• அலெஹாந்த்ரோ ஸாம்ப்ரா
  • தமிழாக்கம் – எம்.ஜி. ராயப்பன்

 

“நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறீர்கள், அதை ரகசியமாய் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்,”- “இல்லை, நாங்கள் ஒன்றாக இல்லை,” என்று ஒரே குரலில் சொல்கிறார்கள், அதுதான் உண்மை: ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்கள் சேர்த்தே உறங்குகிறார்கள், சாப்பிடுகிறார்கள், வாசிக்கிறார்கள், வேலை செய்கிறார்கள். மிகைப்படுத்தும் இயல்பு கொண்ட யாராவது, அவர்களை கவனித்து அவர்கள் உடல்கள் ஒன்றையொன்று எப்படி நெருங்கிப் பிணைகின்றன என்பதைப் பார்த்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் சொற்களின் இடைவெளிகளை கவனமாய் இட்டு நிரப்பினால் – துணிச்சலான ஒருவர், இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை கொண்டவர், அவர்கள் உண்மையாகவே ஒருவரையொருவர் நேசித்தார்கள் என்று சொல்லக்கூடும்; அல்லது, அபாயகரமான, தாராளமான, ஒரு பெரும் விழைவைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று சொல்லலாம்; ஆனால் அவர்கள் ஒன்றாக இல்லை, இந்த விஷயத்தில் எதைப் பற்றியாவது அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்றால் அது இதுதான், அவர்கள் ஒன்றாக இல்லை என்பதுதான். அவள் அர்ஜண்டைன், அவன் சிலேயன், அவர்களை அவ்வாறே சுட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும் – அர்ஜண்டைன் பெண், சிலேய ஆண்.

அவர்கள் நடந்து செல்லத் திட்டமிட்டிருந்தார்கள், நெடுந்தொலைவு நடந்து செல்வது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று பேசியிருந்தார்கள், இந்த விஷயத்தில் அவர்கள் மனிதர்களை இரு வகையினராய் பிரிக்குமளவுக்கும்கூட சென்றிருந்தார்கள்: நெடுந்தொலைவு நடக்காதவர்கள்,  நடப்பவர்கள், அப்படி நடப்பவர்கள் யார், அப்படி நடப்பதால், உயர்ந்தவர்கள் அவர்கள், என்று. நடந்து செல்லத் திட்டமிட்டிருந்தார்கள், ஆனால் முன்யோசனை இல்லாமல் டாக்ஸி பிடித்தார்கள், மாதக்கணக்காக, மெக்சிகோ சிட்டி வருவதற்கு முன்னும்கூட, இரண்டு மூன்று பேரிடமிருந்து எச்சரிக்கைகள் நிறைந்த அறிவுரைகளைப் பெற்றிருந்தபோது, சாலையில் டாக்ஸி பிடிக்கக்கூடாது என்பதை அறிந்துதான் இருந்தார்கள், அதுவரை அவர்களுக்கு சாலையில் டாக்ஸி பிடிக்கத் தோன்றியிருக்கவில்லை, ஆனால் இம்முறை, முன் யோசனையின்றி, அதைச் செய்து விட்டார்கள், அதன்பின் சீக்கிரமே டிரைவர் தவறான வழியில் போகிறான் என்று அவளுக்குத் தோன்றிவிட்டது, அதை அவள் சிலேயனிடம் கிசுகிசுப்பாகச் சொல்லவும் செய்தாள், அவன் உரத்த குரலில் அவளுக்கு தைரியம் சொன்னான், ஆனால் உடனே டாக்ஸி நின்று இரண்டு பேர் உள்ளே ஏறிக் கொண்டதால் அவன் சொற்கள் எடுபடும் அவகாசம்கூட கிடைக்கவில்லை, சிலேயன் வீரமாக, முன்யோசனையின்றி, குழப்பமாக, குழந்தைத்தனமாக, முட்டாள்தனமாக நடந்து கொண்டான்: கொள்ளைக்காரர்களில் ஒருவனை மூக்கில் குத்தினான், அவள் நிறுத்து, நிறுத்து, நிறுத்து என்று கத்திக் கொண்டிருக்கையில் நீண்ட நொடிகள் அவன் போராடிக் கொண்டேயிருந்தான். சிலேயன் நிறுத்தினான், கொள்ளைக்காரர்கள் அவனுக்கு நன்றாகக் கொடுத்தார்கள், அவர்கள் அவனுக்கு இரக்கம் காட்டவேயில்லை, அவர்கள் எதையாவது உடைத்திருக்கக்கூடும், ஆனால் இதெல்லாம் எப்போதோ நடந்து முடிந்தது, நீண்ட பத்து நிமிட காலத்துக்கு முன்னால் நடந்தது. இப்போது அவர்கள் அதற்குள் தங்களிடமிருந்த பணத்தைக் கொடுத்திருந்தார்கள், தங்கள் கிரெடிட் கார்டுகளையும் தந்திருந்தார்கள், அதற்குள் ஏடிஎம் பின் நம்பர்களை ஒப்புவித்திருந்தார்கள், எஞ்சியிருந்த சிறு நேரம், அவர்களுக்கு யுகம் போல் தெரிந்த ஒரு சிறு காலம் அவர்கள் கண்களை இறுக மூடிக் கொண்டு பயணிக்கிறார்கள், “பின்ச்சஸ் கபரோனஸ், கண்களை மூடிக் கொள்ளுங்கள்,” என்று அந்த ஆட்கள் இருவரும் அவர்களிடம் சொல்கிறார்கள்.

