• சமந்தா ஹார்வே
  • தமிழில் : நன்மாறன் திருநாவுக்கரசு 

தலைகீழ் கதையாடல்களின் மனச்சோர்வு குறித்து விவாதிக்கிறார் சமந்தா ஹார்வே

 

 

சிறுவயதில் நாம் கதைகள் கேட்கும்போது நமது ஒட்டுமொத்த இருப்பும் நடுக்கம் தரும் அந்த ஒற்றைக் கேள்வியில்தான் நிலைகொண்டிருக்கும்- ‘அடுத்தது என்ன?’. நாம் டிவி பார்க்கும்போது விளம்பர இடைவேளை முடியக் காத்திருப்பது அந்தக் கேள்வியால்தான். நாம் வாசிக்கும்போது பக்கங்களைத் திருப்புவதும், ‘அடுத்த பக்கத்தில் ஏதோ இருக்கிறது, அதன்பின் வரும் பக்கங்களில் ஏதோ இருக்கிறது’ என்று நினைப்பதால்தான். அது நாடகத்தன்மை வாய்ந்தாக இருந்தாலும் சரி, நுட்பம் வாய்ந்தாக இருந்தாலும் சரி, நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதுதான் எல்லா வகைக் கதைசொல்லலையும் இயக்கும் இயந்திரம்.
 
அடுத்து என்ன வரப்போகிறது என்பதை அறியத் தூண்டும் உந்துதலுக்குள் பொதிந்திருப்பது, காரண-காரியம் பற்றிய புரிதல். A எனும் காரணம் B ஐ விளைவிக்கிறது. B, C ஐ விளைவிக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய நமது அனுபவமும் அதுதான். முன்னோக்கி நகரும் காலம் எனத் தோன்றுவதில் நாம் வாழ்கிறோம். அங்கு காரணத்தைத் தொடர்ந்து, விளைவு வருகிறது. இந்தத் தருணத்தில் இருந்து அடுத்தது என்ன என்பதைப் பின் சென்று காண முடிகிறது. அந்தப் பாதை மங்கலாய் அமையும்போது, பின் செல்ல இயலாதபோது, வாழ்வில் ஒரு விஷயம் எதற்கு, எப்படி நிகழ்ந்தது எனப் புரிந்து கொள்ள முடியாமல் பதற்றமடைந்து பயந்து நடுங்குகிறோம்.

‘அதன்பின் என்பதுதான் கதைசொல்லலுக்கு அடிப்படை எனும்போது, எனது கடைசி நாவல் முற்றிலுமாக தலைகீழ் வரிசையில் (reverse order) எனக்குள் வந்தவுடன் நான் சிறிது தளர்வுற்றேன். கவலை அடைந்தேன். எனது நாவல்கள் ஒருபோதும் இது போல முழுமையாக உருவாகி வந்ததில்லை. எழுதுவதற்கு தயார் நிலையிலும் வந்ததில்லை. அதனால் எனக்குக் கிடைத்ததை நான் விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும் என்பது புரிந்தது. ஆனால் தலைகீழ் ஒழுங்கில் எழுதுவது எப்படி?
 
நான் எனது முந்தைய நாவல்களில் காலத்தோடு வெளிப்படையாகக் கட்டிப் புரண்டுள்ளேன். காலம் நம்மை எப்படி பாதிக்கிறது, அதைப் பற்றிய நமது அனுபவம் மாறக்கூடியதாக, நமது நினைவுகள் தள்ளாட்டத்துடன் நம்பகத்தன்மையற்றுத் திரளும்போது,காலம் மட்டும் எப்படி முன்னோக்கிப் பாய்கிறது என்பது எனக்குத் திகைப்பூட்டியது. என் ஆக்கிரமித்தது. ஒரு நாவல், அதன் அழகிய நெகிழ்வுத்தன்மையால் அனைத்தையும் ஆராய்கிறது. காலத்தின் மரபுத்தன்மையுடன் விளையாடக்கூடிய தன்மை நாவலின் ஒரு குணாதியசமாகும். நாவலால் காலத்தைக் கத்தரிக்க முடியும், கலைத்துப் போட முடியும், பின்னோக்கியோ, முன்னோக்கியோ, ஒரே வரியில் நூற்றாண்டுகள் தாண்டவோ, ஒரே கணத்தில் 200 பக்கங்களில் நிலை கொள்ளவோ முடியும். அது நிகழும் காலத்தைச் சட்டென்று கி.மு.500-ல் இருந்து 1953-க்கும், அங்கிருந்து 2018-க்கும் மாற்ற விரும்பினால் அதற்கென்று எந்த நிதிக்  கட்டுப்பாடுகளும் கிடையாது. தளவாடங்களின் சீரான செயல்பாட்டை சீர்குலைக்கும் (Logistical) எந்தவிதமான தடைகளும் இல்லை. ‘இப்போது’ என்பது நகர்த்தக்கூடிய தளர்வுத் தன்மை கொண்டது. அது விரும்பியபடி தருணங்களை நீட்டவும் சுருக்கவும் முடியும்.

