- ஹான் காங் நேர்காணல்
- தமிழில்: நன்மாறன் திருநாவுக்கரசு
The Vegetarian நூலின்ஆசிரியர் சர்வதேச புக்கர் விருது வென்றதன் தாக்கம், அவரது நாவல் எவ்வாறு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது – மனிதனாக இருப்பதன் அர்த்தம் ஆகியவை குறித்துப் பேசுகிறார்.
2023-ல் நடைபெற்ற இந்த நேர்காணலை புக்கர் குழு ஒழுங்கு செய்தது.
***
2016ஆம் ஆண்டு, விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் நபர் நீங்கள்தான். வெற்றியை எப்படி உணர்ந்தீர்கள்? அது உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
நான் The Vegetarian நாவலை 2003 – 2005 ஆண்டுகளுக்கு இடையே எழுதினேன். 2007-ல் முழுநீள நாவலாகப் பதிப்பித்தேன். 2016-ல் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு அந்நாவல் சர்வதேச புக்கர் பரிசை வென்றது கொஞ்சம் விநோதமாக இருப்பதாக உணர்ந்தேன். இந்தப் பரிசை வென்றவுடன் எனது மற்ற படைப்புகளான Human Acts, TheWhite Book, Greek Lesson போன்றவையும், எனது சமீபத்திய நாவலான We Do Not Part-ம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன, மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. எனது படைப்புகள் வெவ்வேறு கலாசாரத்தைச் சார்ந்த அகண்ட வாசகர் பரப்பைச் சென்றடைவதற்குச் சர்வதேச புக்கர் பரிசு மதிப்பிட முடியாத அளவு உதவியதற்கு நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.
அந்த விருதுக்குதேர்ந்தேடுக்கப்பட்ட, விருதை வென்ற முதல் கொரியர் நீங்கள்தான். உங்கள் வெற்றியின் விளைவாக கொரிய புனைவுகளுக்கு அதிக கவனம் கிடைப்பதாக நினைக்கிறீர்களா? அல்லது, அப்படியில்லாவிட்டாலும்அவை சர்வதேச அளவில் கவனம் பெறுகின்றனவா?
அந்தச் சமயத்தில் கிம் ஹைசூன் போன்ற சில உன்னதமான கொரிய கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன. தற்போது, கொரிய எழுத்தாளர்களின் படைப்புகள் மென்மேலும் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் பதிப்பிடப்படுகின்றன. சமீப ஆண்டுகளில் கொரிய இலக்கியங்களில் பணியாற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவு அதிகரித்துள்ளது. இந்த நிகழ்வு கொரிய சினிமாவும்,பாப் இசையும் சர்வதேச அளவில் பெற்ற வெற்றிகளுடன் நெருங்கிய தொடர்புடையதாகத் தோன்றுகிறது.
உங்கள் நாவல் 1997-ல் வெளியான ‘The Fruit of My Woman’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. அதை முழுநீள நாவலாகவோ, அல்லது மூன்று பகுதிகளைக் கொண்ட கதையாகவோ உருவாக்க உங்களுக்கு எது ஊக்கமளித்தது?
The Fruit of My Woman எழுதிய பிறகு, ஒருநாள் அந்தக் கதையின் இன்னொரு வடிவத்தை எழுத வேண்டும் என்று எண்ணினேன். இரண்டு முழுநீள நாவல்களை எழுதிய பிறகு எனது மூன்றாவது நாவலான The Vegetarian-ல் தான் அதைச் செய்ய முடிந்தது. குறிப்பாக, TheVegetarian-ன் முதல் பகுதி அசல் கதையின் பல முறையான சுவடுகளைத் தக்க வைத்துள்ளது. உதாரணமாக, கணவன் நம்பகத்தன்மையற்ற கதைசொல்லியின் பாத்திரத்தை ஏற்றிருப்பான். பெண் கதாநாயகியின் குரல் அரைகுறையாக கனவிலோ அல்லது அவளது தாயுடனான தன்னுரையிலோ மட்டும் வெளிப்படும். ஒரு தாவரமாக மாறும் அல்லது மாற விரும்பும் பெண்ணைப் பற்றிய இந்த இரு கதைகளுக்கும் இடையேயான வேறுபாடு இருள், வேட்கை மற்றும் தீவிரம் ஆகியவற்றின் மட்டத்தில் அமைந்துள்ளது.
