- முபீன் சாதிகா
சாரதா அன்று வழக்கம் போல் அலுவலகம் முடிந்து வரும் போது அந்த இடுகாட்டையும் பூந்தோட்டத்தையும் கடந்து வந்தாள். எப்போதும் அவளுடைய தோழிகள் அவளை அந்த வழியில் வரும் போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். இடுகாடும் பூந்தோட்டமும் அருகருகே இருப்பதால் அவர்களுக்கு அது அச்சத்தை உண்டாக்கி இருந்தது. அவர்கள் அவளை அந்த வழியில் நடந்து வரவேண்டாம் என்று எத்தனையோ முறை கூறியிருக்கிறார்கள். அன்று பூந்தோட்ட வாயிலில் இருந்த பெரிய கதவில் அந்தப் பூந்தோட்டத்தைப் பராமரிக்க ஆட்கள் தேவை என்று தகவல் பலகை மாட்டப்பட்டிருந்தது.
சட்டென்று அவள் அந்தப் பூந்தோட்டத்தில் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள். அடுத்து இரு நாள்கள் பண்டிகை என்பதால் அலுவலகத்தில் விடுமுறை கொடுத்திருந்தார்கள். அதன் பின் சனி, ஞாயிறு என்பதால் திங்கள் கிழமைதான் போகவேண்டும். மேலும் மூன்று நாள்கள் விடுப்பெடுத்துக் கொண்டு ஒரு வாரம் இந்த வேலையைச் செய்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது. அவள் விடுதியில் தங்கியிருந்தாள். அவர்களுக்கு அலைபேசியில் பேசி அடுத்து ஏழு நாட்கள் விடுதிக்குத் தான் வரப் போவதில்லை என்று சொல்லிவிட்டு அந்தப் பூந்தோட்டத்தின் பெரிய கதவைத் திறந்தாள். ஒரு நாய் ஓடி வந்தது. உடனே வெளியே வந்து நின்று கொண்டாள். சிறிது நேரம் கழித்து கண் பார்வையற்ற ஓர் இளைஞன் அந்தக் கதவின் அருகில் வந்து நின்றான்.
‘யாரது?’
‘நான்தான். என் பேரு சாரதா. நான் இந்தப் பூந்தோட்டத்தைப் பாத்துக்க ஆசைப்படறேன்.’
‘ஓ அப்படியா? உள்ளே வாங்க. டேய் கிரி குரைக்காதே. அவங்க நம்மளைப் பாக்க வந்துருக்காங்க.’ நாய் அடங்கிவிட்டது. தூரத்தில் தெரிந்த வீட்டை நோக்கி அந்தக் கண் பார்வையற்றவன் நடந்தான். சாரதா அவனைப் பின்தொடர்ந்தாள். மிகப்பெரிய பூந்தோட்டம். ஒரே ஆளாகப் பார்த்துக் கொள்வது சிரமம்தான். ஆனால் அந்தப் பூக்கள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் அவளுக்கு ஆசையாக இருந்தது.
‘நீங்க வேலை செய்யறீங்களா?
‘ஆமா.’
‘எதுக்கு இங்க வேல செய்ய நினைக்கறீங்க?’
‘இங்க இருக்கற பூவெல்லாம் பாக்கும் போது ஆசையா இருக்குது. அதான்.’
“ஆனா இந்த வேலை ரொம்ப சிரமமான வேலை. இந்தப் பூச்செடி எல்லாம் என் குழந்தைங்க மாதிரி. எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா கண் பார்வை மங்கி முழுசா இருட்டாயிடுச்சு. அதனால ஒருத்தரை வேலைக்கு வைச்சு இதுங்களைப் பாத்துக்கணும்னு நினைச்சேன். ஆனா நீங்க அலுவலகத்திலே வேலை செய்யறீங்க. இந்த மாதிரி பூச்செடிகளைப் பாத்துக்கற முன் அனுபவம் உங்களுக்கு இருக்கா?’
‘இருக்கு எங்க வீட்ல நான் வயல்ல வேலை செய்வேன். இப்போ கொஞ்ச நாளா இந்த வேலை கிடைச்சப்பறம்தான் இங்க வந்தேன். இந்த வேலை எனக்கு எந்தச் சிரமமும் தராது.’
