• ராபர்டோ பொலானோ – கார்மென் பொல்லோஸா
  • உரையாடல்
  • தமிழில் : கண்ணன் ராமசாமி

 

ராபர்டோ பொலானோ லத்தீன் அமெரிக்க நாவலாசிரியர்களின் சிறிய தொழுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டுக் குட்டிகளில் ஒரு முக்கியமான ஆட்டுக் குட்டி. சிலி ஆட்சிக்கவிழ்ப்பு, எழுபதுகளில் மெக்சிகோ நகரம் மற்றும் கவிஞர்களில் பொறுப்பற்ற இளமைப் பருவம் போன்றவை அவர் அடிக்கடி கடந்து செல்லும் கதைக் களங்கள். ஆனால் அதோடு நின்றுவிடாமல் அவர் மற்ற பல பேசு பொருட்களைப் பற்றியும் எழுதுகிறார். சீசர் வலேஜோவின் மரணப் படுக்கை, முகம் தெரியாத எழுத்தாளர்கள் படும் கஷ்டங்கள், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை போன்ற களங்கள் அவருக்கு உவப்பானவை. சிலியில் அவர் 1953 ல் பிறந்தார். மெக்சிகோ தான் அவருடைய இளமைப் பருவத்து புதுக் காற்றை சுவாசிக்கச் செய்தது. பிறகு எழுபதுகளில் ஸ்பெயின் நகரை நோக்கி நகர்த்தியது வாழ்க்கை. ஒரு கவிஞராக அவர் இன்ஃப்ரா ரியலிஸ்ட் மூவ்மென்ட் என்கிற அமைப்பை மரியோ சாண்டியாகோவுடன் சேர்ந்து அமைத்தார். 99ல் The Savage Detectives என்கிற நாவலுக்காக ரோமுலோ கலேகோஸ் பரிசை வென்றார். அந்த கௌரவம் இதற்கு முன்னால் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மற்றும் மரியோ வர்காஸ் லோசா போன்றவர்களுக்கு கிடைத்தது. அதே நாவலுக்கு ஹெரால்ட் பரிசும் கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

ஒரு தேர்ந்த எழுத்தாளராகவும், ஒரு இலக்கிய தீவிவரவாதியாகவும் அவர் எந்த ஒரு சமரசமும் இன்றி ஒரு நாவலாசிரியனுக்குத் தேவையான இரண்டு உள்ளுணர்வுகளுக்கு செவி சாய்த்தார். வரலாறு அவரை மிகவும் கவர்ந்தது. அதை திருத்தி எழுதவும், குறைகளை சுட்டிக் காட்டவும் ஆசை பட்டார். மெக்சிகோவில் அவர் ஏறக் குறைய ஒரு சொர்க்கத்தில் வாழ்ந்தார் என்றே கூற வேண்டும். சிலியின்  நிதர்சனம், அவருக்கு எவ்வளவு பெரிய நரகம் என்பதை புரிய வைத்தது. தற்போது அவர் ஸ்பெயின் நகரின் பிளேனஸ் பகுதியில் வாழ்ந்து வருகிறார். அந்த இடத்தில் இரண்டு உலகங்களில் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பாவங்களை அறுவடை செய்கிறார். மெக்சிகோ நகரம் எந்த அளவிற்கு ஒரு மகா நகரமாக உருவெடுத்திருக்கிறது என்பதை இவரைப் போன்று வேறு யாரும் பதிவு செய்யவில்லை. அதே போல சிலியின் ஆட்சிக்கவிழ்ப்புக் கொடூரத்தையும், சாக்கடையாக நாறிக் கிடந்த போரினையும் இவரைப் போன்று யாரும் மிக அருகில் சென்று நையாண்டியுடன் கிண்டலடித்ததில்லை. பொலானோவின் வார்த்தையை கிளிப்பிள்ளை போல திரும்பச் சொல்ல வேண்டும் என்றால், “எழுதுவதை விட படிப்பது முக்கியம்” என்பார். உதாரணத்திற்கு நாம் அனைவரும் பொலானோவை படிக்க வேண்டும் என்று சொல்லலாம். யாராவது லத்தீன் அமெரிக்க எழுத்துலகம் அவ்வளவாக சோபிக்கவில்லை என்று நினைத்தால், முதலில் அவர்கள் செய்ய வேண்டியது பொலானோவின் பக்கங்களை புரட்டிப் பார்ப்பதாகத் தான் இருக்க வேண்டும். பொலானோவைப் பொறுத்த வரையில், இலக்கியம் வெடித்து சிதறக் கூடிய ஒரு அழகான அணுகுண்டைப் போன்றது. அது வெடித்துச் சிதறிய அழிவுக்குப் பின்னால் ஒரு அற்புதமான உலகை உருவாக்கியதில் பெருமை கொள்ளும். எனக்கும் அவருக்குமான ஒரு உரையாடல், மின்னஞ்சல் மூலமாக மெக்சிகோ நகருக்கும் பிளேனஸ் நகருக்கும் இடைப்பட்ட ஓரிடத்தில், 2001 ன் இலையுதிர் காலத்தில் நிகழ்ந்தது.