இப்போது மூன்று பேர் சேர்ந்து விட்டார்கள், கார் சில நிமிடங்கள் முன் நின்றிருந்தது, டாக்ஸி டிரைவர் இறங்கிக் கொண்டான், ஒரு பிக்கப் டிரக்கில் அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்த மூன்றாவது கொள்ளைக்காரன், இப்போது ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான். புதிய டிரைவர் சிலேயனை மீண்டும் அடிக்கிறான், அர்ஜண்டைனைத் தொடக்கூடாத இடங்களில் தொடுகிறான், அவர்கள் குத்துகளையும் பற்றியிழுக்கும் கைகளையும் மறுப்பில்லாதது போல் ஏற்றுக் கொள்கிறார்கள், நம்மைப் போல், அவர்களுக்கும் இந்தக் கடத்தல் சீக்கிரம் முடிந்து விடும் என்பது தெரிந்தால் நன்றாக இருக்காதா, சீக்கிரமே அவர்கள் மௌனமாக, நடக்க மாட்டாமல், ஒருவரையொருவர் கரங்களால் அணைத்தபடி, லா கொந்தேஸாவின் ஏதோ ஒரு தெருவில் நடந்து செல்லப் போகிறார்கள் – காரணம், அந்தக் கொள்ளைக்காரர்கள் அவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டிருந்தார்கள், அவர்கள் லா கொந்தேஸா போவதாகச் சொன்னார்கள், “அப்படியானால் உங்களை லா கொந்தேஸாவில் இறக்கி விடுகிறோம், நாங்கள் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல, உங்கள் வழிக்குத் தொலைவில் வெகு தூரம் உங்களைக் கொண்டு செல்வது எங்கள் நோக்கமல்ல,” என்று கொள்ளைக்காரர்கள் பதில் சொன்னார்கள், அவர்களை வெளியே இறக்கி விடுவதற்கு ஒரு நொடி முன்னர், நம்பவே முடியாத வகையில், அந்த கொள்ளைக்காரர்கள் அவர்கள் டாக்ஸி பிடித்துச் செல்ல நூறு பெசோக்கள் தந்தார்கள், ஆனால், ஆமாம், அவர்கள் வீட்டுக்குப் போக டாக்ஸி பிடிக்கவில்லைதான், அவர்கள் சப்வேயில் போனார்கள்,  அவள் அவ்வப்போது அழுதாள், அவன் அப்போதெல்லாம் அவளைத் தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான், மற்றபோது அவன் குழப்பத்துடன் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டான்,  கடத்தல்காரர்கள் கட்டாயப்படுத்தி அவர்களை விலகி அமரச் செய்தபோது, அவள் தன் வலது கால் செருப்பை சிலேயனின் இடது கால் ஷூவின் மீது எப்போதும் வைத்துக் கொண்டே வந்தாள் என்ற காரணத்தால் அவள் டாக்ஸியில் செய்தது போலவே அப்போதெல்லாம் தன் பாதங்களை அவனது பாதங்களுக்கு அருகில் வைத்துக் கொண்டாள்.

