-
இடாலோ கால்வினோ
-
தமிழாக்கம்: சொ. பிரபாகரன்
ரொம்ப காலத்துக்கு முன்னர், மேக்ஸிமஸ் என்ற சிறந்த நீதி வழுவாத அரசர் தனது நாட்டைச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஸ்டெஃபனோ, கியான் மற்றும் ஆண்ட்ரூ என்ற மூன்று புதல்வர்கள் இருந்தார்கள். தனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக, அரசர் தனது கண்பார்வையை இழந்தார். தனது நாட்டில் உள்ள சிறந்த வைத்தியர்கள் அனைவரையும் அழைத்து முயற்சித்தும், யாராலும் அவரது பார்வையை மீட்க முடியவில்லை. அந்த வைத்தியர்களில் மிகவும் மரியாதைக்குரியவர் ஒருவர், “இந்த மாதிரி கண் மருத்துவத்தில் நமது மருத்துவ அறிவு என்பது போதுமான அளவு வளர்ச்சி அடையாததால், யாராவது குறி சொல்பவர்களை அழைத்து, இதற்கு ஏதாவது வழி உண்டா என்று முயற்சிக்கலாம்,” என்று ஆலோசனை வழங்கினார்.
அனைத்து இடங்களில் இருந்தும், குறி சொல்பவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அரசரின் நட்சத்திரங்களின் நிலைபாட்டை அலசிவிட்டு, பின்னர் தங்களது புத்தகங்களில் மூழ்கி தீர்வுக்கு முயன்றனர். ஐயகோ, அவர்களும் தாங்கள் எந்த வகையிலும் வைத்தியர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லை என்பதைதான் நிரூபித்தார்கள். அவர்களுக்குள் ஒரு வயதான மந்திரவாதி இருந்தான். மற்ற அனைவரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்த பின், அந்த மந்திரவாதி எழுந்து முன்வந்து பேசினான்: “மேக்ஸிமஸ் மகாராஜா! உங்களைப் போன்ற கண் தெரியாதவர்கள் பல பேர் குறித்து, எனக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயம் உண்டு. இதற்கான சிகிச்சையை நீங்கள் தூங்கும் அரசியின் நகரத்தில்தான் பெற முடியுமே ஒழிய, வேறு எங்கு அலைந்தும் பயனில்லை”
அந்த மந்திரவாதியின் வார்த்தைகள் ஏற்படுத்திய பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் எல்லோரிடம் சென்று பரவுவதற்குள், அந்த மந்திரவாதி மாயமாக மறைந்ததோடு மட்டுமல்லாது, அதற்குப் பிறகு யாரும் எங்கேயும் அவரைக் காண முடியவில்லை
மகாராஜா யார் இந்த மந்திரவாதி என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாய் இருந்தார். ஆனால் யாருமே அந்த மந்திரவாதியை இதற்கு முன்னர் கண்டது இல்லை என்பதுதான் உண்மை. வந்திருந்த குறி சொல்லுபவர்களில் ஒருவர் இந்த மந்திரவாதி ஆர்மேனியா பகுதியைச் சார்ந்தவாரய் இருக்கக் கூடும், அங்கிருந்து இங்கு தனது மந்திரசக்தியால் வந்திருந்திருப்பார் என்று கூறினார்
உடனே அரசர் வினவினார், “அப்படியென்றால் தூங்கும் அரசியின் நகரம் அங்குதான் எங்காவது இருக்குமா?”
அரசரின் அரசவையில் இருந்த ஒரு வயதான மந்திரி பதிலளித்தார்: “நாம் அந்த நகரத்தைக் கண்டு பிடிக்கும் வரை, அது எங்கிருக்கிறது என்று பாராலும் சொல்ல முடியாது. நான் மட்டும் முதியவனாக இல்லாது இருந்திருந்தால். நானே தனிப்பட்ட முறையில் எந்தவித காலதாமதமும் செய்யாது கிளம்பி இருந்திருப்பேன்.”
மூத்தமகன் ஸ்டெஃபனோ முன்வந்தான். “யாராவது அந்த நகரத்தைத் தேடி செல்வது என்று முடிவெடுத்தால், அது கண்டிப்பாக நானாகதான் இருக்கும். தனது தந்தையின் ஆரோக்கியம்தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என நினைக்கும் தலைமகன், அப்படிச் செய்வதுதானே பொருத்தமாய் இருக்கும்?”
“எனது அன்பான மகனே!” என்று அழைத்த ராஜா, “உனக்கு எனது எல்லா ஆசிர்வாதங்களும் உண்டு. போதுமான பணமும், குதிரைகளும் மற்றும் என்னன்ன வேண்டுமோ அனைத்தையும் எடுத்துக் கொண்டு, நீ புறப்படு! நீ மூன்று மாதத்திற்குள் வெற்றியுடன் திரும்புவாய் என்ற நம்பிக்கையுடன் நான் காத்திருப்பேன்,” என்றார்.
ஸ்டெஃபனோ அருகிலுள்ள துறைமுகத்திற்குச் சென்று, அங்கிருந்த ஒரு கப்பலில் புறப்பட்டுச் சென்றான். ஆர்மேனியாவுக்குச் செல்வதற்குள் வழியில் புடா ஃபிஸ்ட் தீவில் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. அங்கே மூன்று மணி நேரம்தான் கப்பல் நிற்கும். ஸ்டெஃபனோ புடா ஃபிஸ்ட் தீவைப் பார்க்க இறங்கிச் சென்றான். அவன் அந்தத் தீவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மிகவும் அழகான சுண்டி இழுக்கக்கூடிய ஒரு பெண்மணியைக் கண்டான். அவளுடன் அப்படியே ஆழ்ந்து போய் அவன் பேசிக் கொண்டிருக்க, அவன் அறியாமலே மூன்று மணி நேரம் கழிந்து விட்டது. குறிப்பிட்ட நேரத்தில் கப்பலின் பாயை அவிழ்த்து விட்டு, ஸ்டெஃபனோவை அங்கேயே விட்டு விட்டு, கப்பல் புறப்பட்டது. ஐயகோ, தான் எதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டோம் என்பதையே அவன் முழுவதுமாய் மறந்து விட்டான்.