The Vegetarian இன்னும் இருண்மையானது. அதி தீவிரமானது. வலி நிறைந்தது.‘The Fruit of My Woman’-ல் நிகழ்வது போல அமானுஷ்யங்கள் எதுவும் கிடையாது. கதாபாத்திரங்கள்,குரூரமான யதார்த்தத்தின் மத்தியில் அழிவை நோக்கி அமிழ்கின்றன. மற்றொரு வேறுபாடு, நாவலில் கதாநாயகிக்கு ஒரு சகோதரி இருக்கிறாள். இது விநோதமான சுய அடையாள உணர்வை உருவாக்குகிறது.
The vegetarian 20க்கும்மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தநாவலுக்கான எதிர்வினை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக இருந்ததா? அவற்றில் ஏதாவது சில எதிர்வினைகள் உங்களை ஆச்சரியப்படுத்தியதா? அவை வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு வாசகப் பரப்பை ஈர்த்ததா, அல்லது வெவ்வேறு வழிகளில் அதிர்வுண்டாக்கியதா?
என் படைப்பு, வெவ்வேறு கலாசாரங்கள், தலைமுறைகளுக்கிடையே நுண்ணிய வேறுபாடுகளுடன் பொருள் விளக்கம் கொள்ளப்படுவதைக் காண்பது ஆவலைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அதைவிட எனக்கு ஆச்சரியமூட்டியது என்னவென்றால் பொதுதளத்தில் இந்த நாவல் எப்படி உள்வாங்கப்பட்டது என்பதுதான். உதாரணமாக, இந்த நாவல் எல்லா இடங்களிலும் பெண் வாசகர்களால் அதிகம் அரவணைக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டது.
ஆங்கிலப் பதிப்பிற்காக நீங்கள் மொழிபெயர்ப்பாளர் டெபோரா ஸ்மித்துடன் பணியாற்றினீர்கள் (ஸ்மித் சுயமாக கொரிய மொழி கற்றுக் கொண்டவர். மேலும் அவர் மொழிபெயர்த்த முதல் நூல் இதுதான்). மற்ற மொழியாக்கங்களை விட அந்த அனுபவம் எப்படி இருந்தது? மொழிபெயர்ப்பைச் சுற்றி குறிப்பிட்ட அளவிலான சர்ச்சைகள் இருந்ததை எவ்வாறு உணர்ந்தீர்கள்?
பலரும் வெளிப்படுத்திய கரிசனத்துக்கு மாறாக, மொழிபெயர்ப்பாளர் வேண்டுமென்றே மூலப் பிரதியை மதிப்பிழக்க செய்தார் என்பதையோ, அசலை விடமுற்றிலும் மாறுபட்ட படைப்பை உருவாக்கினார் என்பதையோ நான் நம்பவில்லை. பிழைகள் திருத்தப்பட்டன. மேலும் மொழியாக்கம் அதன் இயல்பிலேயே இழப்பையும், புத்தாய்வையும் உள்ளடக்கிய மிகவும் கடினமான, சிக்கலான செயல்பாடாகும். கலாபூர்வமான தன்மை, லயம், கவித்துவ இறுக்கம், நுணுக்கம், அர்த்தஅடுக்குகள், ஆழமாகப் பொறிக்கப்பட்ட மூலமொழியின் கலாச்சார சூழமைவு போன்ற – அந்த மொழியில் மட்டுமே சாத்தியமான அனைத்தும் – வேறொரு மொழிக்கு மாற்றமடையும் போது தவிர்க்க முடியாமல் இழப்பைச் சந்திக்கின்றன.