***
மெக்சிகோ சிட்டி சப்வேயில் அடிக்கடி நடப்பது போல், இடையிலுள்ள ஒரு நிறுத்தத்தில், ரயில் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கிறது, புரிந்து கொள்ள முடியாதபடிக்கு ஆறு அல்லது ஏழு நிமிடங்கள், இது வழக்கம்தான் என்றாலும் கால தாமதம் அவர்களை வதைக்கிறது, உள்நோக்கம் கொண்டதாகவும் தேவையற்றதாகவும் அவர்களுக்குத் தோன்றுகிறது, கடைசியில் கதவு மூடிக் கொள்கிறது, ரயில் நகரத் துவங்குகிறது, அவர்கள் இறுதியில் தங்கள் நிறுத்தத்தை அடைகிறார்கள், அதன் பின் இருவரும் அவள் வசித்துக் கொண்டிருக்கும் வீட்டை அடையும் வரை நடந்து செல்கிறார்கள். அர்ஜண்டைனும் சிலேயனும் சேர்ந்து வாழ்வதில்லை, அவன் ஒரு ஈக்வடோரிய எழுத்தாளருடன் வசிக்கிறான், அவள் தன் இரு நண்பர்களுடன் வசிக்கிறாள் – அவர்களில் ஒருவன் ஸ்பானியர்ட், மற்றவன் சிலேயன், இன்னொரு சிலேயன், ஆனால் அவர்கள் உண்மையில் நண்பர்களில்லை, அல்லது, அவர்கள் நண்பர்கள்தான், ஆனால் அவர்கள் சேர்ந்து வாழ அது காரணமில்லை, அவர்கள் எல்லாரும் பயணத்தில் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாரும் எழுத்தாளர்கள், அவர்கள் மெக்சிகோவில் இருக்கக் காரணம், அவர்கள் செய்யும் மிகக் குறைவான காரியம் எழுதுவதுதான் என்றாலும், மெக்சிகன் அரசு அவர்களுக்கு அளித்திருக்கும் உதவித்தொகை, ஆனால் அதிசயமாக, இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் கதவைத் திறக்கும்போது, மிக ஒல்லியான, பழகுவதற்கு நட்பான இளைஞன், சிறிது பெரிதாக இருக்கும் கண்கள் கொண்ட ஸ்பானியர்ட், எழுதிக் கொண்டிருக்கிறான், இரண்டாம் சிலேயன் அங்கில்லை (அவனை இரண்டாம் சிலேயன் என்று அழைப்பதைத் தவிர்க்க முடியாது; இந்தக் கதை பூரணமற்றதாக இருக்கக் காரணம் இதில் இரு சிலேயர்கள் இருக்கின்றனர், ஒருவர்தான் இருக்க வேண்டும், அதைவிட, அதைவிட எவ்வளவோ நல்லது, ஒருத்தர்கூட இல்லாதிருந்திருக்க வேண்டும், ஆனால் இருவர் இருக்கின்றனர்). முதல் சிலேயனும் இரண்டாம் சிலேயனும் நண்பர்களல்ல, உண்மையில் அவர்கள் நண்பர்கள் என்பதைவிட பகைவர்கள் போல்தான் இருக்கிறார்கள், அல்லது, குறைந்தபட்ச அவர்கள் சிலேயில் அவ்வாறு இருந்தார்கள், இப்போது இருவரும் மெக்சிகோவில் இருக்கிறார்கள், அதனால் இரண்டாகவும் இருக்கிறார்கள், அவரவர்கள் அவரவர் வகையில், இனியும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பது அபத்தமாகவும் தேவையற்றதாகவும் இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள், அது போல் அவர்களது சண்டையில் ஓர் உள்ளார்ந்த புரிதல் இருந்தது, ஒரு வகை சமாதானத்துக்கு வர முயற்சிக்க முடியாதபடி எதுவொன்றும் அவர்களைத் தடை செய்யவில்லை, ஒருபோதும் நண்பர்களாக இருக்க முடியாது என்று இருவருமே அறிந்திருந்தாலும், அந்த எண்ணமே ஒரு வகையில் ஆசுவாசமளித்தது, எப்படியானாலும் இருவரையும் இணைக்கும் விஷயம் ஒன்று இருக்கிறது: மது, மொத்த குழுவிலும் அவர்கள் இருவர்தான் சந்தேகத்துக்கு இடமில்லாதபடி மிகப்பெரிய குடிகாரர்கள் என்பதால், ஆனால் கடத்தலுக்குப் பின்னர் அவர்கள் வீடு திரும்பும் இப்போது இரண்டாம் சிலேயன் அங்கு இருக்கவில்லை, ஸ்பானியர்ட் மட்டுமே இருந்தான், வாசல் அறை டேபிளில், ஒரு கோகா கோலா பாட்டிலின் அருகில், முழுக் கவனத்துடன் எழுதிக் கொண்டிருந்தான் – ஒரு பாட்டில் கோகா கோலாவோடு பிணைந்திருந்தான் என்றுகூட சொல்லலாம் -, ஆனால் என்ன நடந்தது என்பதை அவர்கள் சொல்லும்போது அவன் தன் வேலையை நிறுத்தி விடுகிறான், அவன் அதிர்ச்சியடைந்திருப்பது போல் தெரிகிறது, அவன் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறான், அவர்களைப் பேசச் சொல்லி அழைக்கிறான், சரியான சமயத்தில் சொல்லப்பட்ட இலகுவான நகைச்சுவைத் துணுக்குகளுடன் மனநிலையைத் தளர்த்துகிறான், அவர்கள் தங்கள் கிரெடிட் கார்ட்களை ப்ளாக் செய்வதற்கு தேவையான தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்க உதவுகிறான் – திருடர்கள் மூவாயிரம் பெசோக்கள், இரண்டு கிரெடிட் கார்ட்கள், இரண்டு செல் போன்கள், இரண்டு லெதர் ஜாக்கெட்கள், ஒரு வெள்ளிச் சங்கிலி, ஏன், ஒரு காமிராவையும்கூட பிடுங்கிக் கொண்டிருந்தனர் – கிளம்பும்போது சிலேயன் தன காமிராவைக் கொண்டு வரத் திரும்பிப் போயிருந்தான் – அவன் அர்ஜண்டைனை போட்டோ பிடிக்க விரும்பினான், அவள் உண்மையாகவே அழகாக இருந்தாள் என்பதால், இதுவும்கூட ஒரு தேய்வழக்குதான், ஆனால் என்ன செய்வது, அவள் அழகாக இருக்கிறாள் என்பதுதான் உண்மை, ஆம், அவன் காமிராவைக் கொண்டு வரத் திரும்பிப் போயிருக்காவிட்டால், அவர்களை துரிதப்படுத்தி அல்லது தாமதித்து கடத்தலிலிருந்து காப்பாற்றியிருக்கக்கூடிய அது போன்ற வேறு பல விஷயங்களைப் போல் அந்தக் குறிப்பிட்ட டாக்ஸியை அவர்கள் நிறுத்தி அதில் ஏறியிருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் அவளுள் எழுகிறது,