மூன்று மாதங்கள் கடந்தும், ஸ்டெஃபனோ பற்றி எந்தத் துப்பும் வராததால், மேக்ஸிமஸ் மகாராஜா தனது தலைமகன் இறந்திருக்கலாம் என்று கருதி அஞ்சினார். அவரைச் சமாதானப்படுத்த அவரது இரண்டாம் மகன் கியான் தானாகவே முன்வந்து, தானே சென்று அண்ணனையும் புனிதநீரையும் கொண்டு வருவதாகச் சொன்னான். கியானுக்கும் ஏதாவது நேர்ந்து விடலாம் என்று அஞ்சினாலும், அனைவரும் மிகவும் வற்புறுத்திச் சொன்னதால், இந்த யோசனையை அரசர் ஏற்றுக் கொண்டார்.
கியானும் ஆர்மேனியாவுக்கு ஒரு கட்டுமரத்தில் சென்றான். அதுவும் வழக்கம் போல, புடா ஃபிஸ்ட் தீவில் நங்கூரமிட்டு மூன்று மணி நேரம் நின்றது. கப்பல் தலைவன் மூன்று மணி நேரத்திற்குள் திரும்பி விட வேண்டுமனெ கியானிடம் தெளிவாகச் சொன்னான். கியானும் கரையில் இறங்கி தீவைச் சுற்றிப் பார்க்க பொடிநடையாக நடந்து சென்றான். மிர்ட்லெஸ், சைப்ரசஸ் மற்றும் லாரல்ஸ் போன்றவைகள் செழித்து வளர்ந்து, சுத்தமான தெளிந்த நீர் பரந்து கிடந்த காயல்களில் நிழல் பரப்பி நின்றது. காயல்களில் வானவில்லின் அத்தனை நிறங்களிலும் மீன்குஞ்சுகள் அடை அடையாக நீந்திச் சென்று கொண்டிருந்தன. அவன் மேலும் முன்னேறிச் செல்ல, ஒரு அழகான சதுக்கமும் அதன் நடுவில் சலவைக் கல்லாலான நீரூற்றும் இருக்கக் கண்டான். அந்தச் சதுக்கத்தைச் சுற்றி பலவித நினைவுச் சின்னங்களும், கட்டடங்களும் இருந்தன. அந்த கட்டடங்களுக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் நடுவே ஒரு கம்பீரமான மாளிகை தங்கம் மற்றும் வெள்ளி உத்திரங்களால் நிறுவப்பட்டு, சூரியஒளியில் தகதகத்தது. அந்த கரையில் இருந்த பளிங்குச் சுரை ஒட்டி தனது அண்ணன் நகர்ந்து கொண்டிருப்பதை கியான் கண்டான்.
“ஸ்டெஃபனோ!” என்று கியான் கத்தினான். “இங்கே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ ஏன் நமது நாடு திரும்பவில்லை? நீ இறந்து போயிருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்!” இருவரும் ஒருவரையொருவர் பாசத்துடன் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.
ஸ்டெஃபனோ அவனுக்குப் பதிலளித்தான். “உன்னைப் பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அப்பா எப்படி இருக்கிறார்?”
கியான் சொன்னான்: “அப்பாவுக்கு இன்னும் பார்வை திரும்பவில்லை. நீ அவரை மறந்துவிட்டாயா?”
தனது தலையில் அடித்துக் கொண்டே, ஸ்டெஃபனோ பதிலளித்தான்: “எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியம் நான் செய்துள்ளேன், பார்! ஆமாம், அவருக்குப் பார்வை வந்திருக்காதுதான். இருந்தாலும் நீ எனது மனைவியைச் சந்திக்க வேண்டும். அவள் பெயர் லூகிஸ்டெல்லா. அவள்தான் இந்த தீவின் ராணி. அவளைப் போலவே அழகான இரண்டு தங்கைகள் அவளுக்கு உள்ளனர். அவர்களில் ஒருத்தியை உனக்குப் பிடித்தால், அவளை நீ மணந்து கொள்ளலாம்.”
மொத்தத்தில், மூன்று மணி நேரமும் அங்கேயே கழிந்து போக, கியான் இல்லாமல் கப்பல் பாய் விரித்துச் சென்றது. அவனும் தனது அப்பா குறித்தும், புனிதநீர் கொண்டு வருவது குறித்தும் முழுவதுமாய் மறந்து போனான். தனது சகோதரன் போலவே, பளிங்கு மாளிகையின் விருந்தினனாய் தங்கி விட்டான்.
மூன்று மாதங்கள் முழுவதுமாய் கழிந்த பின்னும், தனது இரண்டாம் மகன் குறித்து எந்த அறிகுறியும் இல்லாது போக, மேக்ஸிமஸ் ராஜாவும் அவரது ஒட்டுமொத்த ராஜ பரிபாலனை சபையும் பயந்து போய், ஏதோ மோசமானதுதான் அவர்களுக்கு நடந்து விட்டது எனக் கருதியது. ஆனாலும், மூன்றாவது மகனான ஆண்ட்ரூ மிகவும் தைரியமாக, தான் தங்கள் சகோதரர்களையும் தூங்கும் அரசியின் மாயாஜால நீரையும் தேடிப் போவதாக அறிவித்தான்.
