- கௌதம சித்தார்த்தன்
சமீபத்தில் ஒரு நண்பரின் திருமண விழாவிற்குச் செல்ல நேரிட்டது. நிகழ்ச்சியைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். மணமேடையில் வரவேற்புக் கோலத்தில் நிற்கும் திருமணத் தம்பதியருக்கு வாழ்த்துக் கூறிச் செல்லும் நண்பர்களையும் உறவினர்களையும் பல்வேறு விதமான கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது பரபரப்பான செய்கையும் சற்றும் சலிப்பு ஏற்படாமல் கோணங்களை மாற்றி மாற்றி எடுக்கும் தன்மையும் எனக்குப் பிடித்துப் போனது.
அவர் உத்தேசமாக 40 வயதைக் கடந்து கொண்டிருப்பார் என்று தோன்றியது. இத்தனை வருட செயல்பாட்டில் பல்வேறு திருமண நிகழ்வுகளைப் படம் பிடித்திருப்பார். இப்போது நடப்பதும் அப்படியான ஒரு காட்சித் தொடர்தான். அதே காட்சியை, அதே கொண்டாட்டத்தை, அதே தருணங்களை முகம் சலிக்காமல் படம் பிடித்துக் கொண்டிருந்தார் அவர்.
எனக்கு சமீபத்தில் பார்த்த செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “மயக்கம் என்ன” திரைப்படம் நிழலாடியது. அதில் திருமணம் போன்ற சமூகக் கலாச்சார விழாக்களில் படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர்களை மிகவும் மலினமான விதத்தில் கேவலமான தோரணையில் சித்தரிக்கப்பட்டிருந்தது ஞாபகம் வந்தது.
கானுயிர் புகைப்படக்கலைஞர் (Wildlife Photographer) என்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய கலாமேதைமை என்பது போலவும், இதுபோன்ற சமூகவிழாக்களையோ, நிகழ்வுகளையோ புகைப்படம் எடுப்பவர் ஒரு சாதாரணமான அற்பப் பிண்டம் என்பது போலவும் சித்தரித்திருப்பார் செல்வராகவன்.
புகைப்படத்துறையில் பல்வேறு பிரிவுகள், போக்குகள் இருக்கின்றன. இதில் வெறும் பறவைகள் விலங்குகளைப் படம் பிடிப்பது மட்டுமே ஆகப் பெரிய முதல் தரமான கலை என்று செல்வராகவன் சொல்லியிருப்பது வன்மையாக மறுக்கப்படக்கூடிய விஷயம்.
சமூகத்தில் உள்ள பல்வேறு மனிதர்களையும் செயல்பாடுகளையும் படமெடுத்தல். பழங்குடியின மக்களைப் படமெடுத்தல். மதச்சடங்குகளைப் படமெடுத்தல். இறை ஆலயங்களைப் படமெடுத்தல். போர்முனையில் சென்று போர்க்காட்சிகளைப் படமெடுத்தல். வரலாற்று ஆவணங்களைப் படமெடுத்தல். மாடலிங்களைப் படமெடுத்தல். மரங்கள், இயற்கைக் காட்சிகள், இயற்கைப் பேரழிவுகள், பறவைகள், விலங்குகள், மீன்கள்… இப்படி எண்ணற்ற விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவை எல்லாவற்றையும் போலவே கானுயிர் புகைப்படம் என்பதும் ஒரு துறை; அவ்வளவே.
என்னுடைய எளிய பார்வையில் “செல்வராகவன் சொல்லியுள்ள கானுயிர் புகைப்படக்கலை”யை விடவும் ஒரு சமூகம் சார்ந்த கலாச்சார விழாக்களில் பங்கு பெறும் புகைப்படக்கலைஞர் மிகவும் நெருக்கமானவராகத் தெரிகிறார்.