எந்தவொரு மொழிபெயர்ப்பாளருக்கும் இருக்கக்கூடிய சவாலான பணி, இழப்பின் இந்த இருண்ட சுரங்கத்தின் ஊடாக வழியைப் பற்றிச் சென்று, அசல் உரைக்கு முடிந்தவரை உண்மையாக இருக்கக் கூடிய, மிக நெருக்கமான சமமான மாற்று வார்த்தைகளையோ அல்லது ஒப்புமைகளையோ கண்டறிவதாகும்.
கிரண்டா புக்ஸ் எனக்கு முதல் மெய்ப்புக் கோப்பை அனுப்பியபோது தான் TheVegetarian நாவலின் ஆங்கிலப் பதிப்பை முதன் முதலில் கண்டேன். அந்தச் சமயத்தில் HumanActs-ஐ எழுதுவதில் நான் முற்றிலும் ஆழ்ந்திருந்தேன். உண்மையைச் சொன்னால், அகராதியில் உள்ள சொற்களைக் கூட பார்க்காமல் அச்சுப் பிரதியை மூன்று, நான்கு மணி நேரங்கள் வாசித்தேன். அப்போது ஒரு சில பிழைகளைக் கண்டு, அது குறித்து டெபோராவுக்கு சில மின்னஞ்சல்கள் அனுப்பினேன். அந்த அளவுக்குத்தான் Thevegetarian நாவல் மொழியாக்கத்தில் என்னுடைய ஈடுபாடு இருந்தது.
2015-ல் டெபோரா HumanActs-ல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நான் வேறு எதையும் எழுதவில்லை. அதனால் அவருடன் ஆழ்ந்த உரையாடலில் ஈடுபடுவதற்கு வேண்டிய அமைதியான மனநிலை என்னிடம் இருந்தது.2017-ல் டெபோரா The White Book-ஐ மொழிபெயர்த்த போது நானும் அவரும் மொழிபெயர்ப்புப் பிரதியை மூலப் பிரதியுடன் வாக்கியத்திற்கு வாக்கியம் ஒப்பிட்டோம். பிறகு, TheVegetarian நாவலின் மொழிபெயர்ப்பு குறித்து காரசாரமான விவாதம் எழுந்த போது, நான் Human Acts நாவலுக்குச் செய்தது போல மொழிபெயர்ப்பைச் சரிபார்க்க நிறைய நேரம் செலவிட்டிருக்க வேண்டும் என்று அப்போதுதான் உணர்ந்தேன். உண்மையில், நான் ஒரு நிபுணரை நியமித்து மொழிபெயர்ப்புப் பிரதியை மூலப் பிரதியுடன் வாக்கியத்திற்கு வாக்கியம் ஒப்பிட்டுப் பார்க்கச் செய்திருக்க வேண்டும்.
அந்த விவாதம், இரண்டு வாதங்களின் குழப்பமிகு கலவையாக இருந்தது. முதலாவது தவறுகள் நிறைந்த மொழியாக்கம் பற்றியது. மொழிபெயர்க்கப்பட்ட சீன எழுத்துக்களில் பிழைகளும், வாக்கியங்களில் இருந்து உட்பொருள் விலக்கப்பட்ட இடங்களில் சூழல் பற்றிய தவறான அனுமானங்களும் இடம் பெற்றிருந்தன. இது கொரிய மொழியில் பெரும்பாலும் நிகழ்வதுதான். 2017-ல் எழுப்பப்பட்ட பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் டெபோரா 67 திருத்தங்களை மேற்கொண்டார். 2018-ல் மறுபதிப்பு கண்ட The Vegetarian-ன் பிரிட்டன், அமெரிக்கப் பதிப்புகளும், அத்துடன் ஆங்கிலத்தின் வழியாக மொழிபெயர்க்கப்பட்ட பிற மொழி பதிப்புகளும் அந்தக் குறிப்புகளின் அடிப்படையிலேயே திருத்தியமைக்கப்பட்டன. மொழிபெயர்ப்பில் பிழைகளைக் கண்டறிந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
