• கிம் கி-டுக் உடன் ஒரு நேர்காணல் 
  • நேர்காணல் கண்டவர் : வோல்கர் ஹம்மல்
  • தமிழாக்கம்: பொன்னன் ஆனந்த்

     

    தென் கொரிய சினிமா இயக்குநரான கிம் கி-டுக் புதிய வகை சினிமாவைச் சேர்ந்தவர். கலை அல்லது சினிமா பற்றிய எந்த கல்விப் பின்னணியும் இல்லாத அவர், பள்ளியிலிருந்து பாதியில் விலகியவராக, தொழிற்சாலைகளில் வேலை பார்த்தவராக இருந்து, பின்னர் ராணுவத்தில் சேர்ந்தார். சர்வதேச சினிமா விழாக்களில் மிகவும் கொண்டாடப்படுகிற இயக்குநர்களில் ஒருவராக கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் மாறியிருக்கிறார். 1996 -ல் தனது முதல் படமான  Crocodile  செய்தார்; சியோல் நகரிலுள்ள ஹான் நதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் உடல்களைச் சேகரிக்கும் விந்தை மனிதனைப் பற்றிய படம் அது. கொரிய சமூகம் பற்றிய கிம்மின் புதிய, தீவிரப் பார்வை அவரைப் பல பார்வையாளர்களிடமிருந்து தள்ளி வைத்தது. ஆனால்,அதுவே ஒரு சிறிய,உறுதியான உணர்ச்சிகரமான ரசிகர்கள் குழுவை அவருக்கு உருவாக்கித் தந்தது. விளிம்பு நிலை மனிதர்கள் மற்றும் வெளிகள், தீர்மானகரமான எதிர்-மைய நீரோட்ட அழகியல் ஆகியவையும் அவரது பிந்தைய படங்களில் காணப்பட்டன.கொரிய ‘பாக்ஸ் ஆபீஸ்’ தோல்விகளாக அவரது படங்கள் அமைந்தாலும், ஐரோப்பாவில் சினிமா விழாக்களில் அவரது படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டதனால் அவர் முக்கிய ஆளுமையாக மாறினார். சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முதல் படமாக  Birdcage Inn (1998) அவருக்கு அமைந்தது. தொடர்ந்து, சர்ச்சைக்குரியதாக The Isle (2000) வந்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ‘உலகளாவிய யுத்தம்’ என்பது பற்றிய கிம்மின் வன்முறையான பகுப்பாய்வு, சன்டேன்ஸ் மற்றும் வெனிஸ் திரைப்பட விழாக்களில் பார்வையாளர்களை அதிர்ச்சியுற வைத்தது. அதே சமயம், அதன் அழகியல், சர்ரியல் படிமம் மற்றும் குறிப்பிடத்தக்க கவிதைத்தனத்திற்காகவும் அது பாராட்டப்பட்டது.பிறகு  Real FictionAddress Unknown ,  Bad Guy வந்தன. இங்கு வோல்க்கர் ஹம்மல், கிம் கி-டுக்கின் அடுத்த படம், ஹாலிவுட் மற்றும் வெற்றி ஆகியன குறித்து உரையாடுகிறார்.

    ***

    வோல்கர் ஹம்மல்: மிஸ்டர் கிம், உங்கள் படங்களுக்கான துவக்கம் வெறுப்பு என ஒருமுறை நீங்கள் கூறினீர்கள். உங்கள் புதிய படமான  Bad Guy -யை’ எந்த மாதிரியான கோபம் வழி நடத்துகிறது?

    கிம் கி-டுக்: வெறுப்பு என்பதை பெரிய அளவிலான தளத்தில் நான் கூறினேன். அதை அதிலிருந்து நீங்கள் வெளியே எடுத்து விடுவீர்கள் என நான் நினைக்கவில்லை. ஒரு நபர் அல்லது ஒரு விஷயம் மீதான வெறுப்பு என்ற பொருளில் நான் கூறிய வெறுப்பு என்பது இல்லை. நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்தல் மற்றும் நான் விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதிலிருந்து நான் பெறுகிற உணர்வுதான் அது. அதனால்தான் நான் படங்கள் செய்கிறேன்: நான் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை நான் பார்க்கிறேன்; பிறகு அதைப் புரிந்து கொள்வதற்காக நான் படம் பண்ணுகிறேன். எனவே, வெறுப்பு என்பதற்குப் பதிலாக நான் கொண்டுள்ள தவறான புரிதல் என்பதைப் பற்றி பேசலாம்.