ஏதோ ஒரு பெயர் தெரியாத அல்லது அரியவகைப் பறவையைப் படம் எடுத்ததனாலேயே அவர் ஒரு ‘புகைப்படக்கலை மேதை’ என்றும், ஒரு எளிய திருமணவிழாவில் கலாச்சாரக் காட்சிகளை (அக்குடும்பத்தினருக்கு பிற்காலத்தில் வரலாறாகவும், மானுடவியலாகவும் மாறப் போகின்ற) எடுப்பவர், சாதாரண அற்ப ஜந்துவாகவும் உருவாக்கி வைத்திருக்கிறது இந்த வணிகத்தன்மை கொண்ட மலினமான ஊடகச்சூழல்.
தமிழ்ச்சூழலில் கானுயுர் புகைப்படக்கலையைப்பற்றிப் பேசுவது தான் இன்றைய நாகரிக மோஸ்தர் (Fashion).
நம் திரைப்படங்கள், அவ்வப்போதைய சீசனில் எந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்படுகிறதோ, உடனே அதுகுறித்து அடிப்படை விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் பெரிதும் விருப்பமில்லாமல், மேலோட்டமாக நுனிப்புல் மேய்ச்சலை வைத்து, காட்சிகளாகக் கட்டமைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன.
இது போன்ற திருமணம் மற்றும் சமூகக் கலாச்சார விழக்களில் புகைப்படம் எடுப்பது குறித்து உலகளவில் பல்வேறு பயிற்சிப்பட்டறைகள் இயங்குகின்றன. உலகநாடுகளின் பல்வேறு மொழிகளில் பத்திரிகைகள் வெளிவருகின்றன. வருடம் ஒருமுறை இந்த பாணி புகைப்படங்களுக்கு சர்வதேச அளவில் விருதுகள் வழங்கப்பட்டு கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். புகழ்மிக்க கலைஞர்களாக ஊடகங்களில் வலம் வருகிறார்கள். பிரச்னை என்னவென்றால், இது போன்ற செயல்பாடுகள் குறித்து தமிழ் ஊடகங்களில் அல்லது தமிழ்ச்சூழலில் கவனப்படுத்துவதில்லை. இதனாலேயே மதிப்பீடுகள் ஏதுமின்றி இந்தத் துறை கேலிக்குள்ளாகிறது.
எளிய மக்களின் வாழ்வில், முதல் தலைமுறையில் எடுத்த படங்களை ஒரு மூன்றாந் தலைமுறையாளன் கண்ணுறும் போது அவனுக்குள் நிகழ்த்தும் அரிய தருணங்களையும் பாய்ச்சலையும் சொல்லில் கொண்டு வரமுடியாத தருணங்களையும், வேறெந்த கானுயுர் புகைப்படமும் தரமுடியாது என்பது எனது துணிபு. சூழலியல் அறிஞர்களும், கானுயிர் சிந்தனையாளர்களும் இதை மறுக்க வேண்டியவில்லை. ஏனெனில், ஒரு கலையை மிக உயர்ந்ததாக, ஊதிப் பெருக்கிக்காட்ட வேண்டும் என்பதற்காக, அதற்கு இணையான மற்றொரு கலையை மட்டமானதாகக் காட்டும் தமிழ் திரைப்படங்களின் காலம்காலமான சிந்தனையை நாம் ஏற்க வேண்டியதில்லை. ஒவ்வொரு கலைக்கும் அதற்கான மதிப்பீடுகள் உண்டு என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
அமெரிக்கா, வியட்னாம் போரின்போது, உடலில் பற்றி எறியும் நேபாம் எனும் ரசாயனக் குண்டுகளை ஒரு கிராமத்தில் வீசியது. அதில் ஒரு சிறுமி தீயிடமிருந்து தப்பிக்க தனது ஆடைகளைத் துறந்து உயிர் பிழைக்க ஓடிவருகின்ற காட்சியை நிக் உட் என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்தார். இந்தப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்தது.
