சமகால இலக்கியத்தில், remix எனப்படும் எழுத்து பாணி, ஜப்பானில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க கையாளப்பட்டு வருகிறது. ரீமிக்ஸ் என்கிற வார்த்தைப் பதத்தை நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும், “Retell” அல்லது Re create எனப்படும் மீள் உருவாக்கம் என்ற கருத்துருவத்துடன் ஒப்பு நோக்கம் செய்யக்கூடாது.

மீள் உருவாக்கம் என்பது ஒரு புகழ் பெற்ற காவிய வகையில், புராணிக வகைகளில், செவ்வியல் படைப்புகளில், நாட்டுப்புறக் கதைகளில்  இருந்து ஒரு பகுதியின் மையக்கருவை எடுத்து, அதை தனது தற்காலப் பார்வையில் மீண்டும் சொல்லுதல், அல்லது மீண்டும் புதிய வழியில் சொல்லுதல் என்னும் கதை பாணிக்கு “மீள் உருவாக்கம்” என்று சொல்லலாம்.

இன்னும் விரிவாகச் சொன்னால், மஹாபாரதம் என்னும் நம் இந்திய இதிகாசத்தை எடுத்து, அதில் உள்ள சில பகுதிகளை புதிய பார்வையில் எழுதப்படும் பாணிக்கு, மீள் உருவாக்கம் என்று வழங்கப்படுவதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், ரீமிக்ஸ் எழுத்து என்பது ஏற்கனவே உள்ள பொருட்களை மாற்றுவதன் மூலம் அல்லது இணைப்பதன் மூலம் ஒரு புதிய எழுத்தை உருவாக்கும் செயல்முறை. புதிய யோசனைகள், கதைகள் அல்லது சிந்தனை வழிகளை உருவாக்க ஏற்கனவே உள்ள கதை மையத்தில், பல்வேறு உரையின் பகுதிகளைக் கலப்பது, அகற்றுவது அல்லது மறுசீரமைப்பது ஆகியவை இதில் அடங்கும். ஆகவே, இதை மறு சீரமைப்பு என்று கொள்ளலாம். 

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், நம் தற்கால திரைப்படம் சார்ந்த இசைப்பாடல்களில் ரீமிக்ஸ் செய்வது போல – பாடலின் வரிகளை முந்தைய இசைத்தாளத்தை மாற்றி புதிய ராக பாவங்களைக் கலப்பது, அதன் சரணம், பல்லவிகளை மாற்றுவது என்று சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.

அதுபோல, படைப்பெழுத்தில், ரீமிக்ஸ் என்னும் “மறு சீரமைப்பு” பாணியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தும் விதமாக, தமிழி இதழ் இந்தக் கதையை வெளியிடுகிறது. இது ஒரிஜினல் செவ்வியல் கதை. இதன் “மறு சீரமைப்பு”  கதை நாளை வெளிவருகிறது. வாசகர்கள் வரிசைக்கிரமமாக நுட்பமாகப் படித்து இந்தப் பாணியைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். 

– ஆசிரியர், தமிழி.

 

***

 

  • கெஞ்சி மியாசாவா
  • ஆங்கிலத்தில் : ஜான் பெஸ்டர்
  • தமிழில் : நன்மாறன் திருநாவுக்கரசு 

 

***

நமிடோகோ சிகரத்தில் வாழும் கரடிகளின் கதை சுவாரஸ்யமானவை. நமிடோகோ என்பது பரந்தமலை. அதனுள் எங்கிருந்தோ ஃபுச்சிசாவா நதி தொடங்குகிறது. அம்மலையானது வருடத்தின் பெரும்பான்மை நாட்களை மூடுபனிகளையும் மேகங்களையும் சுவாசித்து வெளியேற்றுவதில் செலவழிக்கிறது. அதைச் சுற்றிய முகடுகள் அனைத்தும் பார்ப்பதற்கு கரும்பச்சை போர்த்திய கடல் அட்டைகள் போலவோ, வழுக்கை விழுந்த கோப்லின் மீன்கள் போலவோ காட்சியளிக்கின்றன. பாதி தூரம் மேலே சென்றால் வாய்பிளந்திருக்கும் பெரும்குகை ஒன்றில், ஃபுச்சிசாவா நதி திடீரென முந்நூறு அடி நீர்வீழ்ச்சியாய் விழுந்து, அடர்ந்து வளர்ந்த சைப்பிரஸ், மேபில்ஸ் மரங்களிடையே இடி முழக்கமாய் பயணிக்கிறது.

பழைய நெடுஞ்சாலையை இப்போதெல்லாம் யாரும் பிரயோகிப்பது இல்லை. பட்டர்பர் செடியின் தழைகளும், நாட்வீட்செடியின் களைகளும் மட்டுமே எல்லா இடங்களிலும் வளர்ந்திருந்தன. கால்நடைகள் வழிமாறித் தொலைவதைத் தடுக்கவும், சரிவுகளில் ஏறுவதைத் தவிர்க்கவும் வழியில் வேலிகள் அமைத்த சில இடங்களும் உண்டு. சலசலக்கும் அடிதாவரங்களைக் கொண்ட நிலத்தினூடாகச் சுமார் ஆறு மைல் தூரம் பயணித்தால், மலை உச்சியில் காற்று ஊளையிடும் சத்தத்தைத் தொலைவிலிருந்து கேட்பீர்கள். அதே திசையில் கவனமாக ஊடுருவிச் சென்றால், வெண்பனியின் கலக்கத்தில் நீண்ட, வெள்ளை நிற, குறுகிய ஒன்று மலையின் கீழ் செல்வதைக் கண்டு குழம்பலாம்: அதுதான் ஓசோரா நீர்வீழ்ச்சி.அந்தப் பகுதியில்தான் எத்தனையோ கரடிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். நமிடோகோ சிகரத்தையோ, புதிதாய் கொல்லப்பட்ட கரடியின் ஈரலையோ நான் பார்த்ததில்லை. இவை அனைத்தும் வேறு சிலரிடம் இருந்து நான் கேட்டறிந்தவை அல்லது நானாகக் கருதிக் கொண்டவை. அவை முற்றிலும் உண்மையில்லாமலும் இருக்கலாம், ஆனாலும் நான் நம்புகிறேன்.

