- கோலா பூஃப்
- தமிழாக்கம் : லதா ராமகிருஷ்ணன்
மக்கள் அவளுடைய ஆளை ஏதோ ஒரு அழுக்குப் பிடித்த நாயைப் பற்றிப் பேசுவதுபோல் வசைபாடினார்கள். அத்தனை தனித்த பெண்ணாக இருக்கும் அவளால் அவர்களை எப்படி மறுத்துப் பேசவியலும்? என்றாலும், ஒவ்வொரு கணமும் அவள் அவனுக்காக ஏங்கினாள். காலை வேளைகளில் வேலைக்குப் போகும்போது, தனது வாயில், அவனுடைய தசையின் சுவையைத் தன்னால் நன்றாகவே உணர முடிவதுபோல் ஒரு உணர்வுத்தாக்கம் உண்டாகி, எச்சில் விழுங்கினால் அவனுடைய அந்தச் சுவையை இழக்க வேண்டி வந்து விடுமே என்ற பயத்தில் ஏறத்தாழ அரைமணிநேரம் வரை தொண்டைப் பகுதி தசைநார்கள் இறுகியிருக்கும்படியாக அப்படியே விட்டு வைத்திருப்பாள்.
அவனைக் கற்பனை செய்து பார்த்தாள் அவள். அவனுடைய தகுதிவாய்ந்த தன்னுணர்வு ததும்பும் சதுர வடிவத் தோள்கள் உலக வர்த்தக மையத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கும் அவனது பின்புறம் நிழலாடியது. பயங்கரவாதிகள் அதை வெடித்துச் சிதறடித்து அவனையும் தூள்தூளாகச் சிதறடிக்கும் வரை அந்தக் கட்டிடத்தை அவள் ஒருபோதும் கவனித்துப் பார்த்ததேயில்லை. அவன் தோற்றம் முன்புறம் பார்க்க எப்படியிருக்கும் என்ற கற்பனையில் அவள் தன்னைச் சித்திரவதை செய்து கொண்டாள். ‘என்னை நம்புங்கள்/கடவுளை நாம் நம்புவோம்’ என்று கூறுவதாய் ஒளிரும் அந்தக் கண்களை – அந்த அழகிய வரவேற்பறைப் பெண்ணை மீண்டும் பார்க்க வேண்டும் என்று, மிகத் துல்லியமாக அந்தத் தாழ்வாரங்களை ஒரு பாக்குவெட்டியின் எதிர்பார்ப்போடு அளவெடுத்துக் கொண்டிருக்கும் அவனுடைய பழுப்புநிறக் கண்களை – கற்பனை செய்து பார்த்துப் பார்த்துத் தன்னையே வருத்திக் கொண்டாள் அவள்.
நோயல்தான் தினமும் ஏதாவதொரு வேலை பார்த்து சம்பாதித்து வந்தவள். அவனல்ல. “அவன் உன்னை சரியாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்” அவளுடைய அம்மா உள்ளறையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொண்டே சீஷீuஸீரீ ணீஸீபீ tலீமீ ஸிமீstறீமீss தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தவாறே கூறினாள். “அப்படித்தான் அவன் உலக வர்த்தக மைய பாவகாரியத்தில் பொசுங்கிப் போனான். நல்லது, நல்லது, அவனுக்கு நன்றாக வேண்டும். அந்த அராபியன் நல்லவனல்ல. அவனுக்கு சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது. உன்னைத் திருமணம் செய்துகொள்ள ப்ராலி ஒற்றைக் காலில் நின்றதற்குக் காரணம் அப்பொழுதுதான் இந்த நாட்டுக் குடியுரிமை கிடைக்கும் என்பதுதான். அவனைப் பார்த்த முதல் நாளிலிருந்தே எனக்கு அவனுடைய உண்மை முகம் தெரிந்துவிட்டது. ஒரு கருப்பினத்தானைப் பிடித்துக் கொள் என்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன் நான்.”
“என்னை எந்தக் கருப்பனுக்கும் பிடிக்க வில்லை அம்மா” தன்னுடைய தாயார் ஹிஷ்ஷாமை மீண்டும் ஒருமுறை வாய்க்கு வந்தபடி வசை பாடுவதைக் கேட்க வேண்டியிருப்பதால் விளைந்த வலியை மீறி அவளால் சொல்ல முடிந்தது இதுதான். ஆனால், அதைக் கேட்ட மாத்திரத்தில் அவளுடைய தாயார் மீண்டும் சத்தம் போட்டாள், “அந்தச் சாக்குபோக்கெல்லாம் மறுபடியும் என்னிடம் சொல்லாதே. இப்போதுள்ள கருப்பினக் குமரிகள் அனைவரும் ஒரு மண்ணுக்கும் உபயோகமில்லை. சமையல் செய்வதிலும், வீட்டை நிர்வகிப்பதிலும் நீ கெட்டிக்காரி. ஒரு நல்ல வேலையில், வெள்ளைக்காரிகளுக்கு இணையாக வருமானம் சம்பாதிக்கிறாய். ஏராளமான கருப்பின ஆண்கள் உன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயம் விரும்புவார்கள்”
“ஓ, அப்படியானால், எனக்கு அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை”
அவள் கதவை அறைந்து சாத்திக்கொண்டு போனாள்.
ப்ரூக்ளின் நாய்கள் பின்னால் எங்கோ குரைத்தன. ஆனால் நோயலின் மனமுடைந்த நிலையிலிருந்த அறிவு அவளுடைய தனிமையை எட்டிப் பிடிக்க முன்னேகி அதை, அவளுடைய தனிமையை, அவளுடைய செவிப்பறைகளுக்கு மேலாக, அவளுடைய காதுகள் நீரால் நிரப்பப்பட்டது போல், அல்லது ஏதோ மலையுச்சி போன்ற உயரத்தால் நெரிக்கப்பட்டது போல், இருத்தி வைத்தது. நீலவானம் நியூயார்க் நகரின் மேல், உத்வேகமளிப்பதற்கு என்றில்லாமல் எள்ளி நகையாடுவதற்காகக் கடவுள் அதை அங்கே அவ்வாறு போர்த்தியிருப்பதுபோல் தோன்றும் விதத்தில் கவிந்திருந்தது. தான் இலக்கில்லாமல் கால்போன போக்கில் போய்க் கொண்டிருப்பது நோயலுக்கு உறைத்தது. நீர் அவளுடைய பார்வையை மங்கச் செய்து மேற்கொண்டு நடக்க விடாமல் செய்யும் வரை நடந்து கொண்டேயிருந்தாள் அவள். கண்ணை மறைக்கும் கோபக் கொந்தளிப்பினூடாய் அவளால் ஒரு மனித உருவம் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. உடனடியாக, அதை விலக்கித் தள்ளும் பாவத்தில் வலது கையை முன்னோக்கி நீட்ட நினைத்தாள் அவள். என்றாலும், எதிரே வருவது யார் என்று தெளிவாகத் தெரியாத நிலையில் அப்படிச் செய்ய அவளுக்கு அச்சமாக இருந்தது. அவர்கள் அவளுடைய கையை வெட்டி எறியக் கூடும். ச்சீ.
