• மஹாரதி

1

இரவின் கதவுகளை

அடுத்தடுத்து

திறந்து திறந்து

செல்லச் செல்ல

மிச்சம் இருப்பது

இரவும்

இரவின் மேல்

உறங்கும் இரவும்

***

2

என் மரணத்தைத் தாங்கும்

மனவலிமை உண்டு

என் இறப்பைப்

பொருட்படுத்தாத

எனக்கும்

என் இருப்பைப்

பொருட்படுத்தாத

உனக்கும்.

***

3

உன்னோடு பேசுவதை

நிறுத்தி விட்டபின்

மொழி தன் நாவுகளில்

அலகு குத்திக் கொள்கிறது.

 

***