    வோல்கர்Bad Guy மூலமாக நீங்கள் உலகத்தில் கண்டுபிடிக்க முனைந்தது என்ன?

    கிம் : அனைவரும் ஒரே மாதிரியாக பிறந்தும், சமமான உரிமைகளோடும் திறன்களோடும் இருந்தும், வளரத் துவங்குகையில் ஏன் நாம் பல வகையாக பிரிக்கப்படுகிறோம் என்ற கேள்விதான் நான் கேட்க விரும்பிய கேள்வி.நமது தோற்றம் மற்றும் பாவனைகளால் நாம் ஏன் தீர்மானிக்கப்படுகிறோம்?நாம் அழகாகத் தோன்றுகிறோமா இல்லையா என்பதும்,நம்மிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பதும் ஏன் முக்கியமான விஷயமாக இருக்கிறது? நாம் பிறந்த பின், வளர்ந்த பின் திணிக்கப்படும் இத்தகைய அளவுகோல்கள் பொருட்டு நாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்லமுடியாத வரிசைகளாக, சமூக வகுப்புகளாகப் பிரிக்கப்படுகிறோம். இந்த வகுப்புகளால் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியாதா என்றும் அவைகளின் உலகங்கள் இணைய முடியாதா என்றும் நான் கேட்க விரும்புகிறேன்.

    வோல்கர்: உங்கள் கேள்விக்குப் பதில் கிடைத்ததா?

    கிம்: பணம்,தோற்றம்,வகுப்பு என்பவற்றிற்கு அப்பாற்பட்டு மனிதர்கள் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்பதுதான் எனது பதில். அதுதான் என் பதிலாக இருக்க முடியும்; ஆனால், படத்தை  நான் எடுப்பதற்கு, கேள்வியின் மூலம் பார்வையாளர்களைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் காரணம். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான பதிலைப் பெறுவார்கள் என நான் உறுதியாக நினைக்கிறேன்.

    வோல்கர்: உங்கள் படங்களில் அடிக்கடி காணப்படுவதுபோல,  Bad Guy படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான ‘மாமா’ ஹாங் ஜி (சோ ஜே-ஹ்யூன் நடித்த பாத்திரம்), தன்னை வெளிப்படுத்த முடியாத அமைதியான பாத்திரம். அவனது ஒரே மொழியாக வன்முறை மட்டுந்தான் இருக்கிறது. இந்த அமைதிக்கு  என்ன காரணம்?

    கிம்: எனது படங்களில் பாத்திரங்கள் பேசாமலிருப்பதற்கு காரணம், அவர்கள் ஆழமாக காயப்பட்டிருப்பதுதான். காப்பாற்றப்படாத உறுதிமொழிகள் காரணமாக மனிதர்கள் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை அழிந்துபோய்விட்டது. ‘ஐ லவ் யூ’ என்பது போன்ற விஷயங்கள் அவர்களிடம் சொல்லப்பட்டன; அப்படி அவர்களிடம் சொன்னவர்கள் அதை உண்மையாகவே சொல்லவில்லை. இப்படிப்பட்ட ஏமாற்றங்கள் காரணமாக அவர்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்; அதனால் பேசுவதையே அவர்கள் நிறுத்திவிட்டனர். அவர்கள் திரும்பிப் போயிருக்கும் வன்முறை என்பதை ஒரு உடல் மொழி என்றே நான் அழைக்க விரும்புகிறேன். அது எதிர்மறையான வன்முறை என்பதைவிட உடல் ரீதியிலான ஒரு வெளிப்பாடு என்றே நான் அதைக் குறித்து நினைக்கிறேன்.எனது கதாபாத்திரங்கள் கொண்டுள்ள காயங்கள் மற்றும் தழும்புகள் ஆகியவை தமது அனுபவங்கள் காரணமாக இளமையின்போது, வெளியுலக பிரச்சினைகளுக்கு பதில்வினையாற்ற முடியாதபோது பெற்றவை.அவர்கள் உடல்ரீதியிலான துன்புறுத்தல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள். எடுத்துக்காட்டாக, தமது பெற்றோர்களிடமிருந்து; அவர்கள் பெற்றோர் சண்டையிடும்போது கிடைக்கும் வசைகளிலிருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள். அல்லது, நீங்கள் தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒருவர் உங்களைத் தாக்கும்போது என்பதுபோல. அப்படிப்பட்ட விஷயங்கள் நடக்கும்போது, நீங்கள் உதவியற்றவராகவும், அது குறித்து எதுவும் செய்ய முடியாதவராகவும் ஆகிவிடுகிறீர்கள். இத்தகைய அனுபவங்கள் அவர்களிடம் தழும்புகளாக தங்கிவிடுகின்றன. இதேபோன்ற அனுபவங்கள் எனக்கும் கிடைத்தன. உதாரணத்துக்கு, கடந்த காலங்களில், என்னைவிட இளைய ஆனால் என்னைவிட பலம் வாய்ந்தவர்கள், என்னை அடித்திருக்கின்றனர். என்னை என்னால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. கடற்படையிலும்கூட, என்னைவிட உயர்ந்த பதவியில் இருந்ததனாலேயே சில வீரர்கள் என்னை எந்தக் காரணமும் இன்றி அடித்திருக்கின்றனர்.இதுபோன்ற அனுபவங்களைப் பெற்றபோது, இது ஏன் இப்படி இருக்கிறது என நான் என்னையே கேட்டுக் கொண்டேன்? நான் இயக்குநராகும்வரை இக்கேள்விகள் என்னிடமே தங்கியிருந்தன. இப்போது, இந்த விஷயங்களைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன், உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்துகிறேன்.