‘அப்படின்னா சரி. நீங்க என்ன சம்பளம் எதிர்பார்க்கறீங்கன்னு சொல்லுங்க.’
‘இப்ப நான் வாங்கற அதே முப்பதாயிரம் ரூபாய கொடுத்தீங்கன்னா போதும்.’
‘ஓ அப்படியா. நீங்க இங்க தங்கிக்கலாம். அங்க ஒரு தனி வீடு இருக்கு,’ என்று தூரத்தில் தெரிந்த ஓர் ஒற்றை வீட்டின் திசையில் கையைக் காட்டினார்.
‘சரி. அப்போ நான் போயிட்டு நாளைக்குக் காலைல இருந்து சேந்துக்கவா?’
‘அட நீங்க காலைல வர்ர வரைக்கும் என் பூச்செடிக்கு யார் தண்ணி ஊத்தறது? இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க. நாளைக்குக் காலைக்கு அப்பறம் போயிட்டு பூச்செடிக்குத் தேவையான உரம், மத்தப் பொருளெல்லாம் வாங்கிட்டு அப்படியே இங்கேயே வந்துடலாம்.’
‘சரி.’
அவன் கை காட்டின வீட்டுக்கு வந்தாள். ஒரே ஒர் படுக்கை அறை. முன்னறை சிறியதாக இருந்தது. ஒரு சமையலறை. குளியலறை போன்றவை சமையலறையைத் தாண்டி ஒரு கூடத்தில் இருந்தன. நல்ல வீடுதான் என்று அவளுக்குத் தோன்றியது.
அன்று இரவு சமையலை முடித்துவிட்டு படுத்து உறங்கிவிட்டாள் சாரதா. இரவு சட்டென்று மின்சாரம் போய்விட்டது. எழுந்து அமர்ந்தாள். அடுப்பை மூட்டி ஒரு தீப்பந்தத்தைத் தயார் செய்தாள். அதைக் கொண்டு வந்து படுக்கை அறையின் ஜன்னலுக்கு மேல் பொருத்திவிட்டு படுத்துவிட்டாள்.
யாரோ மெல்லியதாகக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. யாராக இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் கதவைத் திறக்கவேண்டாம் என்று முடிவு செய்தாள். சிறிது நேரத்தில் கதவு ஓங்கி ஓங்கித் தட்டப்பட்டது. சட்டென்று தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள். கண் பார்வையற்றவன் நாயுடன் நின்றிருந்தான்.
‘என்ன வேணும்? எதுக்கு இந்த நேரத்துல கதவைத் தட்டறீங்க?’
அவளை மோதுவது போல் அவன் உள்ளே நுழைந்தான். நாயும் நுழைந்தது. அவள் தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தாள். நாயும் கண் பார்வையற்றவனும் சுவர் ஓரத்தில் நின்றிருந்தனர்.
‘எதுக்கு வந்தீங்க?’ என்று அதட்டிக் கேட்டாள்.
‘எனக்கு ராத்திரில கண் நல்லாத் தெரியும். உன்ன எதுக்கு வேலைக்கு எடுத்தேன் தெரியுமா? நீ சின்ன வயசுல இந்தத் தோட்டத்து பூவைப் பறிச்சுட்டு ஓடிட்ட. உன்னை எப்படிப் பழிவாங்கறதுன்னு காத்துட்டு இருந்தேன். அதுக்காகத்தான் உன்னை இங்க வேலைக்குச் சேர்த்தேன். இனி நீ இங்க இருந்து போக முடியாது. இந்தப் பூவெல்லாம் வாடாத பூக்கள் தெரியுமா உனக்கு? மணிமேகலை காப்பியம் படிச்சிருக்கியா? அதுல வர்ர மாதிரி இந்தப் பூவெல்லாம் வாடவே வாடாது. அப்படிப்பட்ட பூவை நீ பறிச்சிட்டு ஓடின. உனக்கு எப்போ புத்தி வரும்னு பாத்துட்டு இருந்தேன். உனக்காகத்தான் வேலைக்கு ஆள் தேவைன்னு வெளியில தகவல் பலகைய வைச்சேன். நீ சரியா வந்து மாட்டிகிட்ட.’