“ஆகவே நீயும் என்னை கைவிட்டுப் போவது எனத் தீர்மானித்து விட்டாயா?” என்று அரசர் கேட்டார். “நான் குருடாய் நாசமாய் போகிறேன். அதற்காக நான் எனது கடைசி மகனையும் இழந்துதான் ஆக வேண்டுமா?”
ஆண்ட்ரூ, சொஸ்தப்படுத்தும் நீருடன் வந்து, கண்குருடு நீக்கி தனது மூன்று மகன்களைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்தித் தருவதாகப் பேசி அரசரை சமாதானப்படுத்தினான். கடைசியாக ஆண்ட்ரூ போவதற்கு அரசர் சம்மதம் கொடுத்தார்.
வழக்கம் போல் பாய்மரக்கப்பல் புடா தீவில் நங்கூரம் போட்டு நின்றது. மூன்று மணி நேரம் மட்டும்தான் கப்பல் அங்கு நிற்கும். “நீ விரும்பினால், இங்கு இறங்கி தீவுக்குள் போகலாம்,” என்று கப்பல் தலைவன் சொன்னான். “ஆனால் உன்னை இங்கேயே விடாமல் தொடர்ந்து ஆர்மேனியாவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், சரியான நேரத்தில், திரும்ப வேண்டும். இதற்கு முன் கரைக்குச் சென்ற இரண்டு இளைஞர்கள் கப்பலுக்குத் திரும்பவே இல்லை; அவர்களைப் பற்றிய எந்த செய்தியும், அதற்குப் பிறகு தெரியவில்லை.”
ஆண்ட்ரூவுக்கு கப்பல் தலைவன் தனது இரண்டு சகோதரர்களைப் பற்றித்தான் சொல்கிறார் என்பது புரிந்தது. அவர்கள் கண்டிப்பாக இந்தத் தீவில்தான் எங்காவது இருக்க வேண்டும்.
அவனும் கரைக்குப் போய், தனது சகோதர்களைத் தேடினான். அவர்கள் பளிங்கு மாளிகையில் இருப்பதைக் கண்டுபிடித்தான். அவர்கள் தம்பியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, தங்களுக்கு அங்கு வாய்த்திருக்கும் சொர்க்க வாழ்க்கையை விவரித்தார்கள். “நீயும் இங்கேயே தங்கி, எங்கள் மனைவிமார்களைக் காண வேண்டும். அவர்களுக்கு இன்னொரு சகோதரியும் உள்ளாள்.”
ஆண்ட்ரூ அவர்கள் பேச்சைக் குறுக்கிட்டுப் பேசினான். “தந்தைக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையை நீங்கள் நினைவில் கொள்ளாததால், நீங்கள் உங்கள் போக்கில் மாறி விட்டீர்கள்! நான் தூங்கும் அரசியின் நீரை கண்டு பிடிக்க வேண்டுமென சங்கல்பம் எடுத்துக் கொண்டுள்ளேன். பணம், கேளிக்கை அல்லது அழகிய பெண்கள் என்று எதுவுமே என் சங்கல்பத்தில் இருந்து என்னை விலக்க முடியாது!”
அவனது இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சகோதரர்கள் இருவரும் அமைதியாகி விட்டனர். ஆண்ட்ரூ உடனே அவர்களை விட்டுப் பிரிந்து, கப்பலுக்குத் திரும்பினான். பாயை விரித்து, சாதகமான காற்று வீசியதும், கப்பல் ஆர்மேனியா நோக்கி செலுத்தப் பட்டது
ஆர்மேனியா மண்ணில் இறங்கியதும், ஆண்ட்ரூ கண்ணில் பட்ட அனைவரிடமும் தூங்கும் அரசியின் நகர் எங்குள்ளது என விசாரித்தான். ஆனால் யாரும் அப்பெயரை இதற்கு முன் கேட்டிருக்கவே இல்லை. ஒரு வாரம் பயனில்லாது தேடிய பின்பு, ஒரு மாது, ஒரு மலையின் உச்சியில் இருக்கும் ஒரு வயதான சாமியாரைப் பார்க்கும்படி அறிவுறுத்தினாள். “அவர் ரொம்ப ரொம்ப வயதான சாமியார். இந்த உலகத்துக்கு என்ன வயசோ, அந்த வயசு அவருக்கு. அவர் பெயர் ஃபார்ஃபேனிலோ. அந்த நகரம் எங்கிருக்கிறது என்று அவருக்கே தெரியவில்லை என்றால், கண்டிப்பாகச் சொல்கிறேன், இங்கே ஒருவருக்கும் அந்த நகரத்தைப் பற்றித் தெரியாது.”
ஆண்ட்ரூ அந்த மலையின் மேல் ஏறினான். அங்கு தாடி வைத்த தளர்ந்து போயிருந்த வயசாளியை, அவரது குடிசையில் கண்டான். அவரிடம் தனது தேவையைச் சொன்னான். “இளைஞனே!” என்று அழைத்த ஃபார்ஃபேனிலோ, “நானும் அந்த நகரத்தைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அந்நகரம் ரொம்ப தூரத்தில் உள்ளது. ஒரு நாட்டையும் ஒரு கடலையும் கடந்து நீ அப்பால் செல்ல வேண்டும். அதற்கான பயணமே கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விடும். கடலைக் கடக்கும் போது, ஏற்படும் ஆபத்தைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். நீ உனது பலத்தைத் தக்க வைத்துக் கொண்டு பாதுகாப்பாக கடலைக் கடந்தாலும், உனக்கு தூங்கும் அரசியின் தீவிலும் பெரும் ஆபத்து காத்துக் கொண்டுதான் இருக்கும். அந்தத் தீவின் பெயரே துரதிஷ்டத்தின் மறுபெயர்தான். அதைக் கண்ணீர் தீவு என்றுதான் அனைவரும் அழைப்பார்கள்,” என்று தொடர்ந்து சொன்னார்.