அவள் தன் நடையை நிறுத்திக் கொண்டாள். ஆனால், சரிவர நிற்க முடியாமல் பயத்தில் ஒரே தள்ளாட்டமாக இருந்தது. தெளிவாகப் பார்வைக்குப் புலப்படாத அந்த உருவமும் தானும் பிரபஞ்சத்தின் திடீர் குதியாட்டம் காரணமாக ஒருவரோடுவர் முட்டிக் கொள்ளும்படியாகி விடுமோ என்ற பயத்தில், அவர்களிருவரும் மோதிக்கொள்ள இருப்பதை அவளுடைய உடல் உணர்ந்து கொண்டு விட அதைத் தவிர்ப்பதற்காய் அவள் தன் உடலின் அசைவை ஏறத்தாழ மறுபக்கம் திருப்பி விட்ட நிலையில் ஒரு கரகரப்பான குரல் அவளைக் கண்டித்தது: “ஓடப் பார்க்காதே. அப்படி முயன்றால் பின் அவ்வளவு தான், கவனமிருக்கட்டும் சிறுக்கி மகளே”
அது ஓர் ஆண். வயதான கருப்பு இனத்தவன், உயரமாக, திடமாக, கையில் ஒரு கைத்தடியோடு இருந்தான். வளர்ந்த கேடுகெட்டக் கருப்பினக் குழந்தையொன்று நடைபாதையில் அழுது கொண்டிருப்பதைப் பார்த்துத் தனக்கு வேதனையாக இருப்பது குறித்து ஏதோ புகார் கூறுவதாய் முணுமுணுத்தவாறே அவளைக் கடந்து சென்றான். “உன்னை சர்ச் பக்கம் பார்த்தேனென்றால் அவ்வளவு தான்!’
நோயல் சிலையாக நின்றாள், தன்னுடைய கண்களை ஈரப்பதம் கூடிய ஒரு உலர்தன்மைக்குக் கொண்டு வந்து தெளிவாக்கிக் கொண்டாள். ஆனால், பார்வை எத்தனைக்கெத்தனை துலக்கமாகியதோ அத்தனைக்கத்தனை அவளுடைய தலைக்குள் மோதும் எண்ணங்களின் வேகம் அதிகரித்தது. நியூயார்க் நகரிலிருந்த ஆகாயம் தகர்ந்து விழுந்த சமயம் நினைவணுக்களின் சவப் பெட்டிகளுக்குள் நடனமாடின அந்த தொலைக் காட்சி பிம்பங்கள்…
கலவரத்தின் பிடியில் நியூயார்க் நகரம் சிக்கிக் கிடந்த போது, உச்சபட்ச பீதியில், ஊருக்குத் திரும்பி வந்திருந்த அவளுடைய தாயார் சாப்போராஹ், ஒரு மிகக் கச்சிதமான அவதானிப்பை முன் வைத்தாள். அது நோயல் மனதில் என்றைக்குமாய் நிலைத்து விட்டது. அந்த பயங்கர நிகழ்வுக்குப் பிறகான ஆரம்ப நாட்கள் அவை. வெண்சாம்பல் சூரியனை மங்கலாக்கிக் கொண்டிருந்த, பொந்துகள் பறவைகளற்றுக் காணப்பட்ட அந்த நடைபாதைவாச நாட்கள் அவை. அப்பொழுது நோயலின் தாய் கூறினாள்: “அத்தனை நாசமாய்ப் போன இடிபாடுகளுக்கிடையில் உயிரோடு புதைக்கப்பட்டு இருக்கக் கூடியவர்கள் அங்கே எத்தனை தனிமையில் வாடிக் கொண்டிருப்பார்கள்… உதவிக்கு யாரேனும் வந்து கொண்டிருக்கிறார்களா, இல்லையா என்று எதுவுமே தெரியாத நிலையில், எப்படியாவது உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில்… ஹோ, அதுதான் கொடுமையான தனிமை”
‘நான் எப்படி வெளியேறுவது?’
அங்கேயே தரையை வெறித்துப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். ஏனெனில், இத்தனை நாட்களுக்குப் பிறகும், அந்தக் கேடுகெட்ட இடிபாடுகளுக்கிடையில் ஹிஷ்ஷாம் புதையுண்டிருப்பதாக, அவளுடைய மனதைத் தன் கையில் ஏந்தியவாறு அதை அவன் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டிருப்பதான உணர்வு அவளை ஆக்கிரமித்திருந்தது. இன்னமும் உயிரோடு தான். அவள் அதை எடுத்துக் கொள்வதற்கு வந்து கொண்டிருக்கிறாளா இல்லையா என்று எதுவும் தெரியாமல்…
எனவே அவள் தன்னைத் தானே நடக்கச் செய்து கொண்டாள். ஹிஷ்ஷாமை அவளுக்குத் தெரிவதற்கு முன்பான அந்த நீள்நெடும் தனிமைக்காலத்தில் அவள் எழுதியிருந்த பாடல்களில் ஒன்றைத் தனக்குள்ளாக இசைத்துக் கொண்டாள், தனக்குத் தானே பாடிக் கொண்டாள் அவள்.
ஒருமுறை கூறினாய் நீ என்னைக் காதலிப்பதாக,
என் தொலைபேசி கிணுகிணுத்துக் கொண்டிருந்த காலத்தில்
வா வந்து இந்த நினைவை எடுத்துச் சென்றுவிடு
காரணம்
குழந்தைகள் ஓ, குழந்தைகள்
இறந்துவிட்டவைகளோடு விளையாடலாகாது
···
அந்தக் குண்டுவெடிப்பிற்கு சில நாட்கள் கழித்து அரசு அதிகாரிகள் நோயல் வசித்து வந்த அபார்ட்மெண்டிற்கு வந்தார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாள் பிற்பகல் சமயம் அவள் கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்கிய பின் வீடு திரும்பியபோது அவர்கள் அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவைகளைத் தலைகீழாகப் புரட்டியெடுத்துத் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர். ஒரு வெள்ளை மனிதனான, அரசாங்கப் பிரதிநிதி டிக் விக்கெர்ஸ், அவளிடம் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டான்: ஹிஷ்ஷாமுக்குப் பிடித்தவை என்ன, பிடிக்காதவை என்ன, அவனுடைய பழக்க வழக்கங்கள், அவனுடைய குடும்பத்தார், அவன் அவளைப் புணரும் விதம் என்று எல்லாவற்றையும் பற்றி சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.
