- முபீன் சாதிகா
அழகாகப் பறந்தது அந்த வண்ணச் சிறகு. இதுவரை இது போன்ற நிறத்தில் ஒரு சிறகை நான் பார்த்ததில்லை. என் கனவில்தான் அந்தச் சிறகு பறந்து கொண்டிருந்தது. கனவில் வரும் வண்ணச்சிறகு நேரில் கண்டது போல் இருக்காதா என்ன என்று எண்ணிக் கொண்டேன். அது பறப்பதைப் பார்ப்பதற்கு அவ்வளவு சுகமாக இருந்தது. சட்டென்று அது வேகமாக வெகு தொலைவு பறந்து போனது. நான் அதைத் துரத்தினேன். எப்படியாவது அந்தச் சிறகு என் கையில் வந்து விடாதா என்ற பதற்றத்துடன் அதைத் துரத்தி ஓடினேன். நான் எப்போதும் தலையில் தொப்பி அணியும் வழக்கம் உள்ளவன் என்பதால் என் தொப்பியில் அந்தச் சிறகைச் செருகி வைக்க வேண்டும் என்ற ஆசையில் நான் ஓடினேன். அந்தச் சிறகு ஒரு பெரிய சந்தைப் பகுதிக்கு மேல் பறந்தது. மிகவும் நெரிசலாக இருந்த அந்தப் பகுதியில் யார் மீதும் மோதாமல் ஓடுவது பெரும் சிரமமாக இருந்தது. எல்லோரும் என்னைத் திட்டித் தீர்த்தார்கள். என் பதற்றம் அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களை நான் மன்னித்து விட்டேன். அந்தச் சந்தைக்கு அருகில் இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தின் கூரை மீது அந்தச் சிறகு விழப் போவது போல கீழே வந்தது. நான் அங்கேயே நின்று அந்தக் கூரை வரை குதித்து அதைப் பிடிக்கப் பார்த்தேன். மீண்டும் அது பறந்து விட்டது. நானும் பின்தொடர்ந்தேன்.
சிறிது தூரத்தில் பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். நான் ஓடுவதைப் பார்த்தவுடன் ஏதோ ஒன்றைப் பிடிக்க ஓடுவது அவர்களுக்குப் புரிந்து அவர்களும் என் பின்னால் ஓடி வந்தார்கள். எனக்கோ அது பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. அந்த வண்ணச் சிறகைப் பார்ப்பவர்கள் நிச்சயம் அதை எடுத்துச் சென்று விடுவார்கள். எனக்கு அவர்கள் அதைத் திருப்பித் தரமாட்டார்கள். என் கனவில் வந்த வண்ணச் சிறகு அது என்று அவர்களிடம் எப்படி நிரூபிப்பது? அப்படி நிரூபித்தாலும் அதை அவர்கள் நம்பமாட்டார்கள். அந்த வண்ணச் சிறகு யார் கையில் வருகிறதோ அவர்களுக்கு உரியதாகி விடும். இந்தக் குழந்தைகளை விரட்டவும் மனமில்லை. அவர்களிடம் எப்படியாவது பேசி அந்த வண்ணச் சிறகை வாங்கி விடலாம் என்று எண்ணினேன். அதன் பிறகு ஓரளவு நம்பிக்கை பிறந்தது.
இப்போது அந்த வண்ணச் சிறகு மிக உயரமான கட்டிடத்திற்கு அருகே பறந்து கொண்டிருந்தது. பின்னால் வந்த குழந்தைகள் காணாமல் போயிருந்தார்கள். நான் வேண்டுமென்றே அவர்களை ஏமாற்ற இப்படி ஓடி வருகிறேன் என்று கத்திவிட்டு ஓடி விட்டார்கள். அதுவும் நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டேன். அந்தக் கட்டிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன். எப்படியும் அது அந்தக் கட்டிடத்தின் வளாகத்தில் விழுந்துவிடும் என்று மிகவும் நம்பினேன். அது மெதுவாகப் பறந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவர் அந்தக் கட்டிடத்தின் ஜன்னலைத் திறந்து அந்தச் சிறகைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தார். எனக்குப் பகீரென்றது. இதை எப்படித் தடுப்பது என்று புரியாமல் அங்கேயே நின்று அவரை நோக்கிக் கத்தினேன். அது என்னோட கனவுல வந்த சிறகு. நீங்க புடிக்கக்கூடாது என்று கத்தினேன். அவர் என் குரலைக் கேட்டது போலவே தெரியவில்லை. மீண்டும் மீண்டும் கத்தினேன். அவர் திடீரென்று என்னைக் கவனித்தார். என்னைப் பார்த்து என்ன என்பது போல் கையைக் காட்டினார். அது என்னுடையது என்று பாவனை செய்தேன். அவர் சிரித்தார். தலையில் அடித்துக் கொண்டார். அந்தச் சிறகு அவருடைய ஜன்னலிலிருந்து வெகுதூரம் பறந்ததால் அவர் உள்ளே சென்றுவிட்டார். எனக்கும் ஆசுவாசம் வந்தது. அந்தச் சிறகைத் துரத்தத் தொடங்கினேன்.