தனக்குச் சரியான தகவல்கள் கிடைத்ததில் மகிழ்ந்து போன ஆண்ட்ரூ, பிரிண்டிசி துறைமுகத்துக்கு வந்து கப்பல் ஏறினான். கடலை கடப்பது என்பது மிகவும் ஆபத்தானதாக இருந்தது. எனெனில் அங்கே கடலில் வெள்ளை ஓநாய்கள் வட்டமிட்டு நீந்தித் திரிந்தன. அவைகள் எவ்வளவு பெரிய கப்பலாக இருந்தாலும், அடித்து நொறுக்கும் வலுவுடன் இருந்தன.
ஆண்ட்ரூவோ மிகவும் தைரியமான வேட்டைக்காரன். எதையும் கண்டு அவன் பயப்படவே இல்லை. கப்பல் வெண் ஓநாய்களின் நகங்களுக்குப் பலியாகி விடாமல் கப்பலைக் காப்பாற்றி, பாதுகாப்பாய் கண்ணீர் தீவை அடைந்தான். கரை அருகில் வந்ததும், அவன் கப்பல் தலைவனிடம் தனக்காக மூன்று நாட்கள் அங்கேயே கப்பலை வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டுமென உத்தரவிட்டான்.
கண்ணீர் தீவின் துறைமுகமே கைவிட்டது போல காட்சியளித்தது. எந்தச் சிறிய சலசலப்பும் அங்கு இல்லாமல் அமைதியாக இருந்தது. ஆண்ட்ரூ கப்பலில் இருந்து இறங்கி, தீவிற்குள் கொஞ்சம் நடந்து சென்றான். அங்கு ஒரு காவலாளி ஈட்டியைக் கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். அந்த மனிதன் எந்தவித அசைவுமின்றி அப்படியே நின்று கொண்டிருந்தான். ஆண்ட்ரூ அவனிடம் வழி கேட்ட பின்பும் கூட, அந்தக் காவலாளி ஒரு கற்சிலையைப் போல அப்படியே அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
ஆண்ட்ரூ தொடர்ந்து, நகரத்துக்குள் நுழைந்தான். சாலையின் ஒரு பக்கத்தில், செருப்பு தைப்பவர் ஒரு செருப்பில் நூலை சொருகித் தைத்துக் கொண்டிருக்கும் போது சிலையாகி விட்டது போல, அப்படியே அமைதியாக இருந்தார். தெருவின் மற்றொரு பக்கத்தில், ஒரு காப்பி கடை இருந்தது. கடைக்காரர் ஒரு பெண்ணுக்கு காப்பி ஊற்றும் போது, கடைக்காரரும் அப்பெண்ணும் உறைந்து போனது போல அப்படியே அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். தெருக்கள், சன்னல்கள், கடைகள் என மக்கள் எங்கும் நிறைந்திருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளும் சிலையைப் போல வித்தியாசமான நிலையில் உறைந்து போயிருந்தது. குதிரைகள், நாய்கள், பூனைகள் மற்றும் சகல வஸ்துகளும் அப்படியே தனது பாணியில் உறைந்து போய் கிடந்தன.
இப்படி எங்கும் பரவிக்கிடந்த அமைதியின் ஊடாக, தீவின் கடந்த கால ஆட்சியாளர்களை நினைவு கூரும் வகையில் கற்சிலைகளாலும் நினைவுச் சின்னங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு அற்புதமான மாளிகையை ஆண்ட்ரூ அடைந்தான். அந்த மாளிகையின் வாசலில், பலவித சித்திரங்களுடன், ஒரு அலங்காரத் தோரணம் இருந்தது. தோரணத்தில் எழுதியிருந்த தங்க எழுத்துகள் ஜொலித்தன: புரூடஸ் தீவை ஆளும் மாட்சிமை பொருந்திய ஜொலிக்கும் ஆன்மாவின் அரசிக்கு!
“அப்படியென்றால் எங்கே இந்த அரசி இருப்பாள்?” என ஆண்ட்ரூ வியந்தான். “தூங்கும் அரசி என்பவளும் இவளும் ஒரே ஆளாக இருக்க முடியுமா?” பிரமாண்டமான பளிங்குப் படிகட்டுகளில் ஏறி மேலே போனான் ஆண்ட்ரூ. வெண்கலச் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பல மண்டபங்களைக் கடந்து சென்றான். பல கதவுகளில் காவலாளிகள் இருந்தாலும், அவர்களும் நகரத்தில் உள்ளது போல கற்சிலையாகதான் நின்றார்கள்.
பளிங்கு மண்டபத்தில் இருந்து படிகட்டுகள் ஒரு மேடையை நோக்கிச் சென்றன. மேடையில் ஒரு அரியணை இருந்தது. அதில் வைரம் பொதிக்கப்பட்ட அரசமுத்திரையுடன் கூடிய விதானம் இருந்தது. அதை ஒட்டி வெளியிலிருந்த முற்றத்தில், திராட்சைக் கொடி வளர்ந்து இருந்தது. அந்தக் கொடி மண்டபத்தின் குறுக்காகப் படர்ந்து வளர்ந்து, அரியணையையும் விதானத்தையும் சுற்றிப் பிணைந்து, திராட்சைக் கொத்துகளாலும் திராட்சை இலைகளாலும் அவைகளை அலங்கரித்தன. இந்த அரச மண்டபத்துக்கு வெளியே, ஒரு ஆப்பிள தோட்டம் இருந்தது. அத்தோட்டத்தில் பல மரங்கள் அளவுக்கு அதிகமாகப் பருத்து இருந்தன. அந்த மரத்தின் கிளைகளில் மிகவும் பெரிய பழுத்த ஆப்பிள் பழங்கள் தொங்கின. நெடிய தூரம் நடந்ததால், ஏற்கனவே பசியுடன் இருந்த ஆண்ட்ரூ, ஒரு கிளையில் இருந்த ஆப்பிளைப் பறித்துக் கடித்தான். கடித்த உடன், அவனது கண்பார்வை மங்கிப்போய் விட்டது.
