- லறீனா அப்துல் ஹக்
தவிப்பின் ஆறாத்துயரினை
ஒரு பாடலாய் மாற்றி
இறக்கி வைக்கின்றேன்
பெருக்கெடுத்தோடியது நதி
அவள் அதனைக் கடந்தாக வேண்டும்
கேள்விக்குப் பதிலிறுப்பதற்கு
அவகாசங்கள் மிச்சமிருக்கவில்லை
நேரம் விதிக்கப்பெற்ற ரயிலாய்
அவனைப் பற்றியழைத்தது
உறக்கம்
பற்றுதலின் இழை அறுந்து தொங்கிற்று
வழிந்தோடும் நிறமிழந்த குருதியில்
தோய்ந்தழுந்தும் நினைவுகள்
காலமற்ற மாயவெளிகளில்
சிறகு பெற்றுப் பறந்தன
புறப்பாட்டின் கடைசி மணித்துளியில்
அவன் தந்துவிட்டுப்போன நேசம்
உள்ளங்கையில் கதகதத்துப் பொதும்பியது
வளைத்த போதெல்லாம் நீண்டு வளர்ந்து
ஒரு பாலமாயிற்று
இப்போது கடக்கின்றேன்
ஆற்றுப் பெருக்கை
கனவின் மரணத்தை
வாழ்வின் கடைசித் துயரை
அவரவர் சுமையை அவரவரே சுமத்தல்
விதி எனும் புரிதல் மேவ.