நமிடோகோ சிகரம் வயிற்று வலிகளை ஆற்றும், காயங்களைக் குணப்படுத்தும் கரடியின் ஈரலுக்குப் பெயர் போனது என்பது தெரியும். நமாரி வெப்ப நீரூற்றின் நுழைவாயிலில், ‘நமிடோகோ சிகரத்தில் வாழும் கரடியின் ஈரல்’ என்று பொறிக்கப்பட்ட பலகை இருக்கும். ஆதலால் அம்மலையில் நிச்சயம் கரடிகள் இருக்க வேண்டும். இளஞ்சிவப்பு நாவை தொங்கவிட்டபடி, ஒன்றையொன்று குறும்புத்தனமாக மோதிக் கொண்டு, ஒருகட்டத்தில் நிதானமிழந்து காதுகளில் அறைந்தவாறே பள்ளத்தாக்கைக் கடக்கும் கரடிக் குட்டிகளை என்னால் பார்க்க முடிகிறது.  இதுபோன்ற கரடிகளைத்தான் புகழ்பெற்ற வேட்டைக்காரர் கோஜுரோ ஃபுச்சிசாவா ஒரு காலத்தில் சுதந்திரமாகக் கொன்று குவித்தார்.

கோஜுரோ அடர் நிறத் தோலும், வலிய உடல்வாகும், மாறு கண்ணும் உடைய நடுத்தர வயது ஆள். அவரது உடல் பெருத்த பீப்பாயைப் போலவும், அவரது கைகள் கிடாஜிமா சன்னதியில் மக்களின் நோய் தீர்க்கும் பிஷாமோன் கடவுளின் கைரேகையைப் போலவும் பெரியதாகவும் தடிமனாகவும் இருந்தன.கோடைக்காலத்தில் மழையில் இருந்து காத்துக் கொள்ள மரப்பட்டையால் ஆன தொங்காடையும், காற்சட்டையையும் அணிந்திருப்பார். விறகு வெட்டும் கோடாரியையும், கனம் வாய்ந்த பழங்காலக் குழாய் போன்ற துப்பாக்கி ஒன்றையும் ஏந்திச் செல்வார். மஞ்சள் நிற பெரிய வேட்டை நாய் ஒன்று பின் தொடர, நமிடோகோ மலையிலிருந்து ஷிடோக் பள்ளத்தாக்கு வரை, மிட்சுமாட்டாவிலிருந்து சக்கை மலை வரை, மாமியானா காட்டில் இருந்து ஷிரா பள்ளத்தாக்கு வரை அலைந்து திரிவார்.

பழமை வாய்ந்த வறண்ட பள்ளதாக்குகளின் மீது அவர் ஏறிய போது, மரங்கள் வளர்ந்து நிழலடர்ந்த பச்சை சுரங்கத்திற்குள் செல்வதுபோல இருந்தது. சில நேரங்களில் பச்சையும் தங்கமும் சேர்ந்த வண்ணங்களில் பிரகாசித்தது.மற்ற நேரங்களில் அவ்விடத்தைச் சுற்றி சூரியக்கதிர் விழுந்து பூத்துக் குலுங்குவதாய் தோன்றியது. கோஜுரோ தன் இல்லத்தில் சொந்த வாழ்வறையில் இருப்பதுபோல நிதானமும் ஆழமும் மிக்க வேகத்தில் நடந்தார். நாய் அவரை முந்திக் கொண்டு உயரமான கரைகளைத் தாண்டியும், நீரில் குதித்தெழும்பியும் ஓடியது. மந்தமான, அச்சமூட்டும் தேங்கிய நீரை தன் முழுபலத்தால் கடந்து மறுகரையை அடைந்ததும் வீறுகொண்டு உலுக்கி தன் சருமத்தை உலர வைத்தது. தன் எஜமானர் வந்து சேர்வதற்காக சுருங்கிய நாசியுடன் காத்திருந்தது. கோஜுரோ தனது வாயைச் சற்று முறுக்கி, கால்களை விறைப்பாகவும் எச்சரிக்கையுடனும் திசைகாட்டிகளைப்போல நகர்த்தி, தனது முழங்கால்களுக்கு மேல் வெள்ளைச் சுருள்களாய் நீர் தெளிக்கும்படி நடந்து வந்தார்.

நமிடோகோ சிகரத்தைச் சுற்றிய பகுதியில் வாழ்ந்த கரடிகள் கோஜுரோ மீது நேசம் வைத்திருந்தன. அவர் சேற்றின் சதக் ஒலியுடன் பள்ளத்தாக்குகளில் ஏறும் போதும், எல்லையில் முட்புதற்கள் நிறைந்த குறுகளான விளிம்புகளைக் கடக்கும் போதும் அவை உயரமான இடத்தில் இருந்து அமைதியாய் வேடிக்கை பார்ப்பது இதற்கான சான்று. மர உச்சியில் கிளையில் தொற்றிக் கொண்டோ, கைகளை முழங்காலில் கட்டியபடி நதிக்கரையில் அமர்ந்து கொண்டோ அவர் செல்வதை ஆர்வத்துடன் கவனித்தன.