பொல்லோஸா: லத்தீன் அமெரிக்காவில், ஒரு சராசரி வாசகனின் பார்வையில் இரண்டே இரண்டு பாரம்பரிய எழுத்து முறைகள் தான் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று, முரணாகவும், எதிர் மாறாகவும் இன்னும் வெளிப்படையாக சொல்லப் போனால் எதிரிகளாகவுமே விளங்குகின்றன. ஒன்று, அடோல்போ பியோய் சீஸரே மற்றும் கொர்த்தஸார் போன்றவர்களின் சிறந்த படைப்புகளின் மூலமாக வெளிப்படும் பேண்டஸி வகை எழுத்து. மற்றொன்று, வர்காஸ் யோசா மற்றும் தெரேசா டீ லா பர்ரா போன்றவர்களால் பின்பற்றப் படும் யதார்த்தவாத எழுத்துப் பாரம்பரியம். பொதுவான எல்லோராலும் நம்பப் படும் ஒரு சொலவடை என்னவென்றால், லத்தீன் அமெரிக்காவின் தென் பகுதி பேண்டஸி எழுத்தின் வீடு என்றும், வட பகுதி யதார்த்த வாதத்தின் மையம் என்பதாகவும் நாம் அறிகிறோம். என்னுடைய கருத்துப் படி, நீங்கள் இந்த இரண்டுக்கும் இடையில் வசிக்கிறீர்கள். உங்களுடைய நாவல்கள் அதி அற்புதமான கண்டுபிடிப்புகள். கற்பனைக்கும், யதார்த்தத்திற்கும் இடையிலான பாலத்தை அமைக்கின்றன. அதோடு, நான் நினைப்பது சரி என்று வைத்துக் கொண்டு முன்னேறினால், நீங்கள் லத்தீன் அமெரிக்காவின் இரண்டு துருவங்களிலும் வசித்திருக்கிறீர்கள் என்பதாலேயே இது சாத்தியமானது என்று நம்பத் தோன்றுகிறது. இந்த எண்ணம் உங்களுக்கு உவப்பானதாக இருக்கிறதா? அல்லது இதில் இருந்து மாறுபட விரும்புகிறீர்களா? நேர்மையுடன் சிந்தித்துப் பார்த்தால், ஒரு விஷயம் ஆச்சரியமாகவும், அதே சமயம் அதிருப்தி தரக் கூடியதாகவும் இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் மிகப் பிரபலமான பியோய் சீஸரே மற்றும் அவருடைய எதிர் துருவமான வர்காஸ் யோசாவும் இவ்விரண்டு பாரம்பரியங்களில் இருந்தும் கடன் வாங்கித் தான் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதில் ஒன்றை மட்டுமே அந்த ஒட்டு மொத்த பிரதேசத்தின் பாரம்பரியமாக சிலர் உருவகப் படுத்த நினைப்பது தான் அந்த அதிருப்திக்குக் காரணம்.

பொலானோ: என்னைப் பொறுத்த வரையில் யதார்த்தவாதிகள் தென் பகுதிகளில் இருந்து (அதாவது தென் கூம்பு நாடுகளில் இருந்து) வருவதாகத் தான் நம்புகிறேன். கற்பனையை கலந்து எழுதுபவர்கள் வடக்கில் இருந்து மட்டுமல்லாமல் மத்திய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்தும் வருகிறார்கள். ஆனால் இத்தகைய பிரிவுகளை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் முக்கியமானதாக கருதி விடக் கூடாது என்பது என் கருத்து. இருபதாம் நூற்றாண்டின் லத்தீன் அமெரிக்க இலக்கியம் போலச் செய்தலையும், மறுதலிப்பையும் மாறி மாறி கடை பிடித்தது. இது போலவே இந்த நூற்றாண்டிலும் சில காலம் தொடரும் என்று நான் நம்புகிறேன். ஒரு வகையில் மனித குணத்தின் பிரதிபலிப்பே இது. மனிதர்கள் ஒன்று, எதையோ ஒன்றை பார்த்து போலச் செய்வார்கள். அல்லது எதையோ ஒன்றை முற்றாக மறுதலிப்பார்கள். கற்பனை வளத்தை அறுவடை செய்த எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. கண்டிப்புடன் பார்த்தால், யாருமே இல்லை என்று கூடச் சொல்லலாம். பொருளாதார ரீதியில் பின்னடைவு மற்றும் வளர்ச்சி இன்மை ஆகிய காரணங்களோடு சேர்த்து மேலும் சில காரணிகள், துணை எழுத்து வகைகளை வளர விடாமல் தடுக்கின்றன. வளர்ச்சியின்மை மிகப் பெரிய இலக்கியங்களை மட்டுமே வளர அனுமதிக்கும். இந்த சலிப்பான, தன்னுடைய கோரமான முகத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் நிலப்பரப்பில் கற்பனை எழுத்துக்களுக்கும் இன்னபிற சிறிய படைப்புக்களுக்கும் இடமில்லாமல், அவை ஒரு ஆடம்பரமாகவும் பார்க்கப்படுகிறது. இதை சொல்லி விட்டதால், நம்முடைய எழுத்துலகம் முழுவதுமாக பெரிய படைப்புகளை மட்டுமே உடையது என்று நான் சொல்வதாக பொருள் புரிந்து கொள்ளக் கூடாது. உண்மையில் யதார்த்தம் இதற்கு நேர் மாறாக உள்ளது. முதலில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்பு மிகப் பெரியதாக வர வேண்டும் என்கிற ஆவலுக்கு நியாயம் செய்ய நினைப்பான். ஆனால் அவனை அவ்வாறு சிந்திக்க வைத்த அதே யதார்த்தம் முடிவான அந்த படைப்பை குட்டையாக்கி விடும். இந்த ஒரு சோக சரித்திரத்தில் தப்பிப் பிழைத்த இரண்டு பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை தனக்கென்று தனித்துவமான ஒரு எழுத்தியக்கத்தை சில நேரங்களில் கொண்டிருந்தன. அவை அர்ஜெண்டினாவும் மெக்சிகோவும். என்னுடைய எழுத்தைப் பற்றி என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அது யதார்த்தவாத எழுத்துதான் என்று நினைக்கிறேன். பிலிப் கே.டிக் மாதிரி கற்பனையாக எழுத வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். ஆனால், வயதாக ஆக, டிக் எனக்கு யதார்த்தவாதி போலத் தெரிகிறார். ஆழமாகப் பார்த்தால் கேள்வி பேண்டசியா? அல்லது யதார்த்தவாதமா என்பதல்ல. மொழி மற்றும் உருவத்திலும், நாம் நோக்கும் கோணத்திலும் தான் வேறுபாடு இருக்கிறது. இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் தெரேசா டீ லா பர்ராவை இவ்வளவு வாசித்து சிலாகித்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. வெனிஸுலாவில் நான் இருக்கும் போது அவரைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ஆனால் படித்ததில்லை.