“எவ்வளவு பெரிய அவலம் எனக்கு ஏற்பட்டு விட்டது!” என்று ஆண்ட்ரூ கதறினான். “உதவிசெய்யக்கூட முடியாத கற்சிலையைப் போல் நிற்கும் இந்த விசித்திரமான நாட்டு மக்களிடமிருந்து இனி எப்படி மீள்வேன்?”
அவன் அந்த ஆப்பிள் தோட்டத்தில் தள்ளாடி தள்ளாடி நடந்தான். திடீரென அவன் சரிந்து ஒரு குழிக்குள் விழ, அதனுள் இருந்த வெற்றுத் துளை அவனைச் சுழற்றியபடி இழுத்தது. அத்துளை தண்ணீருக்குள் அவன் தலையை முதலில் நுழைத்து நனைத்தது. ஆம், எங்கும் நீர் சூழ்ந்திருந்தது! கையை அசைத்து நீந்தி, நீரின் மேற்பரப்புக்கு வந்தான். தண்ணீரை விட்டு மேலே வந்ததும், தனது கண்பார்வை மீண்டதை அவன் உணர்ந்து கொண்டான். அவன் ஒரு ஆழமான கிணற்றில் இருப்பது புரிந்தது. அவன் தலைக்கு மேலே ஆகாயம் இருப்பது புரிந்தது. “இதுதான் அந்த மந்திரவாதி சொன்ன கிணறு போலும்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். “இந்தப் புனித நீர் எனது தந்தைக்கு பார்வையைத் தரும்.” அந்தக் கிணற்றில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பற்றிக் கொண்டு, மேலே ஏறி வந்தான்.
இரவு நேரமாகி விட்டது. தூங்குவதற்கு ஏதாவது படுக்கை தயார் செய்ய முடியுமா என்று ஆண்ட்ரூ சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் மறுபடியும் மாளிகைக்குள் சென்றான். அங்கே தாரளமாய் அலஙகரிக்கப்பட்ட ஒரு பெரும் படுக்கையுடன் கூடிய பள்ளி அறையைக் கண்டான். அதில் தெய்வீக அழகுடன் கூடிய ஒரு பெண் படுத்திருந்தாள். அந்தப் பெண்ணின் கண்கள் மூடியிருந்தன, முகம் சாந்தியுடன் இருந்தது. அவள் தூங்கும் போது, அவள் மந்திர சக்திக்குள் கட்டுப்பட்டுள்ளாள் என்பதைத் தெரிந்து கொண்டான் ஆண்ட்ரூ. சிறிது சிந்தித்துப் பார்த்த பின்பு, தனது ஆடையைக் களைந்து விட்டு, அவளருகில் படுக்கையில் படுத்துக் கொண்டான். அவன் அங்கிருக்கிறான் என்பதை அவள் உணரா வண்ணம், அன்றைய இரவை சந்தோசமாகக் கழித்தான். பகல் விடிந்ததும், அவன் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு குறிப்பை அவள் படுக்கைக்கு அருகே இருந்த மேஜையில் வைத்தான்: “மேக்ஸிமஸ் மகாராஜாவின் மகனான ஆண்ட்ரூ இந்தப் படுக்கையில், 203ஆம் வருடம் மார்ச் மாதம் 21ஆம் நாள் சந்தோசமாகப் படுத்து உறங்கினான்,” என்று எழுதி அதில் கையொப்பம் இட்டான். அத்துடன் தனது தந்தையின் அரண்மணை இருந்த நகரத்தின் பெயரையும் எழுதினான்.
அவன் தான் கொண்டு வந்திருந்த குவளையில் தனக்குப் பார்வையை மீட்டுக் கொடுத்த தண்ணீரை நிரப்பிக் கொண்டு, தனது பார்வை பறி போகக் காரணமாக இருந்த ஆப்பிளையும் பறித்து எடுத்துக் கொணடு, தனது நாட்டுக்குத் திரும்ப தயாரானான்.
வழியில், புடா தீவின் துறைமுகத்தில் நின்றான். அங்கே ஆண்ட்ரூ தனது சகோதரர்களைச் சந்தித்தான். கண்ணீர் தீவு மற்றும் படுக்கையில் படுத்திருந்த தெய்வீக அழகு கொண்ட பெண்ணின் அதிசயங்களை அவர்களிடம் சொன்னான். கண்பார்வையை மீட்கும் புனிதநீரையும் அவர்களிடம் காண்பித்தான்.
அந்த இரண்டு சகோதரர்களும் ஆண்ட்ரூவுக்கு எதிராக ஒரு சதித் திட்டம் போட்டார்கள். இருவருக்கும் தற்போதுதான் தனது தந்தையின் அவலநிலை நினைவுக்கு வந்தது. இவ்வளவு மோசமான தங்களது ஞாபகமறதிக்கு தந்தையின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்று அவர்கள் அஞ்சினார்கள்.
மந்திர நீர் இருந்த குவளையைத் திருடி, அதைக் கொட்டி விட்டு, அதில் சாதாரண நீரை நிரப்பி வைத்தார்கள். பின்னர் அவர்களுக்கும் தனது தந்தையைக் காண வேண்டும் என்ற ஆவல் இருந்ததால், தாங்களும் அவனுடன் வருவதாகத் தெரிவித்தார்கள். தந்தையைப் பார்த்து விடடு, தங்கள் மனைவிமார்களிடம் திரும்பி விடலாம் என அவர்கள் கருதினார்கள்.