“என்னுடைய நண்பன் ஒரு பயங்கரவாதி என்று நினைக்கிறீர்களா என்ன?”
“அவன் எந்த அளவு ஆழமாக இசுலாமிய மதத்தில் நம்பிக்கை வைத்திருந்தான் என்று சொல்?”
“பெரிய அளவு ஒன்றும் இல்லை. அவனுக்கென்று ஒரு மதம் இருந்தது என்ற அளவுக்குத் தான் அவனுடைய பிடிப்பு இருந்தது…”
“நீங்கள் எப்படி, மிஸ். ரீஸன்? உங்களுக்கும் இசுலாம் மதத்தில் ஆர்வமும், பிடிப்பும் இருந்ததா?”
“‘ஆமாம், நானும் ஒரு முஸ்லிமாக மாறுவேன்…’ என்று அவனிடம் கூறினேன். அப்படிச் செய்வதன் மூலம் அவனோடு நெருங்கியிருக்க முடியுமே என்பதால் தான்.”
“அவன் பாலஸ்தீனத்தைப் பற்றி என்ன கூறியிருக்கிறான்?”
“எதுவும் கூறியதில்லை”
“ஒஸாமா பின் லேடன் அல்லது ஜிஹாத் என்று ஒருநாளாவது பேசியிருக்கிறானா?”
“இல்லை”
“நீங்கள் இருவரும் அடிக்கடி எதைப் பற்றிப் பேசுவீர்கள்?”
“ம்ம்ம்… இசை குறித்துப் பேசுவோம். எங்களுக்குப் பணம் கிடைத்தால் அதைக் கொண்டு என்ன செய்வோம் என்பதைப் பற்றிப் பேசுவோம்”
“உலக வர்த்தக மையம் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்டபோது அவன் அதற்குள் தான் இருந்தான் என்பதற்கு உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?”
“எதுவுமில்லை”
“அப்படியானால், அவன் இன்னமும் உயிரோடு சுற்றித் திரிந்து கொண்டிருக்கக் கூடும் என்று நினைக்கிறாயா?”
“இல்லை. ப்ரேய்ட் பிட்ச் சொல்வதை நான் நம்புகிறேன்”
“ப்ரேய்ட் பிட்ச்?”
“ஹா, என்னுடைய நெருங்கிய தோழி அவள். கொலீன். ஆனால், அவளுடைய பதினான்கு வயது முதலே அவளை யாரும் கொலீன் என்று அழைப்பதில்லை. அவள் ஒரு வெள்ளையினப் பெண், என்றாலும் அவள் தலையைப் பின்னிப் போட்டுக் கொள்வாள். தவிர, எல்லா நேரமும் அவள் கருப்பின மக்களோடு தான் இருப்பாள். அவளை ‘ப்ரேய்ட் பிட்ச்‘ (பின்னல் சிறுக்கி) என்றே எல்லோரும் அழைக்க வேண்டுமென்று அவள் விரும்புவாள். ஏனெனில், அவள் தன்னுடைய முடியை ஒரு பக்கமாகப் பின்னிப் போட்டிருப்பது வழக்கம். அந்தக் கட்டிடத்திற்குள் அவன் நுழைவதை அவள் பார்த்திருக்கிறாள். அந்தத் தெருவைத் தாண்டியுள்ள இடத்தில் தான் அவள் வேலை பார்த்து வருகிறாள். அதனால், அந்தக் கட்டிடத்திற்குள் அவன் நுழைவதை அவள் பல முறை பார்த்திருக்கிறாள். அங்கேயுள்ள முதலீட்டு நிறுவனம் போன்ற ஏதோ ஓர் அலுவலகத்திற்கு, அங்கு வரவேற்புப் பணியாளராகப் பணிபுரியும் பெண்ணிடம் பேசுவதற்காகச் செல்வான் அவன். அன்றும் ப்ரேய்ட் பிட்ச் என்னைத் தொலைபேசியில் அழைத்து அவன் சற்று முன் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைவதைத் தான் பார்த்ததாகத் தெரிவித்தாள். அதன் பிறகு, பதினைந்து நிமிடங்கள் கழித்து தொலைக்காட்சிச் சானல்களெல்லாவற்றிலும் அந்தச் செய்தி ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது. பயங்கரவாதிகள் ஒரு விமானத்தை முதலீட்டு நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்த ஒரு தளத்தின் மீது மோதி அந்தக் கட்டிடத்தைத் தகர்த்து விட்டதாக எல்லாச் சானல்களிலும் செய்தி அலறிக் கொண்டிருந்தது. அந்த முதலீட்டு நிறுவனத்திற்குத் தான் ஹிஷ்ஷாம் எப்போதும், அந்த வரவேற்புப் பணிப்பெண்ணிடம் பேசுவதற்காகச் செல்வது வழக்கம்”
“ஜனாதிபதி தேர்தலில் நீ யாருக்கு வாக்களித்தாய்?”
“அதிபர் கிளிண்டனுக்கு”
“அதற்கு பிரத்யேகக் காரணம் ஏதேனும் உண்டா?”
“ம்ம்ம். ஏனெனில், அவர் பார்க்க அழகாக இருக்கிறார். தவிர, அவருக்கு ஸாக்ஸஃபோன் வாசிக்கத் தெரியும்”
“உறுதியான நடவடிக்கை (affirmative action) என்பது பற்றி உன் கருத்து என்ன, மிஸ்.ரீஸன்?”
“இந்த சொற்பிரயோகத்தை நான் கேட்டதுண்டு. ஆனால், அப்படியென்றால் என்ன?”
“ஹிஷ்ஷாம் அமெரிக்காவைப் பற்றி என்ன சொன்னான்?”
***
ஹிஷ்ஷாம் தான் அதை அடிக்கடி கூறுவது வழக்கம்!
மரிஜூவானா புகை ஒரு இருமலிலிருந்து சுருள் சுருளாய் வெளியேறியது.