ஆனால் அதன் கதையாடல், முன்னோக்கி உந்தும் அதே கேள்வியால் சக்தியூட்டப்பட்டிருக்கிறது: ‘அடுத்தது என்ன?’.ஒருவேளை கதையாடல் பின்னோக்கிச் சொல்லப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? நாம் காண ஏங்கும் ‘அடுத்தது’ என்பது ஏற்கெனவே நிகழ்ந்திருந்தால்?

நான் இந்த நாவலை எழுதத்தொடங்கியபோது ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைக் கண்டுகொண்டேன்: ‘அடுத்தது என்ன?’ என்கிற கேள்விக்கு முன்னோக்கிய கதையாடலில் இருக்கும் அதே மதிப்பு, தலைகீழ் கதையாடலிலும் நிச்சயம் இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பும் வாசகரின் உந்துதலை, கதையாடலின் திசை, மடைமாற்றவோ, தடுக்கவோ செய்யாது. கதையாடலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வாசகர் தெரிந்து கொள்ள விரும்புகிறார். அந்த ‘அடுத்தது’ மறு நாளா, முந்தைய நாளா என்பதில் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படாது. நாம் 10 வது பக்கத்தில் இருக்கும்போது 11 வது பக்கத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதுதான் விஷயம். நாம் 3 வது அத்தியாயத்தில் இருக்கும் போது 4வது அத்தியாயத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதுதான் முக்கியம். மற்ற கதையில் இருப்பது போன்றுதான் இதுவும்.

மாறக்கூடிய விஷயம் நுணுக்கமும் முக்கியத்துவமும்தான். மூன்றாவது அத்தியாயத்தில் ஒருவர் இறந்துவிடுகிறார் என எனக்குத் தெரியும் என வைத்துக்கொள்வோம். 4வது, 5வது அத்தியாயங்களில் நான் அவருடைய நோய்மையையும், பிழைத்திருப்பதற்கான போராட்டையும் பார்க்க நேர்ந்தால், அடுத்தது என்ன எனும் கேள்வி  “அவள் இறந்துவிடுவாளா?” என்பது பற்றியதாக இருக்காது.  “அவள் எப்படி இறந்தாள் ?” என்பது பற்றியதாக மாறிவிடும். இங்கு, ‘என்ன’ என்பதில் இருந்து ‘எப்படி, ஏன்’ என்பதற்கு முக்கியத்துவம் மாறிவிடுகிறது. அல்லது, என்ன நடந்தது என்பது வாசகர்களின் உதடுகளில் வெளிப்படும் தவிர்க்க முடியாத கேள்வியாக இருப்பதால், கேள்விக்கான நோக்கம் மாறிவிடுகிறது எனச் சொல்வது சரியானதாக இருக்கும் – இப்போது வாசகர்களைத் தூண்டுவது ‘எப்படி, எதற்காக’ என்பவைதான். ஒரு நிகழ்வின் விளைவு என்ன என்பதைக் கண்டறிவதில் உள்ள ஆர்வத்தை விடுவித்து, ‘எப்படி, எதற்கு நடந்தது’ என்பதை நோக்கி வாசகரின் சிந்தனை செலவழிக்கப்படுகிறது.