    வோல்கர்: உங்கள் படங்கள் சுயசரிதைகள் எனச் சொல்வீர்களா?

    கிம்: Bad Guy -யைப் பொறுத்தளவில், நான் முதலில் சொல்லவேண்டியது, ஹாங்-கி போன்ற நபர்களை எனக்குப் பிடிக்காது என்பதுதான். ஆனால்,ஒருமுறை சிவப்பு விளக்கு மாவட்டத்தில் வேலை செய்த ஒருவரைச் சந்தித்தேன். எந்தக் காரணமும் இன்றி அவர் என்னை அடித்தார். அப்போது அவரை நான் வெறுத்தேன். அந்த நிலையில் எனக்கு அவரைப் புரியவில்லை; ஆனால், புரிய முயன்றேன். இந்தப் படத்தின் மூலம் அக்கதாபாத்திரத்தின் மனதுள் புகுந்து, எது அவனை அவ்வாறு செய்ய வைத்தது என்பதை அறிய முயன்றேன்.

    வோல்கர்: உங்களை இயக்குநராகக் கொண்டு ‘Bad Guy ‘யை ரீமேக் செய்ய ஹாலிவுட் விரும்புவதாக வதந்திகள் இருப்பது பற்றி உங்கள் கருத்தென்ன?

    கிம்: அமெரிக்க நடிகர்கள், எடுத்துக்காட்டாக பிராட் பிட், ஆகியோரைக் கொண்டு ‘Bad Guy‘யின் ஹாலிவுட் வடிவத்தை எடுக்க விரும்புகிறேன். ஆனால்,அது எனது சொந்த விருப்பம்தான்; ஹாலிவுட்டிலிருந்து இன்னும் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.

    வோல்கர்: உங்களது சொந்த, வன்முறை அழகியல் ஹாலிவுட்டிற்கு சரிவரும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

    கிம்: வெளியிலிருந்து பார்க்கும்போது ஹாலிவுட்டிற்கு கண்டிப்பான வேறு விதிகள் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால்,உண்மையில் அதுபோல இல்லை என நான் நினைக்கிறேன். அவை தாம் சொல்ல விரும்புபவற்றை சொல்கின்றன; மறைமுகமாக. அதனால் அவை தமக்கான எல்லைக்குள் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அவை அப்படி இல்லை. அதனால்தான் நான் அங்கு வேலை செய்ய விரும்புகிறேன். அவர்கள் பாணியில் அதனை செய்யலாம் என. வாய்ப்பிருந்தால் ‘Bad Guy‘யை பிரெஞ்சுப் பாணியில் பிரெஞ்சு வடிவத்தில் செய்ய விரும்புகிறேன். இந்த ஹாலிவுட் செய்தி உங்களுக்கு எங்கேயிருந்து கிடைத்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விற்பனையாளர்களிடம் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்த விஷயம்தான் அது.

