எல்லாம் அடைபட்டு விட்டது, வட திசையில் பயணம் செய்து, நிலை கொண்டு இருக்கும் இடம் மலைக்காடு, கூட வாட்டசாட்டமான வாலிபன் ஒருவன் கைகோர்த்து அரவணைத்து இருக்கிறான். திரும்ப வழி இல்லை, கரு பிடித்துவிட்டது, ஐயோ என்று கத்தினாள், அவள் உயிர் பாதி போய்விட்டது, பரிதாபமான இருந்தது, புருஷன் செத்து ஒன்பது வருடம் ஆகிவிட்டது, இல்லாத குறை போக்கி வளர்த்தேன், மாலை நோக்கம் வந்தது அறிவில்லை, தப்பு செய்துவிட்டேன்! கருவை அழிக்க முடியுமா? பாத பூசாரி உக்கிரமாக கத்தினார், போடி மூதேவி! அந்தக் கரு உன்னை காப்பாத்த போகும் கரு. உன் உயிர் அக்கருவில்! வேணாம் சாமி வேணாம் சாமி அழிச்சு சுத்தம் செஞ்சு புள்ளை என் கையில் கொண்டுவந்து தந்திடுங்க என்று குரல் கம்மியபடி மயங்கினாள், கீழே கிடந்தவள் தலையில் விபூதி அடித்து அருகில் இருந்த கட்சிக்கரை வெள்ளை வேட்டியை, நகரச் சொன்னார்.
கயிற்றோடு வந்தவன் “மாடு தேடி கிளம்பவா?” என்றான்.
“இருடா! அவசரப்படாதே! நீ கிளம்பவா? என்றால் நான் கிளம்பு என்று சொல்லிவிட முடியுமா? ஆத்தா உத்தரவு வரவில்லை என்று நோட்டின் பக்கங்களை எடுத்துப் புரட்டியபடி வாசிக்க ஆரம்பித்தார், கருப்புமாடு வெள்ளை வரிக்கோடு, உளுந்தம் பயறு செடி மிதித்து,செம்மண் காட்டுக்குள்ள, பாழடைந்த கிணறு ஓரமாக காளி ஒருத்தி நாக்கத் துருத்தி எலுமிச்சம் பழங்களைக் கடித்தபடி நிற்கிறாள், அவளை பார்த்து மண்டியிட்டு படுத்துள்ளது. எந்திரிக்க முடியவில்லை, எங்கும் நகர முடிய வில்லை, நிறுத்தி வைத்திருக்கிறேன்.தென்திசை கிளம்பி நீ போவதற்கும் சூரியன் மறைவதற்கும் சரியாக இருக்கும், இருட்டு கூடிரும் காளி கிட்ட இந்த எலுமிச்சம் பழத்தைக் கொடு உத்தரவு கொடுக்க மாட்ட, பாத பூசாரி மெய்கண்டர் திசை மட்டிலிருந்து வந்திருக்கேன், ஆத்தா உத்தரவு கொடு என்று சொல், கயிறுகளைச் சுருட்டி காளையின் கொம்புகள் மீது வீசு, கயிறு காளை மீது விழவே விழாது உத்தரவின் முதல் அடி பிசகும், பிறகு ஞாபகத்திற்கு வந்ததும் திசை மட்டுப்படும் உத்தரவு! உத்தரவு! உத்தரவு! என்று மூன்று முறை கூறி காளி கையில் எலுமிச்சம்பழம் கொடுத்த கையோடு மாடும் மே. என்று கத்தும். இருட்டுக்குள் சலங்கைச் சத்தம் கேட்க ஆரம்பித்துவிடும், “கிளம்பி வந்துவிடு“ மாடு தானாக உன் பின்னாலே வீடு வந்து விடும், மாட்டைத் தேடி திரும்பிப் பார்க்காதே விளைவுகளுக்கு என் கிட்ட வராதே சொன்னதைச் செய்” என்று உத்தரவிட்டு மீரான்பாயை அழைத்தார்,
பூசாரியிடம் கருணை கிடையாது, உத்தரவு வரவர மௌனங்களை உடைத்து போய்க்கொண்டே இருந்தார், ரகசியங்கள் அங்கு எதுவும் இல்லாமல் இருந்தது, ஒருவரின் கோரிக்கையின் நியாயங்கள் எல்லோராலும் பரிசீலிக்கப்பட்டது, மீரான்பாய் தயங்கித் தயங்கி பூசாரியின் காதில் போட்டார், பூசாரி சிரித்தார், சிரிப்பு உயர்ந்தது, பாய் கொண்டு வந்த காகிதங்களை சுருட்டிப் போட்டு விட்டு கண்களை மூடினார், கிளம்பு, என்ன செய்வது விதி,! மதியால் வென்றிருக்க வேண்டும் உனக்கு மதி இல்லை, புத்தி வருமா? வர வாய்ப்பில்லை, கெட்டுப்போய் ரொம்ப நாளாச்சு. ராத்திரிவீடு முழுக்க வாசம் வரும், உணர்ந்திருக்கனும் நீ உணரவில்லை, வந்து போவது வேறுயாருமல்ல, நீ மிதித்த மண்தான், உன்பிட்டத்தில் ஒட்டிய மண் தான், வீடு வரை வந்து உதிர்ந்து கிடக்கு, விதைத்ததை தான் அறுவடை செய்ய முடியும், பாய் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்த பூசாரி, நீ நினைத்ததை நான் சொல்ல முடியுமா? படித்தவன் தானே நீ ?
