• கார்குழலி

 

அப்பாவுக்கு எப்போதும் இவன் மீது தனிப்பிரியம். செல்லப் பெயரால் அழைப்பார். நண்பர்கள் வீட்டுக்கும் விசேஷங்களுக்கும் எனப் போகுமிடமெல்லாம் கூட்டிச் செல்வார். அது தெரிந்தாலும் அண்ணனைத்தான் உங்களுக்குப் பிடிக்கும் என்று சண்டை போடுவான். அவன் என்ன செய்தாலும் சலுகை தருகிறீர்கள் என்பான். பதிலேதும் சொல்லாமல் இவனையே பார்த்திருப்பார். அது இன்னும் எரிச்சலை உண்டாக்கும். அவர் சொல்பேச்சுக் கேட்காமல் அண்ணன் இஷ்டத்துக்கு நடந்தபோதும் கடிந்து பேசவில்லை என்பது இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொல்லை வழுவாமல் கடைப்பிடிக்கும் தனக்கு இப்படித் துரோகம் செய்கிறாரே அப்பா என மாய்ந்துபோவான்.

வளர்ந்து பெரியவர்களான பிறகும் ஒவ்வொரு தருணத்திலும் அண்ணனை விடவும் அவர் மீது தனக்கு அதிகப் பிரியமும் அக்கறையும் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கென அவருக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வான். அதற்கான வாய்ப்பும் இவனைத் தேடித் தேடி வந்தது. அப்பாவுக்கு வாய்க்கு ருசியாகச் சோறு போடுவதிலிருந்து உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்த சமயங்களில் எல்லாம் கூடவே இருந்து கவனித்துக் கொள்வது வரையில் எதற்குமே அண்ணன் போட்டிக்கு வரவில்லை. எல்லாப் பொறுப்பையும் இவனுக்கே விட்டுத் தந்தான். மாறாக அவ்வப்போது காசு காசு என்று அப்பாவுக்கு வரும் சொற்ப பென்ஷனையும் பிடுங்கிக் கொள்வான். அப்பா அண்ணனைப் பற்றி எந்தப் புகாரும் சொல்வதில்லை என்பது கூடுதல் எரிச்சல். கேட்டால் அவன் சாதாரண குமாஸ்தா வேலையில் இருக்கிறான், குடும்பம் நடத்த வேண்டுமே என்று சப்பைக் கட்டுக் கட்டுவார்.மூத்தவனென்றால் உங்களுக்குத் தனிப் பிரியம்தான் என்று வாய்விட்டுப் பொருமுவான்.

அண்ணன் வீட்டில் அப்பா இருந்த சமயத்தில் ஒருமுறை ஐசியூவில் சேர்க்கப்பட்டார். அண்ணன் இவனுக்குப் போன் செய்து சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டான். பிழைப்பதே பெரும்பாடென்ற அத்தனை மனம் பதைபதைத்த நேரத்திலும் அண்ணன் வெறுமனே எட்டிப் பார்த்துவிட்டுப் போனான். இதனாலெல்லாம் அண்ணனிடம் காட்டும் பாசத்தைச் சிறிதும் குறைத்துக்கொள்ளவில்லை, இவனுக்குக் கூடுதலாக எதையும் செய்துவிடவில்லை அவர். தராசில் நிறுத்தித்தான் சொற்ப சொத்தையும் பிரித்துக்கொடுத்தார். ஆத்திரமும் ஆற்றாமையும் பொங்க இவன் நியாயம் கேட்டுக் கத்திச் சீறும்போது தேமேயென உட்கார்ந்திருந்தார். சகோதரப் போட்டியின் உக்கிரம் குறைய ஒரு துரும்பைக்கூட அவர் அசைக்கவில்லை.

