• அலெஹாந்த்ரோ கோன்சலஸ் இனாரித்து உடன் ஒரு நேர்காணல்
  • நேர்காணல் கண்டவர்: எல்விஸ் மிட்ச்செல்
  • தமிழாக்கம் : ஜெயசரவணன்

 

மெக்ஸிக எழுத்தாளரும் இயக்குனருமான அலெஹாந்த்ரோ கோன்சலஸ் இனாரித்துவிடம் (Alejandro González Iñárritu) பழகிப்பார்த்தால் Death Trilogy என்று சொல்லப்படும் முத்தொகுதி படவரிசைகளின் உருவாக்கத்திற்கு பின்னால் இருந்தவர் அவர்தான் என்பதை ஊகிப்பது உங்களுக்கு கடினமான ஒன்றாகிவிடும். அவர் தன்னுடைய குழந்தைகளைக் கொஞ்சும்போதும், தன் மனைவியைப் பற்றி பகிர்ந்துகொள்ளும்போதும் அவருக்கு மனித வாழ்க்கையின் மீது அளப்பரிய பற்று இருப்பதை தெளிவாக காட்டிவிடும். இருந்தாலும் அதே ஆர்வமும் உற்சாகமும் அவரது வேலையிலும் பல வழிகளில் வெளிப்படத்தான் செய்கிறது. இனாரித்துவின் படங்கள், ஒரு நிகழ்வால் ஏற்படும் விளைவுகளையும், அதனால் சம்பந்தமில்லாத மனிதர்கள் ஒன்று சேர்வதும் அதே நேரத்தில் அவர்களது வாழ்க்கை பெருந்துயரத்தில் தள்ளப்படுவதையும் பிரதானப்படுத்துகின்றன. அவரது முதல் முழுநீள திரைப்படைப்பு, 2000’ல் அமரோஸ் பெரோஸ் (இதுதான் அந்த முத்தொகுதிகளின் முதல் படம்), இது மெக்ஸிகோ நகரவாசிகளின் வாழ்க்கையில் பொருளாதார மற்றும் சமூக கோடுகள் உண்டாக்கும் விளைவுகளின் ஒரு பக்கத்தை விவரிக்கிறது. அடுத்து 2003இல் 21 கிராம்ஸ், இதில் ஒரு ஆட்டோ விபத்து இரு குடும்பங்களுக்கு துரதிஷ்டவசமாக மாறி அவர்களை இணைத்து பின்னர் கொடூரமாக பிரிக்கிறது. 2006இல் பேபல் என்கிற காவியத்தைப் படைத்தார், அது ஒரு பட்டாம் பூச்சியின் நிகழ்வு எப்படி பிரபஞ்சத்தின் அழிவுக்கான ஆரம்பமாகிறது என்பதை பற்றி பேசுகிறது. பிறகு 2010இல் ப்யூட்டிஃபுல், இது வாழ்வாதாரங்கள் ஏதுமில்லாத பார்சிலோனா பகுதியில் தன் குழந்தைகளை வளர்க்கப் போராடும் மனைவியை இழந்த தந்தையின் கதை.

ப்யூட்டிஃபுல் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இனாரித்து பற்றி எல்லோருக்கும் தெரிந்தது அவரது நடிகர்களிடமிருந்து மிகச்சிறப்பான நடிப்பைப் பெற பெருமுயற்சி எடுப்பார் என்பதுதான், அதன் பலன்தான் நயோமி வாட்ஸ், பெனிசியோ டெல் டோரோ (21 கிராம்ஸ்) மற்றும் அட்ரியானா பராஸா, ரின்கோ கிகுச்சி (பேபல்) ஆகியோர் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். பேபல் படத்திற்காக, இனாரித்து சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதுதான் ஒரு மெக்ஸிக இயக்குனருக்கு கிடைத்த பெருமைக்குரிய முதல் அங்கீகாரம்.

அவருடைய புதிய படமான பேர்ட்மேன் அல்லது The Unexpected Virtue of Ignorance, சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் இனாரித்து உளைச்சலில் இருந்த நடிகரிடமிருந்து அசாத்தியமான புகழ்மிக்க தாக்கத்தை  வெளிக்கொணர்ந்திருக்கிறார். ரிக்கன் தாம்சன் (மைக்கேல் கீட்டன்), பல ஆண்டுகளுக்கு முன்னர் சக்திவாய்ந்த சாகச நாயகனாக கொடிகட்டிப் பறந்தவர் — இப்படத்தின் பெயரளவு கதாபாத்திரம் — இது போன்ற ஒரு பாத்திரத்தை ஏற்றதனால் உண்டாகும் விளைவுகளோடு போராட வேண்டியிருந்தது. ரிக்கன், ரேமண்ட் கார்வரின் “What We Talk About When We Talk About Love” என்ற உருக்கமான கதைக்குப் பொருத்தமாக தன்னைப் பிரதிபலித்தார், அவருடைய வாழ்க்கையைப் பற்றிய அவரது சந்தேகங்களும் இந்தக் கதையும் அவருடைய எதிலும் நம்பிக்கையில்லாத மகள் (எம்மா ஸ்டோன்) மற்றும் அவருடைய சக நடிகர்கள், ஆபத்தான சுய சிந்தனையும் அசாத்திய திறமையும் கொண்ட மைக் ஷைனர் (எட்வர்ட் நார்டன்) ஆகியோர் உள்பட அவரைச் சுற்றி இருந்த பிறரால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டது.