கரடிகளுக்கு கோஜுரோவின் வேட்டை நாயைக்கூட பிடிக்கும் எனத் தோன்றுகிறது.

இருப்பினும், அவரை நேருக்கு நேர் சந்திப்பதை விரும்பாது. அவருடைய நாய் எரிபந்தைப் போல அவற்றின் மீது பாயும், கோஜுரோ விசித்திரமாய் பிரகாசிக்கும் கண்களுடன் துப்பாக்கியை உயர்த்திக் காட்டுவார். அத்தகைய சமயங்களில், பெரும்பாலான கரடிகள் துயரத்தில் இருப்பதைப் போன்று பாதங்களை அசைத்து, அப்படி நடத்துவதை விரும்பவில்லை என்பது போலச் சொல்லும்.

ஆனால் மனிதர்களில் பலவகை இருப்பதுபோல கரடிகளிலும் பலவகைஉண்டு. அவற்றில் சீற்றம் வாய்ந்த கரடிகள் பின்னங்கால்களில் உயர்ந்து நின்று, பெரும் கர்ஜனையுடன், பாதங்களை நீட்டியபடி கோஜுரோவை நெருங்கும். நாயைக் காலுக்கடியில் நசுக்கிவிடலாம் என்பதுபோலக் கண்டு கொள்ளாமல் முன்னேறும். கோஜுரோ முழுநிதானத்தில் இருப்பார். ஒரு மரத்தின் பின்னால் இருந்து கரடியின் நெற்றிப் பொட்டைக் குறி வைத்துச் சுடுவார்.

முழு வனமுமே அலறுவது போலத் தோன்றும். கரடி தொப்பென்று தரையில் சாயும். அடர் சிவப்பு குருதி வாயில் இருந்து பொங்கி வெளியேறும். வேகமாய் மூச்சிறைக்க, மரணிக்கும்.

கோஜுரோ துப்பாக்கியை மரத்தில் சாய்த்துவிட்டு, எச்சரிக்கையுடன் கரடியின் அருகில் செல்வார். பின் இது போன்ற ஒன்றை உச்சரிப்பார்:

‘நான் வெறுப்பினால் உன்னைக் கொன்றதாக நினைத்துவிடாதே கரடியே. உன்னைச் சுட்டால்தான் நான் வாழ முடியும். நான் வேறு வேலை செய்ய விரும்புகிறேன். எந்தப் பழிபாவமும் இல்லாத வேலையை. ஆனால் என்னிடம் நிலம் இல்லை. எனது மரங்களை அதிகாரிகள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். நான் கிராமத்துக்குச் சென்றால் என்னிடம் யாரும் உறவாடுவதில்லை. வேறு வழியில்லாமல் நான் வேட்டைக்காரனாக இருக்கிறேன். விதிதான் என்னை இந்த வேலையைச் செய்யப் பணித்திருக்கிறது. மறுபிறப்பில் கரடியாக பிறக்காமல் இருப்பாயாக!’

அது போன்ற சமயங்களில் நாயும்கூட இறுகிய கண்களுடன், சோர்வடைந்த பெருமூச்சுடன் அவரருகே அமர்ந்திருக்கும். நாய்தான் கோஜுரோவின் ஒரே துணை. அவரது நாற்பதாவது வயதில் வந்த கோடைகாலத்தில் அவருடைய மொத்த குடும்பமும் நோயுற்றது. வயிற்றுப்போக்கு. அவரது மகனும், மருமகளும் இறந்துவிட்டனர். ஆனால் நாய், ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் அவருடனேயே இருந்தது.

அடுத்ததாக கோஜுரோ தனது பையில் இருந்து குறுகிய, கூர் தீட்டிய கத்தியை எடுத்தார். கரடியின் கன்னத்தின் கீழ் தொடங்கி மார்பு ஊடாகச் சென்று, வயிறு வரை ஒரே நீண்ட வெட்டில் தோலைக் கிழித்துத் திறந்தார். அதன்பின் நடந்த காட்சியை நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. இறுதியில் கரடியின் ஈரலை எடுத்து தன் முதுகில் மாட்டியுள்ள மரப்பேழையில் வைத்தார். சொட்ட சொட்ட ரத்தம் தொய்ந்த ரோமத்தை அலசி, சுருட்டி, முதுகில் மாட்டிக் கொண்டு கனத்த இதயத்துடன் புறப்பட்டார்.

கரடிகள் ஒன்றுக்கொன்று பேசுவதைக்கூட கோஜுரோவால் புரிந்து கொள்ள முடியும் எனத் தோன்றியது. ஒரு வசந்த காலத்தின் தொடக்கத்தில், மரங்கள் துளிர் விடும்முன்பு, கோஜுரோ நாயை அழைத்துக் கொண்டு ஷிரா பள்ளத்தாக்கின் சதுப்பு நிலங்களின் மேல் நடந்தார். அந்திசாயும் நேரத்தில் பக்காய் பள்ளத்தாக்கிற்குச் செல்லும் பாதையில் ஏறத் தொடங்கினார். அங்கு தங்குவதற்கு சிறிய மூங்கில் புல் குடிலை ஏற்கெனவே அமைத்திருந்தார். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக வழக்கம்போல் இல்லாமல் வழி தவறிவிட்டார். பலமுறை மேலேறி, கீழ் இறங்கி, மேலேறி தடுமாறினார். அவருடைய நாயும் ஒரு கட்டத்தில் சோர்வுற்றது. ஒருவழியாக ஓர் ஆண்டுக்கு முன் கட்டிச் சென்ற குடிலைக் கண்டடைந்தபோது கோஜூராவுக்கு வாயின் ஒருபக்கமாக மூச்சிறைத்தது. அந்தக் குடிசையும் பாதி சிதைந்து விழுந்திருந்தது.