அர்ஜண்டைனும் முதல் சிலேயனும் என்ன நடந்தது என்பதை ஸ்பானியர்ட்டிடம் சொல்கிறார்கள், அதைச் சொல்கையிலேயே மீண்டும் அதை வாழ்கிறார்கள், இரண்டாம் முறையோ மூன்றாம் முறையோ, அதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். முதல் சிலேயன் இப்போது நடந்த விஷயம் அவர்களை இன்னும் நெருங்கி வரச் செய்யுமா அல்லது விலகிச் செல்லச் செய்யுமா என்று தன்னையே கேட்டுக் கொள்கிறான், அர்ஜண்டைனும் அதே விஷயத்தை நினைத்துப் பார்க்கிறாள், ஆனால் இருவரில் எவருமே அந்தக் கேள்வியை உரக்க ஒலிப்பதில்லை. இந்த நேரத்தில் இரண்டாம் சிலேயன் வருகிறான், அவன் ஒரு விருந்திலிருந்து திரும்பியிருக்கிறான், என்ன நடந்தது என்பதை உணராமல் உடனே பேச ஆரம்பிக்கிறான், ஆனால் அப்போது முதல் சிலேயனின் முகம் மிகவும் வீங்கியிருப்பதையும், வீக்கத்தைக் குறைக்க அவன் ஐஸ் பை ஒன்றை அதில் வைத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறான், அப்போதுதான் இரண்டாம் சிலேயனுக்குப் புரிகிறது – ஒரு வேளை, முதல் சிலேயன் தன் முகத்தில் ஐஸ் பை வைத்திருப்பது அவனுக்குப் பரிபூரண இயல்பு நிகழ்வாகத் தெரிந்திருக்கலாம், அல்லது அவனது அதிசய கவியுலகில் ஒருவன் தன் முகத்தில் ஐஸ் பை வைத்துக் கொண்டு இரவுப் பொழுதைக் கழிப்பது இயல்பாக இருந்திருக்கலாம், ஆனால் இல்லை, அது இயல்பான விஷயமில்லை, எனவே இரண்டாம் சிலேயன் என்ன நடந்தது என்று கேட்கிறான், அதைத் தெரிந்து கொண்டதும், “பயங்கரமாக இருக்கிறது, இதே விஷயம் எனக்கும் இன்று மதியம் கிட்டத்தட்ட நடந்தது,” என்று சொல்லிவிட்டு, தான் கிட்டத்தட்ட பலியான தாக்குதலாக இருந்திருக்கக்கூடியதை, ஆனால் டாக்ஸியில் இருந்து இறங்குவது என்று  நொடிப்பொழுதில் முடிவெடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதைப் பற்றி பேசத் துவங்குகிறான். பேசிக் கொண்டிருக்கும்போது சிலேயர்கள் இருவரும் மெஸ்கால் பாட்டில் ஒன்றிலிருந்து நிறைய குடிக்கிறார்கள், ஸ்பானியர்ட்டும் அர்ஜண்டைனும் ஒரு போதைச் சுருட்டு புகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