நான், ஈவி வைல்ட் (Evie Wyld) -ன் All the Birds Singing வாசித்தபோது, அதன் தலைகீழ் கதையாடல் எப்படி அவசரமும் நிர்பந்தமும் வாய்ந்தாக இருக்கிறது என்பதில் அதிர்ச்சியுற்றேன். அந்த நாவலில் இரண்டு இணைக்கதைகள் உள்ளன. இரண்டுமே ஒரே நிகழ்கால கணத்தில் தொடங்குகின்றன. ஒன்று முன்னோக்கி நகர்கிறது. மற்றொன்று பின்னோக்கி நகர்கிறது. சுவாரஸ்யமான பின்னோக்கிச் செல்லும் கதைதான் வாசகர்களைப் பிடித்து வைத்து எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. அதுதான் கதாநாயகி யார் என்பதைப் பற்றிய தெளிவை, அவள் எப்படி இப்போதுள்ள நிலைக்கு வந்து சேர்ந்தாள் என்பதை, எதற்காக தற்கால நிகழ்வுகள் அரங்கேறுகின்றன என்பதை ஒளியூட்டுகிறது. ‘எப்படி, எதற்கு’ என்ற அதன் வெளிப்பாட்டில் எந்தத் தேக்கமும் இல்லை. ஒவ்வொரு காட்சியும் கடைசி காட்சியைப் பின் தொடர்கிறது. காட்சிகளின் ஊடாக பின்னோக்கி விரைவதில் இயக்கமும், அழிவாற்றலும் இடம் பெறுகின்றன. ஒவ்வொன்றும் அதன் முன்னோடிக்கு வழிவிடும் போது கிழித்தெறியப்படுகிறது. எல்லாமும் திரும்பப் பெறப்படுகிறது. திரும்பப் பெறுதல் வேகமாகவும், நிலைகுலைய வைப்பதாகவும் இருக்கிறது.
 

சாரா வாட்டர்ஸ் (Sarah Waters) -ன் The Night Watch வேறு வேகத்தில், ஆனால் அதே விடாப்பிடியான உந்துவிசையில் நகர்கிறது. இந்தச் சிக்கலான,அழகிய நாவல் அதிவேகத்தில் பறப்பதில்லை. அது நான்கு கதாபாத்திரங்களை 1947 முதல் 1941 வரையிலான காலகட்டத்தின் மூன்று பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதால்,போருக்குப் பிந்தைய நாட்களில் இருந்து போருக்கு முந்தைய லண்டன் நோக்கிப் பயணிப்பதால் ஆழ்சிந்தனையைத் தூண்டக் கூடியதாக, மந்த வேகத்தில் நகர்வதாக இருக்கிறது. ஆனால் வைல்டின் நாவலைப் போலவே, யார் இந்த மனிதர்கள், அவர்கள் வாழ்க்கை எது, எதற்காக இப்படி இருக்கிறது எனத் தெரிந்து கொள்ளும் பசி, முக்கியத்தும் வாய்ந்த உயிர்ப்புடன் இயங்கும் உலகைப் படைக்கிறது. மேலும் கொஞ்சம் கொஞ்சமாக நாம் அறிந்து வைத்திருக்கு மனிதர்களை வடிவமைத்த காரணிகளையும், அது உருவாக்கிய தாக்கங்களையும், துண்டுகளாக இணைத்துத் தெரிந்து கொள்கிறோம்.

என் மனதுக்கு, ஏறக்குறைய இது ஒரு தனி திருப்தியைத் தருகிறது. என் உடல்நிலையை மோசமாக்கியது எது? எனது கணவர் பிரிந்து செல்வதற்கு உந்துதலாக இருந்தது என்ன? என்பது போன்ற சில வாழ்க்கைச் சூழலுக்கு எவ்வாறு வந்து சேர்ந்தோம் என்கிற தெளிவான பார்வை இல்லாதபோது, அனைத்தும் சீர்குலைவதுபோல தோன்றும் தருணங்களில் பின்னோக்கிய கதையாடல் ஒருவிதத் தெளிவை மீட்டுத் தருகிறது. கண்டுபிடிக்க இயலாது எனக் கருதியதை மீண்டும் கண்டுபிடித்துத் தருவதில் இது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்குத் தடயவியல் குணநலன் உண்டு. கடந்த காலத்தை ஒளியூட்டி,நிகழ்வுகளில் பங்கு பெறும் கதாபாத்திரங்களை விட, வாசகரை அதிகம் தெரிந்தவராக்குகிறது.