இப்போது அது ஒரு ரயில் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தது. நானும் ஓடி ரயில் வருகிறதா என்று பார்த்துவிட்டு அதை எப்படியாவது பிடித்துவிடும் முயற்சியில் தொடர்ந்து கொண்டிருந்தேன். ரயில் தண்டவாளத்தின் அருகே ரயில் ஊழியர்களின் வீடுகள் இருந்தன. அந்தச் சிறகு அவர்களின் ஒவ்வொரு வீட்டுக் கூரை மேல் விழுந்துவிடக்கூடிய வகையில் தாழப் பறந்துகொண்டிருந்தது. நான் ஒவ்வொரு வீட்டின் முன் நிற்பதும் நகர்வதுமாக இருந்தேன். உடனடியாக அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து என்னைப் பார்த்தார்கள். ஒருவர் என்னை நிறுத்தி என்ன செய்யறீங்க என்றார். அந்த வண்ணச்சிறகைக் காட்டி அது என்னோட சிறகு எனக்கு அது வேண்டும் அதைத் துரத்திகிட்டே இங்கே வந்துட்டேன் என்றேன். அப்போதுதான் அவரும் அதைப் பார்த்தார். அட என்ன அழகா இருக்கு. உங்களுக்கு இது எங்கே கிடைச்சது என்றார். என் கனவுல என்றேன். அவர் முகம் சுளித்துப் போனது. அண்டை வீட்டுக்காரரிடம் நான் சொன்ன தகவலைச் சொன்னார். அவர் என்னை விநோதமாகப் பார்த்தார். நான் அப்படியே அந்தச் சிறகைத் துரத்திக் கொண்டு அந்த வளாகத்தின் இறுதிக்கு வந்துவிட்டேன். அப்போது அந்த வளாகத்தில் இருந்த ஒரு பையன் ஒரு வலையை எடுத்து அந்தச் சிறகின் மீது வீச முயற்சித்துக் கொண்டிருந்தான். நான் வேண்டாம் என்று கத்தினேன். அவன் என்னைச் சட்டைச் செய்யவில்லை. நான் மீண்டும் கத்தினேன். என்னைப் பார்த்து அவன் போ என்பது போல் கையைக் காட்டினான். நான் அங்கேயே நின்றேன். அவனிடம் கெஞ்சியாவது அதை வாங்கிவிடலாம் என நினைத்து அவன் அதைப் பிடிக்க முடிகிறதா என்று பார்த்தேன். அவனால் எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. அது வளாகத்தைத் தாண்டி பறந்து கொண்டிருந்தது. நானும் பின் தொடர்ந்து ஓடத் தொடங்கினேன். நல்லவேளையாக அந்த வளாகத்திலிருந்து யாரும் அந்த சிறகைப் பின் தொடரவில்லை என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
திரும்பிப் பார்த்தால் அந்த வண்ணச் சிறகைக் காணவில்லை. தொடர்ந்து ஓடி அங்குமிங்கும் தேடினேன். ஒரு வீட்டு வாசலில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் கைகளில் அந்த வண்ணச் சிறகு இருந்தது. அதை எப்படி வாங்குவது என்று புரியாமல் அதைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். அந்தக் குழந்தை என்னைப் பார்த்து அந்த வண்ணச் சிறகைக் காட்டியது. நான் கை நீட்டினேன். அது தர மறுத்தது. எனக்குத் துயரமாக இருந்தது. அதனிடம் பிடுங்கிக் கொள்ளலாம் வேறு வழியில்லை என்று தீர்மானித்தேன். அந்தக் குழந்தையை நெருங்கி அதன் கைகளிலிருந்து பிடுங்கப் போகும் போது மீண்டும் அந்தச் சிறகு பறந்துவிட்டது.