***

இப்போது யாரோ வருகிறார்கள், ஒரு வேளை அது ஸ்பானியர்ட்டின் நண்பனாக இருக்கலாம், அடுத்து அவர்கள் அந்தக் கதையை மீண்டும் சொல்கிறார்கள், ஆனால் அதிகம் டாக்ஸியில் நடந்த கடைசி பகுதியைதான், அது அவர்களுக்கு ஒரு வகையில் இரண்டாம் பாகம் போல் இருக்கிறது, காரணம் கடத்தல் சம்பவம் ஒரு மணி நேரம் நடந்தது, அதன் முதல் பாதியில் அவர்களுக்கு உயிர்ப்பயம் இருந்தது, இரண்டாம் பாதியில் அவர்கள் மரணபயம் இல்லாமல் இருந்தார்கள்; அவர்கள் பீதியிலிருந்தார்கள், ஆனால் எத்தனை நேரமானாலும் சரி, கொள்ளைக்காரர்கள் தங்களைக் கொல்லப் போவதில்லை என்பதை மங்கலாக உணர்ந்து விட்டார்கள், ஏனெனில் அவர்களுடைய பேச்சில் இருந்த வன்முறை காணாமல் போய் விட்டது, அல்லது, அவர்கள் வன்முறையைப் பிரயோகித்தார்கள், ஆனால் அது அமைதியான, பயங்கரமான ஒன்றாக இருந்தது: “நாங்கள் அர்ஜண்டைன்களை கடத்திச் சென்றிருக்கிறோம், ஆனால் சிலேயர்களை ஒருபோதும் கடத்தியதில்லை” என்று பயணியர் இருக்கையில் இருப்பவன் சொல்கிறான், அவனுக்கு உண்மையாகவே அப்படி ஒரு ஆர்வம் இருக்கும் போலிருக்கிறது, அவன் முதல் சிலேயனிடம் அவனது நாட்டில் நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்க ஆரம்பிக்கிறான், சிலேயன் பணிவுடன் பதில் சொல்கிறான், அவர்கள் ரெஸ்டாரெண்டில் இருப்பது போலவும் அவர்கள் ஒரு பரிசாரகனும் விருந்தாளியும் போல் அல்லது அது போல் ஏதோ ஒன்று என்பது போலவும், கேள்வி கேட்டவன் அவ்வளவு நன்றாய் பேசுகிறான், இது போன்ற உரையாடல்கள் அவனுக்கு பழக்கம் என்பது போல், இந்தக் கதையை யாரிடமாவது சொன்னால் அவர்கள் நம்பப் போவதில்லை என்று முதல் சிலேயன் நினைத்துக் கொள்கிறான், இந்த எண்ணம் அடுத்த சில நிமிடங்களில், அவர்களுடன் பின் சீட்டில் உட்கார்ந்திருப்பவன், துப்பாக்கி வைத்திருப்பவன், பேசும்போது அதிகரிக்கவே செய்கிறது,  “நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது, அதை நீங்கள் ரகசியமாய் வைத்திருக்கிறீர்கள்,” என்று அவன் சொன்னதும் இருவரும் ஒரே குரலில் இல்லை, இல்லை, நாங்கள் அப்படி இல்லை என்று பதில் சொல்கிறார்கள். “ஏன் ஒன்றாக இருக்கக்கூடாது?” என்று அந்தக் கொள்ளைக்காரன் கேட்கிறான் – “நீங்கள் ஏன் ஒன்றாக இல்லை, அவன் ஒன்றும் அவ்வளவு அவலட்சணமாக இல்லை,” என்கிறான் அவன். “அவலட்சணம்தான், ஆனால் அவ்வளவு அசிங்கமாக இல்லை, நீ தலைமுடியை வெட்டிக் கொண்டால் இன்னும் நன்றாக இருப்பாய், எழுபதுகளில் இருந்த மாதிரியே இருக்கிறது, இப்போதெல்லாம் யாரும் இது போல் முடி வைத்துக் கொள்வதில்லை,” என்று சிலேயனிடம் சொல்கிறான், “அப்புறம் அந்தப் பெரிய கண்ணாடிகள், அதுவும்தான், உனக்கு நான் ஒரு நல்லது செய்யப் போகிறேன்,” என்று அவன் சிலேயனின் முகத்தில் இருக்கும் கண்ணாடியைக் கழட்டி ஜன்னலுக்கு வெளியே வீசி எறிகிறான். ஒரு நொடி அந்தச் சிலேயன் தான் அண்மையில் பார்த்த வுடி ஆலன் படம் பற்றி நினைத்துப் பார்க்கிறான், அதன் நாயகனது கண்ணாடி மீண்டும் மீண்டும் உடைக்கப்படுகிறது, சிலேயன் மெல்லச் சிரிக்கிறான், ஒரு வேளை அவன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருக்கலாம், நாம் பீதியில் சிரிப்பது போல் சிரிக்கிறான், ஆனாலும்கூட, அவன் சிரிக்கத்தான் செய்கிறான்.