கால்கேரியில் தனது நீண்டகால திட்டத்திலிருந்த மேற்கத்திய படமான  லியனார்டோ டி காப்ரியோ நடிக்கும் ’தி ரெவனண்ட்’ படப்பிடிப்பு வேலைகளில் இருந்த இனாரித்துவிடம் பேர்ட்மேன், மைக்கேல் ஜாக்சன் மற்றும் மனதில் இருப்பவற்றைப் பேசியதிலிருந்து…

***

எல்விஸ் மிட்ச்செல்: வணக்கம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சொல்லுங்கள், ஏன் பேர்ட்மேன் படத்திற்கு தி அன்எக்ஸ்பெக்டட் விர்ச்சு ஆஃப் இக்னொரன்ஸ்  என்ற மற்றுமொரு பெயர்?

அலெஹாந்த்ரோ கோன்சலஸ் இனாரித்து: நான் எப்போதும் சொல்வது போல அனுபவத்தை விட அறியாமை சக்தி வாய்ந்தது. சில நேரங்களில், மக்கள் சில சூழ்நிலைகளில் சிக்கும்போது அவர்களிடையே எதிர்பாராத சில மாற்றங்களைக் கொண்டு வருகின்றன — அது போன்ற ஒரு சம்பவம்தான் இந்த கதாபாத்திரத்திற்கும் நடக்கிறது.

மிட்ச்செல்: நீங்கள் ரேமண்ட் கார்வரின் ‘’What We Talk About When We Talk About Love (நாம் காதலைப் பற்றி பேசும்போது உண்மையில் நாம் என்ன பேசுகிறோம்)” என்ற கதையை எடுத்துக்கொண்டதற்கு என்ன காரணம்?

இனாரித்து: உண்மையில் அது ஒரு விசித்திரமான யோசனை. எனக்கு இளவயதிலிருந்தே கார்வர் மீது காதல் உண்டு. அவர் எனக்கு பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர். ஆனால் அவருடைய கதைகளில் நான் எடுக்க நினைத்தது கார்வரின் தற்கொலைதான். அது உங்களுடைய முதல் கேள்விக்குப் பொருத்தமான பதிலாக இருக்கும். நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாமலிருந்தால், அது சுலபமானது, எப்படியிருந்தாலும் கார்வரைத் தழுவுவது ஒரு பெருவெளிக்குப் பொருத்தமான தேர்வு. இந்தப் படம் லேட் ஃப்ராக்மண்ட் கவிதையின் ஒரு பகுதியோடு ஆரம்பிக்கிறது, இதனை அவர் இறப்பதற்கு முன்தான் எழுதியிருக்கிறார். அது நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தேடிக்கொண்டிருப்பது பற்றியது. அவர் தனது 50வது வயதில் இறந்தார், அவர் விரும்பியதெல்லாம் தான் நேசிக்கப்பட்டேன் என்ற உணர்வு மட்டும்தான். அதையேதான் நானும் எதிர்பார்ப்பதாக நினைக்கிறேன். இச்சிறுகதை இழப்பும் குழப்பமும் காதலுக்கான தேடலும் நிறைந்த மக்களைப் பற்றியது. அதனால், ஒருவகையில் இக்கதை ரிக்கன் தாம்சனின் நடவடிக்கைகளோடு கச்சிதமாக பொருந்தியது. நான் அந்தக் கதை அவருடைய பிரதிபலிப்பாகவே மாறவேண்டும் என்றே விரும்பினேன், அதனால் சிறிது சிறிதாக அவர் அந்தக் கதையின் ஒரு பாத்திரமாக மாறினார். அது அவருடைய சொந்த வாழ்க்கையின் கண்ணாடி.

மிட்ச்செல்: இது அடிப்படையில் டால்ஸ்டாயின் கன்ஃபெஷனை தழுவியது போலத் தெரிகிறது.

