• கௌதம சித்தார்த்தன்

 

 

இன்று அதிகாலையிலேயே தமிழி அலுவலகத்திற்கு வந்து விட்டேன். (ரொம்பக் கற்பனை செய்ய வேண்டாம், வீட்டிலிருந்து 100 மீட்டரில் இருக்கும் என் பழைய வீட்டின் தனியறை.)
  
சீனக் கவிதை ஒன்றை மொழியாக்கம் செய்ய…

நேற்று என் சீன நண்பர், டேனிஸ் மேயர், தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு சீனக் கவிதையை  எனக்கு அனுப்பியிருந்தார். அது தற்கால புகழ்பெற்ற சீனக் கவிஞரான மெங் லாங் எழுதியது.

அதை ஒரு வாசிப்பு செய்தேன்.

அட்டகாசமான காட்சிகளை எனக்குள் கிளர்த்திய அந்தக் கவிதை ஒரு சிலமணி நேரங்கள் என்னை  ஒரு ஆழ்நிலை தியானத்துக்குள்ளேயே  சுழட்டியடித்துக் கொண்டிருந்தது.

என்னால், வேறு எதுவும் செய்யமுடியாமல் அந்தக் கணங்களுக்கு ஒப்புக் கொடுத்து விட்டேன்.

சீனக் கவிஞரைப் பற்றி ஒரு தேடுதலில் வேட்டையில் இறங்கினேன்.
 
மெங் லாங் (Meng Lang : 1961 – 2018) ஒரு சீனக் கவிஞர் மற்றும் எதிர்ப்பாளர் (dissident). இந்த ஆங்கில வார்த்தைக்கான பொருளடக்கம் என்பது,  ஒரு நாட்டின்  நிறுவப்பட்ட அரசியல்  நிலைப்பாடுகள், மத அமைப்பு, கோட்பாடு, நம்பிக்கை,  இறையாண்மை போன்ற பல்வேறு கூறுகளை விமர்சித்து தீவிரமாக எதிர்க்கும் நபர். அவர், மனித உரிமைகள் அறிக்கை சாசனம் 08 -ல் கையெழுத்திட்டவர். (Charter 08 – உரிமைச் சாசனம் 08 என்பது, டிசம்பர் 2008 -ல்,  350 க்கும் மேற்பட்ட சீனக்கலைஞர்களாலும், செயல்பாட்டாளர்களாலும் முதலில் கையெழுத்திடப்பட்ட உரிமைப் பிரகடனச் சாசனம் ஆகும். இது சீனாவில் சர்வதிகாரத் தன்மை முடிக்கப்பட்டு, மக்களாட்சி வர வேண்டும் என்றும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது.) மற்றும் சுதந்திர சீன PEN மையத்தின் இணை நிறுவனர் ஆவார். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நாளை அதிகாலையில், இந்தக் கவிதையை தமிழில் மொழிபெயர்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து படுக்கைக்குப் போனேன். வழக்கத்திற்கு மாறாக, சற்று கண் அசந்துவிட்டேன். விழித்துப் பார்த்தால், உஷைப்பொழுது கலைந்து கொண்டிருந்தது. “நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவணநீடொளி தோன்றிற்று..” என வள்ளலாரின் திருப்பள்ளியெழுச்சி எனக்குள் ஒளித்தது. அவசரமாக எழுந்து, முகம் கைகால் சுத்தி செய்து, தமிழி வளாகத்திற்கு ஓடினேன்.

கணினியைத் திறந்து அந்தக் கவிதையை எடுத்து மறுவாசிப்பு செய்ய ஆரம்பித்தேன். எண்ண ஓட்டங்களில் பல்வேறு ரூபங்கள் இடைவெட்டின.

சட்டென, என் செல்பேசி அலறியது. எடுத்துப் பார்த்தால், என் மருமகளிடமிருந்து அழைப்பு: சகல ரூபங்களும் சடுதியில் கலைந்து போக, பதற்றத்துடன் எடுத்தேன். “அங்கிள் எங்கிருக்கீங்க..? சீக்கிரம் வீட்டுக்கு வாங்க.. அபராஜிதனுக்கு ஹெர்பேரியம் ஒர்க் பண்ணனும்.. அவுங்க ஸ்கூல்லே ஹோம் ஒர்க் கொடுத்திருக்காங்க… கொஞ்சம் இலைகள் வேணும்.. அப்பிடியே போயி நாலஞ்சு வகைகள்லே பறிச்சிட்டு வந்துடுங்க..” 