இந்தப் பெண் பிற்காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து போரின் கொடுமைகளை எடுத்துச் சொல்லும் ஒரு ஐக்கிய நாட்டு அமைதித் தூதுவர் ஆனார் என்பது மற்றொரு செய்தி.
கெவின் கார்ட்டர் என்னும் புகைப்படக்கலைஞர் நாடுநாடாகச் சுற்றியலைந்து மனிதமுகங்களைப் பதிவு செய்கிறவர். பசியின் கொடுமையால் இன்னும் சற்று நேரத்தில் சாகப் போகும் சூடான் சிறுவன் ஒருவன். சற்றுத் தள்ளி அவனை இரையாக்கக் காத்திருக்கும் பிணம் தின்னிக் கழுகு. இந்தப் புகைப்படம் அந்த வருடத்தின் புலிட்சர் விருது வாங்கியது.
அங்கீகரிக்கப்பட்ட போர்முனைச் செய்தியாளரும் புகைப்படக்கலைஞருமான மேரி கால்வின், இலங்கைப் போரில் போர்முனையில் இருந்து புகைப்படங்களையும் செய்திகளையும் அளித்தவர். இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலையைத் துணிச்சலாக அம்பலப்படுத்திய பெண்மணி. இலங்கை ராணுவம் தொடுத்த எறிகுண்டுத் தாக்குதலினால் படுகாயமடைந்து ஒரு கண்ணை இழந்தாலும், மனஉறுதியை இழக்காமல் கறுப்புத்துணியால் அந்தக் கண்ணைக் கட்டிக் கொண்டு கடமையைச் செய்தவர். அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையிலேயே சமீபத்திய ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா முன்னெடுத்தது.
சமீபத்தில், சிரியாவில் அரசுக்கு ஆதரவானவர்கள் நடத்திய தாக்குதலில் மேரி கால்வின் மற்றும் பிரான்ஸ் புகைப்படக் கலைஞரான ரெமி ஒச்லிக் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர் என்பது ஒரு துயரச் செய்தி.
2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலையின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம் உயிர்ப்பிச்சை கேட்டு கூப்பிய கரத்துடன் கெஞ்சிய குத்புதீன் அன்சாரி என்ற மனிதரின் பரிதாபமான முகம். மதங்கள் தூண்டி விடும் மனித வன்மத்தை இதைவிட எந்தக் கலையால் வெளிச்சமிட முடியும்?
இந்த நூற்றாண்டின் கொடூரமான இயற்கைப் பேரழிவான சுனாமி விபத்து பற்றிய புகைப்படங்களில், ராய்ச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த தத்தா என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சுனாமியின் கோரத்தை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியது. கடலூர் அருகே சுனாமியில் தப்பிப் பிழைத்த ஒரு பெண்மணி இறந்த உறவினரின் உடலருகே விழுந்து கதறி அழும் காட்சி. உலக செய்திப்பட விருது பெற்ற புகைப்படமாக மாறியது.
மேலும், வித்தியாசமான பார்வைகள் கொண்ட புகைப்படக் கலைஞர்களின் செயல்பாடுகளும் நிறைந்திருக்கின்றன.
ஒரு யூத அமெரிக்கரான ஸ்பென்சர் ட்யூனிக் என்ற புகைப்படக் கலைஞரின் பாணி ‘மனிதர்களை நிர்வாணக் கோலத்தில் பல வித்தியாசமான போஸ்களில் புகைப்படம் எடுப்பது’. இஸ்ரேலின் சாக்கடலில் 1000க்கும் மேற்பட்டோர் நிர்வாணமாக கடலில் இறங்கி போஸ் கொடுத்த காட்சி, ‘சர்ச்சைக்குரிய இஸ்ரேலில் அடக்குமுறைக்கும் சுதந்திரத்திற்குமிடையிலான ஒரு கலாச்சாரப் பாலம்’ என்று சர்வதேசப் பத்திரிகைகள் பாராட்டுகின்றன.