இனாரித்து:   ஒருவேளை கார்வர் இறப்பதற்கு முன் டால்ஸ்டாயின் கன்ஃபஷனை படித்திருக்கலாம். கன்ஃபஷனை டால்ஸ்டாய் எழுதும்போது அவர் எழுத்துலகின் உச்சத்தில் இருந்தார். கிட்டதட்ட அதே வயதில் கார்வர் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது. அவர் மிகப்பிரபலமான எழுத்தாளர் அவர் தற்கொலை வாயிலின் விளிம்பில் இருந்தார். அவர் பணக்காரர். ஆனால் அது அவருக்கு எந்த அர்த்தத்தையும் கொடுக்கவில்லை, அவருக்கு வாழ்க்கைக்கான அர்த்தம்தான் முக்கியமானதாய் இருந்தது. இந்த இரு மிகச்சிறந்த எழுத்தாளர்களும் ஒரே வயதில் ஒரே நெருக்கடியைச் சந்தித்தனர் என்பது வேடிக்கையானதுதான். எனக்கு டால்ஸ்டாயைப் பிடிக்கும், கார்வர் மீதும் காதல் உண்டு. எனக்கு இப்போது வயது 51, நானும் அதே நெருக்கடியில் இருக்கிறேன்: என்ன் வாழ்க்கை இது? என்ன அர்த்தம்? ஒரு வழியில், நீங்கள் சோர்வு நிலைக்கு போய்விடுவீர்கள். கார்வருடைய கவிதை எல்லோருடைய வாழ்க்கையையும் உள்ளடக்கியதாயிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாம் எல்லோருமே, அன்பு என்ற ஒரே விஷயத்திற்காகத்தான் ஏங்குகிறோம். அதனால்தான் நாம் கேள்விக்குள்ளாகிறோம். அவருடைய முன்னாள் மனைவி அவரிடம் கூறுகிறார், “நீங்கள் எப்போதுமே பிடித்திருப்பதையும் அன்பு செய்வதையும் குழப்பிக்கொள்கிறீர்கள்.” இதுதான் மனிதர்கள் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் மிக ஆபத்தான விஷயம்.

மிட்ச்செல்: அமரோஸ் பெரோசின் மூன்றாவது பகுதியில் மனிதன் தன்னைக் கேட்கிறான், “என்னுடைய வாழ்க்கையின் பிரதிபலன் என்ன?” இந்த கேள்வியைத்தான் கன்ஃபஷனும் கேட்கிறது. அடுத்து 21 கிராம்சில் சீன் [பென்] பாத்திரம் இதே கேள்வியைக் கேட்கிறது. இதே கேள்வியை பியூட்டிஃபுல் படத்தின் ஜாவியர் பாத்திரம் கேட்கிறது என்றும் சொல்லலாம். இப்படி எல்லோருமே, “என் வாழ்க்கையால் என்னதான் பலன்?” என்ற கேள்வியையே கேட்கிறார்கள்.

இனாரித்து: நான் எல்லாப் படங்களிலும் ஒரே கதையைச் சொல்கிறேனா.

மிட்ச்செல்:  நான் அப்படிச் சொல்லவில்லை! மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஃபார்ரா ஃபாசெட் இருவரும் இறக்கும்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது நடக்கும்போது நாம் இருவரும் ஒன்றாக கொரியாவில் இருந்தோம். மைக்கேல் ஜாக்சன், கார்வர் மற்றும் நீங்கள் மூவரும் ஒரே வயதினர் — 50 வயது— அதாவது கார்வரோ, மைக்கேல் ஜாக்சனோ அல்லது ரிக்கனோ அந்தச் சுரங்கத்தின் மறுமுனையைப் பார்த்தபோது.

இனாரித்து: உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, அது மேகம் எவ்வளவு கருமையாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஆனால் சூழ்நிலைகள் உங்களைத் திருப்திப்படுத்திவிட்டதாக நினைக்கும்போது நீங்கள் முக்கியமாக நினைத்ததெல்லாம் முக்கியமானவை இல்லையென்பதை நீங்கள் உணரும் நேரம் வரும் என்று நினைக்கிறேன். காலம் வேகமாக கரைந்துகொண்டிருக்கிறது, விழா விளக்குகள் மின்னிக்கொண்டிருக்கின்றன ஆனால் பாத்திரத்தில் இருந்த ஐஸ் கட்டிகள் தீர்ந்துவிட்டன. அதனால் சீக்கிரமாகவே அந்தக் கொண்டாட்டம் முடியப்போகிறது என்பதை ஏதோ சில வழிகளில் நீங்கள் உணரத் தொடங்குவீர்கள்.  கன்ஃபஷனில், டால்ஸ்டாய் தனக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்கிறார், அதற்கு பிறகு 30 வருடங்கள் வாழ்கிறார்.

