- சத்தியமலரவன்
குட்டிமணியின் கண்கள்
கண்கள் இருந்த இடத்திலிருந்தது குருதியோடை
மேலாடை இல்லாமல் அம்மணத்தின் சரிவை
இருள்சூழ்ந்த சிறைக்குள் நீட்டியிருந்தது இரும்புவளையங்கள்
செங்கல்லும் சீமேந்தும் உபதுணிக்ககைகளும்,
மற்றும்
சிறுநீரும் மலமும் கழிக்கப்படும்
மத்திய உணவும் நீரும் பொருந்தாத கட்சியின் பிணஅறை
கொல்லும் வரை உடலை, மூளையை, கைகளை, கண்களை,
புருவத்தை ,தோள்களை,
காற்றிலிருந்தது இருளின் சட்டம்
சுவர்களுக்குள் கண்ணைக் குதறி உடலைக் கிழித்து
கண்ணைப் பிடுங்கி வலது குதிகாலால் உழக்கும் போது சுதந்திரம்
ஒரு முறை சரியாக நிமிர்ந்து விடும்
இருகண்கள்
கண்கள்
***
அகத்தின் கடல்
சனவரி 16
கடல் சாதாரணமானதல்ல
பெருந்தெருவைப்போல
அலையும் கடலும் மனமும்
அங்கு ஒளிசூடிய பறவைகள் மிதந்துகொண்டிருந்தன
காலம் அரிது
அயலின் நீண்ட தடுப்புச்சுவர்
தீ அரசியலானது
உயரமாக எழுந்துமூடின
சுதந்திரத்துக்கான கனி வற்றாமல் வெடித்து மூழ்கிற்று
பெரும்புகை மறையத்தொடங்கியது
அலைந்து ஈழக்காற்று
ஈரமானது
***
என் பிறந்தநாளில் வேறொருவனாக இருக்கிறேன்
என் வீட்டின் முற்றம் புழுதியும் சிறுகற்களுமாக
இரு கோடுகளில் பிரிக்கப்பட்டிருக்கும்
பழைய வீட்டின் அருகில் உயரமான பனைகளும்
கிணற்றடி செவ்விழை மரமும் செவ்வரத்தம் பூ மரம் வாசலிலும்
இந்த வீட்டில் பிறந்து வளர்ந்து ஒரு பொழுதும் நிலைக்கவில்லை நான்
பிறந்தநாளின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தைப் பகிர்ந்ததுமில்லை
அம்மாவின் அருகாமை சுகமொன்றும் கிடைக்கவில்லை
நெஞ்சு கனக்கவும் ஈரவிழிகளின் சிறகுகள் அலைபோல அடிக்கவும்
பிறந்தநாள் இதுவல்ல
குழந்தைப்பருவம் முற்றி வீட்டை விட்டு எங்கெங்கோ அலைந்ததும்
ஓளியின் நிழலில் நாடோடி போல சுதந்திரம் தேடியதும்
மகத்தான கவிதைச் சொற்களை என் குருதியெங்கிலும் கலந்து விட்டதும்,
பிறந்தநாள் இதுவல்ல
அன்பின் பறவையை உயிரின் நெகிழ்ச்சியை சூரியன் மறையும்போது
எல்லாமும் சடுதியில் மறைந்த இழப்பையும் உங்களுக்குச் சொல்ல
வார்த்தைகள் போதாது
எங்கோ பயணிக்கும் காற்றில் என் மெல்லிசையை இணைக்க முடியாத திணறல்
மெல்லிய பனித்தூறலையும்தான்
இது என் பிறந்த நாளல்ல
இந்த வெறுமையான நாளில் என் பிறந்தநாளைக் கொண்டாடி
ஏது ஆகப்போகிறது
பிறந்தநாளின் துளிமகிழ்ச்சியை சிசிஃபஸின் பாறையைச் சுமப்பதுபோல
சுமக்கிறேன்இதுவல்ல என் பிறந்த நாள்
உங்கள் வாழ்த்து எனக்கு ஒருவழிப்பாதை, திக்கற்றவனுக்கு அதுவே ஒளி
நான் இதுவரை உண்டு பசியாறிய சுவை வரமென்பேன்
ஒவ்வொரு பிறந்தநாளும் சுகமானதல்ல
இன்று
உலரா வெளிச்சத்தில் என் இதய ஒளி தெரிகிறதா உனக்கு?
ஒரு நட்சத்திரம் போல் உடைபட்டுத் தெறிக்கும்
சிறு ஓசையுடன் உடைபடும் காலம் இதுதானா?
***
கடவுச்சீட்டின் மீது மழைக்கனவின் சித்திரம்
நான் இந்த வார்த்தைகளை சோதிக்கும்போது
உங்கள் தெருவில் மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்தது
காற்று கடலிலிருந்து வந்து
உங்கள் வீட்டு யன்னலில் மோதியது
அருகே அசட்டுத்தனமான மொழியில் மழைவெள்ளம்
தெருவெல்லாம் அரசஅதிகாரங்களால் நிரம்பி மிதந்தன
உலகவங்கி அடிக்கடி மூளையைப் பிசைந்து கொள்ளும் ஈரம்
சமையலறையில் காற்று அதிகரிக்க
அடுப்பை இயக்க முடியாமல் தவித்தாள் தாயொருத்தி
கண்களின் குரல் பூப்போன்ற மீசை
பூனைகள் நல்ல நண்பர்கள் என்றது எலிகளின் பத்திரிகைகள்
மிகவும் கூடிய பால்விலையால் எழுதினாள்
யன்னலைத் தாண்டி பெருமூச்சை
சிறுசிறு கறிகளுடன் அளவிடப்பட்ட பிறகு விருந்து
குறிக்கப்பட்ட அன்பின் மீதும் அவன் வற்றாது முற்றம்
சிறுநிகழ்ச்சி
ஆகப்பெரிய வழியை தெழிவாக வரைந்துவிட்டிருந்தான்
வானத்தின் மேல்
குளிர்காலப்பறவையின் கடவுச்சீட்டு அவன்
விருந்துகளை நட்சத்திரங்களை தினமும் தனது கனவில் கொண்டுவந்திருக்கிறான்
கடவுச்சீட்டின் முகம்போல.
***
ஒப்பனை
நடுங்கிய மிகையான வாசனை
தொலைவில் நிறமற்ற வெளி
ஒப்பனை
துளி நிலவு
வரையறையற்ற படிமங்களோடு உணர்வு
மேலும்
கடதாசியில் நீளமாக இட்டகோட்டில் முடிவு ஒன்று
கரங்கள் எட்டிப்பிடிக்கமுடியாத கற்பனை
ஆக
கூர்ந்து கவனித்தபோது
பரப்பளவற்ற உரையாடல்களில் சில சிறகுகள்
புறவைபோன்ற கருத்தின் புள்ளி அலை
தேவையொன்றின் பரப்பு முதல்
நெடுநாள் உருகிக்கொண்டிருக்கும் மூச்சு இந்த உடம்பு
முடிச்சுக்கள் உணர்வற்றன
ஒப்பனைக்கான மணிகள் ஒலித்து முடிகின்றன.
***
