- ஆ. தமிழ்மணி,
வழக்கறிஞர்.
மனித வளத்தில் உலகில் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. மலிந்து கிடக்கும் மனிதவளத்தை இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உரமாக்குவதற்காக காலந்தோறும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் உழைத்து இருக்கின்றார்கள். இந்தச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அவர்களின் அனுபவங்களையும், சிந்தனைகளையும் நூல்களாக ஆக்கித் தந்துள்ளனர். ஆனால் நாம் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அவர்களின் உழைப்புகள் எல்லாம் விழலுக்கு இரைத்த நீராகப் போய்க்கொண்டிருக்கின்றது.
வாழ்நாளெல்லாம் உழைத்து பல தோல்விகளைச் சந்தித்து, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை புத்தகங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன. நம்மில் எத்தனைபேர் புத்தகங்களை வாசிக்கின்றோம். நூலகங்களுக்குச் செல்கின்றோம்.? பள்ளிப் படிப்போடு புத்தகங்களைத் துறந்தவர்கள்தான் நம்மில் அதிகம். நம் நாட்டில் கல்விக் கூடங்கள் அனைத்தும் வானுயர்ந்து நிற்கின்றது. அவைகள் மனித மனங்களை உயர்த்தவில்லை, மாறாக நிறுவனங்களுக்கான அடிமைகளை மட்டுமே உருவாக்கி வருகின்றன.
ஒரு மனிதன் எப்போது தன்னை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படத் தொடங்குகின்றானோ? அப்போதே மறைமுகமாக இந்தச் சமூகத்திற்கு எதிராகச் செயல்படத் தொடங்குகின்றான். விளைவு, நம்மில் பலரும் மனித உருவில் மிருகங்களாக அலைந்து கொண்டிருக்கின்றோம். எத்தனையோ கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. நாம் யாரைத் திருத்தி இருக்கின்றோம்.? நாள்தோறும் திறமையான குற்றவாளிகளைத்தானே நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.!
நமது கல்வி முறைகள் நல்ல மனிதர்களை உருவாக்குகின்றனவா? அல்லது நல்ல வேலையாட்களை உருவாக்குகின்றனவா? என்று நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. நாம் யாருக்காகவோ உழைக்கின்றோம். யாருக்காகவோ வேலை செய்கின்றோம். நமக்காக எப்போது உழைக்கப் போகின்றோம்? என்பது குறித்து சிந்திக்கக் கூட நமக்கு நேரம் இல்லை.
நாம் இந்தச் சமூகத்தில் வாழ்கின்றோம் என்பதைக் காட்டிலும், ஏதோ பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை. இதன் வெளிப்பாடுதான் மனித உருவில் மிருகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலரையும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். குற்றங்களும் அநாகரிகச் செயல்களும் இல்லாமல் எந்த நொடிப் பொழுதையாவது நாம் கடந்து செல்லமுடிகின்றதா?. அப்படி ஒரு நாளை நாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.
அதையும் தாண்டி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றால், இந்தச் சமூகத்தில் இன்னமும் சிலர் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் காரணம். ஒரு மனிதனை எது வாழவைத்துக் கொண்டிருக்கின்றது?. ஒரு மனிதனை நாம் எங்கே அடையாளம் காணமுடிகின்றது?. ஒரு மனிதனை இந்தப் பூமியில் எது நிலைத்திருக்க வைக்கின்றது?. என்ற கேள்விகளுக்கு பதில் கண்டறியவேண்டிய தேவை உள்ளது.
இந்த உலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கான சூழலைக் காட்டிலும், இந்த உலகின் கோரப் பிடியில் இருந்து எங்கோ ஓடிவிட வேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற சூழல்தான் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஓய்வறியாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றான் அல்லது துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றான். அவரவர் தகுதிக்கு ஏற்ப அந்தச் சுமையின் அளவு மாறுபடுகின்றது. இங்கு எல்லோரும் ஏதோ ஒருவகையில் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம் என்பதுதான் உண்மை.
நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளும், பார்க்கும் சம்பவங்களும், கேட்கும் தகவல்களும் நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதன் மனிதனாகத்தான் வாழ்கின்றானா?. மனிதனுக்குள் இத்தனை வகையா? என்ற கேள்வி நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன.
இந்த உலகில் பெரும் அறிஞர்களாகக் கருதப்பட்டவர்கள், பெரும் தலைவர்களாக உருவானவர்கள் கூட ஏதோ ஒருதருணத்தில் தற்கொலையின் எல்லைவரை சென்று மீண்டவர்கள் என்பதை வரலாற்றின் பக்கங்களில் நம்மால் காணமுடிகின்றது. அவர்களை மீட்டது யார்? என்ற தேடலில்தான் வாசிப்பு என்னும் பேராயுதத்தை நாம் காணமுடிகின்றது. ஒரு மனிதனின் புற அழுக்கை நீரால் நாம் கழுவிவிட முடியும். ஆனால் அவனது மன அழுக்கை நீக்க அவனுக்கு வாசிப்பு என்னும் பேராயுதம் தேவைப்படுகின்றது.