மிட்ச்செல்: டால்ஸ்டாய், கார்வர், ஜாக்சன், மற்றும் ரிக்கன் —இவர்கள் அனைவரும் வியக்கத்தக்க பொருளாதார வெற்றியைப் பெற்றவர்கள். அதனால் பல வழிகளில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மனநிறைவாக வாழ்ந்திருக்க முடியும், ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

இனாரித்து: மிகச்சரி நானும் அதைதான் சொல்ல விரும்புகிறேன். இந்தப் படமும் ஒருவகையில் அதை வெளிக்கொணர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். இது பல ஆண்டுகளாகவே முரண்பாடுகளோடு ஒரு பேரழிவுக்கால அவசரத்தில் இருந்து வந்தது, நானும் அந்த முரண்பாட்டிலிருந்து விலகிச்செல்லவே முயற்சி செய்தேன், அது தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்காததும் கூட. ஆனால் முரண்பாடுகள் விஷயங்களை அணுகுவதற்கு சிறந்த கருவிதான். அது அறிவு சார்ந்தது, எதையும் ஒரு சராசரி கோட்டை தாண்டி சிந்தித்து எது சரியானது என்று தீர்மானிப்பது. ஆனால் கடந்த 50 வருடங்களாக பாப் கலாச்சாரம் அதிகபட்ச முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது, அதனால் உள்ளார்வமோ அல்லது உண்மையோ அல்லது உணர்வுபூர்வமானதோ எதுவாக இருந்தாலும் இனி இனிமையாக இருக்காது. அனைத்து நிறுவனங்களும் சரிந்துவிட்டன. அப்படி ஒன்றும் இல்லையென்றால், விஷயங்களை முரண்பாடுகளுடனேயே அணுக வேண்டும் என்று எல்லோரும் ஒத்துக்கொண்டால், வேறு எதுவும் இல்லை. இதை என்னுடைய குழந்தைகளிடம் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எந்தப் பயனும் அல்லாத சில முரண்பாடுகளுக்கு ஆட்படுகிறார்கள்.  முரண்பாடுகள் தலை தூக்கும்போது நமக்கு வேறு வழியிருப்பதில்லை. அதனால்தான், வாழ்க்கையின் தவறுகளையும் துயரங்களையும் சமசரம் செய்துகொள்வதற்காகவே நான் நகைச்சுவையை பரிந்துரைக்கிறேன். நீங்கள் அனைத்தையும் தலைகீழாய் பார்த்தீர்கள் என்றால் நம்முடைய தலைக்கணம் திமிர் எல்லாம் வேடிக்கையாக இருக்கும்; அது அபத்தமானதுதான். ஆனால், அதே சமயத்தில் துயரமானதும்கூட.

மிட்ச்செல்: நீங்கள் துயருணர்ச்சிப் புள்ளியிலிருந்து 180 டிகிரி கோணத்திற்கு எங்கு போனாலும் நகைச்சுவைதான் இருக்கிறது,  எங்கு அபத்தமும் துயரமும் இருக்கிறதோ அங்கெல்லாம் நீங்கள் சிரிக்கிறீர்கள்.

இனாரித்து: சோகத்தைக் கொஞ்சம் இழுத்தால்போதும், அது நகைச்சுவையாகிவிடும். அந்த நகைச்சுவையைத்தான் நான் விரும்புகிறேன். நான் எப்போதுமே ரிக்கன் தாம்சனை, ஒரு தீவிர நடிகராகத் துடித்த லா மன்ச்சாவின் டான் குவிக்ஸாட் போல தனது மனசாட்சிக்கும், பெரு முயற்சிகளுக்கும் இலட்சியத்திற்கும் இடையேயான முரண்பாடுகளிலிருந்து வரும் நகைச்சுவையை வெளிப்படுத்துபவராகவே நினைத்திருக்கிறேன். மேலும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத உண்மை அவரது விருப்பங்களுக்கெல்லாம் முரண்பட்டதாகவே இருந்தது. அது அடிப்படையில் நான் உட்பட, மனிதர்கள் அனைவரின் கதை. அதை சாதாரணமான நிலையிலிருந்து சமாளிப்பது கடினம் என்று நான் நினைக்கிறேன்.

மிட்ச்செல்:  உங்கள் படைப்புகளில் உள்ள துயரங்களைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் நான் கூறுவது, “அவர் சிரித்துக்கொண்டே இருக்க விரும்பும் நபர்களில் ஒருவர். நாம் சாப்பிட அமரும்போதெல்லாம், எல்லா நேரங்களிலும் நாம் சிரித்துக்கொண்டே இருப்போம்.”