குடிசைக்குக் கீழே ஒரு நீரூற்று இருந்ததை நினைவு படுத்திய கோஜுரோ, மலையிலிருந்து இறங்கினார். சிறிது தூரம் சென்றபோது வியப்பூட்டும் விதமாக இரு கரடிகளைக் கண்டார். ஒரு தாய்க் கரடி,ஒரு வயதே நிறையாத குட்டியுடன் அமாவாசை நிலவின் மங்கிய ஒளியில், பாதங்களை தலைக்கு மேல் தூக்கி நின்றபடி, பள்ளத்தாக்கின் தொலைவை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. ஏதோ மனிதர்கள் தொலைவைப் பார்ப்பதுபோல இருந்தது. கோஜூரோவுக்கு அந்தக் கரடிகளைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பதாய் தோன்றியது. அவர் பார்வையை அவற்றின் மேல் நிறுத்தினார்.

குட்டிக் கரடி மதிமயக்கும் குரலில் சொன்னது, ‘அது பனி என நினைக்கிறேன் அம்மா. நமக்கருகில் உள்ள பள்ளதாக்கு மட்டும் வெண்மையாக இருக்கிறது, நிச்சயம் அது பனிதான்!’

பதில் சொல்வதற்கு முன் சிறிது நேரம் வெறித்துப் பார்த்த தாய் கரடி, ‘அது பனி கிடையாது. ஒரு இடத்தில் மட்டும் பனி விழாது’ என்றது.

‘மற்றவை உருகிவிட்டன, இவை மிச்சமிருக்கும் பனியாக வேண்டும்’ என்றது குட்டி.

‘இருக்காது, நான் நேற்றுதான் நெருஞ்சி மொட்டுகளைத் தேடி அங்கு சென்றேன்’

கோஜுரோ தீர்க்கமாக அதே திசையை நோக்கினார். நிலவின் ஒளி மலைச் சரிவில் வழுக்கியிறங்கும் வெள்ளிக் கவசம்போல் மின்னியது. சிறிது நேரம் கழித்து குட்டி மீண்டும் பேசியது.

‘பனி இல்லை என்றால் உறைபனியாக இருக்க வேண்டும். நான் உறுதியாகச் சொல்வேன்’

இன்று இரவு நிச்சயம் உறைபனி இருக்கும் என கோஜுரோ நினைத்துக் கொண்டார். நட்சத்திரம் நிலவுக்கு அருகில் நீலநிறத்தில் மினுமினுத்தது. நிலவின் நிறமும்கூட பனிக்கட்டியாய் மிளிர்ந்தது.

‘அது என்னவென்று எனக்குத்தெரியும்’ தாய் கரடி சொன்னது. ‘அது செர்ரிப் பூக்கள்’

‘அப்படியா? நான் அதைப் பார்த்திருக்கிறேன்.’

‘நீ பார்த்ததில்லை அன்பே’

‘அன்றைக்கு சிலவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தேனே’

‘அது செர்ரிப் பூக்கள் கிடையாது. பீச் மரத்தினுடையது என நினைக்கிறேன்’

‘உண்மையாகவா?’ குட்டி வெள்ளந்தியாகக் கேட்டது.

ஏதோ சில காரணங்களினால் கோஜுரோவின் மனம் நிரம்பியது. அவர், பள்ளத்தாக்கில் பனி படந்ததாய் காட்சியளிக்கும் பூக்களைக் கடைசியாக ஒருமுறை பார்வையிட்டார். நிலவொளியில் நனைந்து கொண்டிருந்த தாய் கரடியையும், அதன் குட்டியையும்கூட கவனித்தார். சத்தமில்லாமல் பின்வாங்கினார். காற்று தன் வாசத்தை அவை இருக்கும் திசையில் வீசக்கூடாது எனப் பிரார்த்தித்தபடியே நிலவொளியில் தவழ்ந்து சென்றார். நறுமணச் செடியின் வாசம் அவரைத் துளைத்தது.

கரடியின் தோலையும்,ஈரலையும் விற்பதற்காக அருகில் இருந்த ஊருக்குச் சென்றபோது, துணிச்சல் மிகுந்த கோஜுரோ அடக்கமான மனிதராய் பணிந்திருந்தார்.

ஊருக்கு மத்தியில் பெரிய இரும்புக்கடை ஒன்றில் முறம், சர்க்கரை, சாணைக்கல், மலிவு விலை சிகரெட்டுகள், பூச்சிகளைப் பிடிக்கும் கண்ணாடிப் பொறி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

கோஜுரோ தன் முதுகில் மாட்டிய கரடித் தோலின் பெரும் சுமையுடன் கடையின் வாசலைத் தாண்டி நுழைய, ‘இதோ வந்துவிட்டான்’ என அங்கிருந்தவர்கள் புன்னகைத்தனர். அந்த இடத்தின் முதலாளி கடையை ஒட்டிய அறையில் பெரும் கனல் அடுப்பின் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.

‘உங்கள் கருணைக்கு மீண்டும் நன்றி ஐயா’ கோஜுரோ வணங்கினார்.

சற்றுமுன் மலையில் தன்னிகரற்ற எஜமானாகத் திகழ்ந்த அந்த வேட்டைக்காரன், தோல் மூட்டையைக் கீழே வைத்துவிட்டு, பலகையில் மண்டியிட்டு, தாழ்ந்து வணங்கினான்.