நோயல், படுக்கையில் படுத்தவாறு, விட்டத்தையே வெறித்துப் பார்த்தவாறு, தன்னுடைய எண்ணம் சரியே என்று தனக்குத்தானே ஆமோதித்துக் கொள்வதாய் ஏறத்தாழ ஒரு விரலை நீட்டிச் சுட்டுபவளாய், வேகமாகத் தலையசைத்துக் கொண்டாள். அவன் தான் அதைக் கூறியது.
உடலுறவை ஒரு ஞாபகமாக மாற்ற நீ விரும்பும் பட்சத்தில், காதல் செய்ய நியூயார்க் நகர் ஓர் சிறந்த இடம்.
அவனிடம் தான் கேட்டது நோயலுக்கு நினைவு வந்தது: “அன்று நீ ஏன் நான் இருக்குமிடம் தேடி வந்தாய்? அன்று நான் உனக்கு அழகாகத் தென்பட்டேனா?”
“நான் உன்னிடம் வந்ததற்குக் காரணம் நாம் எல்லாவிடங்களிலும் பார்க்கக் கூடிய ஒருவரை நீ நினைவுபடுத்தியது தான்… இறைவன்.”
“நான் உனக்கு இறைவனை நினைவு படுத்தினேனா?”
“ஆமாம். ஏனெனில், நான் உன்னைப்போல் ஒரு பெண்ணை ஒருபோதும் பார்த்ததேயில்லை. கருப்பினப் பெண்களின் தனித்தன்மை அதுதான். உங்களில் ஒவ்வொருவரும் மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறீர்கள். உங்களுடைய நிறங்கள், வடிவங்கள், அந்த விசித்திரமான ஆப்பிரிக்கச் சிகையலங்காரங்கள், உங்களுடைய உச்சரிப்பு எல்லாமே. அமெரிக்கப் பெண்கள் எல்லோரிலும் கருப்பினப் பெண்கள் தான் என் மனதில் ஆர்வக் குறுகுறுப்பை அதிகம் தூண்டுபவர்கள். நீங்கள் எல்லோருமே காரியார்த்தமாகத் தான் அப்படியிருக்கிறீர்களா, அல்லது நீங்கள் எல்லோருமே இயல்பாகவே அப்படிப்பட்ட தனிப்பிறவிகள் தானா என்று எனக்குத் தெரியவில்லை. உன்னைப்போல் ஒரு பெண்ணை இதற்கு முன்பு ஒருபோதும் நான் பார்த்ததேயில்லை. ஆப்பிரிக்கப் பெண்களில் கூட. ஆப்பிரிக்கப் பெண்கள் வெள்ளைக்காரிகளைப் போல் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள். அம்மான் பகுதியில் சில ஆப்பிரிக்கப் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வழக்கமான அம்மாக்களாகவும், மனைவிகளாகவும் தான் இருந்தார்கள். ஆனால், கருப்பின அமெரிக்கப் பெண்கள் தனி. நீங்கள் எதை அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பதை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. எப்போதுமே கருப்பினப் பெண்களைப் பார்த்து எனக்குள் வியப்பும், குழப்பமுமாகக் கேட்டுக் கொள்வேன்: இந்த நாட்டில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்/ என்னவாகப் பொருள் கொள்ளப்படுகிறீர்கள்? நீங்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்? எனவே தான், உன்னைப் பார்த்தபோது எனக்குள் தோன்றிய எண்ணம் இதுவாகத் தான் இருந்தது: அவள் நாம் எல்லாவிடங்களிலும் பார்க்கக்கூடிய ஒருவர்… இறைவன்.”
அவன் ஒருவேளை பொய் சொல்லிக் கொண்டிருந்திருக்கக் கூடும், ஆனால், அவனுடைய ஆணுறுப்பு அவளுக்குள் வலியும், கதகதப்புமாக மோதிக் கொண்டிருந்தது. அவனுடைய உடலின் வெப்பம் சூரியனை ஒத்திருந்தது.
“ஹிஷ்ஷாம், உன்னை முதன்முதலாகப் பார்த்தபோது நீ ஒரு லத்தீனமெரிக்க அல்லது கிரேக்க ஆள் என்று எண்ணிக் கொண்டேன். ஐயோ, இந்த ஆள் எத்த்த்த்த்தனை அழகாக இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டேன்”
“நான் உன்னை முத்தமிட்டால் எத்தனை நன்றாயிருக்கும் என்று எண்ணினாயா?”
“ம்ம்ம், இல்லை – ஆனால்…” எத்தனை சிரித்தாலும் போதவில்லை அவளுக்கு.
அவனுடைய விரல்களுக்கிடையில், அவளுடைய மிருதுவான பின்னல்களில் இரண்டை எடுத்துக் கொண்டு, அந்த இருளில் அவற்றை முறுக்கிச் சுழற்றிக் கசக்கினான். அவற்றின் நறுமணம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். புது மழையும், தேங்காயை உடைத்ததுமே எழும் மணமும் கலந்த வாசனை அவளுடைய கூந்தலுக்கு இருந்தது.
“நான் அழகாக இருக்கிறேன் என்று நினைக்கிறாயா?”
“எதற்காக எப்பொழுதும் இதே கேள்வியை என்னிடம் நீ கேட்டுக் கொண்டிருக்கிறாய்?”
“நீ ஏன் எப்போதுமே இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதேயில்லை?”
“ஏனெனில், அழகு என்ற வார்த்தை உனக்கு நியாயம் செய்வதாக இல்லையென்று நான் கருதுகிறேன். நீ இறைவனைப் போன்றவள். நீ அழகு என்பதைக் காட்டிலும் மேலானவள்…”
“அப்படியானால், இறைவன் அழகானவன் என்று நீ நினைக்கவில்லையா?”
“கண்டிப்பாக இல்லை. அழகாக இருக்கும் எதுவும், யாரும் எப்பொழுதுமே அழகாக நிலைத்திருக்க முடியாது. அழகைப் பற்றிய மிக முக்கிய, மிக முழுமையான பாடம் அது தான். அழகு என்பது ஒரு நற்குணம் அல்ல. பாலுறவு என்பதை இறைவன் எதற்காக ஏற்படுத்தினாரோ அதே காரணத்திற்காகத் தான் அழகு என்பதையும் அவர் உருவாக்கினார். அதாவது, நாம் எத்தனை போலியானவர்கள் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுவதற்காக. எனக்கு அழகைப் பிடிக்காது. அதாவது, நீ அழகு என்பதை என்னவாகப் பொருள் கொண்டு பேசிக் கொண்டிருக் கிறாயோ, அந்த வகையான அழகு எனக்குப் பிடித்தமானதல்ல. எனக்குப் பிடித்த வகை அழகு – இரண்டு நாய்கள் புணர்ச்சிக்குப் பிறகு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து ஒட்டிக் கிடப்பதை நீ எப்போதாவது பார்த்ததுண்டா?”