புத்தக வாசிப்பால் ஒருவன் பெறுகின்ற அறிவுதான் அவனது வாழ்வின் ஆகப்பெரும் செல்வமாக அவனை வழிநடத்துகின்றது. ஒருவன் பெற்ற கல்வியைக் காட்டிலும் அவனது வாசிப்பு அனுபவம்தான் அவனைப் பண்படுத்துகின்றது. பண்பட்ட மனிதனால் அவனது குடும்பம் மட்டுமல்ல, அவன் வாழும் சமூகமும் பண்படுகின்றது; மேன்மை அடைகின்றது.
ஒருவன் மனிதனா? அல்லது மனித உருவில் நடமாடும் மிருகமா? என்பதை வாசிப்பு என்னும் பேராயுதம்தான் வேறுபடுத்துகின்றது. குற்றவியல் அறிஞர்களின் ஆய்வின்படி ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்வதற்கும், செய்யாமல் தவிர்ப்பதற்கும் ஒரே ஒரு சின்ன வேறுபாடுதான் உள்ளது.
ஒருவன் தன்மீது எவ்வகையான மரியாதையை வைத்திருக்கின்றானோ, அத்தகைய மரியாதையை, தான்வாழும் சமூகத்தின் மீதும் அவன் வைத்திருக்கின்றான். தன் மீதான மரியாதை என்பது ஒருவர் தன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின் வலிமையைப் பொறுத்தது. அந்த நம்பிக்கையின் வலிமையே மனிதனுக்கும், மனித உருவில் நடமாடும் விலங்கிற்குமான வேறுபாடாக உள்ளது. நம்பிக்கையின் வலிமை என்பது ஒருவரின் வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான் கிடைக்கின்றது.
நாம் வாழுகின்ற சமூகத்தில் தன்னைப் பற்றி யாரேனும் தவறாகக் கருதி விடுவார்கள் என்ற குற்ற உணர்ச்சி உள்ள ஒருவரால் மட்டுமே சுயக் கட்டுப்பாட்டோடு தன்னை ஒரு மனிதனாக நிலை நிறுத்திக் கொண்டு வாழ முடியும். இந்த சுயக்கட்டுப்பாடுதான் தவறு செய்ய ஏங்கும் மனித மனங்களைக் கட்டுப்படுத்துகின்றது.
குற்ற உணர்ச்சி இல்லா ஒவ்வொரு மனமும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் குற்றத்தைச் செய்துகொண்டே இருக்கின்றது. குற்ற உணர்ச்சி இல்லாத மனம்தான், இந்தச் சமூகம் தன்னைப் பற்றி என்ன நினைக்கும், பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தவறு செய்யத் தூண்டிக் கொண்டே இருக்கின்றது. இங்குதான் மனிதன் வேறுபடுகின்றான்.
ஒருவன் எப்போது புத்தகத்தை வாசிக்கத் தொடங்குகின்றானோ, அப்போதே அவன் சார்ந்த சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கான ஒரு கண்ணியை வெட்டி எறிய முற்படுகின்றான். இந்த சமூகம் மேன்மை அடைவதற்கான முதல் படியாக வாசிப்பு அமைகின்றது. குறிப்பாக பல்வேறுபட்ட மன அழுத்தங்களில் இருந்து மனிதனை விடுதலை செய்வதற்கான கருவியாக வாசிப்பு அமைகின்றது.
குற்றவியல் அறிஞர்களிடையே ஒரு பெரும் விவாதம் பல நூறு ஆண்டுகளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பிறக்கும் போதே ஒருவரின் குண நலன்கள் தீர்மானிக்கப்படுகின்றதா? அல்லது வாழும் சூழல் ஒருவரது குண நலன்களைத் தீர்மானிக்கின்றதா? என்ற விவாதத்திற்கு குற்றவியல் அறிஞர்கள் பலரும் இருவேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பிறப்பின் வழியாக ஒருவரது குண நலன்கள் வருவதாக இருந்தாலும் கூட, இன்றைய நிலையில் வாழும் சூழ்நிலைதான் ஒருவர் நல்லவராவதையும் தீயவராவதையும் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக உள்ளது.
வாழும் சூழலை தனதாக்கிக் கொள்வதில்தான் ஒருவரின் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது. இது அவருடைய புத்தக வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்தே அமைகின்றது. மனித மனங்களை ஒருநிலைப்படுத்துவதில் புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கொடுங்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் கூட புத்தகங்களால் ஒரு சிறந்த மனிதராக வெளிவருவதை சிறைத் துறைசார்ந்த ஆவணங்கள் உணர்த்துகின்றது. இந்த அடிப்படையில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதைக் காட்டிலும் அவர்கள் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் என்ற கருத்து உலக அளவில் அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனிதனுக்கு மனசாட்சியின் வலிமை கூடுகின்றது; குற்ற உணர்ச்சி வலிமை பெறுகின்றது. மனசாட்சி உள்ள மனிதர்களிடம் இருந்தே சமூக விடுதலை தொடங்குகின்றது. வாசிப்பு என்பது ஒரு தனிமனித செயல் அல்ல, அதில்தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கான விடுதலையும் அடங்கியுள்ளது.
***

அழுத்தமான கட்டுரை.. மனம் நிறைந்த வாழ்த்துகள்!
வாசிப்பு தான் மனிதனின் வாழ்வுக்கு வளம் சேர்க்கிறது;வாதை விலகிட வழி காட்டுகிறது.