- மார்கட் சிங்கர்
- தமிழாக்கம் : ராகின்
டெனிசன் பல்கலையில் ஆங்கில மொழி பேராசிரியராய் பணியாற்றும் மார்கோட் சிங்கர் மிகவும் மதிக்கப்படும் சிறுகதை எழுத்தாளர். அவரது, “The Pale of Settlement” என்னும் தொகுப்பு பல விருதுகளைப் பெற்றதுடன், சிறுகதைகளுக்கான ஃபிளானரி ஓ’ கானர் விருதும் பெற்றது. அண்மையில் அவர் ‘Underground Fugue‘ என்ற முதல் நாவல் எழுதியிருக்கிறார். இந்த நாவல் பழம்பெரும் ஓவியங்களைச் சீரமைக்கும் அமெரிக்கப் பெண்ணின் கதையைச் சொல்கிறது. மணமுறிவு மற்றும் இறந்து கொண்டிருக்கும் அம்மாவுடன் போராடிக் கொண்டிருக்கும் அவர் லண்டன் செல்கிறார். தான் திட்டமிடாத பல விஷயங்களை அங்கு எதிர்கொள்கிறார். அதில் ஜூலை 2005ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலும் அடக்கம். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ‘Underground Fugue‘ நாவல் குறித்து எழுதிய ரான் சார்லஸ், அதன் “உறுதியான உயிர்ப்பாற்றலை” பாராட்டினார். சிங்கரை, “அசாத்திய திறமை கொண்ட புதியவர்,” என்று அழைத்தார். இங்கு, The National Book Review பத்திரிக்கையுடன் நாவல் எழுதுவதற்கும் கதை எழுதுவதற்கும் உள்ள ஒப்புமைகள், கலாச்சாரங்களுக்கு இடையிலான புரிதல், வாசிப்பின் எதிர்காலம் குறித்து உரையாடுகிறார், சிங்கர்.
‘Underground Fugue‘ நாவல் வழியே நீங்கள் மிகவும் பாராட்டப்பட்ட சிறுகதைகள் எழுதுவதிலிருந்து நாவல் எழுதப் போய் விட்டீர்கள். நாவல் எழுதும் அனுபவம் எப்படிப்பட்ட வகையில் வித்தியாசமாக இருந்தது?
சிறுகதை எழுதுவதிலிருந்து நாவல் எழுதுவது என்ற மாற்றம் சவாலாகவே இருந்தது. அவ்வளவு பெரிய ஒரு விஷயத்தை என் நினைவில் வைத்திருக்க சிரமப்பட்டேன். எழுதிக் கொண்டே இருப்பதில் ஏகப்பட்ட நேரம் செலவானது. தொடர்ந்து எழுதும்போது ஏதாவது தடை ஏற்படும், எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு மீண்டும் எழுதத் துவங்க வேண்டியிருந்தது. சிறுகதையில் சோதனை முயற்சிகள் செய்வது மிகச் சுலபம். ஆனால் நாவலுக்கு என்று நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதிவிட்டு அப்புறம் அது வேலைக்காகாது என்று உணர்வது மிகவும் கஷ்டமான விஷயம். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முயற்சி செய்வது, கைவிடுவது, மீண்டும் துவங்குவது என்று போராடியபின்தான், சரியான அணுகுமுறை தெரிந்தது.
எழுதுவது என்றாலே அது தனிமையான விஷயம்தான். ஆனால் ஒரு எழுத்தாளராய், நாவல் எழுதும்போதுதான் நான் தனிமையை மிகவும் உணர்ந்திருக்கிறேன். நீண்ட காலம் என்னால் எதையும் எழுதிப் பதிப்பிக்க அனுப்ப முடியவில்லை. எழுத்தாள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள எதுவும் இல்லாமல் இருந்தது. ஒரு கருந்துளையினுள் காணாமல் போய் விட்டது போல் இருந்தது.
நான் மிகவும் மெதுவாக எழுதுபவள். வாக்கிய அளவிலேயே நீண்ட நேரம் எடுத்துக் கொள்வேன். கதைகள் எழுதும்போது, மிகவும் அடர்த்தியான காட்சிகளை எழுதிப் பழகியவள். நாவல் எழுதும்போது, வேறு வகை வேகத்துக்குப் பழக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. முக்கியமான கணங்களில் நிதானித்து அவை விரிவடைய இடம் கொடுக்க வேண்டியிருந்தது. மீண்டும் கதை எழுதும் நாட்களை எதிர்பார்க்கிறேன், ஆனால் இப்போது, இதற்கு எதிர்த்திசையில் செல்வதும் கடினமாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.