இனாரித்து: இதுபோன்ற தீவிரமான கதைகளை வாழவைக்க சில கருவிகளைப் பயன்படுத்துவதைவிட வேறு வழியே இல்லை. நகைச்சுவையாளர்கள் அனைவருக்கும் ஒரு துயரமான இருண்ட பகுதியிருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. நான் நினைக்கிறேன், என்னுடைய விஷயத்திலும் அதுதான் நடக்கிறது. ஆழமாக செல்வதற்கு ஒரே வழி சமநிலையுடனோ அல்லது எதிர்சமநிலையுடனோ இருப்பதுதான்.

மிட்ச்செல்: உங்களுக்கு வாழ்க்கை மீது அப்படி ஒரு காதல் இருக்கிறது. உங்களுடைய படங்களில் பெரும்பாலும் மரணத்தை நெருங்குவதாகவே இருக்கின்றன அல்லது மரணத்திற்கான சாத்தியங்களையே கொண்டிருக்கின்றன.

இனாரித்து: மரணத்திலிருந்து வாழ்வுக்கு.. என்று சொல்லலாம். எனக்கு இறப்பு பற்றிய யோசனையே பிடிக்காது. ஆன்மீக வளர்ச்சி என்பது அந்த பயத்திலிருந்து முற்றிலும் சுதந்திரம் அடைவதும், முற்றிலும் மருத்துவம் மட்டுமேயான ஒன்றிற்கு எதிராக போராடுவதை நிறுத்துவதும்தான், இதுதான் நம் அனைவருக்குமான ஒரே தீர்வு ஆனால் இந்த யோசனை மிகவும் துயரமானது.

மிட்ச்செல்: இந்த கதாபாத்திரத்திற்கு இது வித்தியாசமான மரணம், அவனுடைய கனவுகளின் மரணம்.

இனாரித்து: காலமும் சூழ்நிலையும் போட்டிருக்கிற வரையறைகளை மாற்றுவது நடிகரின் உள்ளார்ந்த ஈடுபாட்டில்தான் இருக்கிறது, சரிதானே? தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும், நம்முடைய அனைத்து முக்கியமான சுய கருத்துகளும் நம்முடைய கலை ஆர்வமும்தான் வரையறைகளைத் தாண்டி செயல்படச் செய்கிறது — என்பது குழந்தைத்தனமான மாயை. உண்மையில் நம்முடைய ஈடுபாடும் பங்களிப்பும் மிகக்குறைவுதான், இந்தப் பேரண்டத்தின் காலவரையறையோடு ஒப்பிடும்போது அது முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. அதனால் எம்மா ஸ்டோன் நடித்துள்ள சாம் கதாபாத்திரம், இந்த பிரபஞ்சத்தின் வயதுக்கு எதிராக நம்முடைய கால ஓட்டம் எப்படியிருக்கிறது என்பதைக் காட்ட, கழிப்பறை காகித ரோல் முழுவதையும் எடுத்து வருகிறாள். இது என் மகளிடமிருந்து நான் பெற்ற சுய அனுபவத்திலிருந்து உருவானது. அது இறையியல் வகுப்பில் அவளுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி. உங்களுடைய சுய உள்ளார்வங்களிலிருந்து அடையும் விடுதலையை நிரந்தரமான ஒன்றாக யோசிக்க நமது பொறுப்புகளிலிருந்து நாம் விடுபடும்போது நாம் அடையும் மகிழ்ச்சியைப் புரிந்துகொள்வது அலாதியானது; ஆனால் அதே நேரத்தில் அது மிகக் கடினமானதும்கூட. அதனால் இப்படத்தில் ரிக்கனின் முக்கிய குறிக்கோள், அவர் பல கதாபாத்திரங்களை எதிர்கொள்ளும் பட்சத்தில் வரையறைகளை மீறி சில அர்த்தங்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அதோடு அவருடைய சுய ஆணவம் அவருக்கு அவ்வப்போது,  “உன்னால் எந்த பயனும் இல்லை,” என்று சொல்லிக்கொண்டிருக்கும், அதனால் அது கடினமானதும் கூட.

மிட்ச்செல்: அப்படி வரையறைகளை மீறுவது பற்றி பேசும்போது,  படத்தின் இறுதிக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதம் துணிச்சலானது என்று சொல்லலாம்.