“இப்போது நீ எதையெதையோ பிதற்றிக் கொண்டிருக்கிறாய்!”
“இல்லை. நான் முழு விழிப்போடு, மிகவும் உண்மையாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். ஹேய், என்னைப் பார், நான் வேடிக்கை பேசவில்லை நோயல், அந்த நிலை தான் உண்மையான அழகு. அது தான் உண்மையானது, அதுவே இறைவன்”
“ஆமாம், எதை வேண்டுமானாலும் என்னிடம் சொல். அதை நீ சொல்லும் வரை என்னால் சீராக இயங்கிக் கொண்டிருக்க முடிந்தது ஹிஷ்ஷாம். உன்னுடைய வேலை குறித்து ஓர் அறிக்கை தருவதென்றால், உன்னுடைய ‘குண்டி’ என்னை மிக அதிகமாகத் தான் பதம்பார்த்துக் கொண்டிருக்கிறது”
“என்னுடைய குண்டியா?” அவன் ஒரு புரியாத பாவத்தை முகத்தில் தாங்கிக் கொண்டு கேட்டான். “கருப்பினப் பெண்கள் இப்படியெல்லாம் பேசுவார்களா என்ன?”
“கண்டிப்பாக. காரணம், நாங்கள் இறைவன்…”
தன்னுடைய நாக்கை அவளுடைய வாய்க்குள் நுழைத்தவாறு, அவன் அவளுக்கு ஒரு முத்தம் தந்தான். கரும்பச்சைக் கரம் அவளுடைய பழுப்புநிற முலைகளை அழுத்தித் திருகி ஒன்றாக்கியது. அப்பொழுது அவன் கூறினான்:
“உடலுறவை ஒரு ஞாபகமாக மாற்ற நீ விரும்பும் பட்சத்தில், காதல் செய்ய நியூயார்க் நகர் ஒரு சிறந்த இடம்.”
“நாம் காதல் வயப்பட்டிருக்கிறோமா, ஹிஷ்ஷாம்?”
“நான் காதல் வயப்பட்டிருக்கிறேன்”
***
அவன் உலக வர்த்தக மையத்திலிருந்த அந்த அழகிய வரவேற்பாளப் பெண்ணிடம் கொண்டிருந்த ஈர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது அவர்களிருவரையும் ஒன்றாக வெடித்துச் சிதறச் செய்து, சாவிலும், அதற்கப்பால் என்றைக்குமாய் அவர்களிருவரையும் இணைத்து வைக்குமளவு உறுதியானதாய், தீவிரமானதாய், நோயல் அவன்மீது கொண்டிருந்த வேட்கையின், அவனுக்காகக் கொண்டிருந்த ஏக்கத்தின் தீவிரத்தைத் தாண்டிய அளவு இருந்திருக்கிறது என்ற எண்ணம் இப்பொழுது நோயலை சித்திரவதை செய்து கொண்டிருந்தது. நியாயமாக, அங்கே அப்படி ஒன்றாக வெடித்துச் சிதறியது நாம் இருவராகத் தான் இருந்திருக்க வேண்டும், நீயும் அவளுமல்ல, என்று எண்ணிக் கொண்டாள் நோயல். நாம் தான் காதல் வயப்பட்டிருந்தோம், செப்டம்பர் 11 அன்று நாம் தான் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
நான் ‘டாக்கோ’ இறைச்சியையும், வேறு பலவற்றையும் நம்முடைய சாப்பாட்டிற்காக உருக்கி கரைத்து வைத்திருந்தேன். இறுதியாக, அன்று நான் உன்னுடைய ‘உறுப்பை’ உறிஞ்சிச் சுவைக்கவிருந்தேன். அதைச் செய்யுமளவு, நம்முடைய உறவு வலுவானது, நிஜமானது என்ற தீர்மானம் எனக்குள் ஏற்பட்டு விட்டது. இந்தத் தலையலங்காரத் துணியைக் கூட நான் வாங்கி வைத்து விட்டேன். அன்று அதை என் தலையில் அணிந்து கொள்வதாக இருந்தேன். இசுலாமிய மரபுப்படி என்னுடைய கூந்தல் மூடப்பட்டிருக்கும் தோற்றத்தில் நான் எப்படியிருக்கிறேன் என்று நீ பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.
ஹிஷ்ஷாம், உன்னைச் சந்திப்பதற்கு முன்னால் என்னுடைய தந்தையைப் போன்ற ஆண்களைத் தவிர வேறுவகையான ஆண்கள் எனக்குத் தெரிய வருவார்கள் என்ற நினைப்பு கூட எனக்கு ஏற்பட்டதில்லை.
நீ என்னை ஏறிட்டுப் பார்க்கும் வரை நான் யார் கண்ணுக்கும் புலப்படாதவளாகவே இருந்தேன்.
நான் செய்ததெல்லாம், ஒவ்வொரு நாளும், பகற் கனவு காண்பதுதான்.
என்னிடமிருந்த நியூ யார்க் அப்ஸர்வர் பிரதியின் மீது – ஆகாயம் விழுந்து கொண்டிருப்பதைக் காண்பித்த அந்தப் பிரதியின் மீது, நான் ஒரு பால் பாயிண்ட் பேனாவைக் கையிலெடுத்து அந்த வண்ணப் புகைப்படம் பூராவும் எழுதித் தள்ளினேன்: காதல் ஒரு போதைப்பொருள், காதலே மருந்து, காதலே மருந்து, காதலே மருந்து. உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் அடியில் ஊர்ந்து சென்று உன்னோடு மரித்துப்போக விரும்பினேன் நான்.
***
“போய் வருகிறேன் நோயல்”
ப்ரேய்ட் பிட்சின் வெள்ளை மேனியையும் அவளுடைய நீளமான ஆப்பிரிக்க பாணியில் கயிறாக முறுக்கித் திரிக்கப்பட்டிருந்த பின்னலையும் ஒரு பார்வை பார்த்தால் போதும், எந்தவொரு கருப்பினப் பெண்ணின் பகற்கனவுகளும் பொடிப்பொடியாகி விடும். ஆனால், நோயல் அவளை இறுகக் கட்டிக் கொண்டாள். “ஹேய், என்ன இது?”
ஒரு ஜோடி பழுப்புநிறக் கண்கள் அவர்களை ஸ்டூடியோ ஒலியறையிலிருந்து கவனித்தன.
