நேற்று இரவு வானத்தில், அபூர்வமாக மூன்று நிலவுகள் தோன்றியிருந்தன.
பிறை நிலவுகள் அல்ல; முழுமையான நிலவுகள்
ஒவ்வொன்றுக்குமான ஒரு சிறு இடைவெளியில் மேகங்கள் கடந்து சென்றன
அது ஓர் அற்புதக் காட்சி!
உடலெங்கும் கூடிய பரவசத்தில் – பதற்றத்தில் – என் மகனைக் கூவி அழைத்தேன்
மாடிக்கு வந்தவன், தலையை ஆட்டினான், நான் மேலே வானத்தைக் கை காட்டினேன்.
தலையை உயர்த்தியவன்,ஒன்றும் விளங்காமல் என்மேல் பார்வையை இறக்கினான்.
ஓரிரு வினாடிகள் என்னைப் பார்த்தவன், கீழிறங்கிப் போய்விட்டான்.
என்னால், அந்த பார்வையை விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அமரந்தாவை அழைக்கலாம் என்றால் அவள் உறங்கிக் கொண்டிருப்பாள்.
உடனே அவசரமாக கீழிறங்கிப்போய், செல்பேசியை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தேன்.
மேலே வானத்தில், அப்படியே இருந்தது அக்காட்சி!ஆனால், ஏதோ ஒரு மாற்றம்.
உற்று, ஆகாயத்தை ஊடறுத்துப் பார்த்ததில்
அந்த நிலவுகளுக்குள்ளிருந்த இடைவெளி சற்று பெரிதாகியிருந்தது.
மேகங்கள் கலைந்த வெண்ணிறப்பரப்பினூடே, காலவெளியை மாற்றும்
கண்ணாடிக்குடுவை மணல் தீர்ந்து அடுத்த பக்கத்தை திருப்பி வைத்தது போல
நகர்ந்து கொண்டிருந்தன நிலவுகள்.
அவசர அவசரமாக நண்பன் ஒருவனுக்கு அழைப்பு செய்தேன்.
அவன் எடுக்கவில்லை. மீண்டும்.. மீண்டும்..
சரி அடுத்த நண்பனுக்கு.. ம்ஹூம். இல்லை.
அடுத்த நண்பனுக்கு.. அடுத்த நண்பனுக்கு..
இந்தப் பிரபஞ்சம் முழுக்கக் கூவி அழைத்தது செல்பேசி.
“என்ன தாத்தா.. இங்கென்ன பண்றே?” அமரந்தா!
“என் செல்லமே அங்கே பார்..”
அவள் தலையை உயர்த்திப் பார்க்கும்போது,
உதிர்கிறது, கடைசி மணற் துகள்.
அவள் தலையைச் சுற்றி ரீங்கரிக்கின்றன, மூன்று தேனீக்கள்!

கவிதைப்பயணி, அமரந்தா🧛♂️🧛♂️🧝🧛