சர்ச்சைக்குரியஇரண்டாவது புள்ளி, மொழிபெயர்ப்பு அசல் பிரதியில் இருந்து எந்த அளவிற்கு விலகிச் செல்கிறது என்பதைப் பற்றியது. பிரச்சினை என்னவென்றால் இந்த வாதத்திற்கு ஆதாரமாக தவறான மொழியாக்கங்கள் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக Cheohyeong எனும் கொரிய சொல் ஒருவரது மனைவியின் மூத்த சகோதரியைக் குறிக்கிறது. ஆனால் அந்த சொல்லின் முதல் பகுதியான Cheo-வை மட்டும் எடுத்துக் கொண்டால் மனைவி என்று பொருள். இரண்டாவது பகுதியான Hyeong-ஐ மட்டும் பார்த்தால் மூத்த சகோதரன் என்று பொருள். தொடக்க நிலையில் இருப்பவருக்கு இது குழப்பமாக இருக்கும். ஒருவருடைய மனைவியின் மூத்த சகோதரர் என்று அவர்கள் அர்த்தப்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. இப்படியான தவறுகள் மொழிபெயர்ப்பாளர் கதாபாத்திரங்களை மாற்றிவிட்டார் என்கிற தப்பெண்ணத்திற்கு இட்டுச் சென்று விட்டது. மேலும், ஆங்கில மொழிபெயர்ப்பில் அசல் பிரதியின் அரை பக்கம் அளவு விடுபட்டு விட்டது. அது பதிப்பாளரின் முடிவு என நான் புரிந்து கொள்கிறேன். மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு வாக்கியத்தையும் தளரா உழைப்புடன் மொழியாக்கம்செய்திருக்கிறார்.
The Vegetarian அழகுடன் திகிலை ஒன்றிணைக்கிறது. இந்தக் கதை சில இடங்களில் குரூரமான, அதிர்ச்சிகரமான, உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைக் காட்சிகளைக் கொண்ட, கட்டாய உணவளித்தல், மரணத்தின் முன்னறிகுறி ஆகியவற்றைப் பற்றியதாக இருக்கிறது. இதுபோன்ற இருண்டகருப்பொருள்களையும், மனித நடத்தைகளையும் எழுதுவதற்கு எது உங்களை அழைத்துச் சென்றது?
உலகைப் பற்றியும், மனிதநேயம் பற்றியும் நான் கொண்டிருக்கும் கேள்விகளை மூன்று பிரிவுகளாக, இரண்டு சகோதரிகள் தனிமையில் அழுவதைப் பற்றியதாக முன் வைக்க விரும்பினேன்: ஒருத்தி மனித இனத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நிறுத்த விரும்பி, இறைச்சி சாப்பிட மறுக்கிறாள். தான் தாவரமாக மாறிவிட்டதாக நம்புகிறாள். மற்றொருத்தி தன் சகோதரியை மரணத்தில் இருந்து காப்பாற்ற விரும்பி சச்சரவில் உழன்று, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்கிறாள். நான் நாவல்கள் எழுதும்போது என்னை எழுதத் தூண்டிய கேள்வியின் எல்லையை அடைய முயற்சிப்பேன் – விடையை அல்ல. மனிதனாக இருப்பதன் அர்த்தம் குறித்த எனது கேள்விகளை ஊடுருவதற்கு என்னால் தவிர்க்க முடியாமல் அத்தகைய தீவிரக் காட்சிகள், படிமங்கள் ஊடாகச் செல்ல நேர்கிறது.
இந்தக் கதையில் செறிவான காட்சிப் படிமவியலும் தொடர்ந்து சம்பவிக்கும் உருவகக் கூறுகளும் அடங்கியுள்ளன. இதனை கதையில் எழுத வேண்டும் என்று உங்களுக்கு நோக்கம் இருந்ததா? அல்லது அவை இயல்பாக உருவானதா? கதையின் இந்தக் காட்சிக் கூறுகள் எவ்வளவு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன?