வன விலங்குகளை படமெடுப்பதில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் லென்னெட்டி நிவெல் என்பவர் ‘அனி ஹியூமன்’ என்ற புகைப்பட பாணியை உருவாக்குகிறார். மனிதர்களை, சிறுத்தை மலைப்பாம்பு போன்ற காட்டு விலங்குகளைப் போன்று உடலில் வர்ணம் பூசிக்கொள்ள வைத்து, விலங்குகளாகவும், பறவைகளாகவும், மீன்களாகவும் மாறிப்போய்விடுகின்ற அபூர்வ தருணங்களை உருவாக்கிக் காட்டுகிறார் அவர்.
நிவெல் இது குறித்து கூறுகையில் ‘மனிதனுக்கு அவனது வேர்களை அடையாளம் காட்டவும், அவனது ஆதிமூலத்திற்கு அழைத்துக் செல்லவும் விரும்புகிறேன்’ என்று தெரிவிக்கிறார்.
இப்படிப் பல்வேறு கலாரசனைமிக்க புகைப்படக்கலைஞர்களையும் அவர்களது பிரமிக்கத்தக்க செயல்பாடுகளையும் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்; ஆனால் இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படக் கலைஞர்களையும் திருமணக் கலாச்சார விழாக்களில் புகைப்படம் எடுக்கும் கலைஞர்களையும் ஒரு சேர வைத்துப் பார்க்க முடியுமா? என்று கேள்வி வரும்போது, மார்க்சீயத்திலிருந்து ஆரம்பித்து, பின்நவீனத்துவம், பின்காலனியம் வரை முன்வைத்து, முழுக்க அதற்குரிய பதிலை வாதப்பிரதிவாதங்களுடன் முன்வைக்க முடியும். இப்போது சுருக்கமாகச் சொன்னால், இந்தக் கேள்விக்கு அவசியமேயில்லை.
அதனதன் நிலையில் அதற்குரித்தான விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
போகட்டும்; நாம் மறுபடியும் செல்வராகவனின் படத்திற்கு வருவோம்:
சரி. தான் எடுத்துக் கொண்ட கதையம்சத்திற்கு நேர்மையாக அல்லது முழுமையாக ஓர் ஆழமான அவதானிப்புடன் பாத்திர வார்ப்புகளை, காட்சிகளை உருவாக்கினாரா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அவர் கட்டமைத்துள்ள கானுயிர் புகைப்படக்கலை என்னும் பிம்பம் மேலோட்டமாக நுனிப்புல் மேய்ச்சலுடன் ஒரு மூன்றாந்தர பாத்திர வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளனின் கலாபூர்வமான காட்சிகள் அமைந்து விட்டால் மட்டுமே பாத்திரவார்ப்பு பூரணத்துவம் அடைந்துவிடும் என்பது கோலிவுட் நம்பிக்கை.
திருமணம் போன்ற கலாச்சார விழாக்களில் படம் எடுக்கும் ஒருவன் கானுயிர் புகைப்படக்கலைஞனாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் அதற்கு அடிப்டையான தகுதிகள் எதுகுறித்தும் அவன் யோசிப்பதுமில்லை, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வதுமில்லை. அடுத்த சிலபல காட்சிகளில் அவன் அதற்குரிய உயர்விருது பெறும் மாபெரும் கானுயிர் புகைப்படக் கலைஞனாகி விடுகிறான். இதுபோல எந்தவிதமான அடிப்படையுமில்லாத காட்சிகள் கொண்ட திரைப்படம், ஒரு புதிய அலை போல வந்த செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவருகின்ற போதுதான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. (இதுபோன்ற நைந்து போன Cliche போக்கிலிருந்து முற்றாக விலகி அவரால் எடுக்கப்பட்ட அற்புதமான படம் “புதுப்பேட்டை” என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.)