‘Underground Fugue‘ பிற விஷயங்கள் போக, பயங்கரவாதம் பற்றிய நாவல். முதல் நாவலில் அதைக் கருப்பொருளாய் எடுத்துக் கொள்ள உங்களுக்கு எது தூண்டுதலாக இருந்தது? அதை எழுதும்போது லண்டன் சுரங்கப்பாதை குண்டுவெடிப்பு போன்ற நிகழ்வுகள் குறித்த உங்கள் பார்வையில் எதுவும் மாற்றம் ஏற்பட்டதா?
ஏப்ரல் 2005ல் “நேஷனல் பப்ளிக் ரேடியோ” வழங்கிய “driveway moments (பயணங்களின்போதான தருணங்கள்)” என்ற நிகழ்ச்சியொன்றைக் கேட்டபின் இதைத் திட்டமிடத் துவங்கினேன். என்னை காரில் உட்கார்ந்திருக்க வைத்திருந்த விஷயம் இதுதான் – இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் சொட்டச் சொட்ட நனைந்திருந்த ஒருவன் இருக்கக் கண்டு, காவல்துறையினர் அவனைக் குறித்து விசாரணை செய்கின்றனர் என்ற வினோத செய்தி. அவன் ஃபார்மலான சூட் அணிந்திருந்தான், வெள்ளை நிறச் சட்டை போட்டிருந்தான். அவனிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை. அவனது சட்டையிலிருந்த லேபில்கள் கத்தரிக்கப்பட்டிருந்தன. அவனுக்கு பேச்சு வரவில்லை. அல்லது, அவனுக்குப் பேசும் விருப்பம் இருக்கவில்லை. ஆனால் மிக நன்றாக பியானோ வாசித்து மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். காணாமல் போனவர்களுக்கான ஹெல்ப்லைனில் அவனைப் பற்றிய செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் அழைத்தனர். ஆனால் யாராலும் அவன் யாரென்று அடையாளம் சொல்ல முடியவில்லை. பரபரப்பாய் விற்கும் நாளிதழ்கள் அவனுக்கு, “பியானோ மனிதன்” என்று பெயர் சூட்டின. அவன் யாரென்று மனதுக்குத் தோன்றியதை எல்லாம் சொன்னார்கள். அவன் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவன் என்று சிலர் சொன்னார்கள். வேறு சிலர் 1996ல் வெளிவந்த ஆஸ்திரேலிய திரைப்படம், Shine – ல் வரும் பியானோ மேதை டேவிட் ஹெல்ஃப்கோட்டுடன் அவனை ஒப்பிட்டார்கள்.
“பியானோ மனிதன்” என்ற பிம்பம் என்னைச் சிந்திக்கச் செய்தது. அது போக, 2005ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் லண்டன் நிகழ்வுகள் வேறு பலவும் யோசிக்க வைத்தன. செமிட்டிய எதிர்ப்பு கேலிச் சித்திரங்களின் தொகுப்பு ஒன்று லண்டன் ஓவியக்கூடமொன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அது போக ஜூலை ஏழாம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்புகள். நவம்பர் ஒன்பதாம் தேதிக்குப்பின் தீவிர இஸ்லாம் குறித்து ஏற்பட்ட அச்சங்கள், செமிட்டிய எதிர்ப்பு, புலம்பெயர்தல் மற்றும் அகதிகளின் அனுபவங்கள் பற்றிய கேள்விகளுடன் இணைத்து இதையெல்லாம் யோசித்துப் பார்க்கத் தோன்றியது. தீவிரவாதம் பற்றிய நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கவில்லை. உண்மையைச் சொன்னால், செமிட்டிய எதிர்ப்புதான் இந்த நாவலின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் 2005ஆம் ஆண்டு கோடைக்கால லண்டனில் கதை நிகழ்வதாக வைத்துக் கொண்டபின் இந்த தாக்குதல்களை எதிர்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. கடைசியில் இந்த விஷயம்தான் நாவலில் பிரதானமாய் வெளிப்பட்டது.
