– றியாஸ் குரானா

“காணாமலாக்கப்பட்டோரின் பட்டியலில்
ஒரு வழிப்போக்கன் இடம்பிடித்திருந்தான்”
இப்படி முடியும் கவிதையைக் கொண்ட
புத்தகத்தைத் திறந்தால்
கோடைகாலம் ஆரம்பிக்கிறது.

செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்
கண்ணெதிரே மரங்கள் கருகத் தொடங்கின
நிலம் வறண்டு ரொட்டிபோல்
பாளம் பாளமாய் வெடிக்கத் தொடங்கின
இராணுவ வீரர்கள் நுழைந்த ஊரைப்போல்
பதட்டத்தில் மக்கள் அஞ்சிக்கொண்டிருந்தனர்

அவசரமாக புத்தகத்தை மூடினேன்
அதை வாசிக்க கிளர்ந்த ஆவல்
குறைந்தபாடாயில்லை
சில மேகங்களைத் தயாரித்துக்கொண்டு
மீண்டும் புத்தகத்தை திறந்தேன்

மலைகளுக்கு மேலாக
அவை மிதக்கத் தொடங்கின
காடுகளையும், வயல் வெளிகளையும்
சுற்றிச் சுற்றி வந்தன.

வேறெங்கோ இந்தப் புத்தகத்தை
வாசிக்கும் சில வாசகர்கள்,
மழையை விரும்பினர் என்ற செய்தி
அடிக் குறிப்புகளாக உறுத்தின
நான் கண்ணீரைப் பொழிந்தேன்
கருணைஅல்ல எனது சேமிப்பில்
வற்றாத அளவு இருந்தன என்பதுதான் உண்மை

கடைசிப் பக்கத்தில்
ஒரு பழைய மரம் கிளைபரப்பி நின்றது
“பறவைகள் இல்லாமல்
அது துக்கப்படுவதில்லை” என்று
யாரோ முன்னுரையில் குறிப்பிட்டது
சட்டென்று நினைவுக்கு வந்தது
முதல் பக்கத்தில் சந்தித்த
ஒரு வழிப்போக்கன்
எந்தச் சலனமுமற்று
மரத்தடியில் உறங்கிக்கொண்டிருந்தான்

நாற்பத்தைந்து தொடங்கி
இருபத்தி மூன்று பக்கங்கள் வரை நீளமான
அந்த நதியை எப்படிக் கடந்திருப்பான் என
யோசித்தபடி, புத்தகைத்தை மூடினேன்
குளிர்காலம் ஆரம்பித்தது
இனி அந்தப் புத்தகத்தை
மூடுவது சாத்தியமே இல்லை.

 

***