• கௌதம சித்தார்த்தன்

 

 

கேமரா இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா.?

அப்படியான ஒரு திரைப்படம்தான் கடந்தமாதம் சென்னையில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘Final Cut – Ladies and Gentlemen’. 

மார்லன் பிராண்டோவாக இருக்கும் கதாநாயகன் திடீரென்று ஜெஃப் பிரிட்ஜஸாக மாறிவிடுவார். அதன்பிறகு கொஞ்ச நேரத்தில் வின்சென்ட் கேஸல் ஆக, ஜேக் நிக்கல்ஸன் ஆக.. இப்படி ஒவ்வொரு நடிகனாக கதாநாயகன் மாறிக் கொண்டேயிருக்க, கதாநாயகியும் எலிஸபெத் டெய்லர், குயிலிட்டா மஸினா, லிஸா மினேல்லி என்று முகம் மாறிக்கொண்டே இருக்கும்.

ரொம்பக் குழம்பி விடாதீர்கள் லேடீஸ் & ஜென்டில்மென், விஷயம்இதுதான்: 

அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்ச், இத்தாலிய, ஸ்பானிய, ஸ்காண்டிநேவிய.. என்று நீளும் சர்வதேசத் திரைப்படங்களிலிருந்து, ஏறக்குறைய 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலிருந்து, ஒரு சில காட்சித் துண்டுகளை (Clippings) மிக நேர்த்தியாக வெட்டியெடுத்து அவைகளைக் கனகச்சிதமாக ஒருங்கிணைத்து ஒரு முழுநீளப் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Gyorgy Palfi.

இந்த ஒரே சீராக வெட்டி ஒட்டப்பட்ட காட்சித் தொகுப்பில் காதலைப்பற்றி ஆழமாகச் சொல்லும் ஒரு கதைத்தன்மை மிக நேர்த்தியாக பொருந்திப்போயிருக்கிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி தங்களது முகம், வயது, தோற்றம், பெயர் ஆகியற்றை மாற்றிக் கொண்டே இருந்தாலும் கதையின் அடிநாதமாக இயங்கும் காதல் மாறாத தோற்றத்துடன் விரிந்து கொண்டே இருக்கிறது.

84 நிமிடங்கள் கொண்ட இந்த ஹங்கேரியப் படத்தை, ‘இது ஒரு புதுமையான முயற்சி’ என்று சர்வதேசப் பத்திரிகைகள் பாராட்டித் தள்ளுகின்றன. ‘இது 1980 களில் கலைஇலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்ட கொலாஜ் (collage) என்னும் வகையைச் சார்ந்தது’ என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

இந்த வினோதத்தைக் கண்டு களித்து தலைசுற்றியபடி வெளியே வந்தால், இங்கொரு தமிழ்ப்புதுமை வெளியே காத்திருந்தது. வெளியேறும் வழியில் உள்ள கேட்டில் பார்வையாளர்களை மடக்கி பிரவுச்சர் போன்ற ஒரு கையளவான அட்டையைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர். என் கையிலும் அந்தப்புதுமை திணிக்கப்பட்டது.

நான் அதை அசுவாரஸ்யமாக விரித்துப் பார்த்தேன். உள்ளே ஒரு பக்கத்தில் நீளமான தலைமுடி ஒன்று சுருட்டி வைத்துப் பின் செய்யப்பட்டிருந்தது. சரேலென்று அதிர்ச்சி என்னைத் தூக்கியடித்தது. 

ஏதாவது பில்லி சூனியமோ..?

பதட்டத்துடன் அடுத்த பக்கத்தைப் பார்த்தால், ஒரு கவிதை:

ப்ரியமானவளே
என்வாழ்வில் உன் இதழ்பதித்த
செந்தூரப்பூச்சின் ஈரம் காயாமல் 
உன் நினைவுகளனைத்தையும் 
அணையாது காத்துவருகிறேன்
என் உள்ளோடி எரியும்
உயிர்ச்சுடராய்…

எனக்கு ஒன்றும் புரிபடவில்லை. ரசிகப்பெருமக்கள் அதிவிரைவாக அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதிலேயே கவனமாக இருந்தனர். 

என் நண்பரிடமிருந்த இன்னொரு அட்டையை வாங்கிப் பார்த்தேன். அதில் பெண்கள் உபயோகிக்கும் ஹேர்கிளிப் சொருகப்பட்டிருந்தது. அதில் வேறு ஒரு காதல் கவிதை.

எனக்குள் உற்சாகம் பொங்கியது. என்ன விஷயம்..? யார் இவர்கள்..? என்று அவர்களை நெருங்கி நோட்டம் விட்டேன். ரசிகப் பெருமக்களுக்கு தங்களிடமிருந்த பிரவுச்சர் அட்டைகளைப் பரபரப்புடன் ஓடிஓடிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

நான் இன்னொரு அட்டையை வாங்கிப் பார்த்தேன். “உடைந்த கண்ணாடி வளையல் துண்டு..” ஹோ..

அவர்கள் தரும் ஒவ்வொரு அட்டையையும் பரபரப்புடன் உற்று உற்றுப் பார்த்தேன். ‘ஸ்டிக்கர் பொட்டு’, ‘லிப்ஸ்டிக்’, ‘ஹேர் பின்’, ‘ஹேர் பேண்ட்’, ‘ஐப்ரோ பென்சில்’… 

அட்டகாசம்! இதென்ன ‘பைனல் கட்’ படத்தை விடவும் புதுமையாக இருக்கும் போலிருக்கிறதே.. 