ஒரு பறவையைப் படம் பிடிப்பது என்பது ஒரு ஜென் தியானத்தைப் போல என்பார் பறவையியலாளர் சலீம் அலி. ஒரு குறிப்பிட்ட பறவையைப் படம் பிடிக்க வேண்டுமானால், அதுகுறித்துப் பல்வேறு விஷயங்களைத் தேடிப் படிக்க வேண்டும். விசாரிக்க வேண்டும். குறிப்புகள் எழுதவேண்டும். பல்வேறு இடங்களுக்குப் பயணம் போகவேண்டும். அதற்குரிய பருவமாற்றம் வருவதற்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்னும் என்னென்னமோ செய்ய வேண்டும். இதுபோன்ற காட்சிகளோ தருணங்களோ படத்தில் ஒரு 24 பிரேமில்கூட இல்லை. இப்படியெல்லாம் எடுத்தால் படம் டாக்குமெண்ட்ரி அல்லது ஆர்ட் ஃபிலிம் ஆகிவிடும் என்றெல்லாம் சொல்லித் தப்பிக்க வேண்டாம்.
ஏனென்றால் படம் முழுமைக்கும் இதுபோன்ற விஷயங்களை வைக்க வேண்டியதில்லை; ஆங்காங்கு சில விதைப்புகள்; ஆனால் ஆழமான விதைப்புகள்.
நண்பர் தருமராஜ் அனுப்பியிருந்த The Big Year என்ற ஹாலிவுட் படத்தைப்பற்றி இந்த இடத்தில் சொல்லலாம். Mark Obmascik எழுதிய உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம், கானுயிர் புகைப்படக்கலையை மிகவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் நேர்த்தியாகவும் கொண்டாட்டமாகவும் சொல்கிறது.
முதலில் படத்தின் பின்புலச் செய்திகளைப் பார்க்கலாம்:
‘பறவைகளைக் கவனித்தல்’ (Bird Watching) என்கிற அமைப்புகள் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் உண்டு. பறவைகளைக் கவனித்தல் என்பதை Birding என்றும் சுருக்கமாகச் சொல்வார்கள். இந்தப் பறவைகளைக் கவனித்தலில் புகழ் பெற்ற அமைப்பு National Audubon Society. ஆடுபன் என்கிற ஒரு அமெரிக்கரால் (நமது சலீம் அலியைப் போன்றவர்) தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு லாபநோக்கமற்ற சூழலியல் அமைப்பு. இந்த அமைப்பிலிருந்து பறவைகளுக்கான பத்திரிக்கைகள், பறவைகளைப் பார்ப்பவர்கள் வழிதவறிச் சென்று விட்டால் அவர்களை மீட்க, மீட்புநடவடிக்கைப் பொருட்கள், வாகனங்கள், வழிகாட்டுதல் செய்திகள்… என்று எண்ணற்ற செயல்பாடுகளில் இயங்கி வருகிறது. பல்வேறு விதமான பறவைகளின் இருப்பிடம், அங்கு போவதற்கான வழிகாட்டுதல்கள், அங்குள்ள சீதோஷ்ணச் சூழல், அங்குள்ள இயற்கைப் பிண்ணனி, பறவைகளைக் கவனிப்பவர் அங்கு எப்படித் தன்னை இணைத்துக் (Live) கொள்வது, பறவைகளோடு எப்படி இணக்கம் கொள்வது, கையாளுவது… என்பது போன்ற ஏராளமான செய்திக்குறிப்புகளுடன் உறுப்பினர்களை உருவாக்குகிறார்கள்.
இதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் வருடம் முழுக்க எண்ணற்ற பறவைகளைப் பார்க்க வேண்டும். அந்த வருட முடிவில் யார் அதிகமாகப் பறவைகளைப் பார்த்தார்கள் என்று பார்வையிட்டு அவர்களுக்கு அந்த வருடத்தின் விருது தரப்படும்.