என் உடலில் ஏறியிருந்த அத்தனை உத்வேகமும் சரேலென இறங்கி விட்டது. திருவாசகத்திற்கும் உண்டோ மறுவாசகம்?

கணினியை அணைத்துவிட்டு எழுந்தேன். என்ன கொடுமையடா சாமி, ஒரு LKG பையனுக்கெல்லாமா ஹெர்பேரியம் ஒர்க்?

அப்படியே தோட்ட வயல்களை நோக்கி நடந்தேன். வித விதமான தாவரங்கள் தங்களது இலைகளை ஆட்டி, என்னை வரவேற்றன. ஒரு சில இலைகளைப் பறிக்க ஆயத்தமாகும்போது, எனக்குள் எழுந்த உணர்வு தடுத்தாட்கொண்டது. சாதாரண இலைகளைப் பறிக்கக் கூடாது, மிக மிக அபூர்வமான இலைகள்தான் வேண்டும். ‘இந்தக் கவிஞனின் மனதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது’.  (இது நகுலனின்  வார்த்தைகள்தானே..?)

அப்படியே தேட ஆரம்பித்தேன். பட்டையான ஊமத்தை இலைகள், சின்னஞ்சிறு குறிச்சி இலைகள், வெற்றிலையை போலி செய்யும் இதய வடிவ இலைகள், ..இலைகள்.. இலைகள்.. இலைகள்..

அப்பொழுது எதிர்ப்பட்டது, துளசி இலை மட்டுமல்ல, “துளசி மகத்துவ இலைகளுடன் குலுங்குகிறது” என்ற பசுவய்யாவின் கவிதை வரியும்தான். ஒரு துளசி இலைக் கொழுந்தைக் கிள்ளி வாயில் போட்டு மெல்லும்போது எனக்குள் இறங்கும் தாவரச்சாறு கிறக்கமூட்டியது.   
 
சட்டென என் காலில் பட்டது ஒரு தாவரத்தின் நீண்ட தண்டு. அதன் வினோதம் என்னை ஏதோ ஒரு அதிர்ச்சிக்குள் தள்ள, நான் நின்று நிதானித்து அந்தத் தாவரத்தைப் பார்த்தேன்.

கிளைகள் ஏதுமற்ற ஒரு ஒற்றைத் தாவரத் தண்டு! இன்னும் கூர்மையாக அவதானித்தால், அதன் அடிப்புறத் தண்டில் ஒரே ஒரு இலை. எனக்கு அது பெரும் விநோதமாகப் பட்டது. ஒரே ஒரு இலை கொண்ட ஒரு தாவரம்! அதன் வடிவமும், அந்த நிலையும் எனக்குள் பெரும் அற்புதத்தைத் தந்தது.

இது என்ன மாதிரியான தாவரம்? இதன் பெயர்தான் என்ன? என்று மருகினேன்.

ஒரு வேலை எல்லா  இலைகளும் உதிர்ந்து, கடைசியாக ஒரு இலை உதிர்வதற்காகக் காத்திருக்கிறதோ ? என்ன ஒரு அற்புதமான காட்சி அது! 

எனக்கு சட்டென, ஓ ஹென்றியின் “கடைசி இலை” (The Last Leaf) சிறுகதை என் உடலெங்கும் ஞாபக அடுக்குகளாகத் திறந்து கொண்டது. ஜான்சிக்கு வந்த நிமோனியா என்னைப் பற்றிக் கொண்டதா? 

*

அந்தக் கதை எனக்குள் ஒவ்வொரு காட்சியாக திரைச் சலனமாக ஓடியது, சட்டென கமலஹாசன் என்னும் திரைப்பட நடிகர் உள்ளே வந்தார். ஆம், ஞாபகம் வருகிறது, அந்த நடிகருக்கு (1990 கள் என்று நினைக்கிறேன்) இந்தக் கதை மய்யத்தை அப்படியே வைத்து, தமிழ் சார்ந்த ஒரு திரைமொழியில் திரைக்கதையாக எழுதியதும், அதற்கு “உன்னதம்” என்று தலைப்பு வைத்ததும், எனக்குள் நிழலாடின. இந்தத் திரைப்பட உருவாக்கத்திற்கான cast எல்லாம் தேர்வு செய்து வைத்திருந்தேன். இயக்கம் கே. விஸ்வநாத். அவர் மறுத்தால், அடியேன்.