பொல்லோஸா: தெரேசா தலை சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர் என்றும், பாலின வேறுபாடு இல்லாமல் பொதுவாகப் பார்க்கப் போனாலும் அவர் ஒரு நல்ல எழுத்தாளர் தான் என்றும் அவரை படிக்கும் போது நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். உங்களுடைய பதிலைப் பற்றி சொல்லப் போனால் லத்தீன் அமெரிக்க எழுத்துலகம் ஒரு ஏடாகூடமான திசையில் தான் தறிகெட்டுச் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிகிறது.

அது பலவீனமாக உள்ளது என்று நான் கூற மாட்டேன். கண்டத்தில் ஒரு முனையிலிருந்து சுடர் விட்டு வீசும் எறி கல் போல மற்றொரு முனைக்கு தீ பரப்பிச் செல்கிறது. ஆனால் அவ்வப்போது அது சற்று மங்கி மழுங்கி ஏமாற்றமளிக்கிறது. ஆனால் நாம் இருவருமே ஒரு பாரம்பரிய அடையாளத் திணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறிகிறேன். அனைத்து பிரிவுகள் மனப்போக்கில் தன்னிச்சையாக வந்தவை தான். நான் தென்னகத்தை பற்றி யோசிக்கும் போது கொர்த்தஸார், சில்வினா ஒகாம்போவின் குழப்பமான கதையாடல்களையும் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். பியோய் சீஸரே மற்றும் போர்ஹேஸ் போன்ற எழுத்தாளர்களை ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்துவது இயலாது. அவர்கள் அனைவருமே நம் ஐம்புலன்களைப் போல இலக்கியத்திற்கு முக்கியமானவர்கள் தான். அடுத்ததாக மரியா லூயிசா போம்பால்-ன் சிறிய, ஆனால் தடுமாற்றத்துடன் எழுதப்பட்ட நாவலான House of Mist -ஐ நினைக்கும் போது அவருடைய பிரபல்யம் சற்று அதீதமானதாக தோன்றுகிறது. நான் வர்காஸ் யோசாவையும் தி க்ரேட் டி லா பர்ராவையும் வடக்கு பகுதிக்குண்டானவர்களாக பார்க்கிறேன். இதற்குப் பிறகு விஷயம் கொஞ்சம் சிக்கலாக மாறி விடுகிறது. இன்னும் வடக்கு நோக்கி பார்வையை ஊடுருவிப் பார்த்தால் ஹூவான் ருல்ஃபோ, எலினா கர்ரோ – வின் நாவல்களான  Un hogar sólido மற்றும் Los recuerdos del porvenir ஆகியோர் தென்படுகிறார்கள். இப்படியாக அனைத்தும் இயல்பான தன்னிச்சையான பிரிவுகளாகவே உள்ளன. பேண்டசி இல்லாமல் ரியலிசம் இல்லை. ரியலிசம் இல்லாமல் பேண்டசி இல்லை. 

உங்களுடைய கதைகளிலும் நாவல்களிலும், அனைத்து கவிதைகளிலும் வாசகர்கள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் உடனுக்குடனே கணக்குகளை தீர்த்து வைத்து அந்த அடிப்படையில் உங்கள் கதை சொல்லும் முறையைக் கட்டமைக்கிறீர்கள். இதைக் கூறுவதால் உங்களுடைய எழுத்துக்கள் ஒரே மாதிரி படிவமாக அமைகிறது என்று நான் கூறுவதாக தவறாக என்ன வேண்டாம். ஆனால் உங்களுடைய கதையாடல்களில் நீங்கள் எழுப்பும் நிகழ்வுகளில், காதலும், வெறுப்பும் கலக்கும் கலவையின் முறையில் தான் வசிய மருந்தை பொதிந்து வைத்திருக்கிறீர்கள் என்கிறேன். எங்களுக்கு அந்த ரகசியத்தை சொல்லுங்களேன்! ராபர்டோ பொலானோ என்கிற தேர்ந்த மந்திரவாதி எப்படி வேலை செய்கிறார்?