அந்த அமெரிக்கக் கொடி அவர்களுக்குப் பின்னாலிருந்த சுவர் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம். வெண்ணிற நட்சத்திரங்கள். நோயல் அவளுடைய பின்னல்களைத் தளர்த்தி கூந்தல் மென்மையாக அலையலையாய் சுருண்டு தவழும் ஆப்பிரிக்க பாணி சிகையலங்காரத்தில் அணிந்திருந்தாள். அது ஒரு அற்புதமான புதர்ச்செடி போல் காட்சியளித்தது.
அந்த பழுப்புநிறக் கண்கள் மின்னின, அவற்றின் வெறித்த பார்வை தனக்கு முன்னால் இருந்த அழகுகளை, அந்தக் கண்ணின் இயக்கம் அவற்றைக் கட்டுப் படுத்திக் கொண்டிருப்பது போல், உடைமையாக்கிக் கொண்டிருந்தன.
நோயல் கூறினாள்: “சைனாவில் பரவியிருக்கும் அந்தப் புதிய நோயைப் பற்றி நீ கேள்விப்பட்டாயா? SARS? அது கனடாவிலுள்ளவர்களை இப்பொழுது கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது”
“மக்கள்தொகைக் கட்டுப்பாடு” என்று மூக்கை உறிஞ்சிக் காட்டினாள் ப்ரேய்ட் பிட்ச். தான் சொல்வதற்கு உரிய அளவு தாக்கம் ஏற்படுத்துவதற்காய், புதிதாக சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறப் பூச்சிடப்பட்டிருந்த தனது கைவிரல் நகங்களை ஆட்டிக் காட்டினாள். அந்தக் கேடுகெட்ட விஷயத்தை ஆண்கள் ஒரு பரிசோதனைக் கூடத்தில் தயாரித்தார்கள், அதற்கான மருந்தை அவர்கள் ஏற்கனவே பதுக்கி வைத்தாகி விட்டது. உனக்கு நன்றாகவே தெரியும், கேடுகெட்ட சதாம் ஹுசேன் இன்னமும் செத்துத் தொலைக்கவில்லை என்று. புஷ் பீலா விட்டுக் கொண்டிருக்கிறான், அப்படிச் சொன்னால் நாம் அவனை மீண்டும் தேர்ந்தெடுப்போம் என்பதற்காகத் தான். அல்லது, ஒருவழியாக நாம் அவனுக்கே வாக்களிப்போம் என்பதற்காக என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்குமா, தெரியவில்லை. தனிப்பட்ட அளவில், க்ளிண்ட்டன் வர வேண்டும் என்பது தான் என் விருப்பம். அந்த ஆள் நல்லவனாகத் தான் இருந்தான். ஆனால், வர மாட்டான் தானே?” அவர்கள் ஆளுக்கொரு கையை நீட்டித் தட்டிக் கொண்டார்கள்.
ப்ரேய்ட் பிட்ச் ஒரு நியூபோர்ட் சிகரெட்டை அதன் பச்சைப் பெட்டியை உதறி வெளியே எடுத்தாள், அதை அவள் பற்ற வைத்தது, வாயில் வைத்துப் புகைத்தது, புகையை வெளியேற்றியது எல்லாம் ஒரே அசைவில் செய்தது போல் கண்டது. எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட நெருங்கிய தோழியொருத்தியின் மரணத்தை அறிவிப்பது போன்ற தொனியில் அவள் கூறினாள்: “நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன்.” கற்பலகையின் நிறத்திலிருந்த அவளுடைய ஆக்ரோஷமான கண்கள் அவள் பக்கம் பார்வையைத் திருப்பும்படி நோயலுக்குக் கட்டளையிட்டன.
“நாம் இருவரும் குழந்தைகளாக இருந்த காலத்தில் அந்த கூடைப்பந்து மைதானத்திற்குப் பின்பக்கமிருந்த அந்தப் பாழடைந்த தேவாலயத்தில் ஒரு இறந்த குழந்தையின் உடலைக் கண்டோமே, அந்த நிகழ்ச்சியைக் கனவு கண்டேன். நினைவிருக்கிறதா, எத்தனை ரப்பர் மாதிரி இருந்தது அது… முதலில் நாம் அதைப் பார்த்தபோது அது ஒரு பொம்மை என்றே நினைத்தோம், ஆனால், அது போலியல்ல; நிஜம்; உண்மையான குழந்தை.”
நோயலின் உதடுகள் “எனக்கு நினைவிருக்கிறது” என்ற வார்த்தைகளை வடிவமைத்தன என்றாலும், அவள் ஆம் என்பதாய் தலையசைத்த போது எந்த ஒலியுமே வெளிவரவில்லை.
“நாம் மீண்டும் அங்கே இருப்பதாகக் கனவு கண்டேன். அந்தக் குழந்தை முக்கால்வாசி இறந்து போயிருந்தது, அது ஒரு பெண்குழந்தை. ஆனால், அவள் இன்னமும் மூச்சுவிட்டுக் கொன்டிருந்தாள். நான் அவளுக்குப் பெயர் வைக்க வேண்டுமென்று விரும்பினாள் அவள். அவளுக்கு யாராவது பெயர் சூட்டும் வரை அவளால் இந்த உலகிலிருந்து விடுதலை பெற முடியாது என்று தெரிவித்தாள்”
நோயலின் மனதில் வேறொரு நினைவு பளிச்சிட்டது. அவளும், ப்ரேய்ட் பிட்சும், இன்னமும் பூப்பெய்யாத பருவத்தில், அந்தப் பாழடைந்த, ஆளரவமற்ற புழுதி படர்ந்த தேவாலயத் தாழ்வாரத்தில் தங்களுடைய ஜட்டிகளைக் கீழிறக்கிக் கொண்டு ஒருவர் மீதொருவர் அழுந்தத் தேய்த்துக் கொண்டவாறு, முத்தமிட்டுக் கொண்டும் ஒருவரையொருவர் துழாவியவாறும் இருந்த அந்த நினைவு.
அவர்களைக் கவனித்தவாறிருந்த அந்த பழுப்பு நிறக் கண்களை திடுமெனக் கண்ணீர் நிரப்பியது. இரவில், நிலவால் ஒளியூட்டப்பட்டு, பெருமகிழ்ச்சியைப் போல் அத்தனை பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்த கண்ணீர்த்துளிகள்.