‘நல்லது.. நல்லது.. என்ன வேண்டும்?’

’நான் மீண்டும் சில கரடித் தோல்களை எடுத்து வந்துள்ளேன்’

‘கரடித் தோல்களா? கடைசி முறை கொண்டு வந்ததே இங்கு எங்கோதான் கிடக்கிறது. ஒன்றும் தேவையில்லை’

‘ஐயா, ஒருவாய்ப்பு தாருங்கள். அற்பத் தொகைக்குத் தருகிறேன்’

’எவ்வளவு மலிவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு அது தேவைப்படவில்லை’ புகைக்குழாயின் கிண்ணத்தை உள்ளங்கையில் தட்டியபடி கடைக்காரர் நிதானமாகச் சொன்னார்.

இதுபோல ஒன்றைக் கேட்கும்போதெல்லாம், மலைகளின் நெஞ்சுரமிக்க அரசனான கோஜுரோ, கவலையில் தன் முகம் சுழிவதை உணர்வார்.

கோஜுரோவின் வாழ்விடம் அமைந்திருந்த மலைகளில் கஷ்கொட்டைகள் கிடைக்கும். வீட்டின் பின்புற வயலில் கொஞ்சம் வரகு விளையும். ஆனால் நெல் வளராது. சூப் சமைப்பதற்கான சோயாபீன் பசையும் கிடைக்காது. அதனால் குறைவாக இருந்தாலும் சிறிதளவு அரிசியாவது முதிய தாய், பேரக் குழந்தைகள் வாழும் ஏழு பேர் குடும்பத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

அவர் ஒருவேளை கிராமத்தில் வாழ்ந்திருந்தால், துணி நெசவு செய்வதற்குச் சணல் பயிரிட்டிருப்பார். ஆனால் கோஜுரோவின் இடத்தில் ஒரு சில விஸ்டேரியா கொடிகள் மட்டுமே வளர்ந்தன. அவற்றில் கூடைகள் மட்டும் நெய்யப்பட்டன.

சிறிது நேரம் தாமதித்து கொஜுரோ வேதனை நிறைந்த கரகரப்பான குரலில் சொன்னார், ‘தயவுசெய்து வாங்கிக் கொள்ளுங்கள் – என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை’. மேலும் விழுந்து வணங்கினார்.

கடைக்காரர் சிறிது நேரம் எதுவும் பேசாமல் புகையை வெளியிட்டார். பின் திருப்தி தொய்ந்த புன்னகையை அடக்கியபடி, கோஜுரோவின் முன்னாள் அமர்ந்து, நான்கு பெரிய வெள்ளி நாணயங்களைத் தந்தார். கோஜுரோ புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு அவற்றை மரியாதையுடன் நெற்றியில் ஒற்றிக் கொண்டார். கடையின் முதலாளி கொஞ்சம் ஆசுவாசமடைந்தார்.

‘கோஜூரோவுக்கு பருக கொஞ்சம் சாகேவைக் (ஜப்பானிய மதுவகை)கொடு’

அது போன்ற சமயங்களில் கோஜுரோ பேரின்பத்தில் ஒளிர்வார். கடைக்காரரும் ஒய்யாரமாக எதையெதையோ பேசிக்கொண்டிருப்பார். கோஜுரோ அடக்கத்துடன் மலைகளில் தான் கண்ட விஷயங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் சொல்வார். உணவு தயார் என்கிற வார்த்தை சமையலறையில் இருந்து ஒலிக்கும். கோஜுரோ புறப்படுவதற்காக எழுவார். ஆனால் இறுதியில் சமையலறை நோக்கி இழுக்கப்பட்டு, பணிவான வணக்கங்களை அவர் மீண்டும் ஒருமுறை செலுத்த வேண்டியது இருக்கும்.

கருப்பு நிற அரக்கு பூசிய சிறு மேசை ஒன்றில் உப்பிட்ட சால்மன் மீன் துண்டுகளும், நறுக்கிய கணவாய் மீனும், ஒரு குடுவை வெதுவெதுப்பான சாகேவும் வைக்கப்பட்டன.

கோஜுரோ மேசையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். கணவாய் மீன் துண்டுகளை விழுங்கும் முன்,பயபக்தியுடன் கையின் பின்புறம் தாங்கிப் பிடித்தபடி கொஞ்சம் மஞ்சள் நிற சாகேவைச் சிறிய கோப்பையில் ஊற்றினார்…

என்னதான் மலிவாக இருந்தாலும், இரண்டு யென்கள் என்பது ஒரு ஜோடி கரடித் தோல்களுக்கு மிக குறைந்த கூலி. இதை யாராக இருந்தாலும் ஒப்புக்கொள்வார்கள்.
குறைவுதான். கோஜுரோவுக்கே இது தெரியும். பிறகு ஏன் அவர் இரும்புக் கடை முதலாளியை விட்டு வேறு ஒருவரிடம் சென்று தோல்களை விற்கவில்லை? பலருக்கும் அது ஒரு மர்மம். அந்த நாட்களில் ஒரு செயல் ஒழுங்கு இருந்தது: கோஜுரோ கரடிகளை வெற்றி கொள்ள வேண்டும், முதலாளி கோஜுரோவை வெற்றி கொள்ள வேண்டும். அந்தக் கரடிகள் – முதலாளி ஊரில் இருந்ததால் கரடிகளால் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை, அப்போதைக்கு.

அதுதான் அங்கு நிலைமை எனும்போது கோஜுரோ கரடிகள் மீது எந்த வெறுப்பும் இல்லாமல் அவற்றைக் கொன்றார். ஒரு வருடத்தில் விசித்திரமான விஷயம் ஒன்று நடைபெற்றது.