நான் லண்டனில் வாழ்ந்திருக்கிறேன், நியூ யார்க் நகரத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பல காலம் இஸ்ரேலில் இருந்திருக்கிறேன் – இந்த இடங்கள் எல்லாவற்றிலும் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் நம்மில் பலரைப் போலவே என்னையும் தீவிரவாதம் நேரடியாய் பாதித்ததில்லை. (செப்டம்பர் ஒன்பது சமயம் நான் நியூ யார்க்கிலிருந்து வேறு இடம் போய் விட்டிருந்தேன்). இருந்தாலும் இவை எல்லாம் எனக்குச் சொந்த ஊர்தான். என் அன்றாட வாழ்வின் இடங்கள். எனக்கு இது குறித்து பயமில்லை, அல்லது, பயப்பட மறுக்கிறேன். ஜூலை ஏழாம் தேதி குண்டுவெடிப்புகள் பற்றி எழுதும்போது அப்படிப்பட்ட ஒரு நிகழ்வில் சிக்கிக் கொள்வது எப்படி இருக்கும் என்று நெருக்கமாய் உணர முடிந்தது. நான் கற்பனைதான் செய்தேன், ஆமாம். ஆனால் பயங்கரவாதம் பற்றிய என் உணர்வுகளை அது மாற்றவில்லை. பிரிட்டன் மக்கள் சொல்வது போல், ‘போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்’.
அந்த நாளின் இன்னொரு முக்கியமான செய்தி பற்றிய நாவலும்கூட இது: பன்மைக் கலாச்சாரம் அளிக்கும் அசௌகரிய உணர்வு. உங்கள் நாயகன் ஒரு யூதன். அவன் லண்டனில் உள்ள தன் அம்மாவின் அண்டை வீட்டில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு நண்பனாகிறான். ஆனால் இருவருக்கும் இடையிலுள்ள கலாச்சார இடைவெளியைக் கடப்பது அவனுக்கு சுலபமாய் இல்லை. உலகம் நாளுக்கு நாளுக்கு சுருங்கி வருகிறது. மிகப் பெரிய அளவில் குடிபெயர்வுகள் நடக்கின்றன, தொழில்நுட்பம் தொலைவைக் குறுக்கிக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகைப்பட்ட மக்கள் அண்மையில் வாழ்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமெல்லாரும் ஒத்துப் போக ஒரு வழி காண்பது எவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மிக அருமையான கேள்வி. எனக்கு இது குறித்து அவநம்பிக்கைதான் இருக்கிறது. ட்ரம்ப் வந்தபின் அமெரிக்காவிலேயே என்ன நடக்கிறது பாருங்கள். நான் ஓஹையோவின் மையத்தில் உள்ள ஒரு சிறுநகரில் வசிக்கிறேன். வேறுபட்ட பின்னணி கொண்ட பல்வகைப்பட்ட மக்களை ஒரு சமூகமாய் நாங்கள் வரவேற்கிறோம் என்று அண்மையில் கிராம சபை ஒரு தீர்மானம் நிறைவேற்ற முன்வந்தபோது அது ஒரு பெரிய பிரச்சினையாகப் போய் விட்டது. நிறைய பேர் அதற்கு எதிராய் இருந்தது கவலைப்பட வைக்கிறது.
நாவலில் நான் எப்படிப்பட்ட இருவருக்கும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை எழுத விரும்பினேன். பெற்றோர் பிள்ளைகள், தம்பதியர், காதலர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள், எல்லாருக்கும்தான். மனிதர்கள் நாம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள எப்படி ஏங்குகிறோம், அதில் எப்படி தோற்கிறோம் என்பதை எழுத விரும்பினேன். எஸ்தர் என்ற என் பாத்திரம், ஒரு லிபரல், மதசார்பற்ற யூதர். ஆனால் கடந்த காலத்தை விட்டுச் செல்ல எவ்வளவு முயற்சி செய்தாலும் அவற்றின் மனச்சாய்வுகளை வெற்றி கொள்ள முடியவில்லை என்பதை அவள் உணர்கிறாள்.
‘Underground Fugue‘ பல இலக்கிய வகைமைகளில் இடம் பெறக்கூடியது. யூத-அமெரிக்க இலக்கியம் அவற்றில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. பல சகாப்தங்களாய் அந்த வகைமை இருந்து வந்திருக்கிறது – இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் குடிபெயர்வு கதைகள் என்று துவங்கி, அமெரிக்காவில் வெற்றி பெற்றாலும் அதில் தம் இடம் என்ன என்பது குறித்து கவலைப்பட்ட நூற்றாண்டின் மையக்காலகட்ட யூதர்கள், என்று நீள்கிறது. யூத-அமெரிக்க இலக்கியத்தின் இன்றைய இடம் என்ன என்று சொல்வீர்கள்?