பறவைகளைப் பார்த்தல் என்பது வெறுமனே பறவைகளைப் பார்த்தல் மட்டுமே அல்ல. அதுகுறித்த முக்கியான ஆவணங்கள், புகைப்படங்கள், குறிப்புகள், சூற்றுப்புறச்சூழல்கள் பற்றிய விவரணைகள்… இப்படிப்பல்வேறு விவரணைகளைப் பார்வையிட்டுத் தொகுத்து அந்த வருட விருதாளரைத் தேர்வு செய்வார்கள்.
இந்தப் படிமத்தை முன்வைத்து மிகவும் கலகலப்பாக (நம்ம ஊர் கோலிவுட்காரர்கள் சொல்லும் கமர்ஷியல் தன்மையுடன்) எடுக்கப்பட்டுள்ளது இந்தப்படம்.
இந்த பறவைகளைக் கவனித்தல் பற்றிய பயணம் என்பது வினோதமானது. பல்வேறு நாடுகளில், மலைகளில், தீவுகளில்… என்று எங்கெல்லாமோ சுற்றித்திரிதல். இந்தப் பயணத்திற்கான பொருளாதாரச் செலவுகளை எந்த ஒரு அமைப்பும் ஏற்றுக் கொள்வதில்லை. பணம், உழைப்பு, காலநேர விரயங்கள் எல்லாமே வீண்தான் (அதாவது ஒரு பொதுச் சமூகத்தின் பார்வையில்). எந்தவித்திலும் எங்கிருந்தும் பணமோ பொருளோ கிடைப்பதில்லை. ஒரே ஒரு விருதுதான். அதுவும் விருதுகூடக்கிடையாது. Honourதான். ஆனால், இதில் மிகப்பெரிய தொழிலதிபர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சூழலியலாளர்கள்… என்று ஒரு மிகப் பெரிய கூட்டமே அடிமையாகக் கிடக்கிறது.
படத்தில் இந்த ஆடுபன் அமைப்பைச் சேர்ந்த மூன்று நபர்கள் அந்த வருடம் தங்களுக்கான “பெரிய முக்கியமான வருடமாக” (The BigYear) இருக்க வேண்டும் என்று பறவைகளைப் பார்க்கக் கிளம்புகிறார்கள். தன்னைவிட அதிகமான பறவைகளை தன் சக நபர் பார்த்து விடுவாரோ என்ற பொறாமையில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவரைக் குழப்புவது, திசைமாற்றி விடுவது, நேர்மையாக இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள், தொழிலதிபருக்கு தன்னுடைய பலகோடி மதிப்பு மிக்க தொழிற்சாலையை விட்டு வந்ததால் ஏற்படும் சிக்கல்கள், காதலியைப் பறவையாகக் காணும் காதலன்… இப்படிப் பல்வேறு பிரச்னைகளுக்குள் உள்மடிப்பாகச் சொருகப்படும் பறவைகளைக் கவனித்தல் என்னும் படிமம் எப்படி வாழ்வுக்கூறுகளாக வாழ்வியலைத் தரிசிக்கும் தருணங்களாக மாறுகிறது என்பதனை அவ்வளவு அற்புதமாகச் சொல்லியுள்ளார் இயக்குனர் டேவிட் ஃபிரான்கெல்.