கோஜுரோ சதக் ஒலியுடன் பள்ளதாக்கில் ஏறிக் கொண்டிருந்தார். அவர் பாறையின் மீதேறியபோது மிகப்பெரிய கரடியைக் கண்டார். அதன் முதுகில் கூன் விழுந்திருந்தது. பூனையைப் போல அவருக்கு முன் நேராக மரத்தில் தொற்றிக் கொண்டு நின்றது. கோஜுரோ துப்பாக்கியால் குறி வைத்தார். ஏற்கெனவே மரத்தடியில் நின்ற நாய் வேட்கையுடன் அதை வட்டமடித்தது.

கீழே இறங்கி வந்து கோஜுரோவைத் தாக்கலாமா அல்லது இருந்த இடத்தில் இருந்தே தன்னைச்சுடஅனுமதிக்கலாமா என்று சிறிது நேரம் விவாதிப்பதைப் போலத் தோன்றிய அந்தக் கரடி, திடீரென தனது பாதங்களைத் விடுவித்துத் தரையில் விழுந்தது. கோஜுரோ தனது துப்பாக்கியை தோளில் ஏந்தியபடி நெருங்கிச் சென்றார். ஆனால் கரடி தனது பாதங்களை உயர்த்தி கத்தியது:

‘உனக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னைச் சுட வருகிறாய்?’

‘உனது ரோமத்திற்காகவும் ஈரலுக்காகவும்தான்’ கோஜுரோ பதிலளித்தார். ‘நான் அதனை ஊருக்குக் கொண்டு சென்றால் பெரிதாக ஒன்றும் கிடைத்து விடாது. உனக்காக வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. இருப்பினும், நீ பேசுவதைக் கேட்கும்போதும், நான் இறந்தாலும் பரவாயில்லை என கஷ்கொட்டைகளையும் பெரணிகளையும் தின்றே உயிர் வாழலாம் என்று தோன்றுகிறது’

‘உன்னால் இரண்டு வருடங்கள் காத்திருக்க முடியுமா? எனக்கு வாழ்வதோ சாவதோ பிரச்னை இல்லை. ஆனால் செய்ய வேண்டிய கடமைகள் சில இருக்கின்றன. இரண்டு வருடங்கள் முடிந்தவுடன் நீ என்சடலத்தை உனது வீட்டின் முன் காண்பாய். சத்தியமாகச் சொல்கிறேன். எனது ரோமத்தையும் உள்ளுறுப்புகளையும் நீ எடுத்துக்கொள்ளலாம்’

விநோத உணர்வு நிரம்ப, கோஜுரோ யோசனையில்ஆழ்ந்தார்.

கரடி நான்கு பாதங்களையும் தரையில் அழுந்த வைத்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. ஆனால் கோஜுரோ அசையாமல் இருந்தார். முன்னால் வெறுமையுடன் நோக்கினார்.

கரடி திரும்பாமலேயே நடந்தது. கோஜுரோ எப்படியும் தன்னைப் பின்னால் இருந்து சுடமாட்டார் என்பதை நன்கு அறிந்தது போல அதன் தொனி இருந்தது. ஒரு கணம், அதன் பரந்த, பழுப்பு நிற கருப்பு முதுகு மரங்களின் கிளைகள் வழியாக விழும் சூரிய ஒளியில் பிரகாசமாக ஜொலித்தது. அதே நேரத்தில் கோஜுரோ வலி மிகுந்த தேம்பலை வெளிப்படுத்தினார். பின்னர் பள்ளத்தாக்கைக் கடந்து வீட்டிற்குச் சென்றார்.

சரியாக இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும். ஒருநாள் அதிகாலை காற்று கடுமையாக வீசியது. அக்காற்று, மரங்கள், வேலிகள் என அனைத்தையும் பிடுங்கி வீசி விடும் என உணர்ந்த கோஜுரோ, வெளியே சென்று பார்த்தார். சைப்ரஸ் முற்புதர் தீண்டப்படாமல் நின்றது. அதன் அடியில் ஏற்கெனவே தெரிந்த பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் ஒன்று கிடந்தது. அவர் இதயம் சற்று நேரம் துடிப்பதை நிறுத்தியது. அது சரியாக இரண்டு ஆண்டுகள். எங்கே கரடி வந்துவிட்டதோ எனக் கவலை கொண்டார். அருகில் சென்றபோது, அதே கரடி, தான் சொன்னபடியே இறந்து கிடந்ததைக் கண்டார். அதன் வாயில் இருந்து வழிந்து வெளியேறிய ரத்தம், குளம் போல் தேங்கி நின்றது. சற்றும் யோசிக்காமல் இரு கரங்களையும் கூம்பி பிரார்த்தித்தார் கோஜுரோ.

ஜனவரி மாதம் ஒருநாள் காலையில் கோஜுரோ வீட்டைவிட்டு வெளியேறும்போது, அதற்கு முன் இல்லாத ஒன்றைச் சொன்னார்.

‘அம்மா, எனக்கு வயதாகிறது. என் வாழ்வில் முதன்முறையாக, இன்று காலை நீரோடைகளைக் கடந்து செல்ல விருப்பமில்லாமல் இருக்கிறேன்’

தொண்ணூறு வயதுடைய கோஜுரோவின் தாயார், தாழ்வாரத்தில் வெயிலில் அமர்ந்தபடி ராட்டை சுற்றிக் கொண்டிருந்தவர், நீர் கோர்த்த கண்களை உயர்த்தி அவரைப் பார்த்தார். அழுகிறாரா, புன்னகைக்கிறாரா எனச் சொல்ல முடியாத பாவனை அது.