கடைசி சில வருடங்களில் மக்கள் இருவருக்கும் எந்தத் தொந்தரவும் வேண்டாமென தனியே நண்பரின் வீடருகே அறையொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கத் தொடங்கினார். நினைத்தபோது இவன் வீட்டுக்கு வருவார், இரண்டொரு நாள் தங்குவார். நல்லநாள் விசேஷமென்றால் காசுகொடுப்பார். அந்தச் சமயத்தில் அண்ணனின் வீட்டுக்குப் போவது குறைந்துவிட்டது, அறவே நின்றுவிட்டது என்றுகூடச் சொல்லலாம்.

இறுதியாக நோய்வாய்ப்பட்ட சில மாதங்களுக்கு அவரைக் கூட்டி வந்து வீட்டோடு வைத்துக் கொண்டான். கண்ணில் வைத்துக் கவனித்தான். அலுவலக வேலையோடு மருத்துவமனைக்கும் வீட்டுக்குமென அலைந்து அல்லாடினான். அப்போதும் அண்ணன் ஒரு வருகையாளர் போல வந்து பார்த்துவிட்டுப் போவான். இத்தனை வருடங்களில் மனது விட்டுப் போயிருந்தது. அண்ணனிடம் எந்த உதவியும் கேட்கக்கூடாது என முடிவு செய்திருந்தான்.

அப்பா நினைவிழந்த அந்தப் பௌர்ணமி ஞாயிறன்று அண்ணனை அழைத்தபோது வெளியூரில் இருப்பதாகச் சொன்னான். அத்தைகளுக்கும் சித்தப்பாக்களுக்கும் போன் அடித்துத் தகவலைச் சொன்னான். இரவு அப்பா இறுதி மூச்சை இழுத்து விட்டபோது அருகிலேயே நின்றபடி சிவபுராணம் சொன்னான். காலையில் அண்ணன் மட்டும் வந்து சேர்ந்தான். அதிகம் பேசாமல் அவரவர் செய்ய வேண்டியதை இருவரும் செய்தனர். ஆனால் உறவினர்களிடம் தன்னைப் பற்றி அண்ணன் குறை சொல்வது காதில் விழுந்தது. பலரும் பலதை இவன் காதுபடவே பேசினர். சொத்துத் தகராறு என்று சிலர் கிசுகிசுத்தனர்.அனுசரித்துப் போகுமாறு சிலர் இவனுக்குப் புத்திமதி சொன்னார்கள். ஆத்திரம் மண்டிக்கொண்டு வந்தது. இவர்களையெல்லாம் வீட்டுக்குள் விடவேண்டியிருக்கிறதே என்று நொந்து கொண்டான். எதற்கும் யாரிடமும் பதில் பேசாமல் பொறுமை காத்தான். அன்றுடன் அண்ணனுடன் தொடர்பு அறுந்துபோனது. பேசவோ பார்க்கவோ கூடப் பிடிக்கவில்லை.

பத்தாம் நாளன்று அண்ணன் வரவில்லை. சடங்கெல்லாம் முடிந்து காக்காய்க்குச் சோறு வைத்தபோது ஜோடியாக வந்த காகங்களில் ஒன்று அப்பா விரும்பிச் சாப்பிடும் காயைக் கொத்திச் சென்றது. அம்மாவோடு ஜோடியாக வந்தாரோ என நினைத்துக்கொண்டான். அப்பாவின் நண்பர்களில் பலரும் “உன்னைப் பற்றி ரொம்பப் பெருமையா அப்பா சொல்லுவார். அண்ணனைப் பற்றிக் கவலைதான். அவருக்கிருந்த ஒரே ஆறுதல், நிறைவு எல்லாமே நீதான்,” என்று இவனிடம் சொன்னார்கள். அப்பாவிடம் இன்னும் சிறிது புரிதலோடு நடந்து கொண்டிருக்கலாமோ எனஅன்றுதான் தோன்றியது. ஏன், அப்பாவும்தான் இவனிடம் ஒரு மாற்று அதிகமாகப் பாசத்தைக் காட்டியிருக்கலாமே. எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்கிறாய் என்று அன்பொழுகச் சொல்லியிருக்கலாமே.