அடுத்து அது பெரிய பேருந்து நிலையம் நோக்கி அது விரைந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து நிலையத்தில் எப்படி அதைப் பிடிப்பது என்ற கவலையுடன் ஓடினேன். பல பேருந்துகள் குறுக்கும் மறுக்குமாக வந்து கொண்டிருந்தன. பல பயணிகள் என்னைத் திட்டிக் கொண்டே நகர்ந்தனர். என் அவசரமும் படபடப்பும் அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. அந்தப் பேருந்து நிலையம் முழுக்க அது வட்டமடித்தது. ஆனால் கீழே வரவே இல்லை. அங்கேயே நின்று யாரிடமாவது உதவி கோரலாமா என்று நினைத்தேன். அவர்கள் அதை வைத்துக் கொண்டால் திருப்பி வாங்குவது கடினம் என்பதால் அமைதியாக மீண்டும் ஓடினேன். கால்கள் வலித்தன. அது பேருந்து நிலையத்தைத் தாண்டிப் போகும் சாலையின் மேலே வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தது. நானும் அதற்கு இணையாக அந்தச் சாலையில் ஓடிக் கொண்டிருந்தேன். வானத்தின் நீலம் எனக்குள் இறங்கிவிடும் போலிருந்தது. காற்று வேகமாகச் சுழன்றடித்தது. என் வாய்க்குள்ளும் மண் போய்விட்டது. காறி உமிழ்ந்தபடி ஓடிக் கொண்டிருந்தேன்.
அந்தச் சிறகு கடற்கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. நான் நம்பிக்கையை முழுவதும் இழந்துவிட்டேன். அது கடற்கரை மணலில் விழ வாய்ப்பே இல்லை. கடலில் சென்று விழுந்துவிட்டால் என் கைக்கு வரவே வராது. எனக்கு அழுகையாக வந்தது. அது எப்படியாவது என் கைக்கு வர நான் என்னைப் பிரார்த்தனை செய்ய முடியும்? அது பொருளற்ற பிரார்த்தனையாகத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த ஒரு சிறிய சிறகு எனக்குச் சொந்தமாக இருக்கக்கூடாதா? எனக்கென்று எதுவும் இல்லை. வீடில்லை, பொருளில்லை, காசில்லை, உறவில்லை. எதுவும் இல்லை. அந்தச் சிறகை மட்டும் எனதாக்கிக் கொள்ள நான் ஏன் முயலக் கூடாது என்று சமாதானப்படுத்திக் கொண்டு இறைவனிடம் மன்றாடி வேண்டினேன். எனக்கு எப்படியாவது அந்தச் சிறகை மீட்டுத் தரவேண்டும் என்றேன்.
எனக்கு இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பது ஒரு பூடகமான நம்பிக்கை. மிகச்சிறிய வயதில் கொடிக் கம்பத்தின் உச்சியில் எல்லாம் கடவுள் இருப்பதாக நம்புவேன். இப்போதும் அப்படிப்பட்ட நம்பிக்கை இல்லை என்று சொல்லமுடியாது. வழியில் ஒரு கொடிக் கம்பம் வந்தது. அதன் அருகில் நின்று வேண்டினேன். அது என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது. என் நிலையை நொந்து கொண்டு அந்தச் சிறகின் பின்னால் மீண்டும் வேகமாக ஓடத் தொடங்கினேன். கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் என்னை விசித்திரமாகப் பார்த்தார்கள். ஏதோ விளையாட்டில் பங்கெடுத்திருக்கிறேன். அதனால் ஓடுகிறேன் என்று பலர் நினைத்து விட்டார்கள் போல் தெரிந்தது.
இப்போது அந்தச் சிறகு ஒரு பெரிய மைதானத்தை நோக்கி வெகு வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. நானும் என்னால் முடிந்த அளவு வேகத்தில் ஓடினேன். அந்தச் சிறகு அந்த மைதானத்தில் அமர்ந்திருந்த ஒருவரின் நாற்காலிக்கு அருகில் போய் விழுந்து விட்டது. ஓடிப் போய் எடுக்கக் குனிந்தேன். அதற்குள் அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவர் அதை எடுத்து திருப்பிப் பார்த்துவிட்டு அதன் காம்பை லேசாகக் காதில் விட்டுக் குடைந்துவிட்டு அதைத் தூக்கி எறிந்தார். நான் பாய்ந்து சென்று அதைப் பிடித்துவிட்டேன். அப்போது எங்கிருந்தோ இருவர் ஓடி வந்து என்னைப் பிடித்து உலுக்கினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நாங்க இங்க சினிமா எடுத்துகிட்டிருக்கோம். நடுவுல வந்து நீ எப்படி நுழைஞ்சே? எனக்கு ஏதோ விபரீதமாகச் செய்துவிட்டேன் என்று புரிந்தது. நான் அவர்களை அமைதியாகப் பார்த்துவிட்டு சமாதானமாகச் சிரித்தேன். இந்தச் சிறகை எடுக்க வந்தேன். ரொம்ப தூரத்திலருந்து இது பறந்து வந்திட்டிருக்கு. அதான் எப்படியாவது எடுத்துட்டுப் போயிடணும்னு இங்கே என்ன நடக்குதுன்னு தெரியாம நடுவுல பூந்துட்டேன். அவர்கள் இருவரும் நான் சொல்வது உண்மையாக இருக்குமா என்று விழித்தனர்.