கோஜுரோ வைக்கோல் காலணியைக் கால்களில் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே இழுத்தபடி புறப்பட்டார். குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக கொட்டகையில் இருந்து முகத்தை வெளியே நீட்டிச் சிரித்தனர். ‘சீக்கிரம் வந்துவிடு தாத்தா’ என்றனர்.

கோஜுரோ மென்மையாகப் பிரகாசிக்கும் நீல வானத்தைப் பார்த்தார். தனது பேரக்குழந்தைகளின் பக்கம் திரும்பி, ‘நான் பிறகு வருகிறேன்’ என்றார்.

அவர் ஷிரா பள்ளத்தாக்கின் திசையை நோக்கி வெண்ணிறத்தில் பொதிந்துகிடந்த பனியின் ஊடாக மேலேறினார். நாய் ஏற்கெனவே பலமாக மூச்சிறைத்துக் கொண்டிருந்தது. அது முன்னால் ஓடி, ஓடிச் சென்று நிற்க, அதன் இளஞ்சிவப்பு நாக்கு தள்ளாடியது. கோஜுரோவின் உருவம் ஒரு தாழ்வான மலைக்கு அப்பால் சென்று மறைந்தது. குழந்தைகள் விளையாட்டிற்குத் திரும்பினர்.

ஆற்றின் கரையைத் தொடர்ந்தே ஷிரா பள்ளத்தாக்கு வரை சென்றார் கோஜுரோ. அங்கிருந்த நீர், ஆழமான நீலநிறக் குட்டையாய், கண்ணாடித் தாள்களாய் உறைந்திருந்தது. பனிக்கட்டிகள் மணித்திரளாய் கணக்கற்ற எண்ணிக்கையில் ஊசலாடின. கரையின் இருபுறமும் ஸ்பிண்டில் மரத்தின் பழங்கள் சிவப்பு, மஞ்சள் நிற மலர்களைப் போல எட்டிப் பார்த்தன. கோஜுரோ மேல்நோக்கி ஏறும்போது, பளபளக்கும் தனது நிழலுடன் நாயுடைய நிழலும் சேர்ந்து அடர் நீலத்தில் கூர்மையாய் பனியில் பொறிக்கப்பட்டிருப்பதுபோலக் கண்டார். நகர்கையில், அவை பிர்ச் மரத்தடியின் நிழலுடன் கலப்பதைப்போலத் தோன்றின.

ஷிரா பள்ளத்தாக்கிலிருந்த மலையின் மறுபுறம் வாழ்ந்து வந்தது அவர் கோடையில் பார்த்து வைத்திருந்த கரடி.

பள்ளத்தாக்கில் பாயும் ஐந்து சிறிய நீரோடைகளைக் கடந்து, முன்னும் பின்னுமாக அடியெடுத்து வைத்த அவர், மேலே நீரோட்டத்தைத் தொடர்ந்தார். சிறு நீர்வீழ்ச்சி ஒன்றை அடைந்து, அங்கிருந்து மலைமுகடு நோக்கி ஏறத் தொடங்கினார். பனி, நெருப்பில் எரிவது போல பிரகாசித்தது. மேலே ஏறுகையில் அனைத்தையும் ஊதாக் கண்ணாடியின் வாயிலாகப் பார்ப்பதுபோல் உணர்ந்தார்.

ஏறக்குறைய பலமுறை வழுக்கி விழுந்தாலும் சரிவின் செங்குத்துத் தன்மை தன்னை வெற்றிகொள்ளாது என்ற உறுதியுடன் பனியில் ஒட்டிக்கொண்டு ஏறியது அவரது நாய். அவர்கள் உச்சியை அடைந்தபோது, மெதுவாகச் சாய்ந்து செல்லும் பீடபூமியில் இருப்பதாய் உணர்ந்தார்கள். அங்கு பனி வெண் பளிங்குபோலப் பிரகாசித்தது. பனி மூடிய சிகரங்கள் அனைத்தும் வானம் நோக்கித் தள்ளப்பட்டன.

கோஜுரோ உச்சியில் ஓய்வெடுத்தபோது அது நடந்தது. திடீரென்று நாய் வெறி கொண்டு குரைக்க ஆரம்பித்தது. திடுக்கிட்ட கோஜுரோ பின்னால் பார்த்தார். கோடையில் அவர் பார்த்த பெரும் கரடி, தனது பின்னங்கால்களை உயர்த்தி, அவரை நோக்கி மெல்ல நகர்ந்து வருவதைக் கண்டார். கோஜுரோ பதற்றமடையாமல், பனியில் கால்களை உறுதியாக ஊன்றி, குறி வைத்தார்.

பாரிய இரு பாதங்களையும் உயர்த்திய கரடி, நேராக அவரை நோக்கி வந்தது. அதைப் பார்த்த கோஜுரோவின் முகம் சற்று வெளிறியது.

துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தைக் கோஜுரோ கேட்டார். ஆனால் கரடி விழுவதற்கான அறிகுறி எதுவும் இல்லை. கறுப்பு நிறத்தில் சீற்றம் கொண்ட புயல்போல் அவரை நோக்கி வந்தது கரடி. நாய் அதன் பற்களை கரடியின் காலில் புதைத்தது. அடுத்த கணம், ஒரு பெரிய இரைச்சல் கோஜுரோவின் தலையில் நிரப்பியது. அவரைச் சுற்றியுள்ள அனைத்தும் வெண்மையாக மாறியது. அப்போது, வெகு தொலைவில், ‘கோஜுரோ, நான் உன்னைக் கொல்ல விரும்பவில்லை’ என்ற ஒரு குரல் கேட்டது.