பொலானோ: மற்றவர்களுக்கும் எனக்கும் பெரிதாக எந்த வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் பகட்டான பெருமிதமாகத் தெரிந்தாலும் கூட, இதை நான் கூறியே ஆக வேண்டும். எழுதும் போது என்னை ஈர்ப்பது அந்த எழுத்து மட்டுமே; அந்த வடிவமும், நீரோடையைப் போல சரளமாக ஒழுகும் சீரமைப்பும், அந்த கதைக்களமும் தான் என்னை பிடித்து நிறுத்துகிறது. நான் சிலவற்றைப் பற்றி நகைக்கிறேன். ஏளனம் செய்கிறேன். ஏனெனில், சிலரது அகந்தையும், மோசமான மனப்பான்மையும், சில நிகழ்வுகளும், முட்டாள்தனமாகத் தெரியும் போது அதைப் பார்த்து சிரிப்பதை விட வேறு வழியில்லை எனக்கு. அனைத்து இலக்கியமும் ஒரு வகையில் அரசியல் நோக்கம் கொண்டது தான். அதாவது முதலில் அது தற்கால அரசியலின் பிரதிபலிப்பாக செயல்படும். அடுத்ததாக அதுவே ஒரு அரசியல் முயற்சியாக வெளிப்படும். முதலாவதாக நான் சொன்ன அரசியல் நோக்கம், கொடுங்கனவுகளைப் போல், மனதிற்கு இதமான ஒரு கற்பனையைப் போல் நிகழும் தற்கால நிதர்சனங்களை அப்படியே பிம்பமாக வரைவது. அது இறப்பின் மூலமாகவோ, நாளடைவில் அந்த இலக்கியம் அழிவதின் மூலமாகவோ தான் முடிவு பெறுகிறது. பிறகு அந்தக் கரையான்களுக்கு இரையான புத்தகத்தின் சில துண்டுகள், காலத்தின் தகிப்பைக் கடந்து, மனிதனின் பகுத்தறிவுப் பசிக்காக எஞ்சி நிற்கிறது. இப்படியாக அதுவே ஒரு புதிய அரசியலுக்கு விதையாகி தன் இரண்டாவது அரசியல் நோக்கத்தை நிறைவு செய்கிறது.

நமக்குத் தெரியும். மனிதனின் வார்த்தைகளின் நித்தியத்துவம் என்பது வெறும் கானல் நீர் போன்றது தான் என்று. நமக்குத் தெரியும். பகுத்தறிவு தான் ஒரு படுகுழியில் விழக் காத்திருக்கும் மனிதனை மீட்டெடுக்கும் மெல்லிய கோடு என்பது. ஆனால் நான் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். என்னைப் பொறுத்த வரையில் ஒருவர் எழுதுவதற்குக் காரணம் அவருடைய உணர்திறன் மட்டுமே. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்? அநேகமாக எனக்கு உங்களிடம் பதில் இருக்காது. ஆனாலும், உங்களுடைய பதில் என்னைக் காட்டிலும் மேலும் சொல் திறம் மிக்கதாக, மேலும் திருப்திகரமானதாக இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு.

பொல்லோஸா: அப்படியே ஆகட்டும். நான் உங்களுக்கு பதில் சொல்லப் போவதில்லை. அந்த பதில் உங்களுடையதைக் காட்டிலும் மேலானதாக ஒன்றும் இருந்து விடப் போவதில்லை. ஆனால் நான் ஒன்றை மட்டும் கூற வேண்டும். நான் எழுதாமல் இருப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்குமானால், அது என்னுடைய உணர்திறனாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், எழுத்து என்பது ஒரு போர் களத்திற்குள் என்னை மூழ்கடித்து விடும் செயல். நான், கொழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கும் சதைப் பிண்டங்களை வெட்டி எறிவேன். இறந்த பிணங்களின் எஞ்சிய பாகங்களோடு சண்டை இடுவேன். முடிந்து போன போரினை அவ்வாறாக வீணாக சண்டை இட்டு உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புவேன். நாம் பேசும் பேச்சுக்கு திரும்பி வர நினைக்கிறேன். உங்களுடைய உடனுக்குடன் தீர்த்துக் கட்டும் பாணி என்பது மற்றவர்களைப் போலில்லை. அது மேலும் கொடூரமாக இருக்கிறது.

உங்களுடைய பகிடி என்பது வெறும் ஒரு வெளிப்பாடாக மட்டும் வாசகர்களால் பார்க்கப்படுவதில்லை. அது மொத்தமாக எதிர் தரப்பின் காலுக்கடியில் உள்ள மண்ணை அரித்துக் குழி தோண்டிப் புதைக்கும் செயல். உங்களுடைய நாவலின் உள்கட்டுமானம் ஒரு தேர்ந்த முறையில் அமைக்கப் படுகிறது. ஒரு கட்டுக் கதை. அதன் புனைவு வாசகரை,  தன்னோடு துணைக்கு இழுத்துக் கொண்டு சென்று அந்த நிகழ்வுகளை நகர்த்துவதற்கு பயன்படுத்திக் கொள்கிறது. பின்னணியில் நீங்கள் மெய்ப்பற்றோடு அனைத்தையும் விவரிக்குமாறு பொலிவுற அமைகிறது. சரி இந்த தலைப்பை இப்போதைக்கு ஒதுக்கி வைப்போம். உங்களைப் பற்றி அறிந்தவர் யாரும் உங்களுக்கு எழுத்தின் மீதுள்ள நம்பிக்கையை கேள்வி எழுப்ப முடியாது. இது தான் ஒரு வாசகருக்கு முதலில் வசீகரிப்பை உண்டாக்கும் விடயம். எழுத்தைத் தாண்டி, உங்களுடைய கதைகளில் ஒரு குழுவின் பக்கமான சார்பு நிலையைப் பற்றியோ, ‘இவர் நம்ம ஆளுப்பா’ என்பதாக தன்னோடு ஒப்புமைப் படுத்தி நோக்கும் வகையிலோ எந்த அடையாளத்தையும் காண முடியாது. அதோடு உங்களை நான் படிக்கும் போது, உலகின் ஏதோ ஒரு மூலையில் இன்று நடக்கும் தற்கால வரலாற்றைப் பற்றிய பதிவுகளை நான் எதிர்பார்ப்பதில்லை. சிலர் உங்களைப் போலவே வாசகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். அவர்கள் மந்தமான, அசைவற்ற பத்தி பத்தியான செயற்கை வார்த்தைகள் மூலமாக, தன்னை ஒரு யதார்த்தவாதியாக அடையாளப் படுத்திக் கொண்டு கட்டு மஸ்தான காட்சி அமைப்புகளை கொண்டு வருகிறார்கள். இப்படியான சூழலில் உங்களை ஒரு பாரம்பரியத்தின் அடையாளமாக நீங்கள் காட்டிக் கொள்ள நினைத்தால், எந்த வார்த்தையைக் கொண்டு அதனை விவரிப்பீர்கள்? உங்களுடைய குடும்ப மரத்தை என் முன்னால் வரைந்து காட்டுங்களேன். அதன் கிளைகள் எந்த திசையை நோக்கித் தன் கட்டுக்களைப் பரப்பி வளர்கிறது என்று காண ஆவல்.