ப்ரேய்ட் பிட்ச் கூறினாள்: “நாம் இங்கே பெயர் சூட்டப் படுவதற்காகவே வருகிறோம்”
நோயல் ப்ரேய்டைப் பார்த்து வெடித்தாள்: “நிறுத்து உன் பேச்சை! நான் அந்த இழவை ஞாபகம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. சில விஷயங்கள் நினைவு வைத்துக் கொள்ளத் தக்கவையல்ல”
“நான் அவளுக்கு யூஃபோரியா என்று பெயர் வைத்தேன்” என்று ஒரு எதிர்ப்புணர்வோடு பிடிவாதமாகப் பேசினாள் ப்ரேய்ட் பிட்ச். அவள் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருப்பதாகவும் அவளுடைய பெயர் யூஃபோரியா என்றும் அவளிடம் தெரிவித்தேன். மகிழ்ச்சிப் பெருக்கில் மனிதர்களை அழவைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவள் அவள் என்று எடுத்துரைத்தேன். அதன் பின், அவளுடைய ஆன்மா அவளது உடலை விட்டு நீங்கிச் செல்வதைப் பார்த்தேன், ஆனால் அவளுடைய கண்கள் – அவள் ஆகச் சிறந்த அழகு வாய்ந்த பழுப்புநிறக் கண்களைப் பெற்றிருந்தாள் -அவை என்னை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த, என்னைப் பாதுகாப்பாய் கண்காணித்தவாறு, கவனித்தவாறிருந்தன. நான் செல்லுமிடங்களிலெல்லாம் அவை என்னைப் பின்தொடர்ந்து வந்தன”
வாந்தியெடுக்கப்போவது போல் நோயலின் மார்பு வேகமாக ஏறித் தாழ்ந்தது. ஆனால், அதற்குப் பதிலாக, அவளுடைய கண்கள் ஈரப்பதமிக்க ஒரு கோபக் கொந்தளிப்பில் கனன்று வெடித்தன. அவள் தன்னுடைய தலையைக் குனிந்து கொண்டாள். அவளுடைய தேம்பலின் எதிர்பாராத வீச்சும், வேகமும் அவளுடைய முகத்தைத் திருகிக் கோணலாக்குவதையும், அவளுடைய தொண்டைக்குள் வெள்ளமாகப் பெருகி மூச்சுத் திணறச் செய்வதையும் அவளால் உணர முடிந்தது.
அந்தப் பழுப்புநிறக் கண்கள் மூடிக் கொண்டு அவர்களைப் போக அனுமதித்தபோது ப்ரேய்ட் புகையை இழுத்து விட்டுப் புன்முறுவலித்தாள்.
***
நோயல் தன் தாயிடம் கூறினாள்: “சில சமயங்களில் அவன் இறந்துவிடவில்லை என்ற நினைப்பு எனக்குள் தீவிரமாக எழுகிறது. அவன் அங்கே தான் எங்கேயோ இருப்பதாக நினைக்கிறேன்”
“அப்படி அவன் உயிரோடு இருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” அவளுடைய தாய் தோசையைத் திருப்பிப் போட்டவாறு போலியாகச் சிரி¢த்தாள். உன்னுடைய அத்தையின் ஆள் ஒருவன் ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிக் கொண்டு வருவதற்காய் முன்கதவு வழியாக வெளியே சென்றான். திரும்பி வரவேயில்லை. அவனுக்குப் பழி சொல்வதற்குத் தோதாய் எந்த வர்த்தக மையமும் இருக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான்”
“இல்லை, அவன் இறந்துவிட்டான்” என்று கோபமாக இரைந்தாள் நோயல். “ஹிஷ்ஷாம் செத்து விட்டான்”
“சரி, அவன் இறந்து விட்டானென்றால் யாரோ உன்னை எந்நேரமும் கவனித்துக் கொண்டிருப்பதான உணர்வு உனக்கு ஏன் எப்பொழுதும் ஏற்படுகிறது?”
“அதற்குக் காரணம், அரசாங்கம் தான். நான் இப்பொழுது செய்யும் எல்லாவற்றையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஓர் அராபியனோடு படுத்தேன். அது என்னை சந்தேகத்திற்கிடமானவளாகப் பார்க்க வைக்கிறது, இல்லையா?”
“நல்லது, அப்படியென்றால் போய் சில வெள்ளைக்காரர்களோடு படு. – நீ ஓர் அமெரிக்கப் பெண் என்பதை நிரூபி”
“அம்மா, நான் சொல்வதை நீ வேடிக்கையாக எடுத்துக் கொள்ளாமலிருந்தால் எத்தனை நன்றாயிருக்கும்”
“இங்கே பாருடி, நீ உன் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ வேண்டியது அவசியம். இறந்துபோய் விட்ட மனிதனின் நினைவில் ஆட்டுவிக்கப்படும் எந்தப் பெண்ணும் விலைமதிப்பற்ற பகல் வெளிச்சத்தை வீணாக்குகிறாள். இளமை ஒன்று மட்டும் தான் ஒரு பெண்ணுக்கு இலவசமாகக் கிடைக்கும் சொத்து, நோயல், அந்த நாசமாய்ப் போகிறவனின் நினைப்பை விட்டொழி!”
***
அவன் அன்று காலை மீண்டும் நோயலைக் கடந்து சென்றான். முற்றிலுமாய் மரத்துப் போயிருந்த அவனுடைய ஆணுறுப்புப் பையின் இரக்கமற்ற உணர்வின்மையை நடைபாதைக் குள்ளாய் அழுத்தி இறக்கிக் கொண்டிருந்தது. அவன், இம்முறை கண்ணீரற்றிருந்த, அவளுடைய முகத்திற்குள் ஆழ்ந்து நோக்கினான். அவளும் அவனைப் பார்த்து அது மீண்டும் அவனே தான் என்பதை உணர்ந்து கொண்டிருந்தாள். அவன் மிகவும் கருப்பாக, மிகவும் திமிர் பிடித்தவனாக, மிகவும் புராதனமான அளவில் சக்திவாய்ந்தவனாக, அவன் கடவுளாகத் தான் இருக்க முடியும் என்னும் அளவில் காணப்பட்டான். அந்த எல்லாம் வல்ல இறைவன் எப்படியிருக்கக் கூடும் என்று அவள் எப்பொழுதுமே மனக்கண்ணில் அவதானித்து வைந்திருப்பதைப் போலவே அத்தனை கேடுகெட்ட அதிகாரக் குவியலாக இருந்தான். அப்படி யில்லையெனில், அவள் அவனுடையதேயான குடலிலிருந்து வெளிப்பட்ட சிறு கட்டியாகத் தான் இருக்க வேண்டும் என்ற நிச்சயத்தோடு தன்னுடைய மின்னும் சலவைக்கல் விழிகளால் அவளுடைய குழந்தை முகத்தை சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கும் அந்த வெள்ளைமுடி அணிந்த சாக்லெட் இறைவனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள இடைவெளியை வேறு எப்படி விளக்க முடியும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் அண்மையிலிருக்கும்போது கூட அவர்கள் உணரும் அளப்பரிய தனிமையை இறைவனைத் தவிர வேறு யாரால் விளக்க இயலும்?