    வோல்கர்: 2001 ப்யூசன் திரைப்பட விழா பற்றிய ஒரு கட்டுரையில் நான் அதைப் பார்த்தேன்.

    கிம்: எனது விநியோகஸ்தர்களிடமிருந்து அச் செய்தி வந்திருக்கும். வெளிநாட்டிலிருந்து அப்படி கேள்வி வந்தது,நான் செய்ய முடியுமா என்பது பற்றி. நான் சரி என்றேன்.

    வோல்கர்: ‘Bad Guy‘ போன்ற ஒரு ஹாலிவுட் படம் என. அதாவது தம்மைப் பற்றி வெளிப்படுத்த தமது உடலைப் பயன்படுத்துகிறவர்களைப் பற்றியது, ‘Fight Club‘ (டேவிட் ஃபின்ஷர், 1999) படம்தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் ஏதாவது ஒற்றுமை காண்கிறீர்களா?

    கிம்: துரதிர்ஷ்டவசமாக நான் ‘Fight Club‘ பார்க்கவில்லை. நான் கேள்விப்பட்டதிலிருந்து, அப்படம் எனது 3 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்களில் எடுக்கப்பட்ட  ‘Real Fiction‘ -க்கு நெருக்கமாக இருக்கிறது என நினைக்கிறேன். தான் வெறுக்கின்றவர்களைக் கொன்றுவிட கிளம்பிச் செல்லும் ஒருவனைப் பற்றிய கதை அது. இறுதியில்,அது வெறும் கனவு என தெரிகிறது.கொஞ்சம் ‘American Psycho‘ (மேரி ஹாரன் 2000) போல அது இருக்கும்.

    வோல்கர்: உங்கள் படங்களைப் பற்றி “semi-abstract” என்று நீங்கள் www.kimkiduk.com என்ற உங்கள் இணைய தளத்தில் விவரிக்கிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம்?

     

    கிம்: என்னைப் பொறுத்தளவில் “semi-abstract” எனப்படுகிற படங்களை எடுப்பது என்பது, யதார்த்தத்தைக் காட்டுவது என்பதைவிடக் கூடுதலானது. நாம் காணுகின்ற இந்த உலகுடன், மேலதிகமாக நமது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.

    வோல்கர்: சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நீங்கள் ஒரு பெயிண்ட்டராக இருந்தீர்கள். குறிப்பாக, The Isle, (2000) அதிகமும் சர்ரியல் படிமம் பற்றியும், குறைந்த அளவிலேயே கதைகூறலைப் பற்றியும் கவனம் கொண்டிருந்தது. ‘Bad Guy‘  படத்தில்,  Egon Schiele-ன் ஓவியங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன.

    கிகிடு: பிரான்ஸ்ஸில் உள்ள மாண்ட்பெல்லியர் கடற்கரையில் இரண்டு வருடங்களை ஒரு ஓவியராகக் கழித்தேன். அதிகாரபூர்வமாக எந்த ஓவியக் கண்காட்சிகளையும் பிறவற்றையும் நான்  நடத்தவில்லை. நானே ஓவியங்கள் வரைந்து அவைகளைத் தெருக்களில் காட்சிக்கு வைத்தேன். ஜெர்மனியிலுள்ள மியூனிச் நகரில் சில தெருக் கண்காட்சிகளை நான் வைத்தேன், Egon Schiele -ன் வேலைப்பாடு பற்றி அங்கேதான் நான் தெரிந்து கொண்டேன்.  ‘Bad Guy‘ -ல் நான் அவரது ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில், முதற்பார்வையில் அவை வக்கிரமானதாகவும், ஆபாசமான விஷயங்களைச் சுட்டுவனவாகவும் இருந்தன. ஆனால்,அவைகளை நெருக்கமாக ஆராய்ந்தால், அவை நேர்மையானவை. ஆசையில் கட்டப்பட்டுள்ள மக்களின் பிம்பங்களை அவை காட்டுகின்றன. குஸ்தாவ் கிளிம்ட்டின் படைப்புகள்தான் உண்மையில் எனக்கு பிடித்தமானவை; Egon Schiele -ன் படைப்புகளைப் பார்க்கப் பார்க்க, நான் அவரை நோக்கி இழுக்கப்பட்டேன்.