பொலானோ: உண்மையில் எனக்கு எழுத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை எல்லாம் இல்லை. எழுத்து என்பது ஒரு வகையில் எனக்கு இன்பமான அனுபவம். இல்லை…இன்பமான என்கிற வார்த்தைப் பிரயோகம் தவறு. அது வேடிக்கையான கணங்களைக் கொண்ட ஒரு இயக்கம். ஆனால் எழுத்தைப் போலவே எனக்கு வேடிக்கை காட்டக் கூடிய மற்ற விஷயங்களைப் பற்றியும் என்னால் கூற முடியும்.

ஒரு வங்கியை நடத்துவது, ஒரு படத்தை எழுதி இயக்குவது, ஒரு ஜிகோலோவாக தனிமையில் முன் பின் அறியாத பெண்ணுடன் நடனமாடுவது, அல்லது ஒரு குழந்தையாக மீண்டும் மாறி சாக்கர் டீமில் விளையாடுவது என.. அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை பெரிதாகி விடுகிறது. வங்கிக் கொள்ளையன் சுகர் வந்து செத்துப் போகிறான். இயக்குனருக்கு பணம் போட யாரும் இல்லை. நடனமாடத் தெரிந்த ஜிகோலோ முட்டி செத்து படுக்கையில் விழுகிறான். இது போன்ற நிலைமைகளில் எழுதுவதைத் தவிர வேறு ஒரு சுவாரசியமும் இல்லை. என்னைப் பொறுத்த வரையில், எழுதுவது என்கிற வார்த்தை காத்திருப்பது என்கிற வார்த்தைக்கு நேரெதிர். காத்திருப்பதற்கு பதிலாக எழுத்து உருவாகிறது. ம்ம்…நான் தவறாகச் சொல்கிறேன் என்று தோன்றலாம். எழுதுவது காத்திருப்பின் வேறு வடிவம் என்றும், நடக்க வேண்டியவற்றை நடக்காமல் தள்ளிப் போடுவதற்கானது என்றும் கூட சொல்லலாம். ஆனால் எனக்கு இப்படி சிந்திக்கவே பிடிக்கும். ஆனால் நான் முன்பு கூறியது போல என் யோசனை தவறாகக் கூட இருக்கலாம். என்னுடைய கலங்கரை விளக்கு யார் என்று கேட்டால், மற்றவர்களைப் போலவே நானும் கூறலாம். அந்த ஒரு வெளிப்படையான பட்டியலை திரும்பச் சொல்லவே நா கூசுகிறது. Francisco de Aldana, Jorge Manrique, Cervantes, the chroniclers of the Indies, Sor Juana Inés de la Cruz, Fray Servando Teresa de Mier, Pedro Henríquez Ureña, Rubén Darío, Alfonso Reyes, Borges.. ஆகியோர் உடனுக்குடன் தோன்றும் சில பெயர்கள்.

எனக்கும் என்னுடைய பாரம்பரியம் இது என்று கை காட்டுவதற்கு ஆசை தான். அந்தப் பாரம்பரியத்தில் சிறிய கிளைகளாக ஒரு சில எழுத்தாளர்களைச் சொல்லலாம். ஏன், ஒரே ஒரு புத்தகத்தைக் கூடச் சொல்லலாம். அந்த பாரம்பரியம் எளிதில் மறக்கப் படக் கூடிய ஒரு அற்புதமான பாரம்பரியம். ஆனால் அதனை என்னுடைய அடையாளமாக நான் கூறிக் கொள்வது அதீத செருக்கை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதோடு, நான் மிக அதிகமான புத்தகங்களை படித்ததனால் அத்தகைய அடையாளத்திற்குள் என்னை சுருக்கிக் கொள்வது கேலிக்குரியதாக இருக்கும்.

பொல்லோஸா: உங்களுடைய மூதாதையர்களின் பட்டியலை நீங்கள் சொல்லும் போது ஸ்பானிஷ்-ல் எழுதியவர்களைக் குறிப்பிட்டது எதேச்சையாக நடந்ததா? நீங்கள் ஹிஸ்பானிய பாரம்பரியத்தை உங்களுடைய அடையாளமாக, மற்ற மொழிகளில் இருந்து தனித்துவமான ஒரு அலையாகக் காட்ட விரும்புகிறீர்களா? லத்தீன் அமெரிக்க எழுத்துலகத்தின் பெரும்பான்மையானவர்கள் மற்ற பாரம்பரியங்களோடு பேச்சுவார்த்தையில் இருப்பது உண்மை என்றால், அது உங்களுடைய விஷயத்தில் ரொம்பவே சரி என்று எனக்குத் தோன்றுகிறது.