மக்கள், பூச்சிகளல்ல, மக்கள் தான் தங்களுடைய ஆன்மாக்களை – மற்ற ஆன்மாக்கள் அந்த கொலைகாரனின் மெய்மையிலிருந்து பிடுங்கியெடுத்துக் கொள்ளப்படவும், அவை யாருக்குத் தேவையாக உள்ளதோ அவர்களின் மதியநேரத்திலிருந்து பிளந்தெடுக்கப்படவும் – வசதியாய் விசையோடு கட்டிடங்களுக்குள் மோதியறைந்து விட்டார்கள். அவன் வீதியில் அவளைக் கடந்து சென்றபோது அவனுடைய கண்களில் கனன்று கொண்டிருந்த கடும் சீற்றத்தை நோயல் பார்த்திருந்திருக்கிறாள். அவனுடைய வாடி வதங்கிய கரங்களின் மூட்டு வீக்கங்களையும், கம்பளிப்புழு வடிவில் அமைந்திருக்கும், அடர் ரோஜா நிறத்திலான, அவனுடைய கீழுதட்டின் உட்புறமாய் சேகரமாகியவாறிருக்கும் எச்சிலையும் அவளால் உணர முடிந்திருக்கிறது. அவளுடைய அம்மா, மற்றும் ஏராளமான பேருக்கு அத்தகைய மேற்கு ஆப்பிரிக்க உதடுகள் வாய்த்திருக்கின்றன. இப்பொழுதெல்லாம், சில வெள்ளைக்காரர்களுக்குக் கூட. நாம் எல்லாவிடங்களிலும் பார்க்கக் கூடிய அந்த மனிதர்கள்.
ஆனால், அவன், தன்னுடைய ஆழ்ந்து கண்காணிக்கும் பழுப்பு நிறக் கண்களோடு, நோயல் போன்ற, தாம் தொலைந்து போய்விட்டதாக, எதையோ இழந்துபோய் விட்டதாக, தனிமையில் கரைவதாக, தங்களுடைய இச்சை, விரக்தி, நம்பிக்கையிழப்பு, குறித்தெல்லாம் கதைகளை இட்டுக்கட்டும் கலாபூர்வ மனிதர்களைப் பற்றிச் சிந்தித்தான். இறைவனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள், எல்லாவிடங்களிலும் நீங்கள் பார்க்கக் கூடியவர்கள்.
அவன் கூறுவதை அவளால் கேட்க முடியும் என்பது போல் அவன் பேசினான்: “நான் என்னுடைய வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்லப் போகிறேன்”. அந்தக் கரடுமுரடான தரை மீதாய் அவனுடைய பாதங்கள் பட நடந்து சென்றான். ஒரு பிரகாசமான ப்ரூக்ளின் நடைபாதை வெளியே அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது. பின், அவளுடைய குரலைக் கேட்டான் அவன். நோயலின் சன்னமான, புகார் கூறும், சங்கீதக் குரல். அது அவனை மேற்செல்ல விடாமல் வழியில் தடுத்து நிறுத்தியது, ஏனெனில், அதன் ஒலியைக் கொண்டு அவனால் தான் அங்கேயில்லை என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடிவதாக இருந்தது. அவளுடைய தனிமை அவளுக்குப் பிடித்தமான ‘ஸ்வெட்டர்’ போல் அவளைக் கததப்பாகப் போர்த்தியிருக்க, அவள் பாடினாள்:
உன் பிரியம் கொண்டு என்னை நிரப்பி
உன் வாழ்வின் சித்திரத்தை எனக்குக் காட்டிவிடு.
மேலே, உயரேயுள்ள இறைவனை எனக்குள் பரப்பி விடு.
எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்குச் சொல்லிவிடு.
****
எழுத்தாளர் அறிமுகம்:
பூஃப்பின் ஆரம்பகால வாழ்க்கை சோகம் நிறைந்தது. 1969 இல் எகிப்திய மற்றும் சூடானிய பெற்றோருக்கு பிறந்தார், அவரது தந்தை, ஹரித் பின் ஃபாரூக், ஒரு முக்கிய எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர், மற்றும் அவரது தாயார், ஜிடி ஒரு சூடானிய அரச குடும்பம். எட்டு வயதில், பூஃப் தனது பெற்றோரின் படுகொலையைக் கண்டார், இது அவரது வாழ்க்கையையும் எழுத்தையும் ஆழமாக வடிவமைத்தது. அனாதையாக, அவர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அமெரிக்காவில் தான் அவர் ஒரு எழுத்தாளராக தனது பாதையை உருவாக்கத் தொடங்கினார்.ஒரு எழுத்தாளராக கோலா பூப்பின் வாழ்க்கை 2000 களின் முற்பகுதியில் ஆர்வத்துடன் தொடங்கியது. அவரது படைப்புகள் பெரும்பாலும் இனம், அடையாளம் மற்றும் பெண்ணியம் ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராய்கின்றன, அவளுடைய தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்திலிருந்து வரையப்பட்டவை. அவரது மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்று Diary Of A Lost Girl என்ற சுயசரிதை அவளது கொந்தளிப்பான வாழ்க்கையைப் பற்றிய ஒரு பச்சையான மற்றும் அசைக்க முடியாத தோற்றத்தை வழங்குகிறது. மேலும், இனவெறியுடன் அவளது அனுபவங்கள், அடையாளத்துடனான அவளது போராட்டம் மற்றும் சுயத் தன்மையை – ஏற்றுக்கொள்வதை நோக்கிய அவளுடைய பயணம் ஆகியவற்றை புத்தகம் ஆராய்கிறது.
அவரது சுயசரிதைக்கு கூடுதலாக, பூஃப் பல நாவல்கள் மற்றும் கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார், இதில் The Sexy Part Of The Bible மற்றும் Nile River Woman ஆகியவை அடங்கும் . அவரது எழுத்து அதன் தெளிவான கதைசொல்லல் மற்றும் ஆப்பிரிக்க பெண்மையை மன்னிக்காத சித்தரிப்புக்காக அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட பண்புகள் அவரை சமகால இலக்கியத்தில் ஒரு தனித்துவமான குரலாக மாற்றுகிறது.
***