பின்னோக்கிய கதையாடல் உயிர்ப்புடன் இருந்தாலும்கூட, பெரும்பாலான கதைகளைப் போல சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதால் அது உயிர்ப்புடன் இல்லை. மாறாக, சாத்தியமற்று இருப்பதால்தான் உயிர்ப்புடன் இருக்கிறது. அதில், எதிர்காலம் என்ற ஒன்று இருப்பதில்லை; நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அந்த நம்பிக்கை நிலத்தில் ஊன்றப்பட்டு விதையாவதற்கு இடமில்லை. ‘பிறகு என்ன’ என்று நாம் கேட்டால், அடுத்து வரும் விஷயங்களைப் பார்த்து, ஏற்கெனவே என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். இங்கு ‘அடுத்து’ என்பது புதிய விஷயமல்ல. நிகழ்வுகளின் போக்கை மாற்றக்கூடியதல்ல. அது, நிகழ்வுகளை தெளிவு படுத்த மட்டுமே செய்கிறது. இத்தகைய முட்டுச்சந்து தன்மையில் நான் அனுபவிப்பது ஒரு வகை மனச் சோர்வை. அடுத்த கணத்திற்கோ அல்லது  நிகழ்தலுக்கோ,  எந்த ஆக்கப்பூர்வமான, படைப்புச் சக்தியும் இல்லை. பின்னோக்கித் தேடிச் சென்று எதிரொலிக்கும் ஆற்றல் மட்டுமே இருக்கிறது. வாசகர் பாதி துப்பறிபவராக, கொஞ்சம் தொல்லியலாளராக, பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையை இழந்த தொடர் நிகழ்வுகளுக்கு நம்பத்தகுந்த சாட்சியாகவும் இருக்கிறார். நமக்குப் புரிய வரும் அனைத்தும், தாமதமாகப் புரிந்து கொள்ளப்படுபவை.
 

இந்த மனச்சோர்வு உணர்வில் மீட்சிக்கும் ஒரு பங்குள்ளது. தலைகீழ் கதையாடல் அதன் முகப்பிலேயே நம்பிக்கையை வரவழைக்கிறது. ஏனென்றால் பின்னோக்கிச் செல்வது ஒருவகையான அப்பாவித்தனத்திற்குத் திரும்புவதைச் சுட்டுகிறது. ஆனால் இது நம்பிக்கை வரவழைப்பதையும், நம்பிக்கையை மறுப்பதையும் சரிசமமாகச் செய்கிறது. வைல்ட், வாட்டர்ஸ் இருவரின் நாவல்களிலும் இது முற்றிலும் உண்மை.

The Night Watch-ன் கதாபாத்திரங்கள் சோர்வடைந்த, குண்டுகளால் சீர்குலையப்பட்ட, திவாலான பிரிட்டனில் வாழ்கின்றனர். அந்தக் காதாப்பத்திரங்கள் சோர்வடைந்து, தளர்ந்துபோய், பேய்களாய் சுற்றுகிறார்கள்.அதன் கதையாடல், அக்கதாபாத்திரங்களை ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், அவர்கள் வீரியமானவர்களாகவும், உறுதியான நோக்கம் கொண்டவர்களாகவும் இருந்த சந்தர்ப்பத்தில் விடுகிறது. போர் இன்னும் நான்கு வன்முறை நிறைந்த ஆண்டுகளுக்கு இழுத்துச் செல்லும் என்ற உண்மை அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. All the Birds singing நாவலின் கதைசொல்லியான ஜேக், தனது வலிமிகுந்த கதையை, வீட்டில் தனது குடும்பத்தில் நிறைவு செய்கிறாள். ‘நான் எப்போதும் இங்கேயே இருப்பேன்’ எனும் நம்பிக்கை வாய்ந்த உறுதியுடன்முடிக்கிறாள். எனது சொந்த நாவலிலும், திருச்சபை பாதிரியால் சொல்லப்படும் கதை, வெளிப்படையான வாய்ப்புகள் நிறைந்த இடத்தில் முடிகிறது. பாதிரி தன் திருச்சபையைச் சேர்ந்த ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அனைத்தும் மோசமாகப் போகலாம் என்று அதுவரை கற்பனை செய்து வைத்திருந்த எதுவும் நடைபெறாது என்ற ஆறுதலான எண்ணத்துடன் இருக்கும் போது கதை முடிவுறுகிறது. ஆனால் நிச்சயமாக அப்படி நடக்காது. அவர்கள் என்ன செய்வார்கள் என்பதும் நமக்குத் தெரியும். பின்னோக்கிச் செல்வதனால் நாம் காட்ட விரும்பும் அப்பாவித்தனம் என்பது அவர்கள் இழப்பின் வீரியத்தை வெளிக்காட்டுவதற்காக மட்டுமே.