தனது மூன்று மகன்களும் பாதுகாப்பாய் திரும்பியதில் மேக்ஸிமஸ் மகாராஜா அடைந்த சந்தோசத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. மனசு நிரம்பிய கட்டி அணைத்தலுக்குப் பிறகு, ராஜா கேட்டார்: “உங்கள் மூவரில் மந்திர நீரைக் கொண்டு வந்த அந்த அதிர்ஷ்டசாலி யார்?”
ஸ்டெஃபனோ மற்றும் கியான் தங்களது நாக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். ஆண்ட்ரூதான் பேச ஆரம்பித்தான், “தந்தையே! அது நான்தான் என்று என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். நான் சகோதரர்கள் இருவரையும் கண்டுபிடித்தேன். நான் தூங்கும் ராணியின் நகரத்துக்குச் சென்று, புனித நீரை உங்கள் பார்வையை மீட்பதற்காகக் கொண்டு வந்துள்ளேன். அது தவிர்த்து இந்த விந்தைகள் அனைத்தும் எப்படிச் செயல்புரிகிறது என்பதை உங்களுக்கு நான் காட்டப் போகிறேன்.”
அவன் ஆப்பிளை எடுத்து, அதைத் தானது தாயிடம் கொடுத்து, சாப்பிடச் சொன்னான். அதைச் சாப்பிட்டதும் அவளது பார்வை போய் விட, அவள் கூக்குரலிட்டாள்.
“அச்சப் படாதீர்கள், தாயே!” என்று சொன்ன ஆண்ட்ரூ, தான் கொண்டு வந்த குவளையைத் திறந்தான். “இந்த நீரின் ஒரு துளி உங்கள் பார்வையை மீட்டுக் கொடுக்கும். பல காலமாக பார்வையை இழந்திருக்கும் அப்பாவிற்கும், இப்புனித நீர் பார்வையை மீட்டுத் தரும்.”
துரதிஷ்டவசமாக அதிலிருந்தது, அவர்கள் சகோதரர்கள் மாற்றி வைத்த நீர். ஆகவே அரசியின் பார்வை மீளவில்லை. அரசி அழுதாள், அரசன் கோபாக்னியாக மாறினான். ஆண்ட்ரூ பயத்தில் நடுங்கினான். அப்போதுதான் ஸ்டெஃபனோவும் கியானும் முன்வந்து சொன்னார்கள்: “இப்படி எல்லாம் நடந்ததற்குக் காரணம், ஆண்ட்ரூ தூங்கும் ராணியின் புனித நீரைக் கொண்டு வரவில்லை என்பதினால்தான். அதை நாங்கள்தான் கொண்டு வந்தோம். இதோ உள்ளது அந்தப் புனிதநீர்.”
அந்தத் திருடப்பட்ட புனிதநீர் கண்களைத் தொட்டதும், அந்த வயோதிக தம்பதியினரின் கண்பார்வை மீண்டது. அவர்களால் அனைத்தையும் தெளிவாகக் காண முடிந்தது.
அதைத் தொடர்ந்து பெரும் வாக்குவாதம் நடந்தது. ஆண்ட்ரூ தனது சகோதரர்களை திருடர்கள் என்றும் துரோகிகள் என்று கூறினான். அவர்கள் ஆண்ட்ரூவை பொய்யன் என்றும், வீண் ஜம்பம் பேசுபவன் என்றும் குற்றம் சாட்டினார்கள். இந்த தாவாவில் ராஜாவுக்கும் காலும் புரியவில்லை, தலையும் புரியவில்லை. அவர் கடைசியில் ஸ்டெஃபனோ மற்றும் கியான் பக்கம் சாய்ந்தார்.
அவர் ஆண்ட்ரூவுக்குக் கட்டளை பிறப்பித்தார்: “அமைதியாய் இரு, மானங்கெட்ட ஈனப்பயலே! உனக்கு எனது குருடை நீக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என்றாலும் விட்டு விடுவேன். ஆனால் நீ உனது அம்மாவையும் குருடாக்கத் துடித்தவன். காவலாளிகளே! இந்த நன்றி கெட்ட படைப்பை இழுத்துச் செல்லுங்கள்! அவனைக் காட்டுக்குக் கொண்டு சென்று, கொன்று விடுங்கள்! அவன் துடிக்கும் இதயத்தை மட்டும் கொண்டு வாருங்கள், இல்லையெனில் இன்னும் பல தலைகள் உருளும்!”
காவலாளிகள், கூச்சல் போட்டுக் கொண்டு, எதிர்ப்பு தெரிவித்த ஆண்ட்ரூவை, இழுத்துச் சென்றார்கள். நகரத்திற்கு வெளிப்புறத்தில் இருந்த ஒரு காட்டிற்கு அவனைக் கொண்டு சென்றார்கள்.
இழுத்துச் சென்ற காவலாளிக்கு, ஆண்ட்ரூவைச் சிறுவனாய் இருந்த சமயத்தில் இருந்தே நன்றாகத் தெரியும். மிகவும் கருணை மனதை உடைய உண்மையான இளைஞன் என்றே அவர்கள் ஆண்ட்ரூவைக் கருதினார்கள். ஆண்ட்ரூவும் அந்த அரண்மனைக் காவலாளிகளுக்கு நடந்த உண்மைக் கதையை தெளிவாகச் சொல்லி, அவர்களை நம்ப வைத்தான். காவலாளிகள் ஆண்ட்ரூ நகரத்துக்குத் திரும்பவே கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு, அவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பினார்கள். ஒரு பன்றியின் இதயத்தை ஒரு விவசாயிடம் இருந்து வாங்கி வந்து, அதை அரசரின் முன் வைத்து, இரண்டாகப் பிளந்து காட்டினார்கள்.