முதல் ஆண்டு முழுவதும் அப்பாவின் செல்போனுக்கு அழைப்புகள் வந்தபடியே இருந்தன. அவரைப் பற்றி ஒவ்வொருவரிடமும் சிலாகித்துப் பேசினான். ஓரிருவர் இரண்டு மூன்று ஆண்டுகள் கடந்த பின்னர் அழைத்தபோது இவன் தகவல் சொன்னதும் துணுக்குற்றனர். இந்த நான்கு ஆண்டுகளில் அப்பா தன் கூடவே இருப்பதாக எண்ணிக் கொண்டான். அவர் தனக்குச் செய்த செய்யாமல் விட்ட எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தான். அவரும் சராசரி மனிதன்தானே, வேறு எப்படி நடந்து கொண்டிருக்கமுடியும் என ஆறுதல் படுத்திக் கொண்டான்.

ஓராண்டுக்கு முன்னர், கண்களில் திடீரென எரிச்சலும் வறட்சியும் ஏற்பட்டது. அப்பா வழக்கமாகப் போகும் தூரத்திலிருக்கும் கண் மருத்துவமனைக்குப் போனான். கண்களில் அதிக அழுத்தம் காணப்படுவதால் கிளாகோமாவாக இருக்கலாம். நாளையும் சில பரிசோதனைகளைச் செய்யவேண்டும் என்றார் மருத்துவர். இடி விழுந்தாற்போல கலங்கிப் போனான். வேலை, குடும்பம் எல்லாம் என்னவாகுமென ஆழ்ந்த வருத்தம் கொண்டான். அழுகை பொத்துக்கொண்டு வந்தது. யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது. அப்பா இருந்தால் அவரிடம் சொல்லலாம். “அதெல்லாம் ஒன்றும் இருக்காது. எதற்கு வீணாகப் பயப்படுகிறாய். நாளைக்குப் பரிசோதனை முடிந்ததும் மருத்துவரே சொல்லுவார் பாரேன்,” என்று எத்தனை ஆறுதலாகப் பேசுவார். அந்தச் சொற்களில் எவ்வளவு தேறுதல் கிடைக்கும். இருந்த ஒரே சொந்தமும் இல்லாமல் போன கொடுமையை நொந்து கொண்டான்.

பரிசோதனை முடிவு தெரியும் வரையில் வீட்டில் யாரையும் கலவரப்படுத்த வேண்டாமென முடிவு செய்தான். ஆனால் துணைக்கு யாராவது வந்தால் பரவாயில்லை என்றும் தோன்றியது. மனைவியிடமும் மகளிடமும் தன் பயத்தைச் சொல்லாமல் மேலோட்டமாகச் சொன்னான். கூட வருவதாக மனைவி சொன்னதே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

மறுநாள் காலை தூக்கத்திலிருந்து விழித்ததும் மகள் நேரே இவனிடம் வந்தாள். “அப்பா, இதக் கேளுங்க. நேத்து ராத்திரி கனவில் ஒரு தியேட்டருக்குப் போனேன். அங்க பார்த்தா தாத்தா உட்கார்ந்திருக்காங்க. நீங்க எங்க இங்கேன்னு கேட்டேனா, சிரிச்சாங்க. சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரவான்னு கேட்டேன். அதெல்லாம் வேணாம், அப்பா பயந்து போயிருப்பான். ஒன்னும் இருக்காதுன்னு நான் சொன்னேன்னு சொல்லுன்னாங்க,” என்றாள். ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒன்றாகப் பொங்கி வந்தது. அப்பா சொன்னபடியே கண்ணில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனச் சொல்லி அனுப்பினார் மருத்துவர்.