இனாரித்து: அந்தக் காட்சி படப்பிடிப்பிற்கு மத்தியில்தான் எனக்குத் தோன்றியது. உண்மையில் கதை அப்படி முடியவில்லை, இறுதிக்காட்சி முற்றிலும் வேறொன்றாக இருந்தது. ஆனால் அப்படி படத்தை முடித்திருந்தால் அது சரியானதாக இருக்காது என்று நான் எண்ணினேன். அது நேர்மையான ஒன்றாகவும் இல்லை. என்னுடைய எழுத்தாளர் சகாக்களும் நானும் அது பற்றி யோசித்தோம். பிறகு இந்த யோசனை ஒரு கனவிற்குப் பிறகுதான் அதிகாலையில் எனக்கு தோன்றியது.  அப்போது “அட்றா….இதுதான், இப்படி ஒரு முடிவைத்தான் நான் விரும்பினேன்.”  என்று நான் உணர்ச்சி வசப்பட்டுக் கூறினேன்.

மிட்ச்செல்: அதன் முடிவு நீங்கள் கனவு கண்டதா?

இனாரித்து: ஆமாம், அது கனவில் வந்ததுதான். நான் தூக்கத்திலிருந்து எழும்போது கனவில் வந்ததை என்னால் உணர முடிந்தது.  இந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளோடு மக்கள் தங்களின் உணர்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்வார்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். இதற்கு இன்னும் பல முடிவுகள் இருக்கலாம் என்பதில் ஆச்சர்யமில்லை, ஆனால் இந்த முடிவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இது பிடித்திருந்தது.

மிட்ச்செல்:  நீங்கள் இதற்கு முன் எப்போதாவது உங்கள் படங்களில் முன்பே தீர்மானித்திருந்த முடிவை மாற்றியிருக்கிறீர்களா ?

இனாரித்து: இல்லை,  இயல்புமீறித்  தீர்மானமாகச் செய்ததில்லை.  நான் மாற்றங்கள் செய்வதுண்டு, ஆனால் இது தீர்மானமாகச் செய்த மாற்றம்தான்.

மிட்ச்செல்: நீங்கள் மைக்கேலிடம் இந்த முடிவைப் பற்றிச் சொல்லும்போது அவர் என்ன நினைத்தார்?

இனாரித்து: அவருக்குப் பிடித்திருந்தது. அதோடு அக்கதாபாத்திரத்தின் மீதான அவரது பார்வையும் மாறியது. இது அந்தக் கதாப்பாத்திரம் என்ன என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள ரொம்பவே உதவியது. அவரும் அதை உள்வாங்கிக்கொண்டார்.

மிட்ச்செல்: கீட்டன், எம்மா ஸ்டோன் மற்றும் ஸாச் கலிஃபினாகிஸ், என நீங்கள் தேர்ந்தெடுத்த இவர்கள் அனைவரும் நகைச்சுவைக்காக அறியப்பட்டவர்கள்.

இனாரித்து: நான் நேர்மையாக இருப்பவர்களையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் ஆனால் அதே நேரத்தில் இனிமையானவர்களாகவும் அனைவராலும் விரும்பப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுடைய ஆற்றலை அளவிட நான் முயற்சித்தேன், எட்வர்ட் நார்டன், எம்மா மற்றும் ஸாச் ஆகியோரின் ஆற்றல் வீரியங்களை அறிந்து அவற்றை எனக்குத் தேவையான அளவுக்கு ஒன்று சேர்க்க முயற்சித்தேன். நான் ஆற்றல்களும் சாத்தியங்களும் பொங்கி வழியும் படைப்பைத்தான் உருவாக்க விரும்புகிறேன்.

மிட்ச்செல்: படத்தின் பெரும்பகுதி மனதை ஆக்கிரமிக்கிறது. படம் முழுவதும் மக்களை திரையரங்குக்குள் சிறைப்பிடிக்கும் அளவுக்கு வீரியம் அதில் இருக்கிறது.

இனாரித்து: நான் 87 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட உண்மையான வெகுஜன திரையரங்கின் சிக்கலான தாழ்வாரங்களில் மாட்டிக்கொண்டு மக்கள் இப்படத்தின் அனுபவத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினேன். அவை உண்மையிலேயே அவ்வளவு சிறியது. ரிக்கன், வெளியாகும் இரவுக்கு முன் மூன்று நாட்களுக்கு அங்கு மாட்டிக்கொண்டார், மக்களும் அவரோடு அங்கே உண்மையிலேயே மாட்டிக்கொண்டிருப்பதை உணர வேண்டும் என்று நான் விரும்பினேன் — உங்களால் அவருடைய ஈடுபாட்டிலிருந்து தப்பித்துச் செல்லவே முடியாது.

மிட்ச்செல்: மக்கள் அனைவரும் ஒரு நீண்ட தொடர்ச்சியான காட்சியாக உணரும் ஒரு காட்சியை நீங்கள் உருவாக்கியதாக எப்போது உணர்ந்திருக்கிறீர்கள்?