இது என்னை மார்டின் அமிஸ் (Martin Amis) -ன் Time’s Arrow பற்றியும் சிந்திக்க வைக்கிறது. எதிர்த்திசை காலவரிசையைப் பயன்படுத்தியிருக்கும் பெரும்பாலான நாவல்களில் கதை பின்னோக்கிச் சொல்லப்படும், ஆனால் நிகழ்வுகள் வழக்கமான பாணியில் செல்லும். உங்களுக்கு பசிக்கும். நீங்கள் சாப்பிடுவீர்கள். உங்கள் வயிறு நிரம்பும். ஆனால், அமிஸுடைய உலகில் எல்லாமும் பின்னோக்கியதாக இருக்கும். வாழ்வின் ஒவ்வொரு துகளும். உங்கள் வயிறு நிரம்பி இருக்கும், நீங்கள் சாப்பிடுவீர்கள், உங்களுக்குப் பசிக்கும்.இந்த வகையில் கதாநாயக வாழ்க்கை முதிய வயதில் இருந்து பிறப்பு நோக்கி அவிழ்க்கப்படும். தலைகீழ் காரண, விளைவுகளால் தினசரி நிகழ்வுகளே விநோதமாகத் தோன்றும். (வேறு எந்த நாவலும் இதுபோன்ற ஆழமான முயற்சியை தலைகீழ் கதையாடலில் எடுத்ததில்லை. பிலிப் கே.டிக் (Philip K. Dick) -ன் Counter Clock Work ஒரு அளவுக்குச் செய்தது. ஆனால் இலகுவாக, திட்டவட்டமாகச் செய்தது.

 

Time’s Arrow – ல் ஒரு மீட்சி இடம் பெறுகிறது. ஆனால் கடுமையான, சங்கடங்கள் நிறைந்த மீட்சி. கதாநாயகன் ஒடிலோ ஒரு மருத்துவன். யூத இன அழிப்புக்குத் துணைபோனவன். பின்னோக்கிய கதையாடலில் அவன் படுகொலைகளுக்குத் துணைபோவதில் இருந்து குணமடைந்து, தன் வாழ்க்கையை மீட்டெடுக்கிறான். ஆஷ்விட்ஸுக்கு (வதைமுகாம் பகுதி) அவன் செல்லும்போது, அங்குள்ள கைதிகள் உயிருடன் கொண்டு வரப்படுகிறார்கள், கொல்லப்படுவதில்லை. அந்த நாவலின் கதைச்சொல்லி ஒடிலோ கிடையாது. ஆனால், அவனுடைய ஊசலாடும் இருப்பு புரிதலில்லாமல் அனைத்து நிகழ்வுகளையும் கவனிக்கிறது.

மேலும், இந்தக் கூறில் சக்திவாய்ந்த ஒன்று வெளிப்படுகிறது – ஏன் மக்கள் சாப்பிட்டும் பசியாக இருக்கிறார்கள் என்று கதைசொல்லி ஆச்சரியப்படுகிறான். மருத்துவரைப் பார்த்துவிட்டு ஏன் காத்திருப்பு அறையில் அமர்ந்திருகிறார்கள்? இந்தப் புரிந்து கொள்ள முடியாத நடத்தை இன அழிப்பின் அர்த்தமற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறது. மனிதர்கள் ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள்? இந்த நாவலின் காலவரிசை ஒவ்வொரு பக்கத்திலும் இந்தக் கேள்வியை எழுப்பும் அதேநேரத்தில், அது ஒடிலோவை மனிதாபிமானச் செயலுக்குத் தள்ளுகிறது. அது அவனது கொடூரத்தை மறுக்கிறது. இறுதியில் அவனையே மறுத்து, அவன் பிறக்காதபடி தகர்க்கிறது. அதைச் செய்வதன் மூலம் சுத்திகரித்து, பாவத்தை நிவர்த்தி செய்கிறது.