‘சின்ன வயசுல அறியாம செஞ்ச ஒரு தப்புக்கு இப்போ தண்டனை தருவியா?’
‘ஆமா. அது மன்னிக்க முடியாத குற்றம். சின்ன வயசுல உன்னால அதை அறிஞ்சிக்க முடியாது. அதனால இப்ப தண்டனை தர்ரேன்.’
‘அது எப்படி நியாயம் ஆகும்?’
‘இந்தப் பூச்செடி எல்லாம் மணிமேகலைக் காப்பிய காலத்திலிருந்து வழிவழியா என்கிட்ட வந்து சேர்ந்திருக்கு. இது எப்பவுமே வாடாது. அதனால அதை என் கண்மணிகள் மாதிரி பராமரிக்கிறேன்.’
‘இந்தக் கதை எல்லாம் தெரியாம நான் பறிச்சிட்டேன். அதுக்கு என்ன பரிகாரம் பண்ணனுமோ அதைச் செய்யறேன். கூலி வாங்காம ஒரு வாரம் இந்தப் பூந்தோட்டத்தைப் பராமரிக்கிறேன்.’
‘அதெல்லாம் வேணாம். நான் கொடுக்கற தண்டனைதான் சரியா இருக்கும்….இந்தப் பூக்களின் அற்புதத்தை இன்னும் நீ புரிஞ்சக்கல. ஒரு வாரம் இதுங்களுக்குப் பணிவிடை செஞ்சிட்டு ஓடலாம்னு நினைக்கறே. இதெல்லாம் வெறும் பூ இல்ல. அதுங்களுக்கு உயிர் இருக்குது. அதுக்கு நடக்கறதை எல்லாம் அது நினைவு வைச்சுக்கும். நீ அந்தப் பூவைப் பறிச்சி வீணாக்கிட்டுப் போனியே அப்போ அந்தச் செடி எப்படி எங்கிட்டச் சொல்லி அழுதுச்சு தெரியுமா? அந்தப் பூவோட வாசம் எப்படி இருக்கும் தெரியுமா? இந்தப் பூவாசத்துக்கு எந்தப் பாம்பும் வராது தெரியுமா? ஏன்னா இதெல்லாம் தேவலோகத்துப் பூக்கள். அமாவாசை, பௌர்ணமி அன்னைக்கு தேவர்கள் எல்லாம் என் தோட்டத்துக்கு வருவாங்க. மெய்மறந்து இந்தப் பூக்களை ரசிப்பாங்க. அதுங்களும் அவங்களோட பேசும். அப்பறம் போயிடுவாங்க. நான் இதை வளர்க்கறதுனால இதை யாருகிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா உனக்கு நான் கொடுக்கற தண்டனையில நீ யார்கிட்டயும் இதைச் சொல்ல முடியாதபடி செஞ்சிடுவேன். அதனாலதான் உங்கிட்டச் சொல்றேன்.’
சாரதா அமைதியாக அவனைப் பார்த்தாள். அவன் மனக்கோளாறு கொண்டவன் என நினைத்தாள்.
அவன் சிரித்தான்.
‘நான் பைத்தியம்னு நினைக்கறீயா? அமாவாசை வரைக்கும் இருந்து வேணா பாரு. இங்க என்ன நடக்குதுன்னு. நான் வேணா அமாவாசை அன்னைக்கு உனக்குத் தண்டனை கொடுத்துக்கறேன். அது வரைக்கும் இந்த வீட்டுக்குள்ளேய கிட.’
‘என்னை சிறை வைக்கற அளவுக்கு நான் எந்தத் தப்பையும் பண்ணல. அதனால நீ எப்பவுமே எனக்குத் தண்டனை கொடுக்க முடியாது.’
‘டேய் கிரி ஒரு வழி பண்றா அவளை,’ நாயை ஏவினான்.