“என்னிடம் கத்தரிக்கோல் இல்லை, அதனால் உன் தலைமுடியை வெட்டாமல் விடுகிறேன்,” என்கிறான் துப்பாக்கி வைத்திருந்தவன், “நாளை நல்ல கத்தரிக்கோல் கொண்டு வர வேண்டும் என்பதை நினைவுபடுத்து, நாம் சிலேயர்களைக் கடத்தும்போது அவர்கள் தலைமுடியை வெட்ட வேண்டும், ஏனென்றால் இனி நாம் சிலேயர்களை மட்டும்தான் கடத்தப் போகிறோம், இத்தனை நாட்கள் நாம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை, எத்தனையோ அர்ஜண்டைனர்களைக் கடத்தியிருக்கிறோம், ஆனால் தாயைப் புணரும் இந்தச் சிலேயன், தெ லா சிங்காடா, இவனை மட்டும்தான் இதுவரை கடத்தியிருக்கிறோம், இனிமேல் நீண்ட தலைமுடி வைத்திருக்கும் சிலேயர்களைக் கடத்துவதை நாம் தொழிலாய் வைத்துக் கொள்ளலாம். என்னிடம் ஒரு கத்தி இருக்கிறது, ஆனால் கத்தியை வைத்து முடி வெட்ட முடியாது, கத்திகளைக் கொண்டு, ஓத்தா, சிலேயர்களின் கொட்டைகளை அறுக்கத்தான் முடியும், உன் காதலனுக்கு கொட்டை இருக்கிறது, ஆனால் கொட்டை இருப்பவர்கள் சில சமயம் அவற்றை இழந்தாக வேண்டும், உன் காதலனிடம் இப்படி இனிமேல் கொட்டையைத் தூக்கிக் கொண்டு வந்து நிற்க வேண்டாம் என்று சொல், ஏனென்றால் இப்போது நான் உன்னை புணரப் போகிறேன், குட்டி அர்ஜண்டைன், காரணம் இவனது கொட்டைகள்தான், நான் உன்னை புணரவில்லை என்றால் அதற்கு காரணம் நீ என்னை ஈர்க்கவில்லை என்பதல்ல, நீ உண்மையாகவே கவர்ச்சியாக இருக்கிறாய், நான் பார்த்த அர்ஜண்டைன் குட்டிகளில் நீதான் கவர்ச்சியானவள், ஆனால் நான் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறேன், புணரும் போது வேலை செய்ய மாட்டேன், ஏனென்றால் அப்போது புணர்வரது என் வேலையாகி விடும், நான் ஒரு தேவடியா ஆகி விடுவேன், என் முகத்தை உன்னால் பார்க்க முடியாது என்றாலும் நான் தேவடியா இல்லை என்பது உனக்குத் தெரியும், என் முகத்தை நீ பார்க்க வேண்டும், அப்போதுதான் நான் அழகான திருடன், என்னிடம் கத்தரிக்கோல்கள் இல்லை என்றாலும் எனக்கு முடி வெட்டவும் தெரியும் என்பது உனக்குத் தெரியும், ஏய் சிலேயா, இந்தக் கத்தியை வைத்துக் கொண்டு உன் தலைமுடியை வெட்ட முடியாது என்றாலும் நான் உன் உறுப்பை வெட்ட முடியும், ஆனால் இந்த அர்ஜண்டைன் ஐட்டத்தைப் போட உனக்கு அது வேண்டும், இந்தத் துப்பாக்கியை வைத்தும் உன் முடியை வெட்ட முடியாது, ஒரு வேளை அதைச் செய்ய முடியுமோ, ஆனால் என் துப்பாக்கிக் குண்டுகள் காலியாகி விடும், உன் கொட்டை விரைத்துக் கொண்டால் எனக்கு அது தேவைப்படும், ஆனால் அதற்கு அப்புறம் இந்த அர்ஜண்டைன் ஐட்டத்தை நான் புணர வேண்டியிருக்கும், என் சிலேய நண்பா, உன்னைக் கொன்ற பின், உன் காதலியை புணரப் போகிறேன், உன்னைக் கொலை செய்ய வேண்டும் என்பது என் திட்டமில்லை, ஆனால் உன்னைக் கொலை செய்வேன், உன் காதலியை புணர வேண்டும் என்பது என் திட்டமில்லை, ஆனால் அவளையும் புணரப் போகிறேன், காரணம் அவள் நிஜமாகவே அதைச் செய்ய வேண்டும் போலிருக்கிறாள், இந்த ஊரில் உள்ள மிகச் சிறந்த வேசி வீட்டிலிருந்து வெளியே வந்தவள் போலிருக்கிறாள். குட்டி அர்ஜண்டைன், நான் உன்னைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறேன், நாளை நான் வேசிகளைத் தேடிப் போகப் போகிறேன், உன்னைப் போல் இருக்கும் ஒருத்தியைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறேன், என் அர்ஜண்டைன் வேசியே”