    வோல்கர்The IsleAddress Unknown மற்றும் ‘Bad Guy‘ யில் வரும் பெண்களைப் போன்ற வேசிகள், “fallen women” ஆகியோரை  Schiele அடிக்கடி வரைந்தார். தமது உடல்களை விற்க கட்டாயப்படுத்தப்படும் பெண்களைப் பற்றிய எந்த விஷயம் உங்களை கவர்கிறது?

    கிம்: ஆண்களைவிடப் பெண்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன். ஆண் எப்போதும் விரும்புகிற ஏதோ ஒன்றைத் தருபவளாகவே பெண் இருக்கிறாள்; அதற்காக ஆண் செலவழிக்கவும் தயாராக இருக்கிறான். பெரும்பாலானவர்கள் என்னோடு உடன்பட மாட்டார்கள்;ஆனால்,நான் எண்ணுகிறபடி பார்த்தால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு என்பதே ஒருவிதமான விபச்சாரம்தான், பணம் கை மாறாவிட்டாலும் கூட.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பிரச்சினை உருவாகின்றபோது, உலகம் தொடர்ந்து செல்லத் தேவையான சக்தியை அது உருவாக்குகிறது. அது உலகளாவிய பூசல்; எனினும், ஒருவகையில் அது கலாச்சார வேறுபாடுகளையும் பிரதிபலிக்கிறது. ஐரோப்பாவைப் பொறுத்தளவில் சில காலம் அது இருந்தது என நினைக்கிறேன்; ஏனெனில் நிலைமை ஸ்திரமாக இருந்தது. இருபாலாருக்கும் இடையே சிறியதாக சிக்கல்கள் இருந்தன. எனவே, ஐரோப்பிய படங்களை நீங்கள் காணும்போது,அவை இந்த நிலவும் சூழலைக் காட்டுவதை காணமுடிகிறது; அவை ‘low-key’ யாக இருக்கின்றன. ஆசியப் படங்கள் நெகிழ்வுத் தன்மையும் வன்முறையும் அதிகமாகக் கொண்டிருக்கின்றன; ஏனெனில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான பூசல் வலுவாக இருக்கிறது.

    வோல்கர்: உங்கள் முந்தைய படங்களின் மீது போலவே ‘Bad Guy‘ மீதும் பெண்ணியக் கண்டனம் உள்ளதா?

    கிம்: ஆமாம், கண்டிப்பாக. 90 சதவீத பெண் விமர்சகர்கள் படத்தைப் பற்றி எதிர்மறை மதிப்பீடு தந்துள்ளனர். ஆனால், பார்வையாளர்களைப் பொறுத்தளவில், படம் பார்க்க வந்தவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் பெரும்பாலும் எதிர்மறையாக படம் பற்றிக் கருத்து கூறினர்; ஆனால், பொதுவான பார்வையாளர்கள் படத்தை உள்வாங்குவதில் பிரச்சினை இல்லை.அவர்கள் அதை புரிந்து கொள்கின்றனர். எனது படத்தை நீங்கள், கிம் கி-டுக் உருவாக்குகிற பெண்ணின் துரதிர்ஷ்டத்தைக் காட்டுகிற படம் என நினைத்தால்,அது மிக ஆபத்தானது. ஆனால், சமூகத்தில் ஏற்கனவே இருக்கின்ற பிரச்சினையை அது காட்டுவதாக நீங்கள் நினைத்தால், உங்களால் ‘Bad Guy‘ படத்தை வெறுக்க முடியாது.

    வோல்கர்: இன்றளவும் கொரியாவில் உங்களது ‘Bad Guy‘ தான் பெரியளவு வெற்றி பெற்ற படம். பொருளாதார வெற்றி என்பதை கலை ரீதியிலான தோல்வி என நீங்கள் கூறுவீர்களா?

    கிம்: படத்தின் முக்கிய நட்சத்திரம் சோ ஜே-ஹ்யூன் படத்தின் வெற்றிக்கு காரணமாவார். கொரியாவில் பிரபலமான ஒரு தொலைக்காட்சித் தொடரில் அவர் நடித்ததால் அவர் திடீரெனப் புகழடைந்தார். எனவே அது முழுக்கவும் எனது தவறல்ல.

***

நன்றி : sensesofcinema.com 2002