‘இதுதான் மரணம்’ அவர் எண்ணினார். அவரைச் சுற்றி அனைத்தும் ஒளி விளக்காய்  நீல நட்சத்திரங்களைப் போல இடைவிடாமல் மின்னுவதைக் காண முடிந்தது. ‘எல்லாம் முடிந்து விட்டதற்கான அறிகுறிகள்’ என்று அவர் நினைத்தார், ‘நீங்கள் இறக்கும் தருவாயில் பார்க்கும் நெருப்பு. கரடிகளே, என்னை மன்னியுங்கள்’ அதன்பிறகு அவர் என்ன உணர்ந்தார் என்பதைப் பற்றி, எனக்கு எதுவும் தெரியாது.

மூன்று நாட்கள் கழித்து, வானத்தில் நிலவு பிரமாண்ட பனிக்கட்டிப் பந்தைப் போலத் தொங்கியது. பனி, பிரகாசிக்கும் வெண் நீல நிறத்தில் இருந்தது. நீர் அதற்கு இருளிலும் மின்னும் பிரகாசத்தைக் கொடுத்தது. பனிக்கால நட்சத்திரங்களும், வேட்டைக்காரனாய் உருவகப்படுத்தும் ஓரியன் நட்சத்திரங்களும் ஆழ்ந்த சுவாசிப்பில் பச்சையும் ஆரஞ்சுமாய் மின்னின.

மலையின் உச்சியில் கஷ்கொட்டை மரங்களும், பனிச் சிகரங்களும் சூழப்பட்ட பீடபூமியில் கருப்பு நிற பெரும் வடிவங்கள் வளையம் போல் கூடி,கருப்பு நிழலை உமிழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒரு இஸ்லாமியர் பிரார்த்தனையில் இருப்பதுபோல நகராமல் இருந்தன. அங்கு உச்சத்தில் பனி மற்றும் நிலவொளியின் வெளிச்சத்தில் கோஜுரோவின் சடலம் மண்டியிடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கோஜுரோவின் இறந்த, உறைந்த முகத்தில் அவர் இன்னும் உயிருடன் இருப்பது போன்ற ஒரு குளிர்ச்சியான புன்னகையைக் காணமுடிந்தது. ஓரியன் நட்சத்திரக் கூட்டம் சொர்க்கத்தின் மையம் நோக்கி நகர்ந்தது. பின், மேற்கு நோக்கி சாய்ந்தது. பெரிய கருப்பு வடிவங்கள் கல்லாக மாறியது போல் வணங்கி நின்றன.

 
***
ஜப்பானின் செவ்வியல் படைப்பாளியான கெஞ்சி மியாசாவா (Kenji Miyazawa 1896 –  1933)  ஜப்பானிய வரலாற்றின்  முக்கியத்துவம் கொண்ட வரலாற்றுக் காலகட்டமான தாயிஷ் காலத்தின் பிற்பகுதியில் இருந்த ஒரு ஜப்பானிய நாவலாசிரியர், கவிஞர் மற்றும் குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆவார். ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தில் ஒரு செழிப்பான வணிகக் குடும்பத்தில் பிறந்தார். ஒரு இளைஞனாக, அவர் கிளாசிக் டாங்கா கவிதைகளை எழுதினார்.  மேலும்,கென்ஜியின் எழுத்துக்கள் நிலம் மற்றும் அதில் பணிபுரியும் மக்கள் மீதான உணர்திறனைக் காட்டுகின்றன. அவர் குழந்தைகளுக்கான கதைகளை எழுதுவதில் சிறந்தவராக இருந்தார், அவற்றில் பல மேலோட்டமாக ஒளி அல்லது நகைச்சுவையாகத் தோன்றினாலும் வாசகரின் ஒழுக்கக் கல்விக்கான செய்திகளை உள்ளடக்கியது. அவர் தனது மாணவர்களுக்காக உரைநடைகளில் சில படைப்புகளையும் சில மேடை நாடகங்களையும் எழுதினார்,  அவரது வாழ்நாளில் ஒரு கவிஞராக அறியப்படவில்லை, 1933 -ல் நிமோனியாவால் இறந்தார். அவரது மரணத்திற்குப் பிறகுதான் அவரது படைப்புகள் அதன் நற்பெயரைப் பெற்றன, மேலும் அவரது நூற்றாண்டு விழாவில் 1990 களின் நடுப்பகுதியில் ஏற்றம் பெற்றது. அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் 1982 இல் அவரது சொந்த ஊரில் திறக்கப்பட்டது. அவரது குழந்தைக்  கதைகள் அனிமேஷாக மாற்றப்பட்டுள்ளன,  பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது பல டாங்கா மற்றும் இலவச வசன கவிதைகள் இன்றும் பிரபலமாக உள்ளன.
ஜான் பெஸ்டர் (John Bester 1927-2010) லண்டன் பல்கலைக்கழகத்தில் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் பயின்றவர். அவர் மொழிபெயர்த்த ஜப்பானிய மொழிப் படைப்புகளில் Fumiko Enchi’s The Waiting Years, Masuji Ibuse’s Black Rain, Kenzaburo Oe’s The Silent Cry, and Yukio Mishima’s Acts of Worship: Seven Stories ஆகியவை முக்கியமானவை. ஜப்பானிய இலக்கியத்தின் மொழிபெயர்ப்புக்கான நோமா விருதைப் பெற்றவர்.
***
நன்றி : Once and Forever: The Tales of Kenji Miyazawa