அப்பாவும் பனியும்
– மஞ்சுள வெடிவர்தன
தமிழில் : ஃபஹீமா ஜஹான்
அப்பா சொல்லித் தந்த கதையொன்றில்
பனி உறைந்திருந்தது
செந்நிறப் படை வீரனொருவன்
பனியின் மீது தவழ்ந்தவாறு சென்றான்
துப்பாக்கிச்சன்னம் பட்ட காலொன்றினால்
வெண் பனிக்கட்டிகளின் மீது
செந்நிற வழித்தடம் உண்டானது
வேதனை வழிகி்ன்ற
அப்பாவின் குரலுக்கு
சிறுவன் என்றாலும் என் மனது நொந்தது
பனி போர்த்திய சமதரை யொன்றில்
அவருடன் பனியில் விளையாடிக்கொண்டிருந்த இடை வேளையில்
வேலை நிறுத்தக்காரரான எனது அப்பா
சைபீரியாவுக்கு அனுப்பிய கடிதம் தபாலில் கிடைத்தது
இறுக மூடப்பட்டிருந்த இடது கைக்குத் துணையாக
சிறிய கரமொன்று இணைந்திருந்தது
ஸ்டெ ப்ஸ் புல்வெளியை விடவும் நீளமான பசி
பனியைப் போல மனதில் இறுகிப்போனது
சிறிய மனதால் தாங்கவே முடியாமற் போகும்
கணமொன்றும் இருந்தது
அப்பாவின் பனி உறைந்த விழிகளின் தைரியத்தில்
பனிப் பந்தொன்றுக்கு உதை கிடைத்தது
ஆனாலும் நாம் பனியிடையே தரித்தோம்
எமது முழங்கால்கள் வரை கால்கள் புதைந்தன
வெந்நீர்ப் பானையிலிருந்து எழுந்து வந்த ஆவியில்
சீனியில்லாத தேனீர்ச் சாயத்தின் சுவை நிரம்பியிருந்தது
தேனீரின் நறுமணத்தில் திறபட்ட
சாயமற்ற விழிகள் இரண்டுக்கு
கவிதை எழுதும் வழித்தடங்கள் தென்பட்டன
பிரேசிலின் இர்த்து ஊடாக நெடுந் தூரம் நடந்த
காரிருளால் முடிச்சுகளும் கேசத்தின் அலைகளும் நிறைந்த
அந்தத் தலையில் பனி இதழ்கள் உறைந்தன
ஆனாலும் அந்தக் குரலின் கூர்மை பிரகாசித்தது
அந்தக் குரலில் கதையொன்று கேட்டது
கதையில் பனி உறைந்திருந்தது.
***
அக்டோபர் கவியொன்று
– மஞ்சுள வெடிவர்தன
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
அக்டோபர் வானம்
புதியதாக ஒரு கல்லறை
ஒரே ஒரு வெண்ணிறக்கொடி
வேதனையில் ஓலமிடும்
உனக்குப் பிடித்திருந்தால் அதனை
நிலா என்றழை
எமக்கென்றொரு சினேகிதன் இருக்கிறான்
பற்களால் சிரித்திடும்
விழிகளால் கதைத்திடும்
அக்டோபர் மாதத்தில் உயிர்த்தெழுந்து
மீள மரித்துப் போகும்படியான
துப்பாக்கி ரவைக்கும் இருக்கிறது
நிமிட நேர வாழ்க்கை
நண்பனுக்கென இருப்பது
அக்டோபரின் நாளொன்று மட்டுமா
கண்ணீருக்கும் இருக்கிறது
உஷ்ணத்தாலோ குளிராலோ ஆன ஒரு இருப்பிடம்
தாய்நிலமற்ற தோழனுக்கென இருப்பது
இருப்பிடம் கூட அற்ற மரணம் மாத்திரமா
அந்த நண்பனுக்குத்தான்
அக்டோபரில் உயிர் வருவதுவும்
அதே நண்பன்தான்
திரும்பத் திரும்ப மரித்துப் போவதும்.
***
மஞ்சுள வெடிவர்த்தன : சிங்களக் கவிஞர், ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், நாடகாசிரியர், ஊடகச் செயற்பாட்டளர் எனப் பல பரிமாணம் கொண்டவர். 10 க்கும் மேற்பட்ட இவரது நூல்கள் சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் என வெளிவந்துள்ளன. இவருடை ய சிறுகதைத் தொகுதி ஒன்று அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. தமிழ் மக்களுடைய பிரச்சினையைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் பெரும் பணியாற்றுபவர். இலங்கையில் வெளியாகும் ‘ராவய’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த இவர் தற்பொழுது, நாட்டைவிட்டு வெளியேறி பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.
(உன்னதம் 2009 டிசம்பர் இதழில் வெளிவந்தது)

இரு கவிதைகளும் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது பதிவிற்கு நன்றி
மரித்துப்போகாத கவிஞனின் கவிதையில் அங்குமிங்கும் ஆயுதங்கள் பரவிக்கிடக்கும்,காலப்பிரதி இக்கவிதை,சிறப்பு,,