கண்ணீர் தீவில், ஒன்பது மாதங்கள் கழிந்தன. தூங்கும் பெண் ஒரு அழகான ஆண் மகனை ஈன்றெடுத்தாள். மகன் பிறந்ததும், அவள் தூக்கத்தில் இருந்து மீண்டு விழித்தாள். அவளுக்கு, ஃபாடா மொர்கனா கோபத்தில் விதித்த சாபம் நீங்கியது. இந்த முழுநகரமே விழித்தெழுந்து, தனது வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பியது. விரைப்பாக உறைந்து போயிருந்த காவலாளிகள் அனைவரும் கண் சிமிட்டினார்கள். செருப்பு தைப்பவர் தனது நூலை இழுத்துச் செருப்பைத் தொடர்ந்து தைக்க ஆரம்பித்தார். காப்பி கடைக்காரர் அந்த பெண்மணியின் குவளையை நிரப்பினார். நாய் தனது வாலை ஆட்டியது. பூனை உடலைச் சோம்பல் முறித்து, மியாவ் என்ற கத்தியது.
அரசி தனது கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்: “இந்தத் தீவுக்குள் நுழைந்து, இந்த அறைக்குள் வந்து உறங்கி, அதன் மூலம் என்னையும் எனது பிரஜைகளையும் சாபத்தில் இருந்து விடுவிக்க ஒரு தைரியசாலி உள்ளார் என்பதே வியப்பாக உள்ளது”
அவளது படுக்கை அருகே உள்ள மேஜையில் உள்ள குறிப்பை எடுத்துப் படித்தாள் ராணி. மகாராஜா மேக்ஸிமஸின் மகன் ஆண்ட்ரூதான் அங்கு வந்தவன் என்பதை அவள் உணர்ந்தாள். உடனே அவள் மகாராஜாவுக்கு உடனே மகனை அனுப்பி வைக்கும் படியும், இல்லையெனில் தாங்கள் அந்நாட்டுடன் போர் புரியும் அவசியம் ஏற்படும் என எழுதி அனுப்பி வைத்தாள்.
அக்கடிதத்தை மகாராஜா மேக்ஸிமஸ் பெற்றதும், அவர் ஸ்டெஃபனோவையும் கியானையும் அழைத்து, அக்கடிதத்தைப் படித்துக் காண்பித்தார். அவர்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடைசியாக ஸ்டெஃபனோ சொன்னான், “இதுவெல்லாம் என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அந்த அரசியிடம் சென்று அவளது விளக்கத்தைப் பெற்றால், உண்மை நமக்குப் புரியும். நானே போய் உண்மையை அறிந்து வருகிறேன்.”
ஸ்டெஃபனோவின் பயணம் எளிதாகவே இருந்தது. ஃபாடா மொர்கனாவின் சாபம் நீங்கியதால், தீவைச் சுற்றி நீந்தித் திரிந்த வெள்ளை ஓநாய்களும் மறைந்திருந்தன. ஸ்டெஃபனோ அரசியிடம் போய் தான்தான் ஆண்ட்ரூ என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். தான்தான் மேக்ஸிமஸ் மகாராஜாவின் குருடைச் சரிசெய்ய புனித நீரைப் பெற கண்ணீர் தீவுக்கு வந்தவன் என்று சொன்னான்.
அவன் சொன்னதை சந்தேகத்துடன் நோக்கிய அரசி, அவனிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள். “முதன்முறையாக நீங்கள் எப்போது இங்கு வந்தீர்கள்? அப்போது இந்த நகரம் எப்படி இருந்தது? நான் எங்கிருந்தேன்? இந்த அரண்மனையில் உங்களுக்கு என்ன நேர்ந்தது? முன்னர் பார்க்காத எந்த அம்சத்தை இப்போது இங்கு நீங்கள் காண்கிறீர்கள்?”
அந்த தீவில் மக்களும் மிருகங்களும் கற்சிலை போல உறைந்து நிற்கும் அதிசயத்தைத் தனது சகோதரர்களிடம் சொல்லியிருந்தாலும், அவன் சில விஷயங்களை தனது சகோதர்களிடம் சொல்லாமலும் விட்டிருந்தான். குறிப்பாக அவன் அந்த தெய்வீக அழகு பொருந்திய பெண்ணுடன் கட்டிலில் படுத்து உறங்கிய கதையையும், அவளுக்குக் குறிப்பு எழுதி வைத்த விஷயம் எதையும், தனது சகோதரர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. ஸ்டெஃபனோ சீக்கிரமே குழம்பிப் போய், உளற ஆரம்பித்து விட்டான். அரசியோ எந்தவித சிரமமும் இல்லாது அவன் பொய் உரைக்கிறான் என்பதைக் கண்டு கொண்டாள். அவள் ஸ்டெஃபனோவின் தலையைக் கொய்து, நகர வாயிலில் உள்ள கம்பத்தில் குத்தி நிறுத்தி, அதில் ஒரு வாசகத்தையும் எழுதி வைத்தாள்: பொய்யுரைத்தால், இப்படித்தான் சாவாய்.
மகாராஜா மேக்ஸிமஸிற்கு இரண்டாம் கடிதமும் தூங்கும் ராணியிடம் இருந்து வந்தது. கெளரவமாக ஆண்ட்ரூவை அனுப்பி வைக்கா விட்டால், ராணியின் படை உடனடியாக அவர்களுக்கு எதிராக கிளம்பிப் போரிட்டு, அவர்களைச் சாம்பலாக்கி விடும் என எச்சரித்து இருந்தது. ஆண்ட்ரூவைக் கொன்றதற்காக ரொம்பவும் வருந்திக் கொண்டிருந்த அரசர், கியானை அழைத்துப் புலம்பினார்: “இப்போது நான் என்ன செய்ய முடியும்? ஆண்ட்ரூ இறந்து விட்டான் என்று எப்படி அவளிடம் சொல்ல முடியும்? ஏன் ஸ்டெஃபனோ இன்னும் திரும்பவில்லை?”