அதற்குள் அந்தத் திரைப்படத்தை இயக்கும் இயக்குநர் அங்கு வந்துவிட்டார். என்னை உற்று நோக்கினார். நாங்க படம் எடுக்கற காட்சிக்குள்ள நீ வந்துட்டே என்றார். மன்னிச்சுக்குங்க சார் என்றேன். எதுக்கு வந்தே என்றார். அந்த வண்ணச் சிறகைக் காட்டி இது என்னோட கனவுல வந்தச் சிறகு. திடீர்னு பறந்து போயிடுச்சு. அதைப் புடிக்க வந்தேன். தெரியாம இங்கே வந்துட்டேன் என்றேன். நான் சொன்னது இயக்குநருக்குப் பிடித்து விட்டது போல் அவர் சிரித்தார். என் நடை உடை பாவனையும் என் தொப்பியில் அந்தச் சிறகை நான் மாட்டிக் கொள்ளும் விதத்தையும் அவர் உற்று நோக்கினார். நீ இதே மாதிரி என் படத்துல வர்ரியா என்றார். எனக்கு அவர் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. அருகில் இருந்தவர் உன்ன நடிக்கச் சொல்றாரு என்றார். நான் சிரித்தேன். சரி நீ அப்படி உக்காரு உன்னக் கூப்பிடறேன் என்று இயக்குநர் கூறிவிட்டு அடுத்த காட்சியை எடுக்கச் சென்றுவிட்டார்.
அதற்குப் பிறகு என்னை எல்லோரும் விழுந்துவிழுந்து கவனித்தனர். எனக்கு மூன்று வேளைச் சாப்பாடு கேட்காமலேயே கிடைத்து விட்டது. அப்படிப்பட்ட சாப்பாட்டைப் பார்த்து எனக்கு வெகு நாட்கள் ஆகிவிட்டன. நான் போட்டிருந்த உடைகளைப் போலவே பல வண்ண உடைகள் எனக்காக வந்து இறங்கின. அவற்றை ஒவ்வொரு காட்சியிலும் அணிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்ற தொப்பியையும் தலையில் வைத்துக் கொண்டு அதில் அந்த வண்ணச் சிறகைப் பொருத்தியபடி நான் பல காட்சிகளில் நின்றேன். எல்லாக் காட்சிகளிலும் நான் ஒரே வசனத்தைத்தான் சொன்னேன். என் கனவில் பறந்த சிறகு. நான் துரத்திக் கொண்டிருக்கிறேன். இப்போது கையில் வந்துவிட்டது. இதைப் பத்திரமாக வைத்துக் கொள்வேன் என்ற வசனத்தைத் தினம் பேச வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் ஓரிடத்தில் பேசினேன். ரயில் வண்டியில், மரத்தின் மீது அமர்ந்து கொண்டு, ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சியில் நின்றபடி, கடற்கரை மணலில் படுத்தபடி என்று பல இடங்களில் நான் அந்த வசனத்தைப் பேசினேன். பல நாட்கள் அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டன. எனக்கு அந்த வாழ்க்கை சொர்க்கம் போல் இருந்தது. அந்த வண்ணச்சிறகு எனக்களித்த வரம் என்று எண்ணினேன். அதைக் கையில் எடுத்து நீவினேன். மீண்டும் தொப்பியில் பொருத்திக் கொண்டேன். இயக்குநர் வந்தார். எல்லாக் காட்சிகளும் முடிந்துவிட்டன. என் பாத்திரம் அருமையாக வந்திருப்பதாகச் சொன்னார். நான் சிரித்தேன். யாரோ ஒருவர் என் கையில் அத்தனை நாட்கள் நடித்ததற்கான பணம் என்று அழுத்தினார். எவ்வளவு பணம் என்று கூட எனக்குத் தெரியவில்லை. நான் இன்பத்தில் மிதந்தேன். அந்த வண்ணச் சிறகைப் போல் நானும் ஆகிவிட்டது மாதிரி இருந்தது.