பொலானோ: என்னுடைய பட்டியலின் நீளத்தை சுருக்கிக் கொள்ளவே நான் ஸ்பானிஷ் எழுத்தாளர்களை பற்றிக் கூறினேன். என்னுடைய உலகம் எதை உருவாக்குகிறதோ அதை மட்டுமே புசிக்கும் ஒரு தேசிய மிருகம் நானல்ல என்பது வேறு விஷயம். எனக்கு ஃபிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வமுண்டு. பாஸ்கல் தன்னுடைய இறப்பை முன்னதாகவே கணித்தார் என்பார்கள். அவர் துக்கத்துடன் செய்த போர் என்னை எப்போதும் இல்லாத வகையாக இந்த காலக் கட்டத்தில் ஆர்வம் கொள்ளச் செய்கிறது. Charles Fourier -ன் அப்பாவித் தனமும் என்னைக் கவர்கிறது.
மற்றும் அனைத்து அப்பன் பேர் தெரியாத உரை நடைக் குழந்தைகளும் எனக்கு மனதிற்கு நெருக்கமானதாக இருக்கின்றன. மார்க்யூஸ் டி சேட்- ன் எழுத்து முறை குகைக்குள் இட்டுச் செல்லும் அனைத்து நேர்த்தியான எழுத்தாளர்களின் படைப்புகளும் என்னை ஆச்சரியம் கொள்ளவே செய்கிறது. 1880 களின் அமெரிக்க இலக்கியத்தில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. முக்கியமாக ட்வெய்ன் மற்றும் மெல்வில் மற்றும் எமிலி டிக்கின்சன், விட்மேன் ஆகியோரின் கவிதைகளை நான் விரும்பி வாசிப்பேன். பதின் பருவத்தில் போ எழுதிய படைப்புக்களை மட்டுமே படிக்கக் கூடிய ஒரு சூழலை நான் கடக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு, பொதுவாகவே நான் மேற்கத்திய இலக்கியத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவனாக இருந்தேன்.

பொல்லோஸா: நீங்கள் போவின் எழுத்துக்களை மட்டும் படிக்கும் அந்த நோயாளிகளில் ஒருவரா? ‘போ’ வைரஸ் என்கிற ஒரு கொடிய ஆபத்தான நோய் நம் சந்ததியை ஆட்டிப் படைக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாய் விளங்கியவர். அதனால் உங்களையும் போ வைரஸ் தாக்கிய நோயாளியாகப் பார்ப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. சரி. இப்போது உங்களை நான் ஒரு கவிஞராக நினைத்துக் கொண்டு அடுத்தடுத்து சில படைப்புக்களைப் பற்றிய பார்வைக்கு திருப்பப் போகிறேன். நீங்கள் ஒரு களத்தை தேர்வு செய்கிறீர்களா? அல்லது அந்த கதைக் களம் உங்களை வந்தடைகிறதா? இதே கேள்வியை வேறு மாதிரி கேட்க வேண்டும் என்றால், நீங்கள் எப்படி உங்களது களங்களை தேர்வு செய்கிறீர்கள்? அல்லது, எப்படி அந்தக் களங்கள் உங்களை தேர்வு செய்கின்றன? ஒரு வேளை இது இரண்டுமே நடக்கவில்லை என்றால், வேறு என்ன தான் நடக்கிறது? உங்களுடைய அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நிஜத்தின் சாயல் உள்ளதே! அது ஏன்? உதாரணத்திற்கு, Augusto Pinochet -டின் மார்க்சிச ஆலோசகராக வரும் ஒரு கதாபாத்திரம். Opus Dei-ன் பாதிரியாராகவும், உறுப்பினராகவும் வரும் Sebastián Urrutia Lacroix, மெஸ்மரிசம் கற்கும் மதமருத்துவர் அல்லது Savage Detectives என்று அழைக்கப்படும் பதின் பருவ கவிஞர்கள் என பலவற்றைக் கூறலாம்.

பொலானோ: ஆம். கதைக் களங்கள் விசித்திரமானவை. நான் நம்புவது என்னவென்றால், என்னதான் பல சூழ்நிலைகளில் நான் கூறப் போவது பொய்யாக இருப்பினும், ஒரு சில சமயங்களில் கதைக் களம் தான் உங்களை துரத்திப் பிடித்து இரவில் தூங்க விடாமல் செய்கின்றது. நல்ல வேளையாக அது பெரிய பாதிப்பை ஒன்றும் ஏற்படுத்தி விடுவதில்லை. ஒரு கதையின் வடிவமும், அமைப்பும் தான் எப்போதும் உங்களது கை ரேகையை அக்கதைக் களத்தில் பதியச் செய்யும். ஆனால் வடிவமும், அமைப்பும் இல்லாமல் புத்தகங்கள் இல்லை. எல்லா நேரங்களிலும் இப்படியா என்றால், பெரும்பாலான நேரங்களில் இப்படித் தான் என்பேன். சரி. ஒரு கதையும், களமும் தற்செயலாக உருவாகிறது என்று வைத்துக் கொள்வோம். குழப்பம், கோளாறு மற்றும் கொந்தளிப்பின் களங்களாக அது தற்செயலாக அமைந்து விட்டதாகவும் கருதிக் கொள்வோம். வடிவம் என்பது அறிவு, நரித்தனம், அமைதி என்கிற ஆயுதங்களை எப்படி யுலிசஸ் மரணத்திற்கு எதிராக உபயோகித்தாரோ அது போல மேற்சொன்ன விடயங்களின் அடிப்படையில் அதன் பயனாய் உருவாகின்றன. அதனால் முடிவாக வடிவம் ஒரு யுக்தியைக் கோருகிறது என்பது புலனாகிறது. கதை ஒரு செங்குத்துப் பாறையாயில் இருந்து மனிதன் விழ வேண்டும் என்று எதிர் பார்க்கிறது. அதாவது இது வரையில் தன்னுடைய கருத்தியலாக அவன் எதை கருதிக் கொண்டிருந்தானோ அதை அவன் கை விட வேண்டியிருக்கிறது. ஒரு சிலிய நாட்டு வழக்கு மொழியில் இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால் இப்படி சொல்லலாம். எனக்கு செங்குத்துப் பாறைகள் பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அவற்றை நான் பாலத்தின் மேலிருந்து தான் ரசிக்க விரும்புகிறேன். இது தான் இன்று பலரும் கடைபிடிக்கும் முறை.