இறுதியில், காலம், திரும்பிப்  பயணிப்பதை கதைசொல்லி புரிந்து கொள்வதால் ஒடிலோ யார் என்பதையும், அவன் என்ன செய்தான் என்பதையும், அவன் செய்ததை நிர்வர்த்தி செய்ய முடியாது என்பதையும் உணர்கிறான். பின்னோக்கிய கதையாடலில் மீட்சியின் இந்தச் சிதைவு, Time’s Arrow -ல் வெளிப்படையாக அமைந்தது தவிர்க்க முடியாதது என நினைக்கிறேன். ஈவி வைல்டினுடைய ஜேக், எப்போதும் அங்கேயே இருக்கப் போவதில்லை, நாம் அவளுக்கு என்ன நடந்தது எனப் பார்த்து விட்டோம். என்னுடைய பாதிரியாரின் ஆறுதலும் வெறுமையானது என்பது நமக்குத் தெரியும்.

தலைகீழ் கதையாடல்கள், வாசகரின் இயல்பான அபிலாஷைகளான எதிர்பார்ப்பு, உந்துதல், நம்பிக்கை, மீட்சி, ‘அடுத்தது என்ன’ என்பவற்றில் ஆர்வம்.. என அனைத்தையும் பயன்படுத்திக்கொள்கிறது. அது இந்தத் தூண்டுகோல்கள் எதையும் மறுக்கவில்லை. சொல்லப்போனால் நமது நம்பிக்கைகள் எவ்வளவு அற்பமானது, இருப்பினும் நாம் நம்பிக்கையை விடாமல் எப்படித் திடமாக இருக்கிறோம் என்பதைக் காட்ட எல்லாவற்றையும் அனுமதிக்கிறது.

எனது நம்பிக்கைகளையும், வாசிப்பின் தூண்டுதல்களையும் தலைகீழாக மாற்றித் தடைசெய்வதன் மூலம்,‘அடுத்தது என்ன நடக்கப்போகிறது’ என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆசையைவிட, அடுத்து நடக்கப்போகும் விஷயம் தரும் நிறைவை விட, ஆழமான, மிகச் சுவாரஸ்யமான ஒன்று அப்போது வெளிபடுகிறது. The Night Watch-ன் விமர்சகராக அதன் கதாபாத்திரங்கள் பற்றி நான் சொல்வது, ‘அவையல்ல, நாம்தான் நாவலின் இறுதியில் முதிர்ச்சியை, ஞானத்தை, வருத்தத்தை உணர்கிறோம்’ இதுதான் உண்மை. புத்தகம் கீழே வைக்கப்பட்டு விட்டது. ஆனால் நிறைவடையவில்லை.அது தொடர்கிறது. இதற்கு மேல் சாத்தியமில்லை எனக் கருதும் எல்லாவற்றிலும், நமக்குத் தெரிந்த, நன்கு புரிந்து கொண்ட அதற்கு மேல் முன்னோகிய இயக்கம் இல்லை என்றான வாழ்க்கையிலும் அதன் உயிர்ப்பு வெளிபடுக்கிறது. அச்சு இல்லாமல் சுழலும் சக்கரத்தைப்போல.

The Night Watch -ன் முதல் வரியில் வாட்டர்ஸ் இவ்வாறு எழுதுகிறார்: “கே தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறாள் : கடிகாரங்களும் கைக்கடிகாரங்களும் நின்றுபோன ஒரு மனிதராகத்தான் நீ ஆகியிருக்கிறாய்.”

நிச்சயமாக, அங்கிருந்து அவளது கதையும் நின்றுவிடுகிறது. மற்றது அனைத்தும் முடிந்த சரித்திரமாகி விட்டது – அதிலிருந்து நாவல் தொடங்குகிறது.

 

***
நன்றி : Lit Hub