டிரைவர் அர்ஜண்டைனிடம் அவள் ஒரு போகா ரசிகையா என்று கேட்கிறான், ஆம் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்றாலும், அவள் உண்மையைக் கடைபிடிக்க முடிவு செய்து, இல்லை என்று சொல்கிறாள், அவள் வெலேஸ் அணியை ஆதரிக்கிறாள். சிலேயனுக்கு இந்தப் பிரச்சினை இல்லை, அவன் கொலோ – கொலோ ஆதரவாளன் என்பதால், கொள்ளைக்காரர்களுக்குத் தெரிந்த ஒரே சிலேய அணி அதுதான். அதன் பின் அவர்கள் மாரடோனா பற்றி கேட்கிறார்கள், அர்ஜண்டைன் பதிலுக்கு ஏதோ கூறுகிறாள், அதன்பின் கிறுக்குத்தனமான ஒன்றை டிரைவர் சொல்கிறான்: அவன், மெஸ்ஸியைவிட சிசரிடோ ஹெர்னான்டஸ் நல்ல ஆட்டக்காரன் என்று சொல்கிறான், அதன்பின் மெக்சிக அணிகளில் எதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று கேட்கிறான், கால்பந்து பற்றி உண்மையில் தனக்கு அதிகம் தெரியாது என்று அர்ஜண்டைன் சொல்கிறாள் – அது ஒரு பொய், அவளுக்கு நிறைய தெரியும்,  மெஸ்ஸியைவிட சிசரிடோ ஹெர்னான்டஸ் நல்ல ஆட்டக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய கொள்ளைக்காரனைவிட அவளுக்கு அதிகம் தெரியும், சிலேயன், அவள் சொல்லும் அதே பொய்யைச் சொல்லாமல், சிறிது பதட்டப்படுகிறான், கொள்ளைக்காரர்கள் புமாஸ் அல்லது அமேரிக்கா அல்லது க்ரூஸ் அசூல் அல்லது ஷிவாஸ் தி க்வாடலாயாரா அணிகளில் எதன் ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்று நீண்ட ஒரு நொடி சிந்தித்தபின், மெக்சிகோ சிட்டியில் ஷிவாஸ் அணியை நிறைய பேர் ஆதரிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான், உண்மை சொல்வதென்று தீர்மானிக்கிறான், தான் மாண்டேரே அணியைத் தொடர்வதாய்ச் சொல்கிறான், காரணம் அதில்தான் சுபெட்டே சுவாசோ விளையாடுகிறான் என்பதால், டிரைவருக்கு மாண்டேரே பிடிக்காது என்றாலும் அவன்  சுபெட்டே சுவாசோவை மிகவும் நேசித்தான், எனவே அவன் தன் நண்பர்களிடம் சொல்கிறான், “இவர்களைக் கொல்ல வேண்டாம்,  சுபெட்டே சுவாசோவை கௌரவிக்கும் வகையில் நாம் இவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப் போகிறோம்”, என்று.

***

“சுபெட்டே சுவாசோ யார்?” என்று கேட்கிறான் இரண்டாம் சிலேயன், அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், ஆனால் கால்பந்தில் தனக்கு ஆர்வமில்லை என்பதைக் காட்டிக் கொள்ளும் உந்துதல் இருக்கிறது. முதல் சிலேயன் அவனுக்கு பதிலளிப்பதாய் இல்லை, ஆனால் ஸ்பானியர்ட்டுக்கு கால்பந்து பற்றி நிறைய தெரியும், எனவே அவன் ஒரு சிலேய சென்டர் பார்வர்ட், குண்டாக இருப்பது போல் தெரிவான், ஆனால் அப்படி இல்லாதவன், மாண்டேரேவில் உள்ள ராயாடோசுக்கு விளையாடுகிறான், ஓராண்டு வெற்றிகரமாக ஆடியபின் அவன் ஜரஜோகாவுக்கு இரவல் அளிக்கப்பட்டான், ஆனால் அதன் பின் அவன் மெக்சிகோ திரும்பினான், ஸ்பானியார்டுகளுக்கு அவனுக்கு சம்பளம் கொடுத்து கட்டுபடியாகவில்லை,என்று சொல்கிறான். இதேதான் எனக்கும் நடந்தது என்கிறான் இரண்டாம் சிலேயன், உண்மையில் அவன் ஒல்லியானவன், ஆனால் மற்றவர்கள் அவன் குண்டாக இருப்பதாக நினைக்கிறார்கள்.

முதல் சிலேயனும் அர்ஜண்டைனும் இப்போதும் நெருங்கி அமர்ந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களிடையே ஒரு கண்ணியமான இடைவெளி நிலவுகிறது, ஏனெனில், எல்லாருக்கும் அவர்களிடையே ஏதோ ஒரு உறவு இருக்கிறது என்று தெரிந்திருப்பதால், அல்லது, எல்லாரும் ஊகித்திருப்பதால், அவர்கள் தொடர்ந்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள், உண்மை தெரியாமலிருக்க உத்திகள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அதற்கு காரணம் கற்பல்ல, ஒரு விரக்தி நிலை என்றும்கூட சொல்லலாம், அல்லது ஒன்றாக இருப்பது அல்லது அப்படி வேண்டாம் என்கிற அளவு எல்லாம் எளிமையாக இருந்த காலம் போய்விட்டது என்பது ஒரு காரணமாக இருக்கலாம், அல்லது, எல்லாம் இப்போதும் அத்தனை எளிமையாகவே இருக்கின்றன, ஆனால் அவர்கள் அதை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை, அவர்கள் எப்போதும் ஒன்றாய்ப் படுத்துக் கொள்கிறார்கள் என்றாலும்கூட இருவரும் ஒன்றாய் வாழ்வதில்லை என்பது உண்மையில் அபத்தமாக இருக்கலாம் – ஏறத்தாழ எப்போதும் அவன்தான் அவள் இருக்கும் இடத்துக்குத் தூங்க வருகிறான், ஆனால் சில சமயம் ஈக்வடோரியப் பெண்ணுடன் சிலேயன் பகிர்ந்து கொள்ளும் அபார்ட்மெண்டுக்கு அர்ஜெண்டின் இரவு தூங்க வருகிறாள். உண்மையில் சிலேயனும் அர்ஜண்டைனும் வேண்டுவது தனியாக இருப்பதைத்தான், ஆனால் இரவு வந்ததும் கடத்தல் கதை முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் பேசச் செய்கிறது, அவர்கள் நினைவில் கொள்ளத் தவறிய நுண்விவரங்களைத் தேடுகிறார்கள், அப்படி அவர்கள் ஒன்றை நினைவுக்குக் கொண்டு வரும்போது, அது அவர்களிடையே புதிய, மீண்டும் புதுப்பிக்கப்பட்ட இணக்கத்தைத் தருவிக்கிறது. இறுதில் அவன் குளியலறைக்குப் போவதாய்ச் சொல்கிறான், ஆனால் அதற்கு மாறாய் அவன் அர்ஜண்டைனின் படுக்கையறைக்குள் போகிறான்; அவள் வாசல் அறையில் இன்னும் சிறிது நேரம் அமர்ந்திருக்கிறாள், அதன் பின் அவளும் நழுவிச் செல்கிறாள்.