ஆர்வத்துடன் அவர்களிடம் இது எதற்கு என்று பேச்சுக் கொடுத்தேன். அவர்கள் எதிரிலிருந்த படிக்கட்டுப் பக்கம் கைகாட்டி விட்டார்கள். அங்கே புன்முறுவலுடன் நின்றிருந்தவர் என்னை நோக்கிக் கையசைத்தார்.

சற்று முன்னர் பார்த்துவந்த படத்தைப்பற்றி அபிப்ராயம் சொல்லியவாறு அருகருகில் உட்கார்ந்தோம். 

“நம்ம படத்திலே தப்பித்தவறி ஒரு சீன் வந்துட்டாப் போதும்… கதையைத் திருடிட்டான்னு கிழிச்சிர்ராங்க.. ஆனா, இந்தப்படத்திலே 500 சீனைத் திருடியிருக்கான்.. உலகப்படம்னு கொண்டாடறாங்க.. இதுதான் சார் உலக சினிமா..” என்று நெட்டுயிர்த்தார்.

அப்படியல்ல, அது ஒருவித கலாபூர்வமான டெக்னிக் என்றும், அதன் பின்னால் உள்ள ஹங்கேரியப் பொருளாதார வீழ்ச்சியின் அரசியல் பற்றியும் விவாதித்தேன்.

“அப்ப அது சரியான விஷயம்ங்கறீங்க அப்படித்தானே..” என்றவர்,

தான் இயக்கும் படத்தினுடைய விளம்பரத்தை இப்படிப் புதுமையாகச் செய்வதாகத் தெரிவித்தார்.

“இந்தப் படத்திலே எல்லாமே புதுமையாப் பண்றோம் சார்..” என்றவர் பெருமை பிடிபட தனது படத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.   

கதாநாயகியை கதாநாயகன் துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். நாயகி பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டேயிருக்கிறாள். இடையில் வில்லன் வஞ்சக வலை விரித்து அவளை நெருங்குகிறான். அப்போதுதான் தெரிகிறது. நாயகிக்கு ஏற்கனவே நாயகனுடன் திருமணம் நடந்து விட்டது. இடையில் ஒருவிபத்தில் நாயகிக்குத் தலையில் அடிபட்டு எல்லாவற்றையும் மறந்து விடுகிறாள். நாயகன் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து அவளைக் காதலித்து ஒவ்வொரு நினைவையும் மீட்டெடுக்கப் பார்க்கிறான். நாயகியின்  ஷார்ட் மெமரி லாஸிலிருந்து அவளை மீட்டெடுத்தானா..? வில்லன் விரித்த வஞ்சகவலை என்னாயிற்று..? மீண்டும் இருவரும் இணைந்தனரா..? என்பதுதான் கதை.

என் ஆர்வம் சப்பென்று போயிற்று. இயக்குனர் கதையைப் பற்றி என்னுடைய அபிப்ராயத்தைக் கேட்க மிகவும் ஆவலாய் இருந்தார். ஒரு நிஜமான விமர்சனத்தை எதிர்பார்ப்பதால்தான் முன்பின் தெரியாத என்னிடம் கதையைச் சொல்லியிருக்கிறார் என்று யூகித்தேன்.

“சார்… இந்தமாதிரிப் படங்கள் தமிழ்லே நெறைய வந்திருக்கும் போலிருக்கே…” என்றேன் பட்டென்று.

“இதுதான் சார் எனக்கு வேணும்…” என்றார் உற்சாகமாக. அருகிலிருந்த தனது உதவியாளர் பக்கம் திரும்பி, “என்னப்பா.. சார் சொன்னதைக் கேட்டியா.. ஒருபடமும் இல்லைன்னு சொன்னியே..” என்று கடிந்து கொண்டார்.

நான் மேலும் உணர்ச்சி வயப்பட்டவனாய், “கமலஹாசனோட மூன்றாம்பிறையிலேர்ந்து நெறையப் படங்களைச் சொல்லலாம்…” என்றேன்.

“சார் தயவுசெஞ்சி ஒரு லிஸ்ட் ஒண்ணு குடுங்க சார்.. ப்ளீஸ்..” என்றார்.

நான் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்துப் படங்களைச் சொல்லச் சொல்ல உதவியாளர் தனது நோட்டில் குறித்துக் கொண்டார்.

உதவியாளர் குறிப்பெடுத்து முடிந்ததும், நான் இயக்குனரிடம் சாசகாசமாகப் பேசினேன். “பாத்து செய்யுங்க சார்.. இந்த மாதிரி நெறையப்படங்கள் இருக்கு..” என்றேன்.

அட்டகாசமாகச் சிரித்த இயக்குனர், “எனக்கு அதுதான் வேணும்.. ஏன்னா நான் எடுக்கற படம் கேமரா இல்லாம எடுக்கப்போற படம்..” என்றவாறே தன்னுடைய கையிலிருந்த விளம்பர அட்டையை என்னிடம் கொடுத்து விட்டு விடைபெற்றார்.

மெதுவாகத் தலையை உயர்த்திச் சுற்றிலும் பார்த்தேன். கமலஹாசன் திடீரென ஜெயம்ரவியாக மாறிக் கொண்டிருப்பது கண்களில் நிழலாடியது. என் கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு எதிர்த்திசையில் நடந்தேன்.

தமிழ் சினிமாவிற்கு இப்போது ஷார்ட் மெமரி லாஸ்!

***

(நான் 2012 ஆம் வருடம் குமுதத்தில், சினிமா பற்றி, ‘கனவுப் பட்டறை’ என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதினேன். இந்தக் கட்டுரை அந்தத் தொடரில் வெளிவந்த ஒரு அத்தியாயம்.)