பொல்லோஸா: பெண் எழுத்தாளர்கள் இந்தக் கேள்வியால் அதிகம் எரிச்சல் அடைகிறார்கள். ஆனால் இதை உங்களிடம் கேட்காமல் விட்டால் என் மண்டையே வெடித்து விடும். உங்களுடைய படைப்புக்களில் எத்தனை சொந்தக் கதை? எந்த அளவிற்கு அவை சுயத்தின் வெளிப்பாடுகளாய் உள்ளன?

பொலானோ: சுயத்தை வெளிப்படுத்துவதாக அதிகம் இருப்பதில்லை. சுயத்தை பற்றி அதிகம் சிந்திக்க உங்களுக்குள் ஒரு கர்வம் இருக்க வேண்டும். உங்களைப் பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் யாராக ஆகி விட்டீர்கள் என்கிற ஒரு சுய ஆர்வம் இருக்க வேண்டும். சொந்தக் கதைகள் இலக்கியத்தில் நிறைய வந்திருக்கின்றன. அவை நல்ல படைப்புக்களாகவும் வந்திருக்கின்றன. ஆனால் சுய வெளிப்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது கவிதைகளில் வந்தால் கூட இதுவே நிலை. என்னுடைய கதைகள் சொந்தக் கதைகளா என்றால், எப்படி இல்லாமல் இருக்க முடியும்? ஒரு காலத்தை வென்ற இலக்கியம் கூட ஒரு வகையில் சொந்தக் கதையாகவே இருக்கும். இலியாட்டில் நாம் இரண்டு படைகளுக்கு இடையிலான சண்டையையும், அக்கிலஸ், ப்ரியாம் மற்றும் ஹெக்டரின் வார்த்தைகளை மட்டுமே கவனிக்கிறோம். ஆனால் அவர்களின் வார்த்தைகள் வழியாக நம் காதுக்குள் நுழைபவை அமைதியான முறையில் அந்த எழுத்தாளர் பேசும் அரசியலாகவே இருக்கின்றன.

பொல்லோஸா: நாம் இளம் கவிஞர்களாக, பதின்பருவத்தினராக ஒரே நகரத்தில் இருந்த போது, நீங்கள் ஒரு கவிஞர் பட்டாளத்தின் தலைவராக இருந்தீர்கள். Savage Detectives என்கிற நாவலில் நீங்கள் உருவாக்கிய இன்ஃப்ராரியலிஸ்ட் என்கிற கவிஞர் பட்டாளத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. மெக்சிகோவின் இன்ஃப்ரா ரியலிஸ்ட்களுக்கு கவிதையின் மேல் எந்த அளவிற்கு காதல் உண்டு என்று விளக்கிச் சொல்லுங்கள்.

பொலானோ: இன்ஃப்ராரியலிசம் என்பது ஒரு வகையில் டாடா வைப் போன்ற மெக்சிகன் பாணி எழுத்து முறை. ஒரு கட்டத்தில் கவிஞர்கள் மட்டும் தான் என்கிற வரம்பில்லாமல், வெள்ளை அடிப்பவர்கள், சோம்பேறிகள் என்று அனைவரும் தங்களை இன்ஃப்ராரியலிஸ்ட்களாக அடையாள படுத்திக் கொண்டார்கள். உண்மையில் நானும் மரியோ சாண்டியாகோ ஆகிய இருவர் மட்டுமே இருந்தோம். நாங்கள் இருவரும் 77 ல் ஐரோப்பா சென்றோம். Rosellón, France மற்றும் Port Vendres ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ஒரு நாள் தங்கினோம். அத்தகையை முயற்சிகள் தோல்வி கண்ட பிறகு, அந்த இயக்கத்தை கை விட்டோம்.