நான் புனைவு எழுதும்போது உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். செவிப்புலன், தீண்டுதல்,காட்சிப் படலங்கள் போன்ற தெளிந்த உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த உணர்வுகளை மின்னோட்டம் போன்று என் வாக்கியங்களுக்குள் புகுத்துகிறேன். விநோதமாக என் வாசகர் அந்த மின்னோட்டத்தைப் புரிந்துணர்கிறார்கள். அந்த இணைப்பின் அனுபவம் ஒவ்வொரு முறையும் எனக்குத் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் The Vegetarian-ஐ 2007-ல்எழுதினீர்கள்.2015-ல் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது பல வாசகர்களும் விமர்சகர்களும் அதை கொரிய ஒழுக்கத்தின் மீதான, சமூகத்தின் மீதான, ஆணாதிக்க நெறிமுறைகள் மீதான வரம்பு மீறல் தன்மை கொண்ட விமர்சனமாக, நீதியைப் பேசும் கதையாக உணர்ந்தார்கள். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலையை எப்படி உணர்கிறீர்கள்?
ஆணாதிக்கத்துக்கு எதிரான நீதிக்கதையாக இந்த நாவலை வாசிக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும், இது கொரிய சமூகத்திற்கு மட்டுமே உரித்தானது அல்ல. அளவில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் இது உலகளாவியது அல்லவா? நான் குறிப்பாக கொரிய சமூகத்தை மட்டும் உருவகப்படுத்த எத்தனிக்கவில்லை.
The vegetarian வழமையான கதையாடல் கட்டமைப்புகளுக்கு சவால் விடுக்கிறது. யோங்-ஹேயின் கதை, மூன்று கதை சொல்லிகளின் மூலம் சொல்லப்படுகிறது, ஆனால் அவள் பேசுவதற்கு அரிதாகவே அனுமதிக்கப்படுகிறாள். ஏன் உங்கள் கதாநாயகியை இந்த வகையில் எழுத வேண்டும் என்று தேர்ந்தெடுத்தீர்கள்?
யோங் -ஹே புரட்சிகரமான வலுவான ஒரு பாத்திரம். அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு தாவரமாக மாற வேண்டும் என்கிற தீர்மானத்துடன் இருக்கிறாள். முரண் என்னவென்றால் அவளது முயற்சிகள் அவளை மரணத்திற்கு அருகில் அழைத்துச் செல்கின்றன. யோங்-ஹேவை நேரடியாகப் பேச வைப்பதற்குப் பதில், அவள் எப்படிக் கவனிக்கப்படுகிறாள், வெறுக்கப்படுகிறாள், தவறாகப் புரிந்து கொள்கிறாள், பரிதாபத்திற்கு உள்ளாகிறாள், உணர்வற்ற பொருளாக்கப்படுகிறாள் என்பதை மற்ற கதாபாத்திரங்களின் விவரிப்பு மூலம் காட்ட விரும்பினேன். இந்தத் தவறான புரிதல்களில் இருந்து வெளிவரும் அவளைப் பற்றிய உண்மையை வாசகர்கள் ஒருங்கிணைக்கும் தருணங்களைக் கற்பனை செய்தேன்.
சர்வதேச புக்கர் பரிசை வென்றது மட்டுமில்லாமல் TheVegetarian, யி சாங் இலக்கியப் பரிசையும் வென்றது. விமர்சன ரீதியான பாராட்டுகளையும் பெற்றது. ‘ஆண்டின் சிறந்த புத்தகங்களை’ உள்ளடக்கிய சில பட்டியல்களிலும் இடம்பெற்றது. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட ஒரு படைப்பை எழுதுவது எப்படி இருந்தது? அதற்கடுத்த ஆண்டுகளில் எத்தகைய தாக்கத்தை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியது?