(இதேபோல வண்ணத்துப்பூச்சிகள் பற்றியும் சொல்லலாம்: புதிய அரிய வகை வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டுபிடித்தல், அவைகளின் சிறகுகளுக்குள் மறைந்துள்ள புதிர்ப்படிமங்கள், தொன்மங்கள் பற்றியும், அவைகுறித்து உலகளவில் வெளிவந்துள்ள நூல்கள், திரைப்படங்கள் பற்றியெல்லாம் நிறைய எழுதிக் கொண்டே போகலாம். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அவை இணை சேருவதற்காகவே மெக்ஸிகோவில் உள்ள ஒரு மலைப்பகுதிக்கு வந்து சேரும் வினோதமான புதிர்த்தன்மை, அந்த மலைப்பகுதியில் கமழும் புலனாகாத வாசனை, அதுகுறித்த ஆராய்ச்சிகள், படைப்பாளர்களின் படைப்பூக்கம் பற்றியெல்லாம் மற்றொரு தருணத்தில் விரிவாக எழுதலாம். வண்ணத்துப்பூச்சிகள் சேகரிப்பவரான உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விளாடிமர் நபக்கவ், ‘தான் எழுதுவதை விடவும் தனக்கு உவப்பான தருணங்கள் வண்ணத்துப்பூச்சிகளைச் சேகரிப்பதுதான்’ என்று பெருமையோடு சொல்லுவதையும்.)
அமெரிக்கக் கவிஞர் வாலஸ் ஸ்டீவன்ஸ் எழுதிய Thirteen Ways of Looking at a Blackbird என்ற நீண்ட கவிதையை வாசித்துப் பாருங்கள்:
இப்படியான சிறுசிறு காட்சித்துணுக்குகள் மூலம் ஆழமான பார்வையை இந்தக் கதையோட்டத்திற்குள் நுழைத்திருக்க முடியும்.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘புலனாகாத பறவை’ என்னும் கதையில், இந்த அற்புதமான உணர்வுகள் நேர்த்தியாக வெளியாகியிருக்கும். குலாம்முகமது என்னும் பறவையியலாளர் தன் வாழ்நாளில் இரட்டைவரிக்காடை என்னும் ஒரு அரிய பறவையைப் பார்த்துவிட வேண்டும் என்று அலைந்து திரிந்தவர். ஆனால் அவரது வாழ்வின் கடைசிவரை அவரால் அதைப் பார்க்க முடியாமலேயே போய்விடுகிறது.
“அந்தப் பறவையை யாரொருவர் பார்த்தாலும் அதற்கு முன்னால் நின்று என்பெயரை உரக்கச் சொல்லுங்கள்; அந்தப் பறவைக்காக தன்வாழ்நாள் முழுவதும் அதைத் தேடிக் கொண்டிருந்த மனிதனின் பெயரைக் கேட்டுக் கொள்ளட்டும்” என்பதுதான் அவரது கடைசி ஆசை.
இதுபோன்ற பல்வேறு கிளர்ச்சியூட்டும் மன உணர்வுகளையும், கானுயிர் உலகத்தின் நுட்பமான தகவல் பதிவுகளையும் அற்புதமாகப் பதிவாக்கியுள்ளார் எஸ்.ரா.
இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் கதைபடிப்பதற்கும் எழுதுவதற்கும்தான் அழகாக இருக்கும்; காட்சிப் படிமத்திற்கு ஒத்துவராது, அது விஷூவலைஸ்டு மீடியா என்று பந்தா செய்ய வேண்டியதில்லை. இந்த விஷயங்களைக் காட்சிப்படிமமாக்குவதுதான் கலைஞனின் வெற்றி; வெற்றுக்காட்சிகளில் மயங்கிப்போய் நிற்பதல்ல.
இந்தக் கதையோட்டத்தில் கானுயிர் புகைப்படக்கலையை விடவும் எளிய மக்களுக்கான கலையே போதும் என்று ஒரு முதிய பெண்மணியை புகைப்படம் எடுக்கும்போது தீர்மானிப்பான் கதாநாயகன். அந்தத் தருணங்களை விரித்திருந்தால் பொதுச்சமூகம் யோசிக்கும் பார்வை (Main stream) போக்கிலிருந்து விலகி ஒரு புதிய அலை தோன்றியிருக்கும்; தமிழ்சினிமாவின் மயக்கம் கலைந்திருக்கும்.
***
2012, ஜுன், தீராநதி இதழில் வெளிவந்த கட்டுரை