பொல்லோஸா: உங்களுக்கு வேண்டுமானால் அது தோல்வி கண்ட முயற்சிகளாகத் தெரியலாம். ஆனால் எங்களுடைய பசுமையான நினைவுகளில் அந்த இயக்கம் என்றென்றும் இருக்கும். நீங்கள் இருவருமே இலக்கிய உலகின் பயங்கரவாதிகளாகத் திகழ்ந்தீர்கள். அப்போதெல்லாம் நான் புனிதத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு கண்மூடித் தனமான கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன். என் வாழ்க்கை ஒரு இணைப்பில்லாத கிறுக்கல் ஓவியம் போலிருந்ததால் எனக்கு ஒரு அடையாளம் தேவைப் பட்டது. எனக்கு மதக் கூட்டங்களில் வாசிக்கப்படும் கவிதைகள், பாடல்கள் மேல் அதிக ஈர்ப்பு இருந்தது. அத்தகைய முட்டாள்தனமான சடங்கு ரீதியிலான கூட்டங்களுக்கு முழுமையான எதிர்ப்பு உங்களிடம் இருந்து வந்தது. உண்மையில் அவற்றை நீங்கள் தான் குலைத்துப் போட்டுக் கொண்டிருந்தீர்கள். காந்தி புத்தக அங்காடியில், 1974 ல் நான் என்னுடைய முதல் கவிதையை வாசிக்கும் முன்பாக நான் கடவுளிடம் இப்படித் தான் பிரார்த்தனை செய்தேன். அந்த இன்ஃப்ராரியலிஸ்ட் பொறுக்கிகளை வரவிடாதீர்கள் என்று. கடவுளின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை எல்லாம் இல்லை என்றாலும், யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் அவ்வாறு வேண்டிக் கொண்டேன். நான் பொது வெளியில் உரக்கப் படிக்க பயந்தேன். நான் படிக்கும் போது இடையில் கதவை உடைத்துக் கொண்டு வரும் இன்ஃப்ராரியலிஸ்ட்கள் என்னை ஏளனம் செய்வார்கள் என்கிற யோசனை உருவாக்கிய பதட்டத்திற்கு முன்னால் அந்த பயம் ஒன்றும் இல்லாமல் போனது. அப்போது நீங்கள் இலக்கிய உலகை உங்களது வாதத்தால் திருப்தி அடையச் செய்திருந்தீர்கள். ஒரு வேலை அவ்வளவு முக்கியமானதாக இல்லாமல் இருந்தால், அந்த வேலையை அவ்வளவு கவனத்தோடு செய்ய வேண்டியதில்லை என்கிற அந்த வாதம் அனைவரையும் யோசிக்கச் செய்தது. மேலும் கவிதை என்று வரும் போது ஒருவர் தன் சௌகர்யங்களை துறந்து விட்டு, ஒரு செங்குத்துப் பாறையில் இருந்து குதிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்தீர்கள். இவ்வாறாக நீங்களே உங்களது சிலிய நாட்டு வழக்கு சொல்லுக்கு எதிர்ப் பதமாக செயல்பட்டீர்கள். இதைப் பற்றி அதிகமாகப் பேச நேரமில்லை. உங்களுடைய படைப்புகளைப் பற்றிய பேச்சுக்கு திரும்புவோம். நீங்கள் கதை சொல்வதில் தேர்ந்தவர். உங்களுடைய கவிதைகளின் வரிகள் பாடல்களுக்கு உகந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் நீங்கள் கவிதை எழுதுவதிலும் தீவிரமாக செயல்பட்டீர்கள். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்தது எப்படி?

பொலானோ: நிகனோர் பர்ரா சொல்வார். சிறந்த நாவல்கள் கவிதைகளுக்குண்டான சுருக்கத்தில் எழுதப் பட்டிருக்கின்றன. ஹெரால்ட் ப்ளூம் சொல்கிறார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிதைகள் உரை நடைகளில் இருக்கின்றன என்று. நான் இரண்டையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என்னை நான் ஒரு தீவிரக் கவிஞன் என்று ஒப்புக் கொள்வதில் கடினத்தை உணர்கிறேன். என்னுடைய புரிதலின் படி ஒரு தீவிரக் கவிஞன், கவிதைகளை எழுதுபவனாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் அன்பு கருதி அனுப்பியவை மிகவும் கொடுமையான கவிதைகள். அவற்றையும் என் பாலுள்ள அன்பு கருதி நீங்கள் பொறுத்தாட்கொள்கிறீர்கள். எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. ஒரு கவிதை என்று ஒப்புக் கொள்ள அதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். எப்படியாயினும், முக்கியமான விடயம் என்னவென்றால் கவிதைகள் வாசிக்கப் படவேண்டியவை. அதை எழுதுவதா வேண்டாமா என்பது கேள்வியே அல்ல. உங்களுக்குத் தெரியாததா என்ன? உண்மையில் படிப்பது எழுதுவதைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று?

 

***

இன்ஃப்ராரியலிஸ்டுகள் என்னும் கலை இயக்கத்தை ராபர்டோ பொலானோவும்  மரியோ சாண்டியாகோவும் தோற்றுவித்தனர். 1975 இல் மெக்ஸிகோ நகரில் தொடங்கிய   இந்த இயக்கம் கட்டற்ற சுதந்திரத்தையும் மற்றும் தனிப்பட்ட கவிதை பாணியையும் முன்வைத்தது, மேலும் அதன் உறுப்பினர்கள் “இன்ஃப்ராஸ்” என்று அழைக்கப்பட்டனர். இன்ஃப்ராரியலிஸ்டுகள் 1950களின் பீட் ஜெனரேஷனைப் போலவே இருந்தனர், அதில் அவர்களின் கவிதைகள், சட்டகத்திற்கு வெளியே உள்ள வாழ்க்கையைப் பற்றிய தங்களின் அணுகுமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

***

கார்மென் பொல்லோஸா,  நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நாடகங்கள் மற்றும் பல நாடகத் தழுவல்கள், சிறுகதைகள் மற்றும் விமர்சனக் கட்டுரைகளின் ஆசிரியர் ஆவார். ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்ட அவரது ஒரு நாவல் Leaving Tabasco,  பெருமளவில் பேசப்பட்டது. அவரது புத்தகங்கள் பிரெஞ்சு, ஜெர்மன், டச்சு மற்றும் இத்தாலிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் Xavier Villaurrutia Mexican Literary Award (1989), a Guggenheim fellowship (1992), and a DAAD grant (1995) ஆகியவற்றைப் பெற்றுள்ளார். அவர் நியூயார்க் பொது நூலகத்தின் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான மையத்தின் உறுப்பினராக உள்ளார்.

***

நன்றி : Bomb Magazine