இனாரித்து: நான் அதுபற்றி சிந்தித்தபோது, எப்படி உருவாக்குவதென்று எனக்கு தெரிந்தது. நான் வால்டர் முர்ச், படத்தொகுப்பாளர் ஆகியோருடன் நம்முடைய வாழ்க்கையின் அனுபவம் உண்மையாக வெளிப்படுவது ஒரு காட்சியிலா அல்லது நிலையான நீண்ட நேர காட்சியிலா அல்லது நீர்த்துபோன தன்மையிலா என்று விவாதம் செய்தேன். பிறகு நான் உணர்ந்தேன், 50 வயது வரையிலும் நம்முடைய வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு நிலையான நீண்ட நேர தொடர் காட்சியாகத்தான் இருக்கிறது. காலையில் நாம் கண் விழித்ததிலிருந்து வெட்டுதலும் ஒட்டுதலும் இல்லாமல்தான் நம் வாழ்க்கை நகர்கிறது. சில அவசரகாலத்தின்போது மட்டும்தான் குறுகிய நேர அனுபவத்தை நாம் உணர்கிறோம். நம்முடைய வாழ்க்கையை தொகுக்கும் நேரமும் வெளியும் நாம் நம் வாழ்க்கையைப் பற்றி பேசும்போதும் நினைவுகூறும் போதும்தான் கிடைக்கிறது. நானும் ஒருவருடைய வாழ்க்கை அனுபவத்தை அதன் இயல்பில் மெதுவாகவும் தொடர்ச்சியாகவும் எந்தவித விலக்கலும் தப்பித்தலும் இன்றியே உருவாக்க விரும்பினேன். வால்டர் முர்ச் மிக சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைக் கூறினார். நாம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நம் பார்வையை மாற்றுவதற்கிடையிலான நேரத்தில் இருக்கும் தகவலை நாம் தவறவிட்டுவிடுகிறோம். அந்த வெற்றிடத்தை உங்களுடைய மூளை நிரப்பிவிடுகிறது. அங்கு தொகுக்கும் செயல் நடக்கிறது ஆனாலும் ஒரு நினைவை வைத்தே அந்த இடம் நிரப்பப்படுகிறது.

மிட்ச்செல்: ஜான் ஹஸ்டன் கூறுவார் நம்முடைய கண் இமை மூடி திறக்கும் ஓவ்வொரு அசைவும் ஒரு கட். அதனால் நீங்கள் ஒரு காட்சியை ஒருவர் தன் கண்ணைத் திறந்து மூடும் காலம்வரையிலும் ஓடுவதைப் போல உருவாக்கலாம்.

இனாரித்து: உண்மையில் அதைத்தான் வால்டர் முர்ச்சும் பாதுகாக்க விரும்பினார். ஆனால் அது ஒரு நீண்ட விவாதம்.

மிட்ச்செல்:  இது உண்மையில் உங்கள் பெயர் சொல்லும் ஒரு படைப்பு.

இனாரித்து: ஆம் உண்மையில். நான் எப்போதும் ரிக்கன், மைக்கேல் கீட்டன் ஆகியோரை சூரியனாகவும் பிற பாத்திரங்களெல்லாம் அதனைச் சுற்றும் கிரகங்கள் என்றுதான் நினைப்பேன்.

மிட்ச்செல்: கீட்டன் பற்றிச் சொல்லுங்கள்?

இனாரித்து: உண்மையில், நான் கதையை எழுதிமுடிக்கும்போது எனக்கு தெரிந்தது இதற்குப் பொருத்தமானவர் அவர்தான் என்று. உண்மையில் இதைப்பற்றியும் சாகசநாயகர்களைப் பற்றியும் பேச அவருக்கிருக்கும் அதிகாரத்தை நான் விரும்புகிறேன் — ஏனென்றால் அவர் ஒரு முன்னோடி. உலகம் முழுதும் எவ்வளவு பேர் அந்த சாகசநாயகனின் முகமூடியை அணிந்திருப்பார்கள்? திரைக்கும் உண்மைக்குமிடையேயான வசனங்களை அவர்தான் கொண்டு வந்தார். ஆனால் அதையும் தாண்டி அந்த வயதில் நகைச்சுவை வழியே துயரத்தை வெளிப்படுத்தும் உண்மையில் அனைவருக்கும் பிடித்த மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நடிகர் எனக்குத் தேவைப்பட்டார். அதற்கு பொருத்தமாக மைக்கேல் இருந்ததால் சம்மதிக்க வைத்தேன்.

மிட்ச்செல்: அவரும் மிகத்தீவிரமான ஒரு நடிகர்தான். உங்களுக்குத் தீவிரமான நடிகர்களைத்தான் பிடிக்குமென்று நினைக்கிறேன்.