The Vegetarian-ஐ எழுதுவதற்கு நான் செலவிட்ட மூன்று ஆண்டுகளும் எனக்குக் கடினமான நாட்கள். அந்த நாவல் ஒருநாள் இத்தனை வாசகர்களைக் கண்டடையும் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை. அந்நேரத்தில் நாவலை முடிக்க முடியுமா என்பது கூட உறுதியாக எனக்குத் தெரியவில்லை.எழுத்தாளராகப் பிழைக்க முடியுமா என்பதில்கூட நம்பிக்கை இல்லை. நான் விரல்களில் மூட்டு வீக்கத்தால் துன்புற்று வந்தேன். அதனால் நான் முதல் இரண்டு பகுதிகளை நிதானமான வேகத்தில் எழுதினேன். தாளில் வழுக்கிக் கொண்டு செல்லும் மிருதுவான முனையுடைய பேனாவை பயன்படுத்தி எழுதினேன். இரண்டு பால் பாயிண்ட் பேனாக்களை தலைகீழாகப் பிடித்தபடி இறுதிப் பாகத்தை, தட்டச்சு செய்து முடித்தேன். இந்த நாளில், நாவலின் வெற்றியைப் பற்றி கேள்விப்படும் போது கொஞ்சம் பொருத்தமற்று இருக்கிறது. குறிப்பாக, கதாநாயகி யோங் -ஹே வெற்றி எனும் சொல்லுக்கு பொருத்தமானவள் அல்ல.
எப்படியோ, என் வாழ்க்கையின் அந்தக் காலகட்டத்தை கடந்து வந்து நாவலை நிறைவு செய்தேன். அதற்குப் பின் என்னால் அடுத்த படைப்புக்குச் செல்ல முடிந்தது.The Vegetarian நாவலின் கடைசிக் காட்சியில், யோங்-ஹேயின் சகோதரி மருத்துவ ஊர்தியில் அமர்ந்தபடி சாளரத்தின் ஊடாக ‘பதிலுக்காகக் காத்திருப்பது போல. எதையோ எதிர்ப்பது போல்’ வெளியே வெறித்துப் பார்ப்பார். உண்மையில், முழு நாவலும் பதிலுக்காகக் காத்திருப்பதைப் போலவும், எதையோ எதிர்ப்பதைப் போலவும் உணர்கிறேன். பொதுவாக, ஒரு நாவலை எழுதி முடித்த பிறகு என்னிடம் மிச்சமிருக்கும் கேள்விகள் அடுத்த நாவலை எழுதுவதற்கு என்னை உந்தித் தள்ளும். அதனால் நான் எனது நான்காவது நாவலை TheVegetarian-ன் கடைசிக் காட்சியில் இடம் பெறும் கேள்வியில் இருந்து எழுதத் தொடங்கினேன்: மனித வாழ்க்கையுடன் நாம் எப்படி இணக்கம் ஏற்படுத்துகிறோம்? அது ஏன் ஒரே நேரத்தில் அழகாகவும் வன்முறையாகவும் இருக்கிறது? இப்படியாக எனது நான்காவது நாவலின் இறுதியில் எழுப்பப்பட்ட கேள்வி, எனது புதிய படைப்பின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அப்படித்தான் நான் இதுவரை எழுதி வருகிறேன். இந்தக் கோடையில் நான் ஒரு புதிய நாவலை எழுதத் தொடங்கினேன், இறுதியில் நான் கண்டறியப் போவதை அடையக் காத்திருக்கிறேன்.
மொழியாக்கம் செய்யப்பட்டமூன்று கொரிய நாவல்களை பரிந்துரைக்க வேண்டும் என்றால் எவற்றை சொல்வீர்கள்? ஏன்?
ஹ்வாங் ஜுங்குன் எழுதிய, ஜங் யெவோன் மொழிபெயர்த்த One Hundred Shadows-ஐ பரிந்துரைக்க விரும்புகிறேன். கிம் ஹை-ஜின் எழுதிய, ஜேமி சாங் மொழிபெயர்த்த Concerning My Daughter-ஐ பரிந்துரைக்கிறேன். இறுதியாக போரா சுங் எழுதிய, ஆன்டன் ஹர் மொழிபெயர்த்த Cursed Bunny-ஐ பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்த மூன்று படைப்புகளும் தனது புதிய அர்த்தங்களூடான பார்வையை ஒருபோதும் விலக்காமல் பிரபஞ்சத்தையும் மனித மனத்தின் அடியாழத்தையும் நேரடியாக நோக்குகின்றன..
***
நன்றி : புக்கர் பரிசு இணையதளம்