இப்போது அதிர ஆரம்பித்தார் பற்களைக் கடித்து இழுத்தார், மங்களேஸ்வரி எழுந்தாள் கருவை அழிச்சு என் புள்ளய வீட்டு வாசல்ல கொண்டு வந்து விட்டுட்டு போகச் சொல். என்றாள் என்கிட்டேய வா ? சரிதான் நீயா ? நானானு பார்த்திருவோம், துப்புக்கெட்டவ உயிர் கருவில் இருக்குடி! மீரான்பாய் கேட்டார், நான் என்ன செய்ய ? பூசாரி திசை சொன்னார், பாய்க்கு சிரிப்பு வந்தது, எல்லாம் புரிந்தளவுக்கு திசை மட்டும் மட்டுப்படவே இல்லை, பல லட்சங்கள் செலவு செய்தாயிற்று யாரு கிட்டயும் சொல்ல முடியாது, சதுரங்க வேட்டை இது, இப்பத்திசை தெரிந்தாலும் கிட்ட நீ போக முடியாது,! ஆள் காலியாகி விடுவாய்! என்றதும் பாய்க்கு பயம் வந்து விட்டது. நான் கேட்டுக் கொண்டிருப்பதையும் எனது கண்கள் ஏங்குவதையும் பார்த்த பூசாரி பக்கத்தில் உட்காரச் சொன்னார், முன்பு இருந்த கூட்டம் இல்லை, எல்லோரும் போய்விட்டார்கள் பூசாரி வந்ததில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை, மதிய பொழுது முடிவுக்கு வர போகிறது. பூசாரி முகத்தில் அதே உற்சாகம், அவர் முன்பு நிறைய இருநூறு ரூபாய் தாள்கள் பச்சை வெற்றிலைகள் மீது விரித்து வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு இருநூறும் காற்றில் நுனி பகுதிகளை அசைத்துக் கொண்டிருந்தது. ஊதுபத்தி புகைந்து கொண்டேயிருந்தது. எங்கள கிளம்பச் சொன்னார், வெளியில் வந்தோம்,காலையில் சொன்னபடி வடை வழித்துக்கொண்டிருந்தாள், எங்களை விசாரித்தாள் என்ன மட்டுப் பட்டதா ? என்றாள். இல்லை என்றோம்.
எங்களின் திருப்தியின்மையின் மீது நம்பிக்கையைக் தெளித்தாள் இன்னொருமுறை வாங்க … ஜாதகம் பாக்குற இடமல்ல நீங்க நினைக்கிற மாதிரி மைமாந்தீரிகம் இல்ல ரெண்டு பொண்ணுக இருக்குது அவருக்கு எல்லா வயசுப் புள்ளைய .பொய் பித்தலாட்டத்துக்கு இங்கு வேலை இல்லை, முகக்குறிதான், முகம் பார்த்து குறி சொல்ல அருள் வேணும், நீங்க போய் உட்கார்ந்தா அவருக்குத் தெரியும், உத்தரவு அவருக்கு வந்தாதான் என்று காலையில் சொன்னதையே திரும்பவும் சொன்னாள், போன செவ்வாய்க்கிழமை கூட இராமநாதபுரத்தில் இருந்து மூன்று பேர் வந்தார்கள், உங்களைப் போலவே பதறினார்கள், கடல் தொழில் தான் கரைக்கு ஒதுங்கி மேல ஏறும் சமயத்தில் நேவி வந்திருக்கு! பொருளை பதுக்கி விட்டார்கள். பதுக்கிய இடம் ஒருத்தனுக்கு மட்டும் தெரியுமாம், அவன் இதுவரை எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லையாம். எல்லாம் தங்க கட்டிகளாம், ஐம்பது கோடி இருக்குமாம் மீரான் பாய்க்கு தலை சுற்றியது, என்னை பார்த்தார். நான் எதையும் வெளி கட்டிக் கொள்ளவில்லை, அவனுங்க வந்திருக்குறானுங்க பார்த்தீர்களா? என்றார். அங்கிருந்து கிளம்ப வேண்டும் போல் இருந்தது, காரில் ஏறிக் கொண்டார் எதைப் பற்றியும் பேசவில்லை, மௌனங்களை உடைப்பதற்கு உண்மையான வார்த்தைகள் ஏதுமில்லை.சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருக்கிறது என்றார். சாவதைத் தவிர வேறு வழி இல்லை என்றார் காரை விட்டு இறக்கி விடுங்கள் என்றார், அவநம்பிக்கைகளில் மீது ஏறி அவர் நடனம் புரிய ஆரம்பித்து விட்டார், இனி யார் சொன்னாலும் கேட்க மாட்டார், காரை முன்பை விட வேகமாக இயக்கினேன்.
***

நல்ல நடை. சிறப்பான கதை.