அவள் நீண்ட நேரம் குளிக்கிறாள், அவனையும் குளிக்க வைக்கிறாள், அவர்களிடமிருந்து கடத்தலைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக, என்று அவள் சொல்கிறாள், அவள் மீது எங்கெல்லாம் கை வைத்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறாள், எப்படியானாலும் அவர்கள் அவளைத் தடவியது ஒரு சிறிதே, அதற்கு அவள் நன்றியுணர்வு கொள்கிறாள். உண்மையில் அதைத்தான் அவள் கொள்ளைக்காரர்களிடம் அவர்கள் காரை விட்டு இறங்கியதும் சொன்னாள்: “நன்றி”. அவள் அதை இரவெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறாள்: “நன்றி, நன்றி, எல்லாருக்கும் நன்றி”. அவர்களுக்கு ஆறுதல் சொன்ன ஸ்பானியர்டுக்கு, அவர்களை அலட்சியப்படுத்திய, ஆனால் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு ஆறுதல் அளித்த சிலேயனுக்கு, அப்புறம் மீண்டும் கொள்ளைக்காரர்களுக்கு, மீண்டும் மீண்டும் சொல்வதில் தவறே இல்லை: “நன்றி,” காரணம், அவர்கள் நம்மைக் கொலை செய்யவில்லை, இனி நம் வாழ்க்கை தொடரும்.

இறுதியில் அவள் முதல் சிலேயனுக்கும் நன்றி சொல்கிறாள், அவர்கள் நீண்ட பல மணி நேரம் ஒருவரை ஒருவர் தொட்டுத் தடவி கொஞ்சிக் கொள்கிறார்கள், இன்று இரவு அவர்கள் கூடப் போவதில்லை என்பதை உணர்ந்தவர்களாக, இனி வரும் காலங்களை மிக நெருக்கமாக, அபாயகரமான அளவு, தாராளமான அளவு நெருக்கமாகக் கழிக்கப் போவதை அறிந்தவர்களாக, பேசிக் கொண்டிருக்கிறார்கள். தூங்கப் போவதற்கு முன் அவள் அவனுக்கு நன்றி சொல்கிறாள், அவன் சிறிது தாமதமாக, ஆனால் தீர்மானமாக, “நன்றி,” என்று பதிலளிக்கிறான்.

அவர்களுக்குச் சரியான தூக்கமில்லை, ஆனால் தூங்குகிறார்கள். அதன்பின் அடுத்த நாளும் பேச்சைத் தொடர்கிறார்கள், வாழ் நாளெல்லாம் அவர்கள் முன் காத்திருப்பது போவும், காதலை வளர்த்துக் கொள்ள அவர்கள் தயார் என்பது போலவும், தொலைவில் இருந்து யாராவது ஒருவர் அவர்களைப் பார்த்தால், துணிச்சலான யாரோ ஒருவர், இது போன்ற கதைகளில் நம்பிக்கை கொண்ட யாரோ ஒருவர், இவற்றைச் சேகரித்து நன்றாக சொல்ல முயற்சி செய்யக்கூடிய யாரோ ஒருவர், காதலில் நம்பிக்கை கொண்ட யாரோ ஒருவர், இவர்களைப் பார்த்தால் இவர்கள் இருவரும் வெகு நீண்ட காலம் சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்கக்கூடும் என்பது போலவும்.

ஆங்கில மொழியாக்கம் – மேகன் மக்டவல்

***

(ஜூன் 2018 ல் வெளிவந்த உன்னதம் – சர்வதேச சிறுகதைகள் சிறப்பிதழில் வெளிவந்தது. )

நன்றி: vice.com