கலை: பி.கிருஷ்ணமூர்த்தி. அடுத்துதான் ஒரு முக்கியமான ட்விஸ்ட், இசையமைப்பாளர் உங்களால் கற்பனை செய்ய முடியாதவர்! ஆம், அவர், வீணை காயத்ரி!  அவரை இது சம்பந்தமாக நேரில் சந்தித்துப் பேசிய நிகழ்வு ஞாபகம் வருகிறது. அப்பொழுது அவர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்த சமயம். கல்லூரிக்குச் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். அவரால் நம்ப முடியவில்லை.

அவர் பலத்த சிரிப்புடன், ” எனக்கு திரைப்பட இசையமைப்பு குறித்து எதுவுமே தெரியாதே சார்..” என்றார்.

“அது.. பார்த்துக் கொள்ளலாம்.. ” என்றேன்.

“சரி. அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை எதற்குத் தேர்வு செய்தீர்கள்?”

“நான் தேர்வு செய்யவில்லை.. இந்தக் கதைதான் தேர்வு செய்தது..”

அவர் புன்னகைத்தார். அதற்குள் தேநீர் வந்தது. தேநீர் அருந்தினோம். ஒரு, அரைமணி நேரம் இருக்கலாம்.. நான் கதையை அவரிடம் சுருக்கமாகச் சொன்னேன்.

“கமலஹாசன் ஓகே சொல்லிட்டாரா?”

“இல்லை அம்மா.. இனிமேல்தான் அவரிடம் பேச வேண்டும்..”

அவர் தலையசைத்துக் கொண்டார்.

 ஒரு சில மணித்துளிகள் அவரது வீணை ஆலாபனைகள் குறித்துப் பேசினேன்.

இறுதியாக, “சரி.. எல்லாம் முடிந்தவுடன் வாருங்கள்..”  என்று முக மலர்ச்சியுடன்  வாழ்த்து தெரிவித்து அனுப்பினார்.

ஆனால், கடைசி வரை கமல்ஹாசனைப் பார்க்காமலேயே போய் விட்டதும், மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்த அந்தக் கதை மெல்ல மெல்ல என்னிடமிருந்து மறைவதை ஒரு கையறு நிலையில் அவதானித்துக் கொண்டிருந்தேன். .

பல வருடங்கள் கழித்து ஒருநாள், என்னுடைய அந்தத் திரைக்கதை நோட்டை எடுத்துப் பார்த்த போது, அந்தக் கடைசி இலை,  உதிர்ந்து, சருகாகி விட்டதை, என் காலடியில் சப்தித்துக் காட்டிய சலனம் அந்த இடம் முழுக்க எதிரொலித்தது.

என் முன்னால் அசைந்தாடிக் கொண்டிருந்த அந்த ஒற்றை இலை, பழைய நினைவுகளை அசைபோட்டு விட்டது.

ஹா! இந்த இலைதான் வேண்டும். இதைத்தான் வரலாற்றின் எழுதப்படாத பக்கங்களில் பாடம் செய்யவேண்டும்.

அந்த “கடைசி இலையை” நடுங்கும் கரங்களால் பறித்தெடுத்தேன். 

(இந்த இடத்தில், ஒரு சிறு தகவல் : கலைஞர் மு. கருணாநிதி, ஓ ஹென்றி யின் இந்தக் கதையைத்  தழுவி, “ஒரு மரம் பூத்தது” என்ற தலைப்பில் 1985 -ல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இந்தத் தழுவலை, தனது நாவலின் முன்னுரையில் கலைஞனுக்கே உரித்தான தார்மிக அறத்துடன் குறிப்பிட்டுள்ளார் கலைஞர். (பல ஆண்டுகள் முதல்வராக இருந்த, அந்த மாபெரும் அரசியல் தலைவருக்கு இருந்த “கலை இலக்கிய அறம்” எந்த சினிமாக்காரனுக்கும் எப்பொழுதும் இருந்ததில்லை என்பது எவ்வளவு பெரிய irony!)    