மகாளய பட்சம் ஆரம்பித்ததும் இந்த மாதமாவது அமாவாசையன்று மறக்காமல் காகத்துக்குச் சோறு வைக்கவேண்டுமென நினைத்துக்கொண்டான். எங்கே! சக்கரத்தைக் கட்டிக்கொண்டு வாரமுழுவதும் ஓடவேண்டியிருக்கிறது. வார நாட்களில் சாப்பிடுவது தூங்குவது தவிர வேறு எதற்கும் நேரம் இருக்காது. சனி, ஞாயிறில்தான் சிறிது ஆசுவாசமாக மூச்சுவிடவாவது முடியும். அமாவாசையும் சனி, ஞாயிறன்று வந்தால் பரவாயில்லை.

அடுத்த நாள் காலை விடிந்ததும் அப்பாவின் பால்யகால நண்பரிடமிருந்து போன். பள்ளிக்காலம் முதல் நெருங்கிப் பழகிய தோழர். படிக்கும் காலத்திலிருந்தே இரண்டு குடும்பங்களுக்கிடையேயும் போக்குவரத்து இருந்தது. கல்யாணமாகிக் குழந்தைகள் வந்தபிறகும் தொடர்ந்தது. எப்போதும்இவன் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு மாலையில்தான் கூப்பிடுவார். எல்லோரும் எப்படி இருக்கிறீர்களென விசாரிப்பார். மகளின் படிப்பு பற்றி அக்கறையாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். எதற்காக இத்தனை காலையில் கூப்பிடுகிறார் என்று யோசனை.

போனை எடுத்து, “சொல்லுங்க மாமா. எல்லாரும் எப்படி இருக்கீங்க,” என்றான். “நீங்கெல்லாம் எப்படி இருக்கீங்க. சும்மா இருக்கீங்களா. நேத்து ராத்திரி கனவுல உங்கப்பன் வந்தான். போயி பையன், பேத்தியெல்லாம் பாத்தியா, எப்படி இருக்காங்க எல்லாரும்ன்னான். அவங்க ஆபீசு, வேலைன்னு பிஸியா இருப்பாங்க, நீதான் ஒரு எட்டுப் போயிப் பார்க்கணும்னான். இந்த சனி, ஞாயிறுல வீட்டுக்கு வாங்களேன். இல்லேன்னா, நாந்தான் உங்களப் பார்க்க ஒரு ஆட்டோ வெச்சிட்டு வரணும். உங்கப்பனை விடவும் ரெண்டு வயசு பெரியவண்டா நானு,” என்றார்.

“அட நீங்க வரவேண்டாம், மாமா. நாங்களே கட்டாயம் வந்து பாக்கறோம். சனி, ஞாயிறுல சாயந்திரமா போன் பண்ணிட்டு வர்றேன்,” என்றான்.

அலுவலகத்தில் இவனுடன் வேலை செய்பவர் மிகவும் நெருக்கம். கல்லூரியிலிருந்தே இருவருக்கும் பழக்கம். இடைவேளையின்போது அப்பாவின் நண்பர் போன் செய்ததைச் சொன்னான். காப்பி குடிப்பதை நிறுத்திவிட்டு ஆச்சரியத்தோடு இவன் முகத்தைப் பார்த்தார். “டேய், என்ன சொல்ற. மாளய பட்சத்தில் வந்திருக்கிறார் என்றால் உங்கப்பா ரொம்ப கிரேட் டா. உன்மேல எத்தனை பிரியம் வைச்சிருக்கார் பாரேன்,” என்றார். இவன் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினான்.

***

கார்குழலி: தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர்; பல்வேறு அச்சு, இணைய இதழ்களில் கட்டுரைகளும் கவிதைகளும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களுடன் பணியாற்றி சுமார் 50 சிறார் புத்தகங்களை  மொழியாக்கம் செய்திருக்கிறார். இதுவரை வில்லியம் ஃபாக்னரின் 2 சிறுகதைத் தொகுப்புகள், உலகப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் உட்பட 5 நூல்கள் வெளிவந்துள்ளன. சென்னை இளைஞர் சேர்ந்திசையின் உறுப்பினர். நாடக நடிப்பிலும் ஆர்வமுள்ளவர்.