அந்த வண்ணச்சிறகைப் பத்திரமாக என் சட்டைக்குள் வைத்துக் கொண்டேன். அவர்கள் என் பழைய உடையைப் பத்திரமாக வைத்து எடுத்துக் கொடுத்தார்கள். அதை அணிந்து கொண்டு அந்த வண்ணச்சிறகை அந்தச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கிளம்பினேன். மீண்டும் என் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் வேகத்தில் நடந்தேன். என்னிடம் வந்துவிட்ட அந்த வண்ணச் சிறகை இனி எப்போதும் தொலைக்கக் கூடாது என்ற தீர்க்கமான முடிவில் இருந்தேன். கையில் கிடைத்திருக்கும் பணத்தைக் கொண்டு ஏதாவது செய்யவேண்டும் என்று முதல்முறையாக ஒரு ஞானோதயம் தோன்றியது. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இது போன்ற பட வாய்ப்புகளையும் தொடரலாம் என்று தோன்றியது. அதெல்லாம் நடக்காது என்று எண்ணினேன். வேறு என்ன செய்யலாம் என்று நினைத்தேன். சிறிய டீக்கடைத் தொடங்கலாம் என்று நினைத்தேன். அது பெரிய சிரமமான காரியம் என்று தோன்றியது. எங்காவது சென்று எழுத்தராகப் பணி புரியலாம் என்று நினைத்தேன். அதற்கும் இந்தப் பணத்திற்கும் என்ன தொடர்பு என்று தோன்றியது.
அந்த வண்ணச் சிறகு கிடைத்தது போன்ற நல்ல அனுபவம் வேறு என்ன இருக்க முடியும். அதை நினைத்து அமைதியாக வாழ்வைக் கழித்தால் போதும் என்று தோன்றியது. அந்த வண்ணச் சிறகை ஒரு முறை எடுத்துப் பார்த்தேன். அது முழுமையாக வண்ணம் இழந்திருந்தது. வெறும் கறுப்பு வெள்ளைச் சிறகாக மாறிவிட்டிருந்தது. அதில் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எப்படி இந்த மாற்றம் நேர்ந்தது என்று நினைத்து அரற்றினேன். அந்தச் சிறகுடைய பறவை என் கனவில் வந்தது. நான் கொடுத்த அந்த வண்ணச் சிறகை நீ தவறாகப் பயன்படுத்தி விட்டாய். அது இனிமேல் வண்ணத்தைக் காட்டாது. அதுதான் நீ செய்த தவறுக்காக உனக்கு விதிக்கப்பட்ட தண்டனை. அதிலிருந்துதான் இனிமேல் இது போன்ற பொக்கிஷங்கள் கிடைத்தால் அவற்றை இப்படிப் பயன்படுத்தக் கூடாது என்ற பாடத்தை நீ கற்பாய் என்று சொல்லிவிட்டு மறைந்து போனது. என் கண்களில் கண்ணீர் வழிந்தது. வண்ணம் இல்லாவிட்டாலும் வெள்ளையும் கறுப்புமாக இருக்கும் இந்தச் சிறகு எனக்கானது. என்னுடையது. ஒரு காலத்தில் வண்ண மயமாக இருந்தது என்ற நினைவுடன் இருந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
***
ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற முபீன் சாதிகா, பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி, மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு குறுங்கதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரு கட்டுரைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு நேர்காணல் நூல், மற்றும் படைப்புலகம் பற்றிய நூல் என 10 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. 40 பெண் கவிஞர்களின் படைப்புலகம் பற்றி 40 நூல்கள் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். இவரது படைப்புகள் பல்வேறு விருதுகள் பெற்றிருக்கின்றன.

அருமை. நம்பிக்கை, மகிழ்ச்சி, நிம்மதி, சுதந்திரம், இருப்பின் மீதான விசாரணை என எந்த ஒரு அகவயமான அணுகுமுறையையும் கொண்டு இக்கதையை வாசிக்கலாம். வண்ணச் சிறகு கறுப்பு வெள்ளையாக மாறியதோடு கதை முடிந்துவிட்டது.
கனவுலக வாழ்வின் நிம்மதி, நிறங்களின் நிச்சயமற்ற தன்மை ,
அகவுலகின் அலைச்சல் என மனித
மனங்களின் வண்ணங்களால்,
சிறகு பறக்கின்றது.
அதன் நிச்சயமற்ற தன்மை, வண்ணங்களால் ஆனது என, முபின்
சாதிகாவின் மொழி அழகானது, ஆழமானது.
ஜெயானந்தன்