இனாரித்து: நிச்சயமாக. மெக்சிகோவில் டிம் பர்டனுடன் மதிய உணவு அருந்தும்போது நான் அவரிடம் கேட்டேன், “நீங்கள் ஏன் பேட்மேனில் மைக்கேலை நடிக்க வைத்தீர்கள்?” அவர் கூறினார், “எல்லா நகைச்சுவை பிரபலங்களுக்கும் மத்தியில் இவர் வித்தியாசமானவர், புத்திசாலி, தீவிரமான மனிதர் அதை அவரது கண்களிலே காணலாம்.” அவர் அனைவராலும் விரும்பப்படுபவர், காதலிக்கப்படுபவர், வேடிக்கையானவர், எளிமையானவர் ஆனால் அவர் விரும்பினால் அடுத்த நொடியில் யாராக வேண்டுமானாலும் மாறக்கூடியவர். நேர்மையாகச் சொல்கிறேன், நான் மிகச்சிறந்த நடிகர்கள் பலருடன் பணியாற்றியிருக்கிறேன் ஆனால் தன்னை நகைச்சுவையிலிருந்து உடனே வினோதமான ஒருவராக, கொஞ்சம் குக்கூ பறவையாக, தீவிரமான மனிதராக, மிகவும் உணர்வுபூர்வமானவராக மாறி மீண்டும் அதே வேடிக்கையான மனிதராக மாறக்கூடிய இப்படி ஒருவரை நான் பார்த்ததே இல்லை. இப்படி பல விஷயங்களையும் ஒன்றாகத் தொகுத்தும், மிக நுட்பமான அளவுகளோடு பார்த்து பார்த்து ஒத்திகை செய்து உருவாக்கியதுதான் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் அழகானதாகவும் மனிதத்தன்மையுடையதாகவும் உணர வைக்கிறது. அவரைப் பற்றி நினைத்தாலே ஆச்சர்ய உணர்வுதான் எனக்கிருக்கும். அப்படி ஒரு வியக்கத்தக்க மனிதர்.

மிட்ச்செல்: இதை அவர் எப்படி எதிர்கொண்டு கடந்து வந்தார் என்பது எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் நீங்கள் உங்கள் நடிகர்களிடம் அதிகமாகவே எதிர்பார்ப்பீர்கள் அல்லவா. எனக்கு நினைவிருக்கிறது, ஒருவரிடம் பேசும் போது அவர் சொன்னார், “கடவுளே, எனக்கு அலெஹாந்த்ரோன்னா அவ்வளவு பிடிக்கும்… ஆனால் அது மிகவும் கடினம்.”

இனாரித்து: நான் தவறான பெயரைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் அவற்றை நான் சரியான காரணங்களுக்காகவே செய்கிறேன். எனக்கு எப்போதுமே தெரியும் ஒரு பாத்திரத்திற்கு என்ன தேவை என்பது. ஆனால் சில சமயங்களில் அது நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பயங்கரமானதாக ஆகிவிடும் ஆனால் அவர்களை அந்த பயத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலைக்குப் போக நான் உதவவே செய்கிறேன். நான் அவர்களிடம் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் அவர்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்களோ அதையே அவர்கள் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அதுதான் முழுநேர்மையும்கூட. அது சரியோ தவறோ ஆனால் நீ உண்மையாக இல்லையென்றால் நீங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டீர்கள். அதுதான் ஒரு நடிகரின் கடமை. இந்த விஷயத்தில், நான் அனைத்து நடிகர்களிடமும், இரட்டை கோபுரத்தின் இடையே கட்டப்பட்ட கம்பியில் நடக்கும் பிலிப் பெடிட் -ன் புகைப்படத்தைக் காட்டிச் சொல்வேன்,  “நாம் இதைத்தான் செய்யப் போகிறோம். என்னால் உங்களுடைய திறமைகளை மறைத்துவைக்க முடியாது. என்னுடைய தவறுகளையும் என்னால் மறைக்க முடியாது. என்னால் எதையும் பொய்யாகச் செய்யவும் முடியாது. என்னால் வண்ணம்பூசி மெருகூட்டவோ கையாளவோ அல்லது காலத்தையும் வெளியையும் தவிர்க்கவோ முடியாது. நாம் எல்லோரும் ஒன்றாக கைக்கோர்த்திருக்கிறோம், இதில் நீங்கள் விழுந்தால் நானும் விழுவதைத்தவிர வேறு வழியில்லை. நாம் அந்த இரட்டைகோபுரத்தை மெல்லிய கம்பி மீது கடக்கப்போகும் யானைக் கூட்டம். வாழ்த்துக்கள்.” அதன் பலன் தான் இது, இப்போது இதை என்னால் மீண்டும் நாளையும் செய்ய முடியும்.

 

நன்றி : Interview Magazine . com