மூலக்கதையின் மையக் கருவை எடுத்துக் கொண்டு, அதில் வரும், ‘இலைக்குப் பதிலாக, பூவை உருவகப்படுத்தி’ திராவிட வாழ்வின் யதார்த்தத்தோடு விரியும் அந்நாவல், அந்தக் காலகட்டத்தின் சமூகத்தால் புறக்கணிக்கப்படும்  கணவனை இழந்த கைம்பெண்களின் நிலையை மறுமலர்ச்சி கொள்ள வைத்திருக்கிறார். பெரியாரின் போர்க்குரலாக ஒலித்த “விதவை மறுமணம்” என்கிற திராவிடக் கொள்கையை முன் வைத்து, உருவான  அந்நாவலின் சொல்லாட்சியை வியந்தது ஞாபகம் வருகிறது.) 

 

*** 
      

இப்பொழுது பிற்பகலுக்கு மேல், நான் செய்த அந்தச் சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பைப் பார்த்து விடலாம், நான் உங்களுக்குள் ஏற்படுத்திய ஒரு வெகுஜன அழகியல் ரசனையிலிருந்து விலகி, தீவிர கலை இலக்கிய mood க்குத் திரும்புங்கள்:

கவிதையின் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு வரியையும் ஒரு யாத்ரீகனைப்போல அதற்குள் பயணம் போய் அனுபவித்துச் செய்தேன். கவிதையை முதலில் வாசித்தபோது ஏற்பட்ட உணர்வுகளுக்கும், இப்போதைய வாசிப்பில் ஏற்படுகின்ற எண்ண ஓட்டங்களுக்குமிடையிலான  உணர்வுகள் சொற்களாக மாறி விழும் அற்புதத்தை அனுபவித்தேன். 

*

 உறக்கநிலையில் உள்ள நகரம்
– மெங் லாங்

இலையுதிர்காலத்தைப்  பின்தொடர ஒரு உதிர்ந்த இலைக்குள் செல்லுங்கள்,
வெறிச்சோடிய ஒரு நீண்ட தெருவில்
ஒரு மனிதனை விட அதிக தூரம் நடக்க வேண்டும் 

உயர்ந்த மரங்களில் தொங்கும் சோக நாட்கள் இலைகளை உதிர்க்கின்றன
ஆனால் நான் வலியுடன் தொங்குவது, யாருடைய இதயத்தில்?  

தென்றலில் சாய்கிறது, ஒரு நீண்ட தெரு 
வெறுமையான அழுகையால் நிரம்பியிருக்கும்
மரத்தின் வேர்கள் எந்தப் பாதையில் புதைந்திருக்கின்றன?

பலம் கொண்டெழுந்து, வானத்தின் நீலவெளியைத் தொட்டு  
ஒரு வளைவில்  சரேலென அழுந்தித் தாழ்ந்து 
வாழ்க்கையின் எல்லையை நெருங்குகிறதொரு  தனி இலை

நான் அதைக் கைப்பற்றி, உதிர்ந்த இலையை உயர்த்தி,
ஒரு புதைகுழியில் இருப்பதைப் போல, நகரத்தின் புனிதமான உறக்கத்திற்கு அதை வழங்குகிறேன்

யாரும் எழவில்லை! யாரும் எழவில்லை!
இந்த நீண்ட வெறுமையான தெருவில், ஒரு மனிதனைப் போல, நான் இறுதிவரை நடப்பேன்!

*

ஒரு ஒற்றை இலையின் அசைவில், இந்தக் கவிதை நெகிழ்த்தும் காட்சிகள், மிகத் தீவிரமான அரசியல் பார்வையை – தன் நிலம் சார்ந்த அரசியல் விமர்சனத்தை – முன்வைக்கிறது.

தனது நிலம், கோமா போல பிறழ்நிலைத் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், ஒரு இலையின் மூலம், அதை எழுப்ப முடியும் என்றும் ஏங்கும் கவிஞர், நிலத்தின் ஆன்மாவுக்கு அதைக் கையளிக்கிறார். ஆனால், அது ஹெர்பேரியம் போல பாடம் செய்யப்பட்டிருப்பதான ஒரு காட்சியை உருவாக்குகிறது. 

அவரை “dissident” என்று அழைப்பது சரியானதுதான்.

***

(13.11.2024)