அது அவள் அருகே பாயப் பார்த்த போது தீப்பந்தத்தை அதன் மீது வீசுவது போல் பாவனைக் காட்டினாள். அது பயந்து ஓடியது. மீண்டும் துரத்தி அதன் மீது தீப்பந்தத்தை வீசுவது போல் பாவனைக் காட்டினாள். அது வீட்டுக்கு வெளியே போய் நின்று கொண்டு குரைத்தது. அவள் கதவைச் சாத்திவிட்டு அவன் பக்கம் திரும்பினாள்.
‘இப்ப உன்னை அந்த நாயத் துரத்துன மாதிரி துரத்தப் போறேன் பாரு,’ என்று கத்தினாள்.
அவன் சுவருடன் சுவராக நின்றான். தீப்பந்தத்தில் மேலும் ஒரு துணியைப் பற்ற வைத்தாள். அவன் மீது அதை வீசுவது போல் பாவனை காட்டினாள். அவன் பயந்து நகர்ந்தான்.
‘ஓடு. வீட்டுக்கு வெளியில ஓடு,’ என்றாள்.
அவன் கதவைத் திறந்து கொண்டு ஓடிவிட்டான்.
அவள் தூங்காமல் அமர்ந்திருந்தாள். விடிந்ததும் ஒரு கத்தியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு அந்தப் பூந்தோட்டத்தை விட்டு வெளியே வந்தாள்.
நேராக அவளுடைய விடுதிக்கு வந்து சேர்ந்தாள்.
‘எங்கேடி போன?’
‘பெரியம்மா வீட்டுக்குப் போனேன். அலைபேசி அணைஞ்சு போச்சு அதான் அதுக்கப்பறம் பேச முடியல.’
அவள் விடுதியில் அமைதியாகப் படுத்து உறங்கினாள். இருந்தாலும் இரவில் அதிர்ச்சியுடன் உடம்பு குலுங்க அவ்வப்போது எழுந்து அமர்ந்து கொண்டாள். அவளுக்குப் பூந்தோட்ட அனுபவம் பெரும் அச்சத்தைக் கொடுத்திருந்தது.
நான்கு நாள்கள் கழித்து அலுவலகம் சென்றாள் சாரதா. வரும் வழியில் வழக்கம் போல் இடுகாடு இருந்தது. ஆனால் அந்தப் பூந்தோட்டம் இல்லை. அங்கே புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அந்தப் பூந்தோட்டம் எப்படி காணாமல் போனது என்று அறிய அவளுக்கு ஆவலாக இருந்தது. அந்த வளாகத்தில் இருந்த பெரிய கதவைத் திறந்தாள். நாய் ஒன்று ஓடி வந்தது. வெளியே வந்து நின்று கொண்டாள். பார்வையற்ற ஒரு முதியவர் வெளியே வந்து நின்றார். அவரை அவள் அதுவரைப் பார்த்ததில்லை என்று தோன்றியது.
‘இங்கே ஒரு பூந்தோட்டம் இருந்துச்சே. அது எங்கே?’
‘அப்படி எதுவும் இங்கே இல்லையே. நீங்க தவறான முகவரிக்கு வந்திருக்கீங்க போலருக்கு’
‘இல்ல சரியான முகவரிக்குத்தான் வந்திருக்கேன்.’
‘இங்க உங்களை மாதிரியே கண் பார்வை தெரியாவர் ஒருத்தர் நாயோட இருந்தாரே.’
‘அப்படி யாரும் இல்லை இங்க.’
‘சரி தப்பா நினைச்சுக்காதீங்க.’
அவர் உள்ளே சென்றுவிட்டார். அந்த நாய் அவளைப் பார்த்து உறுமிக் கொண்டிருந்தது.
‘டேய் கிரி உள்ளே வா,’ அவர் குரல் கேட்டது.
***
ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற முபீன் சாதிகா, பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி, . மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு குறுங்கதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரு கட்டுரைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு நேர்காணல் நூல், படைப்புலகம் பற்றிய நூல் வெளிவந்துள்ளன. 40 பெண் கவிஞர்களின் படைப்புலகம் பற்றி 40 நூல்கள் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். மூன்று விருதுகள் பெற்றிருக்கிறார்.

Excellent. மிகவும் ரசிக்க வைத்த சிறிய கதை