2015ஆம் ஆண்டு, “The New Diaspora: The Changing Landscape of American Jewish Fiction (தொகுப்பாசிரியர்கள்-Victoria Aarons, Avinoam J. Patt, மற்றும் Mark Shechner)”, என்ற தொகுப்பு நூலில் என் சிறுகதை சேர்க்கப்பட்டது மிகவும் உற்சாகம் அளித்தது. சமகால யூத புனைவெழுத்தின் இயல்புகள் சிலவற்றை அதன் முன்னுரையில் தொகுப்பாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். முந்தைய காலகட்டத்தின் யூத எழுத்தாளர்கள் தங்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தார்கள், உளப்பகுப்பியல் ஆர்வம் கொண்டிருந்தனர், ஆனால் இன்றைய எழுத்தாளர்கள் தம் அமெரிக்க யூத அடையாளத்தை இயல்பாய் எடுத்துக் கொள்வது போல் தெரிகிறது என்று அவர்கள் அதில் சுட்டுகின்றனர். ஆனால் நிகழ் கணத்தில் கவனம் குவியாமல், வரலாற்றைப் புரிந்து கொள்வதில்தான் அவர்கள் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்- குறிப்பாக, ஹோலகாஸ்ட் மற்றும் அதன் தொடர் அதிர்வுகள். தொகுப்பு நூலின் தலைப்பில் உள்ள “டயஸ்போரா” நம்ப முடியாத அளவு பல்வகைப்பட்ட குரல்களைக் கொண்டது என்பதையும் பதிப்பாசிரியர்கள் சுட்டுகின்றனர். அமெரிக்காவில் வாழும், ஆங்கிலத்தில் எழுதும் இந்த எழுத்தாளர்களில் பலர் ரஷ்யா, ஈரான், க்யூபா, ஏமன், குவாதமாலா, எகிப்து, பிரான்சு, இஸ்ரேல் என்று பல்வேறு தேசங்களிலிருந்து வந்து குடியேறியவர்கள். அமெரிக்க, இஸ்ரேலிய இலக்கிய குழுக்களிடையே நிகழும் செறிவான உரையாடலையும் அவர்கள் பார்வைப்படுத்துகின்றனர்.
நீங்கள் இளநிலை பட்டதாரிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறீர்கள். உங்கள் தலைமுறைக்கும் டிஜிட்டல் யுகத்தில் பிறந்த, எப்போதும் இணைய தொடர்பில் இருக்கும் இந்தத் தலைமுறைக்கும் புத்தக வாசிப்பில் வேறுபாடு எதுவும் உங்களால் காண முடிகிறதா? புத்தகங்களின் எதிர்காலம் மற்றும் நெடும்பிரதி வாசிப்பு குறித்து எந்த அளவு நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்?
வளமான எதிர்காலம் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால படைப்பிலக்கிய பயிற்சி வகுப்புகள் அளித்து வருகிறேன். என் ஆங்கிலத்துறை சகாக்கள் தமக்குத் தேவையில்லை என்று புத்தக அடுக்குகளில் வைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் எடுத்துச் சென்று விடுகிறார்கள். அது போக, அவர்கள் எழுதவும் செய்கிறார்கள். பயங்கரமான அந்த “NaNoRiMo”வில் (தேசிய நாவல் எழுதும் மாதத்தில்) நாவல்கள் பல எழுதியுள்ள பதினாறு வயது மாணவர்களின் எண்ணிக்கையை என்னாலேயே நம்ப முடியவில்லை.
ஆனால் இன்றைய இளநிலைப் பட்டதாரிகளின் மொழிக்கல்வி பாடத்திட்டம் பள்ளி நிலையில் அற்பமான ஒன்றாக இருக்கிறது என்பது உண்மைதான். அது தவிர மிகைபுனைவு, பதின்ம பருவத்தினருக்கான புனைவுகள் என்று படிக்கிறார்கள். ஒரு பத்தாண்டு முன் நாம் தகவல்களை அணுகியதும் இவர்கள் அணுகுவதும் மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது. யூட்யூப், நெட்ஃபிளிக்ஸ், சமூக ஊடகங்கள் என்று நேரத்தை அளவுக்கு அதிகமாகச் செலவு செய்கிறார்கள். ஆனால் கவிதை, இலக்கிய புனைவு, அபுனைவுகள் முக்கியமானவை, மதிப்புமிக்கவை என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். அண்மையில் நாங்கள் கதைகூறல் பாணியில் அபுனைவு நெடுங்கட்டுரை எழுதுவதை கவனப்படுத்தி ஒரு வகுப்பு துவக்கினோம். முதல் ஆண்டிலேயே எதிர்பார்த்ததைவிட மூன்று மடங்கு அதிக மாணவர்கள் சேர்ந்தார்கள். எங்கள் இலக்கிய, புனைவெழுத்து வகுப்புகள் எப்போதும் நிரம்பி விடுகின்றன. புத்தகங்களை நேசிப்பவர்கள் நிறைய பேர் இன்னும் இருக்கிறார்கள்.
***
நன்றி: The National Book Review