கியான் தானே முன்வந்து தூங்கும் அரசியின் நாட்டிற்குச் சென்றான். அந்தத் தீவை அடைந்ததும், நகர வாயிலில் ஸ்டெஃபனோவின் தலையைப் பார்த்ததும், அவனுக்குத் தெரிய வேண்டிய அனைத்தும் புரிந்து விட்டது.
தனது நாட்டிற்கு முழு வேகத்தில் திரும்பி வந்தான். “அப்பா!” என்று கதறினான். “நாம் மோசம் போய் விட்டோம். ஸ்டெஃபனோ இறந்து விட்டான். அவனது தலையை நகர வாயில் உள்ள கம்பத்தில் குத்தி அனைவரும் பார்க்கும்படி வைத்துள்ளார்கள். நானும் அந்நகரத்துக்குள் போனால், அவனது தலைக்குப் பக்கத்தில் எனது தலையும் வைக்கப்படும்.”
மேக்ஸிமஸ் மகாராஜா பெரும் சோகத்துடன் புலம்பினார். “ஸ்டெஃபனோ இறந்து விட்டானா? என் மகன் ஆண்ட்ரூ குற்றமற்றவனாக இருந்திருக்க வேண்டும், ஆகவே இதுவெல்லாம் என்னை தண்டிக்கவே நடக்கிறது என்பது இப்போதுதான் எனக்கு விளங்குகிறது. கியான், இப்போதாவது உண்மையைச் சொல்! நாமெல்லாம் சாவதற்கு முன்னர், உன்னுடைய சதிச்செயல்களை ஒப்புக் கொள்!”
“எங்கள் மனைவிமார்களைத்தான் இதற்காக நாம் நொந்து கொள்ள வேண்டும்!” என்றான் கியான். “அவர்கள் எங்களை மயக்கி விட்டார்கள். நாங்கள் எப்போதும் தூங்கும் ராணியின் நகரத்துக்குச் சென்றதே இல்லை. ஸ்டெஃபனோதான் மந்திர நீரை அபகரிக்க நினைத்தான். நாங்கள்தான் ஆண்ட்ரூ கொண்டு வந்த குவளையில் புனிதநீரை மாற்றி சாதாரண நீரால் நிரப்பினோம்.”
புலம்பிக் கொண்டும் தலையைப் பிய்த்துக் கொண்டும் அலைந்தார் மேக்ஸிமஸ். அவர் அரண்மணைக் காவலாளிகளை அழைத்து ஆண்ட்ரூவைப் புதைத்த குறிக்கப்படாமல் விடப்பட்ட புதைகுழிக்கு தன்னை அழைத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். காவலாளிகள் இந்த கட்டளையைக் கேட்டதும், நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். இதைக் கண்ட அரசருக்கு, புதிய நம்பிக்கை வர ஆரம்பித்தது. “எல்லாவற்றையும் மறப்போம்! ஆனால் எனக்கு உண்மை தெரிய வேண்டும்! இதில் உங்கள் குற்றம் எதுவாக இருந்தாலும், நீங்கள் அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள்! இதை நான் இப்போதே அரசாணையாகப் பிறப்பிக்கிறேன், ஆனால் எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்!”
பயத்தில் நடுங்கிக் கொண்டே, ஆண்ட்ரூவைக் கொல்லச் சொன்ன கட்டளையை நாங்கள் நிறைவேற்றவில்லை என்று காவலாளிகள் ஒப்புக் கொண்டார்கள். ஏனெனில் அவர்கள் குற்றமற்றவனின் இரத்தம் தங்கள் கரங்களில் படிந்து கறை படிய வேண்டாம் எனக் கருதியதால், அவ்வாறு செய்ததாகச் சொன்னார்கள். அந்த வார்த்தையைக் கேட்டதும், காவலாளிகளே ஆச்சரியப்படும் வகையில், அரசர் அவர்களைப் பைத்தியக்காரத்தனமாகக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டார்.
ஆண்ட்ரூவைக் கண்டுப்பிடித்துத் தருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கை முழுதும் செல்வச் செழிப்புடன் வாழும் வகையில் பரிசுகள் வழங்கப்படும் என நாட்டிலுள்ள ஒவ்வொரு தெருக்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
தனது தந்தையும் அவரது அரசவையும் மகிழ்ச்சி கொள்ளும்படி, ஆண்ட்ரூ திரும்பினான். அவனுக்குச் சிறந்த வரவேற்பு கொடுக்கப்பட்டு, கொண்டாடப்பட்டான்.
தூங்கும் ராணியைச் சந்தித்த ஆண்ட்ரூவை, “நீ என்னையும் என் மக்களையும் விடுவித்தாய்” என்று கட்டிக் கொண்டாள். “நீதான் எனது கணவன் மற்றும் எப்போதும் எங்கள் அரசன்.”
அந்தத் தீவில் பாட்டும் சந்தோசமும்தான் எங்கும் கேட்டன. கண்ணீர் தீவு இப்போது மகிழ்ச்சி தீவு என்று அழைக்கப்படுகிறது.
இத்தாலிய நாட்டுப்புறக் கதைகள் என்பது உலகப்புகழ்பெற்ற இத்தாலிய எழுத்தாளர் இடாலோ கால்வினோவால் சேகரம் செய்யப்பட்டு 1956 -ல் வெளியிடப்பட்ட 200 இத்தாலிய நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பாகும். Italian Folktales (1956) என்ற தொகுப்பி
